நேரம் கழித்து வீட்டிற்கு வரும் பெண்ணிடம், எங்கே சுற்றினாய்? யாருடன் இருந்தாய்?கொஞ்சமாவது பெற்றோரிடம் பயம் இருக்கிறதா? என்று குற்ற விசாரணை செய்யாதீர்கள். நாசூக்காக விசாரியுங்கள். உள்ளே நுழைந்ததும் கேள்விக்கணைகளை தொடுப்பது, அவர்களை சந்தேகப்படுவது, குற்றவாளியைப்போல விசாரிப்பது ஆகியவற்றை விடலைப்பருவத்தினர் விரும்பமாட்டார்கள். மேலும் அவ்வாறு தங்களை அவமதிக்கும் பெற்றோரை அவர்கள் வெறுக்கவும் ஆரம்பிக்கின்றனர்.
அவர்களுக்கு ஈடுபாடுள்ள விஷயத்தை ரசிப்பதற்கு நீங்களும் ஆர்வம் காட்டுங்கள்.
உதாரணமாக உங்கள் மகன் மைக்கேல் ஜெக்சன் இசையை விரும்பினால், இந்த காட்டுமிராண்டி இசையை கேட்டால் காது கிழிந்து விடும் என்று கமெண்ட் அடிக்காதீர்கள். அந்தக் காலத்தில் என்று ஆரம்பித்து உங்கள் ரசனையைப் பற்றி புகழ்ந்து பேசி போரடிக்காதீர்கள்.
காலம் மாறுகிறது என்பதை கவனத்தில் வையுங்கள்.
உங்கள் மகளுக்கு விளையாட்டில் விருப்பம் இருந்தால், படிக்கிற வேலையைப் பார், நீ என்ன பெரிய சானியா மிர்சாவாகவா போகிறாய் ? என்று அவளுடைய கனவுகளை கொழுந்திலேயே கிள்ளாதீர்கள். அவள் விளையாடுவதை வேடிக்கை பாருங்கள். உங்களுக்கு அதைப் பற்றித் தெரியாதபோது, இப்படிச் செய் அப்படிச் செய் என்று அறிவுரை வழங்காதீர்கள்.
அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒன்றாக அமர்ந்து கண்டு களியுங்கள். இதைப் போய் ரசிக்கிறாயே, என்ற ரீதியில் பேசாதீர்கள். உங்களுடைய வேலையைப் பற்றியோ அல்லது உங்கள் மகனின் பாடசாலையில் நடைபெற்ற ஆண்டு விழாவைப் பற்றியோ ஜாலியாகப் பேசுங்கள்.
உங்கள் விடலைப் பருவ நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு உங்கள் மகனிடமோ அல்லது மகளிடமோ மனம் திறந்து பேசுங்கள். இப்போது எப்படி யெல்லாம் மாறிவிட்டது என்பதை நகைச்சுவை உணர்வோடு எடுத்துச் சொல்லுங்கள்.
நான் பெரிதாக மீசை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டபோது, என்னுடைய அப்பா எதிர்ப்புத் தெவித்தார். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது, நீ விருமாண்டி மீசை வைத்துக் கொள்வதைப் பற்றி ஆட்சேபனை இல்லை என்று உங்கள் மகனிடம் சிரித்துக் கொண்டே கூறுங்கள். இதனால் தலைமுறை இடைவெளி சடால் என்று குறைவதைப் பார்க்கலாம்.
இருவருமே விரும்புகின்ற கலை நிகழ்ச்சிக்கோ அல்லது திரைப்படத்திற்கோ உங்கள் மகனுடன் அல்லது மகளுடன் சில மாதங்களுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். இதனால் இருவருக்கும் இடையே உள்ள நட்பு பலப்படும்.
உங்கள் மகனோ அல்லது மகளோ விரும்புவதை மனதிலேயே பூட்டி வைத்துக் கொள்ளாமல் வாய்ப்பு கிடைத் தபோது வார்த்தைகளில் வெளியிடுங்கள். அவர்கள் சிறிய வேலை செய்தாலும் பாராட்டுங்கள். உடை நன்றாக இருந்தால் உண்மையான மன நிறை வோடு பாராட்டுங்கள். பள்ளியில் அல்லது கல்லூயில் படிக்கின்றவர்களை நண்பர்களாகக் கருதி, அதிக நேரத்தை அவர்களுடன் செலவிடுங்கள்.
அவர்கள் பெரும்பாலும் தங்கள் நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதைத்தான் விரும்புவார்கள். அதையும் மீறி அவர்கள் உங்களுடன் இருப்பதை விரும்பினால் உங்கள் செயலில் நீங்கள் வெற்றி அடைந்து விட்டீர்கள் என்பது பொருள். இவ்வாறு விடலைப் பருவத்தில் உள்ள மகனின் அல்லது மகளின் மனதில் நீங்கள் ஒரு நல்ல இடத்தைப் பெற்று விட்டதற்காக உங்களை நீங்களே தோளில் தட்டிப் பாராட்டிக் கொள்ளலாம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக