போர் முடிவடைந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் குறிப்பாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றில் வீதி அபிவிருத்தி, மேம்பாலக் கட்டுமானங்கள் போன்றவற்றைப் பிராந்திய வல்லாதிக்க நாடுகளான இந்தியாவும் சீனாவுமே போட்டிபோட்டுக்கொண்டு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கரடியனாறு பொலிஸ் நிலைய வளாக வெடிவிபத்துச் சம்பவத்துடன் சீன நிறுவனம் ஒன்றே தொடர்புபட்டுள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு திருக்கொண்டியா மடுவரையுள்ள ஏ.4 வீதிப் புனரமைப்புப் பணிகளை சீன நாட்டைச் சேர்ந்த சைனா ஒபேக் நிறுவனமே பல மில்லியன் ரூபா செலவில் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிறுவனத்தினால் வீதி அபிவிருத்திப் பணிகளின் போது கருங்கற்களை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் டைனமைற் வெடிமருந்தே கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் வெடித்துப் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வெடிவிபத்துச் சம்பவம் தொடர்பில் அந்நிறுவனத்தின் பொறுப்பற்ற செயலையும் அவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்பட அனுமதித்த அரசாங்க அதிகாரிகளையும் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. அதிசக்தி வாய்ந்த வெடி மருந்துகளைக் கொண்ட கொள்கலன்களை எவ்வித பாதுகாப்புமற்ற வகையில் கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தமை, பொதுமக்கள் பெருமளவில் கூடும் பொலிஸ் நிலைய வளாகத்தில் எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி வெடிமருந்தைக் கையாள முற்பட்டமை, ஒரே இடத்தில் பெருந்தொகை வெடி மருந்துகளைக் கொண்ட கொள்கலன்களை நிறுத்தி வைத்திருந்தமை போன்ற செயல்கள் சீன நிறுவனத்தினது கவனயீனமான செயற்பாட்டை வெளிப்படுத்துவதுடன் இவ்வாறான ஆபத்தான வெடிமருந்துகளைப் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கிய பாதுகாப்புத் தரப்பினரின் பொறுப்பற்ற தனத்தையும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் அவர்களின் அக்கறையீனத்தையும் காட்டுகின்றது.
நாட்டில் இடம்பெற்று வரும் அபிவிருத்திப் பணிகளில் வெளிநாட்டு நிறுவனங்களும் வெளிநாட்டுப் பணியாளர்களும் அதிகளவில் ஈடுபட்டுவரும் நிலையில் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புத் தொடர்பில் அவர்களுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்க வேண்டியதும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியதும் அரசாங்கத்துக்குள்ள பொறுப்பாகும். ஆனால், அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து தவறியதால் இன்று கிழக்கு மாகாணம் மீண்டுமொரு போர்க்கால அழிவைச் சந்தித்துள்ளது. பொலிஸார், பொதுமக்கள், இரு சீனர்கள் உட்பட 28 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 75 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கரடியனாறு பொலிஸ் நிலைய வளாக வெடிவிபத்து முற்றுமுழுதாக சீன நிறுவனத்தினதும் பாதுகாப்புத் தரப்பினரதும் அசட்டையான செயற்பாடுகளால் ஏற்பட்ட கோர சம்பவமாகவே கருதப்படுகின்றது.
எமது பொறுப்பற்ற செயல்களினால் பேரழிவுகள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதாலோ உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்குவதாலோ கண்டனங்கள், அனுதாபங்களைத் தெரிவிப்பதனாலோ எதுவும் நடந்து விடப்போவதில்லை. இழந்த உயிர்கள் மீண்டுவரப்போவதுமில்லை. எனவே வெளிநாட்டு நிறுவனங்களூடான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் போது நாட்டினதும் பொது மக்களினதும் பாதுகாப்புத் தொடர்பில் இனியாவது அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களை மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் அறிவுறுத்த வேண்டும். கரடியனாறு வெடிவிபத்து போன்ற கோர சம்பவமொன்று மீண்டும் நிகழ்ந்து விடாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்குண்டு.போர் முடிந்துவிட்ட நிலையில் உயிரிழப்புகள் குறைந்து குண்டுச் சத்தங்கள் ஓய்ந்துவிட்ட சூழலில் ஒரு சிலரின் கவனக்குறைவினால் இவ்வாறான வெடி விபத்துக் கோர சம்பவங்கள் ஏற்பட்டு அப்பாவி மக்கள் உயிரிழப்பது இந்நாட்டு மக்களின் மனங்களை ரணமாக்குவதாகவேயுள்ளதுடன் போர்க்கால வலியை மீண்டும் ஏற்படுத்துவதாகவேயிருக்கிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக