சனி, 13 மார்ச், 2010

கவிதைகள்

உன்னைப் பரிசளித்த மழை

அனுபவித்த மழை
ஆடையின்றி வெளியேறுகிறது
குடையின்றி நடுங்கி
அநாதரவாய் இருக்கும் என்னிடத்தில்
உன்னைப் பரிசளித்துவிட்டு
வானம் வகுப்பெடுக்க
பூவின் வகுப்பறையெங்கும்
புதிய ஆத்திசூடி மணக்கும்
ஏகாந்தம் வெளிநடப்புச் செய்ய
என்னுள் கிராமங்கள் பூத்திருக்கின்றன
மழை நினைத்திருந்தால்
உனை அருவிகளில் தாரைவார்த்திருக்கலாம்
புதர்மண்டிய காடுகளில்
புதைத்திருக்கலாம்...
மழை முடிந்து சுவாசித்தேன்
சாலை யோர மரங்கள் நின்றிருந்தன
அவள் சாயலில் சிரித்தபடி...




பறவைகளோடு...

மின்சாரக் கம்பிகளில்
பறவைகளின் அணிவகுப்பை
வியந்து பாருங்கள்
அவைகளோடு
சம்பாஷணை செய்யுங்கள்
மரக்கிளைகளில் உட்கார்ந்து
சிறகுலர்த்த உங்களுக்கு
அனுமதி மறுத்தது யாரெனக் கேளுங்கள்
பாவம்... மனிதர்களைப்போல்
இவைகளுக்கும்
ஆயிரம் பிரச்சினைபோல...?




கேட்கத் தவறியவை

எப்போதாவது
வீடுவரும் உறவினர்களிடம்
சுகம் விசாரிக்கிறோம்
விருந்தோம்பல் நிகழ்த்துகிறோம்
ஒருமுறையாவது
கேட்க முடிவதில்லை
நம் வீட்டு முற்றத்தில்
கூண்டுக்குள் வளரும்
கிளியை
உனக்கு ஏதாவது
குறை உள்ளதா என...


இந்தக் காலப் பெண்மை

அடுப்படிப் பெண்ணாய்
இடுப்பொடி பட்டு
இழிந்தது பெண்மை
அந்தக் காலம் - பெண்கள்
துடிப்புடன் எழுந்து
துயரங் களைந்து
தலைமை ஏற்பது
இந்தக் காலம்

மாதரை மயக்கி
ஆதரவோடு
மந்திரி ஆண்டது
அந்தக் காலம் - பெண்கள்
சாதனை வீரராய்ச்
சரித்திரம் படைப்பது
இந்தக் காலம்

எதிரும் புதிருமாய்
எம்.பி. மார் பிரிந்து
ஏய்த்துப் பிழைத்தது
அந்தக் காலம் - பெண்கள்
அதிரடி வேட்டால்
அரசியல் போக்கை
ஆட்டிப் படைப்பது
இந்தக் காலம்.

கொழுந்தினைக் கொய்து
அழுந்துய ரோடு
அடிப்பட வாழந்தது
அந்தக் காலம் - பெண்கள்
எழுந்ததும் துரைமார்
எடுபிடி யெல்லாம்
எங்கோ வீழ்ந்தன
இந்தக் காலம்

தலைமைக ளெல்லாம்
தலைகளை யுடைத்துத்
தடித்தனம் புரிந்தது
அந்தக் காலம் - பெண்கள்
நிலைமையை மாற்ற
நெஞ்சுரங் கொண்டு
நிமிர்ந்து நிற்பது
இந்தக் காலம்


- ஏறாவூர் அனலக்தர்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல