ஞாயிறு, 30 மே, 2010

ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை

No Scalpel Vasectomy

கேள்வி: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை விட ஆண்கள் செய்துகொள்ளும் புதிய குடும்பநல கருத்தடை எவ்வாறு சிறப்பு வாய்ந்தது?

பதில்: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை முறையானது பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள் உறுப்புகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியுள்ளது. கத்தி, கத்திரிக்கோல் ஆகியவைகளை உபயோகித்து அறுவை சிகிச்சை செய்வதால் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். வலி ஏற்படும், தழும்பு தெரியும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்கும். அன்றாட பணிகளை முன்போல செய்யமுடியாத சிரமம் ஏற்படும். அவர்களின் உடல் பலவீனமடையும். இரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel Vasectomy கருத்தடை எளிமையானது.

கேள்வி: ஆண்களுக்கான ‘No Scalpel Vasectomy (NSV)’ முறை என்றால் என்ன?

பதில்: ஆண்களுக்கான புதிய கருத்தடை முறையில் மயக்க மருந்து கொடுப்பதில்லை. உடலின் உள் உறுப்புகளில் எதையும் அறுவை செய்யாமல், வெளிப்பக்கத்தில் மட்டும் ஓரிரு நிமிடங்களில் செய்துவிடலாம். இது அறுவையில்லாத ஆண் கருத்தடை முறை என்று அழைக்கப்படுகிறது. ஆணுறுப்பை மரத்துப் போகச் செய்ய ஊசி போடுவதால், இதைச் செய்யும்போது வலி ஏற்படாது. விரைப்பையில் சிறுதுளையிட்டு, உயிரணுக்கள் செல்லும் குழாயை கட் செய்து, இருபக்கமும் மூடி(seal) விடுவார்கள். அறுவையே இல்லாததால் தையல் போட வேண்டிய அவசியமே இல்லை. அதனால் தழும்பும் இருக்காது. மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பிவிடலாம். இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் சாதாரண வேலைகள் செய்யலாம். எந்த உணவுக்கட்டுப்பாடும் தேவையில்லை. பின்விளைவுகள் ஏதும் இருக்காது.

கேள்வி: சிகிச்சைக்குப் பின் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுமா?

பதில்: ஏற்படாது. உடலுறவின் உச்சகட்டத்தின் போது வெளியேறும் திரவத்தில், உயிரணுக்கள் ஒரு பங்கும் மற்ற திரவங்கள் ஒன்பது பங்கும் இருக்கும். இதில் உயிரணுக்கள் வருவதை மட்டும் இந்த சிகிச்சை முறை மூலம் தடை செய்வதால், மற்ற 9 பங்கு திரவம் வழக்கம் போல் வெளியேறும். இல்லற வாழ்க்கை முன்போலவே இருக்கும்.

கேள்வி: இந்த கருத்தடை முறையை ஏற்றுக் கொண்டபின் குழந்தை பிறக்கும் வாய்ப்புண்டா?

பதில்: இந்த கருத்தடை முறையை ஏற்று 7 நாட்களுக்குப் பிறகு மனைவியுடன் உடலுறவு கொள்ளலாம். ஆனால் 20 உடலுறவு வரை கண்டிப்பாக ஆணுறையை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஏற்கனவே உருவாகியிருக்கும் விந்து அனைத்தும் வெளியேறுவதற்கான அவகாசம் தேவை. 20 உடலுறவுக்குப்பின் விந்து பரிசோதனை செய்து விந்து நீரில் உயிரணுக்கள் இல்லை என்று அறிந்தபின் ஆணுறையின்றி உடலுறவில் ஈடுபடலாம். கரு உண்டாகாது.

கேள்வி: இந்த ஆண்களுக்கான புதிய கருத்தடை முறை எங்கு செய்யப்படுகிறது?

பதில்: தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவரால் எல்லா வேலை நாட்களிலும், மாதமிரு முறை சிறப்பு முகாம்களிலும் செய்யப்படுகிறது. மத்திய, மாநில அரசு ஊழியருக்கு சிறப்பு விடுப்பு உண்டு. ஊக்கத்தொகையாக ரூ.1100 வழங்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல