செவ்வாய், 13 ஜூன், 2017

உள்ளாடை அணிந்து நிகழ்ச்சி நடத்தச் சொன்னவருக்கு பெண் தொகுப்பாளர் கொடுத்த பதிலடி!

பெண்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் பொதுவெளியில் விமர்சிப்பது ஆணாதிக்க சமுதாயத்தின் வழக்கம். 'பொது இடங்களில் பெண்கள் ‘நாகரிகமான’ உடைகள் அணிய வேண்டும்; லெக்கிங்ஸ் அணியக் கூடாது' என்பது போன்ற பல அறிவுரைகளை அள்ளி வழங்குவார்கள். ஆடைகளோடு சம்பந்தப்படுத்தி நடத்தையைக் கேலி செய்யும் ‘ட்ரோல்’ கலாசாரம், இன்று பரவலாகி வருகிறது. நடிகைகள் அணியும் ஆடைகள் அடிப்படையில் இணையத்தில் ’ட்ரோல்’ செய்யப்படுவது குறித்து சமீபத்தில் 'மிரர் நெள' என்ற ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடத்தப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஆடை, ஒரு பத்திரிகைக்காக தீபிகா படுகோன் கொடுத்த போஸ், டென்னிஸ் விளையாடும்போது சானியா மிர்சாவின் உள்ளாடை தெரியும் ஒரு புகைப்படத்தை பிரபல இயக்குநர் ஒருவர் ’ஷேர்’ செய்தது, ரம்ஜான் பண்டிகையன்று இந்தி நடிகை சனா பாத்திமா நீச்சல் உடையில் அளித்த போஸ் ஆகியவை ‘ட்ரோல்’ செய்யப்பட்டது குறித்து அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ஃபயே டிசெளசா (Faye D'souza) என்ற பெண் இருந்தார். விவாதத்தில் பங்கேற்ற இஸ்லாமிய மதகுருவான மெளலானா யாசூப் அபாஸ் (Maulana Yasoob Abbas) என்பவர், “பெண்கள் நாகரிகமான உடைகளை அணிய வேண்டும்” என்ற பாணியில் பேசினார். இந்தக் கருத்தை வலியுறுத்தும்போது, ”நீ உள்ளாடை அணிந்துகொண்டு வந்து விவாதம் செய். ஆண்களுக்கு நிகராகிவிடுவாய். சமத்துவம் ஏற்பட்டுவிடும்" என்று குத்தலாகச் சொன்னார். இந்த வார்த்தைகளை அவர் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்க, அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க தயாரானார் ஃபயே டிசெளசா.

விவாதத்தில் பங்கேற்ற மற்றவர்களை அமைதியாக இருக்குமாறு சொன்ன ஃபயே டிசெளசா, கேமராவைப் பார்த்துப் பேச தொடங்கினார். ”அவர் கூறிய கருத்தால் நான் ஆவேசம் அடைவேன் என்று அவர் நம்புகிறார். நான் என் நிலை தடுமாறி, என் வேலையைச் செய்ய மறந்துவிடுவேன் என நம்புகிறார்'' என்றவர், ''நான் உங்களை மாதிரி பலரையும் பார்த்திருக்கிறேன் மெளலானா ஜி. உங்களைப் பார்த்து நான் பயப்படவில்லை. உங்கள் கருத்தால் நான் அதிர்ந்துபோகவில்லை. சனா ஃபாத்திமா, சானியா மிர்சா மற்றும் பல பெண்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். அவர்களின் உடைகளையும் அவர்களையும் விமர்சித்தால், நடுங்கிப்போய் சமையலறைக்குள் ஓடிவிடுவார்கள் என நினைக்கும் ஆண்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்த உலகில் நீங்கள் மட்டுமே ஆட்சி செய்ய அனுமதிக்கமாட்டோம். நாங்கள் எங்கும் ஓடிவிடமாட்டோம்” என்று தீர்க்கமான குரலில் சொன்னார்.

அதன்பிறகும் தன் நிலைப்பாட்டுக்கு நியாயம் சேர்க்க முயற்சி செய்தார் மெளலானா. ஆனால், அது எடுபடவில்லை. தான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு. பெண்கள் அணியும் ஆடைகளை மையப்படுத்தி அவர்களை ‘ட்ரோல்’ செய்து, அவமதிக்க நினைக்கும் ஆண்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமையட்டும். ஃபயே டிசெளசா போல ஒவ்வொரு பெண்ணிடமும் இந்தத் தைரியமும் நிதானமும் இருந்தால், ’சமூகக் காவலர்கள்’ போடும் கூச்சல் கரைந்துபோய்விடும்.


-vikatan
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல