பொருள் தேடி நான்
சுடுமணல் தேசம் செல்ல
அருட் பார்வையால் நீ
அனுப்புகையில் கண்டேன்
இருள்நிறை கண்ணீரையும்
நெடுமூச்சுக்களின் விம்முதலையும்.
வேலை வாய்ப்புக்காக
பாலைவனம் சென்றாலும்
நாளை ஒரு விடியல்
வருமா... எனும் ஐயம்
மாலை வரும் ஓய்வில்
கனத்தது உள்ளத்துள்...
இன்று அமைதிக்காற்று
பூபாளம் இசைக்கின்றது
என்று வருமென ஏங்கிய
சமாதானம் செளஜன்னியம்
தென்றலில் தவழ்கின்றது
நடுமூச்சுக்களும் அமைதியாகின.
விடியலின் ராகங்கள்
தாய்நாட்டுக்கு அழைக்க
மடியில் படுத்துறங்கிய
அந்த நாள் நினைவுகள்
அரும்பாய் மொட்டாய்
புதிதாய் புஸ்பிக்கின்றன.
நாள்களை விரல்கள்
எண்ணிக் கணக்கிட
தோள்களில் வலிமையும்
தாய் நாட்டு நேசமும்
கால்களைப் பிடித்துத் தள்ளுகின்றன.
வாழ்ந்த மண்ணில் தடம்
பதிப்பது போல் இன்பமுண்டோ!
- அக்குறணை அலிரிஸாப்
கண்டு கொண்டேன்
புலரும் பொழுதெல்லாம்
பூங்காற்றாய் வீசுதடி
எந்தன் நெஞ்சம் அதனாலே
புலங்காகிதம் கொள்ளுதடி!
தூங்காத விழிகளுக்கு
துயரில்லை கண்டு கொண்டேன்
துன்பமில்லா என் வாழ்வில்
துதிக்கின்றேன் பரவசமாக!
குதூகல என் வாழ்வில்
கலையுண்டு கண்டு கொண்டேன்
கற்பூர வாசனையோடு
கவியொன்றைப் பாடுகிறேன்!
எள்ளி நகையாடுவோரை
எடுத்தே நான் எறிந்ததனால்
வளமான என் வாழ்வில்
விழா உலா போகுதடி!
இன்பத் தேனூரும்
இதயங்களின் ஆதரிப்பால்
இதமான என் வாழ்வு
இமயம் போல் ஜொலிக்குதடி!
- பாயிஸா கைஸ் சீனன்கோட்டை.
அக்கரைப்பச்சை
புதுவீட்டின்
வெளிக் கூரையிலிருந்து
மெலடி இசையாய் வழிகிறது
மழை,
என்னதான் இருந்தாலும்
சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கும்
அப்பாவுக்குப் பிடித்தது
பழைய வீட்டின் கூரைவழியே
தென்படுகிற நிலவுதான்!
- நியாஸ் முஸாதிக்
பிரவசமான பிரசவங்கள்
என் உள்ளக் கருவறையிலிருந்து
ஒவ்வொரு
எண்ணக் குழந்தைகளும்
பரவசமாக
பிரசவமாகின்றன!
பிறரின் சொல்லடிக் கற்கள்
என் முன்னேற்றத்துக்கு
படிக் கற்களாய்
அமைகின்றன!
என்னைத்
தட்டிக் கழிக்க
முயல்பவர்கள்
எத்தனையோ பேர்!
என் உள்ளமோ
தட்டிக் கொடுத்து
என்னை
உற்சாகப் படுத்துகின்றது!
என்னைப்
போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் தூற்றட்டும்
என் வாழ்க்கைப் பயணம்
ஒரு நந்தவனச் சோலையாக
நாதஸ்வரம் இசைக்கின்றது!
அதுவே போதும் எனக்கு!
வஞ்சகம் கொண்டோரின் நெஞ்சம்
பொறாமைத் தீயிலே
எரிந்து சாம்பலாகும் காலம்
வெகு தொலைவில் இல்லை
இது நான் அனுபவத்தில்
கண்ட உண்மை.
- பாயிஸாகைஸ் சீனன்கோட்டை.
குத்துச் சண்டை
முகத்துக்கு நேர்
இரு வீரர்
பலப் பரீட்சை.
புஜங்களின் சீற்றம்
கரங்களின் பலம்
எகிலும் ஷொட்கள்
மூச்சுத் திணரெடுக்கும்.
சுற்றுக்கள் மாறி
குத்துக்கள் விழும்
போதை ஏறாமல்
ஒரு தள்ளாட்டம்
அடிமேல் அடியாக
இடிமேல் இடியாக
முகம் வாங்கும் கடன்
குருதியாக ஓடும்.
இறுதியில்,
வலிகளின் எச்சங்கள் தான்
பட்டம் வாங்கும்!
- ஆக்கம் நதார் நஸ்லியா,கந்தளாய்
இதயப் பசுமை
கடும் வரட்சியிற்குப் பின்
பெய்த மழைபோல
உன் வரவு-அதனால்
என்னவோ
செழிப்படைந்தது உள்ளம்
மாரிகாலத்து
அடை மழை போல்
ஓயாத குறுந்தகவல்
தொலைபேசியில் பார்த்து
தினம் தினம்
நெகிழ்வடைந்து நின்றேன்.
வசந்த காலங்களை
மீட்டிப் பார்க்க வைத்தது
உன் நட்பு
செய்தி கண்டு
நீண்ட நாட்களுக்குப் பின்
என் கவிதை
அலங்கரிக்கப்பட்டது.
மழையில் நனைந்து
குளிரில் நடுங்கி
உறவாடிய அந்த நாட்கள்
கார்கால மேகங்களை
தொட்டுவிட்டுச் சென்றது.
இப்பொழுதெல்லாம்
ஏனோ....
ஆங்காங்கே...
தூறல்கள் மட்டும்!
வாழையூர் நிலா


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக