வியாழன், 26 ஆகஸ்ட், 2010

கருணையின் வடிவம் அன்னை திரேசா

தொண்டின் இலக்கணமாகத் திகழ்ந்தவர் அன்னை திரேசா ஆவார். இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் போற்றத்தக்க மனிதராக உயர்ந்திருப்பவர் அவர். அன்னையின் அன்பு கர‌த்தைப் பார்த்ததுமே பலர் அவரின் சீடராக மாறி அன்னையின் வழியில் சென்றுள்ளனர்.

1910ஆம் ஆண்டில் பிறந்த அன்னைக்கு பெற்றோர் இட்ட பெயர் அக்னஸ் கொயின் ஷா பெஜாக்கியூ என்பதாகும். சிறு வயது தொட்டே உலக மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்னை வளர்ந்தார். இறையுணர்வு மிக்கவ ராகவும் விளங்கினார்.

இந்திய மிஷனகள் கல்கத்தாவில் செய்யும் பணியை தெரிந்து கொண்ட சிறுமியான அக்னஸிற்கு தானும் அது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. லொரேட்டா கன்னிகா மடத்தை பற்றிய விபரங்களும் அவரது ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியது. லொரேட்டா கன்னிகா மட உறுப்பினரானதன் பின் ஆன்மீகத் துறையில் கல்வி கற்க அயர்லாந்து சென்றார். கல்கத்தாவில் புனித மரியன்னை உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக 1929ஆம் ஆண்டு அவர் பணியைத் துவங்கினார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அக்னஸ் கன்னிகா பெண்களுக்கான கட்டுப்பாடுகளை ஏற்று தமது வாழ்நாள் முழுவதும் இயேசு பெருமானுக்கு அர்ப்பணிக்கும் ஞானஸ்தானத்தினால் தெரேசாவாக ஏற்றம் பெற்றார்.

1948ஆம் ஆண்டு பாட்னாவில் வைத்தியத்தாதிப் பயிற்சியினை பெற்றுக் கொண்டார்.

1949ஆம் ஆண்டு மோதிஜில் என்ற சேரிப்பகுதியில் உங்களுக்கு தொண்டு செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன்.உதவி செய்ய என்னை அழைப்பீர்களா? என்று கேட்டுக் கொண்டே சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய ஆரம்பிக்கின்றார்.

1950ஆம் ஆண்டு அன்னை திரேசாவின் தலைமையில் மிஷனரிஸ் ஒப் சரிட்டி இல்லம் (Missionaries of Cherity) உருவாக்கப்பட்டது. அன்னை தூய்மையான பணிக்கு எடுத்துக்காட்டாக நீல நிறக் கரை போட்டவெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்து கொள்ளலானார். அன்னையிடம் முதன் முதலாக தீட்சை பெற்ற சுபாஷினிக்கு தனது இயற்பெயரான அக்னஸ் என்பதையே சூட்டி மகிழ்ந்தார்.

கல்கத்தா நடை பாதைகளில் அநாதைகளாக உலாவிடும் மனிதர்களை கண்டு இரக்கம் கொண்ட அன்னை அதற்காக தனியிடம் அமைக்க வேண்டி நகராட்சியிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிய வருகின்றது. தொழு நோயாளர்களை அரவ ணைத்து அன்னை ஆற்றிய தொண்டு அன்னையை தெய்வத்துக்கு சமனாக உயர்த்திக் காட்டியது என்பது பலரின் கருத்தாக உள்ளது. பங்களாதேஷ் போல் அகதிகளாக வந்து குவிந்த மக்களுக்கு அன்னை ஆற்றிய பணிகளுக்காக உலக மெங்கும் பாராட்டுகள் குவிந்தன. பத்திரிகையாளர் குஷ்வந்த்சிங் அன்னையை பற்றி குறிப்பிடுகையில் “ஏழை நோயாளர்களுக்கு வெறும் உபதேசம் சொல்பவரல்லர் அவர்.
இணைந்து அவர்களுடன் தமது வாழ்நாட்களை அவர்களுக்காக செலவிடுபவர். தமக்கென்று எதுவும் சேர்த்து வைக்காமல் எளிய வாழ்க்கை நடத்துபவர்'' என்று நிதர்சன நிலையை வெளிப்படுத்துகின்றார். செம்பூரான் தனது கட்டுரை ஒன்றில் அன்னையின் பணிகள் குறித்து சிறப்பாக விளக்குகின்றார்.

1984இல் அன்னை இலங்கைக்கு வந்தபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

1962ஆம் ஆண்டு அன்னையின் சேவையை பாராட்டி இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து 1979இல் அமைதிக்கான நோபல் பரிசும் 1980இல் இந்தியாவின் அதியுயர் விருதான பாரதரத்னா விருதும் 1983இல் பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் இருந்து அன்னையின் திறமைக்கு கௌரவ விருதும் கிடைத்தன. 1997இல் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அன்னைக்கு அமெரிக்காவின் கௌரவ பிரஜாவுமையை வழங்கினார்.

1983ஆம் ஆண்டு அன்னையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதய நோய் கண்டு பேஸ் மேக்கரும் பொருத்தப்பட்டது. அன்று தனது உடல் நிலை குறித்து கவலைப்படாத அன்னை அறப்பணிகள் தொடர வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

1994இல் அவர் தமது பொறுப்புக்களை மற்றவரிடம் ஒப்படைக்க விரும்பினார். ஆனால் 126 நாடுகளின் 4400 கன்னிகா பெண்களும் சகோதரர்களும் கொண்ட குழு அன்னையையே ஸுப்பீரியர் ஜெனரல்' பதவியை தொடருமாறு கேட்டுக் கொண்ட னர்.

இளவரசி டயானாவின் மரணச் செய்தி கேட்டு அன்னை மனம் நொந்தார். இளவரசியின் மரணக்கிரியைகளில் கலந்து கொள்ளவிருந்த சமயம் நோய்வாய்ப்பட்டு 1997 புரட்டாதி 05ஆம் திகதி கல்கத்தாவில் உயிர் நீத்தார்.

அன்னையின் மறைவின் பின்னர் சேவை நிலையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரி நிர்மலா அன்னையைப் பற்றி கூறுகையில், நான் அன்னை தெரேசா அல்ல. சகோதரி நிர்மலா. என்னை தயவு செய்து அன்னை என்று அழைக்காதீர்கள். அன்னை திரேசாவின் இடத்தை என்னால் நிரப்ப முடியுமா? என்று எனக்கு பயமாக உள்ளது. இதற்காக கடவுளை பிரார்த்தித்துக் கொள்கின்றேன் என்று கூறினார்.
அத்தோடு ““அன்னைதான் என்றைக்கும் அன்னை நாங்கள் அவன் குழந்தைகள்' என்றார்.

அன்னையின் புனிதப் பணிகள் அவர் ஸ்தாபித்த கிளைகளின் ஊடாக உலகம் முழுவதும் இடம்பெற்று வருகின்றன.

நோயாளர்களுக்கான சிகிச்சை, குழந்தைகளுக்கான கல்வி போதனை உள்ளிட்ட பல் வேறு பணிகளை இந்நிலையங்கள் ஆற்றி வருகின்றன.

கருணையின் வடிவமாகவும் மனிதருள் தெய்வமாகவும் திகழ்ந்த அன்னை திரேசா ஆற்றிய பணிகள் அளப்பயன என்பதோடு அன்னையின் தேகம் அழிந்தாலும் உலக மக்கள் உள்ளங்களில் அவர் என்றும் நிலைத்து வாழ்வார் என்பதே உண்மை.

துரைசாமி நடராஜா
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல