ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

ஒரு தொழில்நுட்ப விவகார சிக்கல் அரசியல் பஞ்சாய்த்திற்கு வருகிறது

தொழில்நுட்ப ரீதியான தகவல் பரிமாற்ற விடயங்களின் சமீபத்திய வரலாற்றை ஆராய்ந்தால், முதலில் “கூகிள்' நிறுவனத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான பிரச்சினை.
அடுத்து “பேஸ்புக்' இணையத்தளத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கடி.

தற்போது, “ப்ளெக்பெரி' ரகத்தைச் சேர்ந்த கையடக்கத் தொலைபேசிகள் சார்ந்த பிரச்சினை தலைதூக்கியிருக்கிறது. ஆரம்பத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அடுத்து சவூதி அரேபியா, அந்த வரிசையில் கடைசியாக இந்தியா என்று இந்த நெருக்கடி தொடர்கிறது. “ப்ளெக்பெரி'யை முழு அளவில் தடை செய்யப் போவதாக அச்சுறுத்தியது எமிரேட்ஸ். ஆரம்பத்தில் “ப்ளெக்பெரி' சேவைகளை முடக்கப் போவதாக எச்சரித்து, பின்னர் அதற்குத் தற்காலிகமாக அனுமதி வழங்கியிருப்பதாக அறிவித்தது, சவூதி அரேபியா.

ஆனால், எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் தாம் சொல்வதைச் செய்யாவிட்டால், “ப்ளெக் பெரியைத் தடை செய்யப் போவதாக தற்போது இந்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இது இந்தியாவின் உயர்மட்ட அமைச்சர்கள் கலந்துரையாடிய பின்னர் வெளியாகும் எச்சரிக்கையாகும்.

“ப்ளெக்பெரி' கையடக்கத் தொலைபேசி என்பது நவீன தொலைத்தொடர்பாடல் வசதிகளை வழங்கும் கருவியாகக் காணப்படுகிறது. இதில் இணையத்தை நாடமுடியும்.
மின்னஞ்சல்களை அனுப்ப முடியும்.
வீடியோ காட்சிகளை பார்க்கலாம். இசை வடிவங்களை செவிமடுக்கலாம்.

சந்தையில் விற்பனையாகும் “ஸ்மார்ட்' போன்ற வகையைச் சேர்ந்த செல்பேசிகளில் காணப்படக்கூடிய சகல வசதிகளும் “ப்ளெக் பெரி' தொலைபேசியில் இருக்கின்றன. எனினும், இந்தக் கருவியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பிரச்சினைக்குரியதென பல நாடுகள் வாதாடுகின்றன.

சகல வகையிலான ஸ்மார்ட் போன்களிலும் இணையச் சேவைகளைப் பெறமுடியும். அதாவது, இவற்றைப் பயன்படுத்தி இணையத் தளங்களில் உலா வரலாம். மின்னஞ்சல் களை அனுப்பலாம். இணையத்தின் ஊடாக ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள களம் அமைத்துத் தரும் (Messenger Services) தளங்களைப் பயன்படுத்தலாம்.

எந்தவொரு நாட்டிலும் தொலைபேசிச் சேவைகளை வழங்கும் அமைப்புக்கள் (Service Providers) ஊடாகவே “ஸ்மார்ட்' போன்களில் இணைய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இதனால், தொலை பேசிச் சேவை வழங்கும் அமைப்பிற்கு “ஸ்மாட்' போனின் ஊடாக அனுப்பப்படும் தகவல்களைக் கண்காணிக்கும் வாய்ப்பும், தேவையானால் அவற்றைப் பெறக்கூடிய வசதியும் உள்ளது.

ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் தொலை பேசி சேவைகளை வழங்கும் ஸ்தாபனங்கள் அரசுகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வையாகக் காணப்படுகின்றன. தொலைத் தொடர்பை ஒழுங்குபடுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட அரச அமைப்புக்கள் கோரும் பட்சத்தில், ஒரு “ஸ்மார்ட்' போனின் ஊடாக பகிரப்பட்ட தகவல்களை வழங்கும் கடப்பாடு தொலைபேசிச் சேவை வழங்கும் அமைப்புக்களுக்கு உள்ளது.

இந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இங்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட “ப்ளெக்பெரி' தொலைபேசிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது வேறு விடயம். பாரதி எயார்ரெல், லையன்ஸ், வொடாபோன், பீ.பி.எல். மொபைல் ஆகிய நிறுவனங்கள் “ப்ளெக்பெரி' சேவைகளை வழங்குகின்றன.

பெரும்பாலும் “ஸ்மார்ட்' போன்களின் ஊடாக அனுப்பப்படும் தகவல்கள் தொழில் நுட்பரிதியிலான சங்கேத குறியீடுகளாக (Encryption) மொழிபெயர்க்கப்படுகின்றன.
இந்தத் தகவல் உரியவரை சென்றடைந்ததும் உய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு சங்கேதக் குறிகள் மனிதர்கள் உணர்ந்து கொள்ளக்கூடிய மொழிக்கு மீண்டும் மாற்றப் படுகின்றன (Descryption). இத்தகைய தகவல்கள் மின்னஞ்சல்களாக இருக்கலாம். குறுஞ்செய்திகளாகவும் இருக்கலாம்.

“ப்ளெக்பெரி' தொலைபேசியை உற்பத்தி செய்வது கனடாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆர்.ஐ.எம். (Research in Motion) என்ற அமைப்பாகும். இந்த நிறுவனம் உலகெங்கிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற டிஜிட்டல் தகவல் சேமிப்பகங்களை (Server) பேணியபோதிலும், இதன் எந்தவொரு அதிகாரியாலும் ஒரு வாடிக்கையாளரின் பெயரில் சேமிக்கப்பட்ட தகவல்களைப் பெறமுடியாது. இது வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தைப் பேணும் ஏற்பாடாகும்.

சங்கேதக் குறியீடுகளைப் பொறுத்தவரையிலும் “ப்ளெக்பெரி'யின் தொழில்நுட்பம் சிறப்பானதாகக் காணப்படுகிறது. ஏனைய “ஸ்மார்ட்' போன்கள் பயன்படுத்தும் சங்கேதக் குறியீடுகளை விடவும் “ப்ளெக்பெரி' யின் குறியீடுகள் உயர்ந்த பாதுகாப்பை உடையவையாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாக, ஆர்.ஐ.எம். நிறுவனம் சங்கேதக் குறியீட்டை வழங்கும் பட்சத்தில் மாத்திரமே “ப்ளெக்பெரி' தொலைபேசியில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் என்ன என்பதைக் கண்டறிய முடியும்.

“ப்ளெக்பெரி' தொலைபேசி விலையுயர்ந்த ஆடம்பரக் கருவியாக நோக்கப்பட்டாலும் தமது தகவல்களும், தொடர்பாடல்களும் அந்தரங்கமாக பேணப்பட வேண்டும் என்று விரும்புவோரே இதனை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பயன்படுத்துவதும் “ப்ளெக்பெரி' ரகத்தைச் சேர்ந்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதொரு கையடக்கத் தொலைபேசிதான். பாரிய சர்வதேச நிறுவனங்களின் உயர்மட்ட உறுப்பினர்களும், கைத்தொழில் அதிபர்களும் “ப்ளெக்பெரி' யின் வாடிக்கையாளர்கள்.

“ப்ளெக்பெரி'க்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் பாதுகாப்பு என்ற காரணத்தின் ஊடாக நியாயப்படுத்தல்களை முன்வைக்கின்றன.

“ப்ளெக்பெரி' ஊடாக அனுப்பப்படும் தகவல்களின் அந்தரங்கத் தன்மை காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பது இத்தகைய நாடுகளின் வாதம்.

அதாவது, தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்க முனையும் பயங்கரவாதிகளும், கிளர்ச்சியாளர்களும் தகவல் பரிமாற்றத் திற்காக “ப்ளெக்பெரி'யின் தொழில்நுட்பத்தை தமக்குச் சாதமாக உபயோகிக்கலாமென இவை கூறுகின்றன. சவூதி, எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் பாதுகாப்பையே காரணமாகக் காட்டுகின்றன.
இந்த நாடுகளில் இணையப் பாவனை பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது. இணையத்தை நாடும் பாவனையாளர் ஒருவர், அரசாங்கத்தின் விதிறைகளுக்குக் கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. எனினும், “ப்ளெக்பெரி'யைப் பயன்படுத்தும்போது இந்தக் கட்டுப்பாடுகளைத் தாண்டி தகவல்களையும், கருத்துக்களையும் பமாறிக் கொள்ள முடிவதை கரிசனைக்குய விடயமாக சவூதியும், எமிரேட்ஸூம் கருதுகின்றன.
அந்த நாடுகளுக்கு தாம் மிகவும் கட்டுக் கோப்பாகப் பேணும் கலாசாரம் தொழில் நுட்ப வசதிகள் என்ற பெயரிலான ஊடுருவல்கள் மூலம் சிதைந்து விடக்கூடுமென்ற ஆதங்கம் உள்ளது.

ஆர்.ஐ.எம் இற்கும், அரசுகளுக்கும் இடையிலான இழுபறியில் பாதுகாப்பு, கலாசாரம் போன்ற விடயங்கள் தன்மைப்படுத்தப்பட்ட போதிலும், நியாயப்படுத்தல்களுக்காக இறையாண்மை முதலான பதங்கள் பயன் படுத்தப்பட்ட போதிலும், இதில் வணிக ரிதியான போட்டித்தன்மையும், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத ஆற்றாமையும் மறைந்திருக்கக்கூடும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. தற்போதைய வணிக உலகில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்பதை உரசிப் பார்க்கும் பலப்பரிட்சையின் களமாகவே “ப்ளெக்பெரி' தடை விவகாரம் அமைந்திருக்கிறதென விஷயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

உண்மையில் “ப்ளெக்பெரி'யின் பலமாக இருப்பது, வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை பேணிக்காக்கும் தொழில்நுட்பமே.

அந்தத் தொழில்நுட்பத்தை விட்டுக் கொடுக்குமாறு உலக நாடுகள் கோருவதும், ஆர்.ஐ.எம் அசைந்து கொடுக்காமல் இருப்பதும் வெளியுலகிற்குத் தெரிந்த விடயங்கள். ஆனால், பாது காப்பு விஷயத்தில் அதிக அக்கறை காட்டும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் “ப்ளெக் பெரி'க்கு பிரச்சினை கிடையாது. இந்த நாடுகளுடன் ஆர்.ஐ.எம் நிறுவனம் ரகசிய உடன் படிக்கைகளை ஏற்படுத்தியிருப்பதால் பிரச்சினைகள் இல்லாமல் போனதென்ற கதைகள் உலாவருகின்றன. “ப்ளெக்பெரி' விவகாரத்தில் கடுமையாக முரண்டுபிடித்த சவுதி அரேபியா, சில நாட்களுக்குள் நிலைப்பாட்டை மாற்றியிருப்பது ஏன் என்பதும் சந்தேகத்திற்குரிய விடயமே. “ப்ளெக்பெரி' தொலைபேசி நிறுவனத்திற்கும், அரசுகளுக்கும் இடையிலான சர்ச்சை பலதுறைகள் சார்ந்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஒரு நிறுவனம் எந்தவொரு தொழில்நுட்பத்தால் விருட்சமாக வளர்ச்சி கண்டு சந்தையை ஆக்கிரமித்ததோ, அந்த தொழில்நுட்பத்தை அரசுகளின் சுயநலத்திற்காக விட்டுக் கொடுக்க முடியுமா என்பது வணிகத்துறை சார்ந்த கேள்வி. வணிகத்தின் பெயரால் எல்லை மீறுவதற்கு தனியொரு நிறு வனம் அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதும், அத்தகைய நிறுவனம் நாடொன்றின் சட்ட திட்டங்களை மறுதலிக்க முடியுமா என்பதும் அரசியல்துறை சார்ந்த கேள்வியாகும்.

இந்தப் புள்ளிகள் இரண்டும் சந்திக்கும் இடத்தில் சமரசம் இருக்கலாம். சண்டைகளும் இருக்கலாம். ப்ளெக்பெரி விவகாரத்தில் சவூதி அரேபியா இறுக்கத்தைத் தளர்த்தியிருப்பது சமரசத்திற்கு உதாரணமாகும். ஆனால் அதற்காக செலுத்தப்பட்ட விலை என்ன என்பது முக்கியமானதொரு வினா. இந்த வினாவிற்கு பதிலளிக்கும் கடப்பாட்டை இரு தரப்புக்களும் நிறைவேற்றவில்லை. “ப்ளெக் பெரி' பிரச்சினையில் இந்திய அரசாங்கம் விதித்த காலக்கெடு பின்னையதற்கு உதாரணம் இந்தப் பிரச்சினை எவ்வாறு கையாளப்படப் போகிறது என்பதை பொறுத்திருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எது எவ்வாறானபோதிலும், செக்கனுக்கு 28 இலட்சம் மின்னஞ்சல் பரிமாறப்படும் தற் போதைய தகவல் புரட்சி யுகத்தில் தகவல்களை , முற்றுழுதாக கண்காணித்து கட்டுப்படுத் துவது என்பது லேசுப்பட்ட விடயமாக இருக்கப் போவதில்லை. இந்த விடயத்தை தனித் தனியாகவோ கூட்டாகவோ உலக நாடுகள் எவ்வாறு கையாளப் போகின்றன என்பதை எதிர்வுகூரக்கூடிய ஆரம்பகளமாக . “ப்ளெக்பெரி' பிரச்சினை அமையக்கூடும் என்பது திண்ணம்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல