சனி, 22 மே, 2010

இந்தியாவை உலுக்கிய மரபணு கத்தரிக்காய்!

‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை பயிரிடக் சுடாது எனத் தெரிவிக்கப்பட்டு வந்த எதிர்ப்புக்கு இந்திய மத்திய அரசு செவிசாய்த்திருந்தாலும் இந்திய விவசாய உற்பத்திகளை தன்னிறைவு அளவுக்கு எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களைப் பயிரிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்கிறார் இந்திய மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார்.’

கடந்த சில மாதங்களாக இந்தியாவை உலுக்கி வைத்த கத்திரிக்காய் விவகாரம் ஒருவாறு ஜனவரி இறுதியில் முடிவுக்கு வந்தது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிட அனுமதி வழங்கலாமா இல்லையா என்ற சர்ச்சையின் இறுதிக் கட்டத்தில் இப்போது அனுமதி வழங்குவது இல்லை என்றும் பொறுத்திருந்து பார்த்து மேலும் ஆய்வுகள் செய்த பின்னர், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை உண்பதால் புற்றுநோய் உட்பட நோய்கள் மற்றும் எதிர்விளைவுகள் ஏற்படுமா என்பது கண்டறியப்பட்ட பின்னரேயே இக்கத்தரிக்காய்க்கு பயிரிடும் அனுமதியை வழங்குவது என்று இந்திய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இந்திய சுற்றுச் சூழல் மையமே இக்கத்திரிக்காய் பயிரிடுவதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்ததோடு நாடெங்கும் சுற்றுச் சூழல் ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பலையையும் உருவாக்குவதற்கு உதவியது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள் மனிதனுக்கு நீண்டகால அடிப்படையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறி வரும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தமது எதிர்ப்புக்கு பலன் கிடைத்ததற்கு பெரு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

எல்லா உயிரினங்களும் தாவரங்களும் மரபணு ரீதியாக மாற்றம் அடைவது இயற்கை. ஆனால் அது இயற்கையாக நிகழவேண்டுமே தவிர செயற்கையாக புகுத்தப்படக்கூடாது என்று கூறும் இவர்கள், ஒரு பொருளில் மரபணு ரீதியான மாற்றங்கள் நிகழ்வதற்கு ஐம்பது வருடங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என்றும் இந்தப் படிப்படியானதும் மெதுவானதுமான மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று கூறுகிறார்கள்.

மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் மாற்றம் என்ற ஒன்றுதான் மாற்றமே இல்லாதது என்றும் கூறுவார்கள்.

அந்த மாற்றம் இயற்கையாக வரவேண்டுமா அல்லது இயற்கையை மீறி செயற்கையாக விஞ்ஞான உதவியுடன் வேகமாக இழுத்துக்கொண்டு வருவதா என்பது தான் இப்போதைய கேள்வி.

மனிதன் உட்பட, செடிகொடிகள், விலக்கினங்கள் அனைத்தும் இப்போது எப்படி காட்சி அளிக்கிறதோ? அதே போன்ற அமைப்பில் ஆதி காலத்தில் இருந்தது இல்லை.

உலகம் தோன்றிய போது, ஒரு ‘செல்’ கொண்ட ஜீவராசிகள் மட்டுமே இருந்தன. கோடிக் கணக்கான ஆண்டு மாற்றத்தில், அந்த ஒரு ‘செல்’ ஜீவராசி, படிப்படியாக மனிதனாகவும், விலங்கு மற்றும் செடி, கொடிகளாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்தன என்று கணித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அபூர்வ மாற்றத்தை இயற்கை எப்படி சாதித்தது என்பது இன்னும் ‘கன்னித்தீவு’ மர்மமாக நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனால், அது போன்ற அல்லது அதற்கு ஒப்பான சில மாற்றங்களை நாமே செயற்கையாக செய்து காட்டலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அதன் அடிப்படைதான் மரபணு மாற்றம் என்பது.

ருவன் எப்படிப்பட்ட தோற்றத்தில் இருக்க வேண்டும்? அவன் கை, கால்கள் எப்படி இருக்கவேண்டும்? அவன் குணாதிசயங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற அனைத்தையும் நிர்ணயிப்பது அவனது உடலில் உள்ள மரபணுக்கள் தான்.

நாம் கட்டுகின்ற வீடு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு ஒரு வரைபடம், தயாரிக்கிறோம் அல்லவா, அது போன்ற வரைபடம்தான்.

ஜீவராசிகளின் மரபணு.

மனித உடல் மட்டும் அல்லாமல், மரம் செடி, கொடி, யானை, குதிரை, மாடு, மீன்... என்று உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் இந்த அடிப்படையான மரபணு உண்டு.

வாஸ்து நிபுணர் கூறினார் என்பதற்காக வீட்டு வரைபடத்தில் சில மாற்றங்களை செய்து அதன் அடிப்படையில் வீட்டின் அமைப்பை மாற்ற முடிவது போல, ஜீவராசிகளின் மரபணுவில் சில மாற்றம் செய்தால், அந்த ஜீவராசிகளின் அமைப்பை, குணாதிசயங்களை நாம் விரும்பும் வகையில் மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான் மரபணு ஆராய்ச்சியின் அடிப்படை.

இந்த மரபணு மாற்றம் என்பது இயற்கையாக, மிக, மிக மெதுவாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது நாம் பார்க்கும் மக்காச்சோளம் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இது போன்ற தோற்றத்தில் இல்லை என்கிறார்கள். மரபணு மாற்றத்தால் மக்காச்சோளம் மாறி இருக்கிறது. அதேபோன்ற மாற்றம் இயற்கையாக மிக மெதுவாக ஏற்படும் முன்பு அந்த மாற்றத்தை, உடனடியாக நாமே அமுல்படுத்தலாமே என்பது விஞ்ஞானிகளின் வாதம்.

கடுமையான குளிர் பிரதேசத்தில் விளையும் ஒரு பயிரின் மரபணுவில், குளிரை தாங்கக்கூடிய சக்தி இருக்கும். அந்த பயிர், வெப்பமான பகுதியில் வளர வேண்டும் என்றால் அந்த பயிரின் மரபணுவில் சில மாற்றங்கள் செய்தால் போதும்.

அதே போல, சில தாவரங்கள் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. அந்த தாவரங்களின் மரபணுவில், நோய் எதிர்ப்பு சக்தியை திணித்துவிட்டால் அவை நோய் இன்றி வளரும் என்பதை கண்டுபிடித்து நிரூபித்து இருக்கிறார்கள்.

அதாவது மரபணு மாற்றத்தின் மூலம் ஒரு செடி அல்லது ஒரு விலங்கினம் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆராய்ச்சிக் கூடத்தில் தீர்மானித்து விடலாம் என்கிறார்கள்.

இந்த மரபணு ஆராய்ச்சிக்கு பெரிய வரப்பிரசாதம் என்ன என்றால், மரபணு என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரே மாதிரியான பொருளால் உருவானது என்பது தான்.

இதனால், ஒரு விலங்கினத்தின் மரபணுவுடன் ஒரு செடியின் மரபணுவை கலக்க முடியும். இதேபோல மனிதனின் மரபணுவில் ஒரு விலங்கின் மரபணுவை சேர்க்க முடியும்.

மரபணு என்பது, வளைந்து சுருண்டு செல்லும் ஏணிப்படி போல இருக்கும்.

அதில் எந்த குணத்துக்கான பகுதி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த இடத்தில் மாற்றம் செய்து அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தாவரத்திலோ அல்லது விலங்கினத்திலோ நாம் விரும்பும் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்கிறார்கள்.

உதாரணமாக, தக்காளி அதிக பனிப்பொழிவை தாங்கும் சக்திகொண்டது அல்ல. பனிக்காலத்தில் தக்காளி அதிக சேதம் அடைவதை தடுக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார்கள்.

அப்போது அவர்கள் கவனத்துக்கு வந்தது ஒரு வகையான மீன். பிளன்டர் என்ற மீன், மிக அதிகமான குளிர் நீரிலும் உயிர் வாழும் தன்மை கொண்டது. அந்த மீனின் மரபணுவில், அதிக குளிரை தாங்கக் கூடிய ‘ஜீன்’ எது என்பதை கண்டறிந்து, அந்த ‘ஜீனை’ எடுத்து தக்காளியின் மரபணுவில் புகுத்தினார்கள். இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளி செடியில் இருந்து காய்த்த தக்காளிகள் கடும் பனிப் பொழிவையும் தாங்கும் சக்தி பெற்றதை நிரூபித்து காட்டினார்கள்.

இதேபோல குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்படும் செடிகளை, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட செடிகளாக மாற்ற முடியும் என்கிறார்கள்.

குறிப்பாக கத்தரிக்காய் மற்றும் பருத்தி செடிகளை அடிக்கடி நோய் தாக்குகின்றன. அவற்றின் மரபணுவை மாற்றிவிட்டால், அந்த செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். இதனால் பயிர்களுக்கு அடிக்கடி பூச்சி மருந்து அடிக்க தேவை இல்லை. மகசூலும் அதிகரிக்கும் என்கிறார்கள் மரபணு மாற்றத்தை ஆதரிப்பவர்கள்.

வறட்சிப் பகுதிகளில் உள்ள தாவரங்கள், தண்ணீர் இல்லை என்றால் கூட காய்ந்துவிடாமல் இருப்பது உண்டு. இது எப்படி என்று ஆய்வு நடந்தது.

தாவரங்களின் இலையில் மிக சிறிய துவாரங்கள் இருக்கின்றன. காலையில் வெப்பம் குறைவாக இருக்கும் போது இந்த துவாரங்கள் திறந்து கொள்கின்றன. அதன் மூலம் அந்த செடி காற்றில் உள்ள கரியமில வாயுவை சேகரிக்கிறது. வெப்பம் அதிகமாகும் போது அந்த துவாரங்கள் மூடிக்கொள்கின்றன. அப்போது செடியின் ஈரப்பதம் காப்பாற்றப்படுகிறது.

இலை மீது உள்ள துவாரம் மூடப்படுவதற்கு காரணம், தாவரங்களில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைட் என்பது அறியப்பட்டது.

ஹைட்ரஜன் பெராக்சைடை வைட்டமின் – சி, கட்டுப்படுத்துகிறது. எனவே , தாவரங்களின் வைட்டமின் – சி அளவை குறைத்துவிட்டால் அதன் மூலம் ஹைட்ரஜன் பெராக்சைட் அதிகரித்து அதன் காரணமாக இலை மீது உள்ள துவாரங்கள் தானாக மூடிக்கொள்ளும். அப்போது அந்த தாரவம் ஈரப்பதத்தை இழக்காது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடிப்படையாக வைத்து 2002ம் ஆண்டு நெல் பயிரில் மரபணு மாற்றம் செய்து அதன் மூலம் வறட்சியை தாங்கும் சக்திகொண்ட புதிய ரக நெல் பயிர் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு பல வகையிலும் மரபணுக்கள் மாற்றப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி பயிருக்கு இந்தியா அனுமதி வழங்கியது.

இந்த பயிருக்கு அனுமதி வழங்கப்பட்டால் இப்போது உள்ள தோற்றம் உடைய கத்தரிக்காய்களே தயாராகும். ஆனால் அந்த செடிகள் நோய் எதிர்ப்பு சக்திகொண்டதாக இருக்கும் என்பதால் அதற்கு பூச்சி கொல்லிகளை பயன்படுத்த தேவை இல்லை. மேலும் சாகுபடியும் அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் முதல் முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திக்கு அனுமதி வழங்கியபோது, அதனால் பருத்தி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த வகை பருத்தி செடிகள் முதல் இரண்டு மாதங்களுக்கு நல்ல முறையில் வளர்ந்தன. பின்னர் அதன் காய்கள் சிறுத்து இலைகள் உதிர்ந்து செடிகள் வளர்ச்சி இல்லாமல் போய்விட்டன.

இதனால் பாதிக்கப்பட்ட வடமாநில மற்றும் ஆந்திரா விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்ட பின் பருத்தி சாகுபடி இப்போது அமோகமாக இருக்கிறது.

இப்போது இந்தியாவில் உள்ள பருத்தி விவசாயிகளில் 85 சதவீதம் பேர், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி சாகுபடிக்கு மாறிவிட்டனர். பருத்தி சாகுபடியும் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துவிட்டது.

அதுபோன்ற பலன்கள் கத்திரிக்காய் விவசாயத்திலும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மரபணு பருத்தி இந்தியாவில் நல்ல பலன் அளித்திருக்கிறதே என்று மரபணு கத்திரிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் வாதம் ஒன்றை முன்வைத்தபோது, எதிர்ப்பாளர்கள், அது உண்ணும் பொருள் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டினர்.

மீண்டும் மக்காச் சோளம் சுட்டிக்காட்டப்பட்ட போது, எதிர்ப்பாளர்கள் தரப்பு, இவ்வகை மக்காச் சோளம் பெரும்பாலும் கால்நடைத் தீவனமாகவே பயன்படுத்தப்படுகிறது என்றும் அமெரிக்காவிலும் இப்படித்தான் நடக்கிறது என்றும் கூறினார்கள்.

நெல், கம்பு, சோளம், பருத்தி, தக்காளி, கத்தரிக்காய், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கரும்பு, வாழை, பப்பாளி மற்றும் எண்ணை வித்துக்கள் என்று ஏராளமான பயிர்களில் மரபணு மாற்றம் செய்வது நடந்து கொண்டு இருக்கிறது.

2050ம் ஆண்டு உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ளதை விட 250 மடங்கு உணவு உற்பத்தி செய்தால் தான் பட்டினி சாவை தடுக்க முடியும். இதற்கு மரபணு மாற்றம் ஒன்றே வழி என்று மரபணு மாற்ற ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு மரபணு மாற்றம் செய்வதால் அதிக ஆபத்துகள் இருக்கின்றன என்று ஒரு பிரிவினர் அபாயசங்கு ஊதுகின்றனர்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் இருந்து கிடைக்கும் விளை பொருட்களால், பின் வரும் காலங்களில் புற்று நோய் தாக்கம் அதிகமாகலாம்; சிறு நீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம் என்று மரபணு மாற்றத்தை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா பல்கலைக்கழகம், மரபணு மாற்றம் மூலம் விளைந்த மக்காச் சோளத்தை எலிகளுக்கு உணவாக கொடுத்து பரிசோதித்துப் பார்த்தனர் என்றும், பின்னர் அந்த எலிகளின் இனப் பெருக்கம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் விற்கும் கத்தரிக்காயில், எது மரபணு மாற்றம் முலம் உருவானது? எது சாதாரணமாக விளைந்தது என்பதை கண்டறிய முடியாது. இதனால் நுகர்வோர் உரிமை பறிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உணவு உற்பத்தி, நமது தேவையைவிட 6.5 கோடி டன் அதிகமாக இருந்தது. அப்படி இருந்தும் 32 கோடி பேர் இரவில் உணவு இல்லாமல் தான் தூங்க சென்றனர்.

எனவே உற்பத்தி அதிகரிப்பதால் மட்டும் வறுமை தீர்ந்துவிடாது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இவர்கள் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்.

மரபணு மாற்றம் மூலம் உருவான விளைபொருட்கள் அமெரிக்கா, கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா, மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதில், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மட்டும், மரபணு மாற்றம் செய்த காய்கறிகள் என்ற முத்திரை இல்லாமல் விற்கப்படுகின்றன. ஆனால் மற்ற நாடுகளில், மரபணு மாற்றம் மூலம் விளைந்த காய்கறிகளுக்கு தனி முத்திரை குத்தவேண்டும் என்பது கட்டாயமாக இருக்கிறது.

கத்தரிக்காயை பொறுத்தவரை மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரி விதைகள் இப்போது தயாராக இருக்கின்றன. பூச்சிகொல்லி மருந்து தேவைப்படாத இந்த வகை கத்தரிக்காய்களை இந்தியாவில் பயிரிடலாம் என்று மத்திய ஒழுங்கு முறை ஆணையமான ஜெனடிக்கல் என்ஜினியரிங் கமிட்டி அனுமதி அளித்து இருந்தது.

ஆனால், இதற்கு மத்திய அறிவியல், சுற்றுச் சூழல் மையம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. கத்திரி பிரச்சினைக்கு இப்போது ஓய்வு. விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் வருடமொன்றுக்கு 80 இலட்சம் தொன் கத்திரிக்காய் ஐந்து இலட்சம் ஹெக்டேயரில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் 82,049 மெட்றிக் தொன் கத்தரிக்காய் சாகுபடியாகிறது.

தொகுப்பு :

மணவை அசோகன்... -

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல