மனிதன் எப்படி சிந்திக்கும் திறனுடன் ஆறறிவுடன் இருக்கிறானோ அதுபோல செயற்கை புத்திசாலித்தனம் நிறைந்த ரோபோக்களின் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரோபோ கால்பந்து போட்டிகள் வருடாந்தம் நடத்தப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு வகையான ரோபோக்கள் கலந்து கொள்கின்றன.
அடுத்த ஆண்டுக்கான (2011) போட்டிகள் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடக்கப்போகிறது. இந்தப் போட்டிக்கு இப்போதே தயாராகிறது ஸ்காட்லாந்து அணி. இதற்காக எடின்பர்க் பல்கலைக்கழக ரோபோ துறையினர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்டிராய்டு எப்.சி. ரக ரோபோக்கள் கொஞ்சம் அதிக புத்திசாலித்தனம் உள்ளவை. தமது அணி வீரர்களையும் மற்ற அணி வீரர்களையும் அடையாளம் கண்டு கொண்டு பந்தை கடத்திச் செல்லும் திறன் கொண்டவை. இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள ரோபோ கால்பந்து வீரர்களில் இந்த ஆன்டிராய்டு நவீன வசதிகள் கொண்டது.
இவை சூழ்நிலையை புரிந்துகொண்டு தானியங்கி முறையில் முடிவு எடுத்து விளையாடும் திறன் கொண்டவை. எதிர் அணி ரோபோவை ஏமாற்றி பந்தை கடத்தும் புத்திசாலித்தனம் இதற்கு உண்டு. போட்டிக்கு இடையே ரோபோக்கள் பந்தை கடத்திச் சென்று கோல் போட்டால் மகிழ்ச்சியையும், தவறவிட்டால் ஏமாற்றத்தையும் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகிறது.
ஸ்கொட்லாந்து அணிக்காக மூன்று ரோபோ வீரர்கள் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணி தகுதிச்சுற்றுப் போட்டியில் ஜெயித்து அடுத்த ஆண்டு நடைபெறும் உலக ரோபோ கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோபோ கால்பந்து வீரர்களை உருவாக்கும் விஞ்ஞானிகளுக்கு ஒரு கனவு உள்ளது. அதாவது 2050 ஆம் ஆண்டு மனிதனுக்கும் ரோபோக்களுக்கும் இடையே கால்பந்து போட்டி நடத்த வேண்டும் என்பதுதான்.
இதற்கான முயற்சியில் தான் இப்போது சிறிய அளவிலான ரோபோக்களைக் கொண்டு கால்பந்து போட்டிகளை நடத்தி வருகிறார்கள். ஆய்வுகள் வெற்றிபெறும் போது மனிதனுக்கு சமமாக மனிதன் போன்ற உயரம் தோற்றத்தில் ரோபோ கால்பந்து வீரர்கள் உயிர்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இயற்கை புத்திசாலித்தனத்துக்கும் செயற்கை புத்திசாலித்தனத்துக்கும் இடையே மோதல் நடக்கும். அதாவது கடவுளின் படைப்புக்கும், மனிதனின் படைப்புக்கும் இடையே மோதல் நடைபெறும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக