புதன், 6 அக்டோபர், 2010

நோர்வே அமைத்துள்ள விசாரணைகுழு தமிழருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமா?

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன என்பது குறித்த ஆய்வு ஒன்றை நோர்வே அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.இந்த ஆய்வை மேற்கொள்ளும் பொறுப்பை நோர்வே அரசாங்கம் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது.

““கிறிஸ்யன் மக்கெல்சென் இன்ஸ்யூட்'' என்ற அமைப்பே இந்த ஆய்வை மேற்கொள்ளப் போகிறது. கன்னர் சோர்போ என்பவரது தலைமையிலான நிபுணர் குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

நோர்வே அரசாங்கம் இலங்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நீண்டகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

அயல்நாடான இந்தியா சமாதான முயற்சிகளில் நேரடியாக ஈடுபட்ட காலத்தை விடவும் நோர்வே அதிக காலம் இதில் தொடர்புபட்டிருந்தது.

1997ஆம் ஆண்டு, முதல் றையாக நோர்வே இந்த முயற்சியில் இறங்கியது.
ஆனால் 1999ஆம் ஆண்டு தான் நோர்வேயின் சமாதான முயற்சிகள் செயல் வடிவம்பெற்றன.

1999ஆம் ஆண்டு தொடக்கம், 2008ஆம் ஆண்டு நோர்வேயை சமாதான ஏற்பாட்டாளர் என்ற நிலையில் இருந்து நீக்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவிக்கும் வரை இந்த முயற்சிகளில் நோர்வே காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தது.

2008ஆம் ஆண்டு சமாதான ஏற்பாட்டாளர் என்ற நிலையை நோர்வே இழந்த போதிலும் போர் முடிவடையும் வரையில் நோர்வே இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டிருந்தது.

இலங்கையில்மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளுக்காக பெருந்தொகைப் பணத்தையும் உழைப்பையும் செலவிட்டிருக்கிறது நோர்வே.

இந்தக் கட்டத்தில் தான் நோர்வே 1997 தொடக்கம் 2009வரையான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிகள் ஏன் தோல்வியில் முடிந்தன என்று ஆராயும் முடிவை எடுத்துள்ளது.

இந்தக் குழுவின் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் காரணங்களையும், அது பற்றிய தமது கருத்துகள், பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை எதிர்வரும் எப்ரல் மாதம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இறுதிப்போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவும் இயங்கத் தொடங்கி விட்டது.

இது ஒரு விசாரணைக் குழுவாக இருக்காது என்றும் ஆலோசனை வழங்கும் குழுவாகவே இருக்கும் என்றும் ஐ.நா பொதுச்செயலர் அறிவித்துள்ளார்.

இதனால் இந்தக் குழு எதிர்பார்க்கப்பட்டதுபோன்று பெரியதாக எதையும் கண்டறிந்து விடும் வாய்ப்புகள் இல்லை.

முன்னதாக இந்த நிபுணர்குழு குறித்து பலமான எதிர்பார்ப்பு சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருந்தது. இப்போது அந்த நம்பிக்கை மெல்ல மெல்லத் தளர்ந்து போய் விட்டது.

அதேவேளை இலங்கை அரசாங்கம் 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது தொடக்கம் 2009இல் போர் முடிவுக்கு வந்தது வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்துள்ளது.

ஆக, இலங்கையில் நடந்த போர் மற்றும் அமைதி முயற்சிகள் தொடர்பாக இப்போது சமகாலத்தில் மூன்று நிபுணர் குழுக்கள் ஆய்வு நடத்தவுள்ளன. இது ஒரு முக்கியமான விடயம். இந்த மூன்று நிபுணர்குழுக்களினதும் அறிக்கைகள் ஏதோ ஒரு இடத்தில் ஒத்துப் போகின்ற வகையில் இருக்கும் என்றே நம்பலாம்.
பிரச்சினையின் அடிப்படைக் காரணங் களை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்வதற்கு இந்த விசாரணைக் குழுக்கள் உதவியாக அமையும்.
அதேவேளை இந்த நிபுணர் குழுக்களின் மூலம் தமிழருக்கு என்ன கிடைத்து விடப் போகிறது என்பது முக்கியமானதொரு கேள்வியாக உள்ளது.

சமாதான முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்பதை நோர்வே கண்டறிவதன் ஊடாகவோ அல்லது ஐ.நா பொதுச்செயலருக்கு நிபுணர்குழு வழங்கவுள்ள ஆலோசனையின் மூலமோ தமிழருக்கு எந்த நியாயமும் கிடைத்து விடப் போவதில்லை.

அதுபோல நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் நடைறைப்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
மூன்று தசாப்த காலப்போல் தமிழர்கள் இழந்தவை இழந்தவை தான். அவற்றை ஒருபோதும் மீளப்பெற முடியாது.

போருக்கான அடிப்படைக் காரணங்களை இப்போது கண்டறியப்படுவதன் மூலம் தமிழருக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை.

இலங்கை, நோர்வே, ஐ.நா என்று மூன்று நிபுணர் குழுக்களுமே வெறும் ஆய்வுக்காவே இவற்றைச் செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.
கிடைக்கப் போகும்அறிக்கையை வைத்துக் கொண்டு அமைதி முயற்சிகள் தோல்வியில் முடிந்ததற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும் உரிமை நோர்வேக்கு கிடையாது.

அதுபோல போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்கின்ற அதிகாரமே ஐ.நா நிபுணர்குழுவுக்கு இல்லாதபோது அதன் அறிக்கையின் மூலம் சாதிக்கப் போவது ஏதுமில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அரசஆதரவு சக்திகளைப் பாதுகாப்பதற்கே பயன்படும்.

அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவொரு நிபுணர்குழுவினது அறிக்கையுமே திருப்தியைத் தராது.

அவர்களின் இழப்புகள், துயரங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படப் போவதில்லை. எல்லாமே வெறும் கண்துடைப்பாக முடிந்து போய்விடும் நிலையே உள்ளது.

நோர்வே நடத்தப் போகும் விசாரணைகளில் உண்மைகள் பல வெளிவரலாம் . ஆனால் அது எந்தளவுக்கு தமிழருக்கு பயன்கொடுக்கப் போகிறது என்பது தான் கேள்வி.

தமிழ் மக்கள் சமாதானத்தின் பெயரால் தான் எல்லாவற்றையும் பறி கொடுக்கும் நிலைக்கு வந்தார்கள்.

அந்தவகையில் தமிழரின் அழிவுகளுக்கு நோர்வேயும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த ஆய்வு நோர்வே இன்னொரு நாட்டின் அமைதி முயற்சிகளில் ஈடுபடும்போது கவனமாக இருப்பதற்கான படிப்பினைகளைக் கற்றுக் கொடுக்கும்.

அது அவர்களின் எதிர்கால செயற்பாடுகளைச் செம்மைப்படுத்தும்.

ஆனால் இலங்கையில் சமாதான முயற்சிகளின் தோல்வியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த விசாரணையோ அறிக்கையோ எதையும் கொடுக்கப்போவதில்லை.

அதாவது நோர்வேயின் சமாதானப் பரிசோதனை முயற்சிக்கு தமிழ்மக்கள் பலிக்கடாக்களாகியது தான் மிச்சம்.

கபில்

வீரகேசரி

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல