வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

கனவாகும் நாயகன்

இறந்து மூன்று ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் ஆயதபாணி அரசியல் சுவடின்றி மறைகிறது. தனி ஈழம் கோரும் தி.மு.க. கட்சிகள் கூட அதன் வன்முறையற்ற வழியில் எட்டுவது பற்றி பேசுகின்றன. பிரபாகரனும் அவரது போராட்டமும் கனவாகிறதா?


ஈழப்போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிகையில் அரசியல் தளத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரின் ஆயதபாணி ஈழ அரசியலும் சுவடின்றி மறைகின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்வைத்த ஆயதப்புரட்சி அரசியல் இனி சாத்தியமில்லை என்று இந்தியரூடேயிடம் கூறினார் இலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் பாரதி.

பிரபாகரனுக்கு வரலாற்றில் ஒரு இடம் உண்டு என்றாலும் அவரின் ஆயத விடுதலைப்பாணிக்கு இன்றைய அரசியலில் இடம் கிடையாது என்கிறார் அவர். களயதார்த்தத்தை புரிந்துகொண்டால் ஒப்புக்கொண்டால்தான் அடுத்த கட்டத்திற்கு நனரமுடியும் என்று கூறுகிறார் அவர்.

ஆயதமே அரசியல் என்ற ஒற்றைப் பரிமாணம் கொண்டிருந்த பிரபாகரனின்; தோல்வியால் அதையொட்டி நடந்த இதுவரை கண்டிராத மனித அழிவு ஒட்டுமொத்த உலகிற்கே முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் கோர அனுபவம்.

2009 மே மாதத்தின் உச்ச கட்ட போரில் மட்டுமே 40,000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா உள்ளிட்ட அமைப்புக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மரணங்களை நிகழ்த்திய இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் விசாரணைக்குள்ளாகும் அதே சமயத்தில் அத்தகைய ஒரு விளிம்பிற்குத் தள்ளிய பிரபாகரனின் 30 ஆண்டு கால பிடிவாதமும் விமர்சனத்திற்குள்ளாகமல் இல்லை.

தமிழர் பிரச்சினைக்கு ஆயதமே தீர்வைக்கொடுக்கும் என்கிற முரட்டு பிடிவாதம் கொண்டிருக்கும் இன்னொரு பிரபாகரன் பிறக்க வாய்ப்பே இல்லை என இந்தியா ரூடேயிடம் கூறினார் 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்பிரச்சினையை கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.முராரி. பிரபாகரன் காலத்தின் கட்டுமானத்தால் பிறந்தவர். வெறி கொண்ட இனவாதத்திற்கு எதிராக நியாயமான காரணங்களுக்கான பயங்கரவாதம் உருவானது என்று கூறுகிறார் பிரபாகரன் பற்றிய த பிரபாகரன் சாகா: ரைஸ் அண்ட் போல் ஆப் அன் ஈழம் வாரியர் என்கிற நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ள முராரி. ஆனால் பிரபாகரன் ஒரு பாசிஸ்ட் என்பது உண்மை. ஒரு கெரில்லா படையை சப் கன்வென்ஷனல் போர் முறைக்கு மாற்றி விட்டதாக ஒரு பொய்க்காட்சியில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளத் தொடங்கிய நாளில் அவர்கள் வீழ்ச்சியடையத் தொடங்கினார்கள். என்கிறார் அவர்.

புலிகள் போன்ற ஒரு கெரில்லா படையால் ஏராளமான ராணுவப் போர்வீரர்களைக் கொண்ட இலங்கை போன்ற அரசுப்படையை வழங்கமான போர் முறையில் எதிர்கொள்ளவும் முடியும் என புலிகள் நம்பினார்கள்.

2009 போரின் இறுதிக் கட்டத்தில் மூன்று கம்பனி இராணுவம் (40,000பேர்) புலிகளுக்கு எதிராக முன்னேறியது. புலிகள் படையில் 10,000 பேர் இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் எதிரிப்படைகளிடம் பிரதேசம் பறிபோகாமல் காப்பாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்புகிறார் முராரி. ஆனால் பின்வாங்கி சென்ற கடைசிக்கட்டம் வரை பிரபாகரன் கொல்லப்படுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லாமே சாதூர்யமன பின்வாங்கல் என்றே கருதப்பட்டது.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான மூன்று ஆண்டுகளில் பிரபாகரனின் மரணத்தை ஏற்கத் தயாராக இல்லாத தமிழ் மன எண்ணச் சிதறலுக்கு இணையே சாட்சி. பிரபாகரன் கடவுள் மாதிரி என்கிறார்கள். இல்லை என்கிறார்கள். ரட்சிக்க வருவார் என்கிறார்கள். வரமாட்டார் என்கிறார்கள் என்று பேசுகிறது மணிமலர் என்பவரின் இணைய கவிதை. பிரபாகரன் இறந்து விட்டாரா இல்லையா என்பதை விவாதிக்க கூட தாங்கள் தயாரில்லை என்று இந்தியா ரூடேயிடம் கூறினார் ஈழ ஆதர நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான். அவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையே தமிழர் நலனுக்கான எங்கள் அரசியலை நடாத்த உத்வேகம் கொடுக்கும் போது நாங்கள் ஏன் இலங்கை அரசாங்கத்தின் பொய்களை நம்பவேண்டும்?. செத்ததாக இலங்கை அரசு காட்டிய உடல் தொடர்பாக பதில் இல்லாத ஏராளமான மர்மங்கள் உள்ளன என்கிறார் அவர்;.

ஆயத தளத்தில் பிரபாகரன் முன்வைத்த ஆயதம் தாங்கிய ஈழ விடுதலைப் பாதை முற்றிலுமாக அடைபட்டு விட்டது. ஆனால் தமிழ்தேசியவாத அமைப்புகளும் தலைவர்களும் அதை ஏற்கத் தயாராக இல்லை. பிரபாகரனின் மரணத்தையே ஏற்காதவர்கள். அவர் முன்வைத்த அரசியலின் மரணத்தையா ஏற்கப்போகிறார்கள்?. பிரபாகரன் இறந்ததாக ஒப்புக்கொண்டால் தாங்கள் முன்வைக்கும் தமிழ்த்தேசியவாதம் செத்துவிடும் என அஞ்சுவதால் அந்தத்தலைவர் பிரபாகரனின் இறப்பை அங்கீகரிக்க மறுக்கிறார்கள் என்கிறார் பாரதி.

27 வருடங்கள் கழித்து தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்கான டெஸோ அமைப்பிற்கு புத்துயிர் கொடுத்தள்ள தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கூட பிரபாகரனின் மரணத்தை வெளிப்படையாக ஏற்கவில்லை.பிரபாகரனின் மரணம் பற்றிய கேள்விகளுக்கு வீரர்களுக்கு மரணம் என்பதே இல்லை என்பது பொத்தாம் பொதுவாகத்தான் பதில் சொல்கிறாh.; கால்நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆயதப்போராட்டம் மூலம் தனித் தமிழ் ஈழத்தை எட்டும் நோக்கிற்காக டெஸோ மூலம் நிதி திரட்டி போராளி குழக்களுக்கு வழங்கியவர் கருணாநிதி. ஆனால் இம்முறை வன்முறை அல்லாத வழிகளில் ஈழம் எட்டப்பட டெஸோ பாடுபடும் என நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார். பிரபாகரன் பாணி ஆயத அரசியலுக்கு கொள்கை அளவில் கூட ஆதரவு தர முடியாத சமாகல சூழலையே இது காட்டுகிறது.

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரழிவிற்குப் பிறகு பிரபாகரனின் தீவிர அபிமானிகளிடையே ராணுவத் தீர்வில் அவர் வைத்திருந்த பிடிவாதம் மீது எதிர்மறை மனோபாவம் ஏற்பட்டிருக்கிறது. பிரபாகரனின் ரசிகராக அறியப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஸே.லெனின்(30) பிரபாகரன் மீண்டும் பிறந்து வரவேண்டும் என்கிறார்.

ஆனால் ஒரு அரசியல் தலைவராக அவர் பிறக்கவேண்டும். இந்த அளவிற்கு மக்கள் பலியாகமல் சிங்கள அடிமைத்தனத்திலிருந்து அவர் இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தர வேண்டும் என்கிறார் தனியார் நிறுவனங்களின் ஒப்பந்ததாhராக இருக்கும் அவர். பிரபாகரனே தேசியத்தலைவர் என்று கருதினாலும் அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்தாலும் அந்த தனிநபாரைத் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மிகப்பெரிய துயரம் நிகழ அனுமதிக்கப்பட்டது பெரிய துயரம் என்கிறார் அவர்.

பிரபாகரன் என்ற தலைப்பு முரண்பட்ட வாதங்களுக்கும் எண்ணங்களுக்கும் இடையில் தடுமாறுகிறது. போர்க்களத்தில் தனது பிள்ளைகளையும் பிரபாகரன் பலிகொடுத்தார் என்பது களங்கங்கள் கொண்ட அவரது பிம்பத்தை மீட்கத்தான் செய்கிறது. தனது மனைவி மக்களை போர்க்களத்தில் இருந்து வெளியேற்ற அத்தனை வாய்ப்பிருந்தும் அதை அவர் செய்யவில்லை என்கிறார் பாரதி. அதே சமயத்தில் குறைந்தது இரண்டு தருணங்களில் தனது வாழ்நாளில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வாய்ப்புக்களை தவற விட்டதன் வழியாக பல்லாயிரம் பேர் மரணிக்க காரணமாக இருந்தார் என்பது மறக்கப்படக்கூடாது என்கிறார் அவர்.

குற்றச்சாட்டுக்கள் களங்கங்களை மீறி பிரபாகரன் எப்படி வாழ்ந்தார் எவ்வாறு செத்தார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் குறையவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் பிரபாகரன் தனித்தமிழ் ஈழம் தொடர்பாக சுமார் 25 புத்தகங்கள் வந்திருக்கின்றன. தனி மனித துதிபாடல் அம்சத்தாலும் பிரபாகரனின் வாழ்க்கையையும் மரணம் குறித்த உண்மையையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தாலும் அவரைப்பற்றிய புத்தகங்கள் அதிகம் வெளியாவதோடு வேகமாக விற்றுத் தீர்ந்து விடுகின்றன என்கிறார் எழுத்தாளரும் உயிர்மை பதிப்பாளருமான மனுஷ்யபுத்திரன். ஒரு கட்டத்தில் ஈழம் மட்டுமன்றி வெளியேயும் ஒட்டுமொத்தமான தமிழர்களின் பாதுகாப்பு உணர்விற்கான அடையாளமாக பிரபாகரன் இருந்தார். அரசியல் தொலை நோக்கின்மையால் அவர் அதனை இழந்தார் என்று இந்திய ரூடேயிடம் கூறினார் அவர்.

உலக அளவில எதிர்ப்பு அரசியலுக்கான வாய்ப்புக்கள் மங்கும் காலகட்டத்தில் தமிழ்மனதில் ஒரு சாகச நாயகனாக இடம் பிடிக்கிறார் என மேலும் குறிப்பிடுகிறார் மனுஷ்யபுத்திரன்.

சகபோராளிகளைக் கொன்றது. தமிழ் முஸ்லீம்களை ஓரிரவில் அகதிகளாக விரட்டியடித்தது, சொந்த மக்கள் கொத்து கொத்தான மடியக்காரணமாக இருந்தது, குழந்தைகளை போரில் திணித்தது, நடமாடும் சிறைச்சாலைகள், சித்திரவதைக்கூடங்களை வைத்திருந்தது ஆகிய அனைத்தையும் மீறி இந்த நாயக அந்தஸ்து பிரபாகரனின் பிம்பத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. வெறுமனே விடுதலைப்புலிகளின் வலுவான ஊடகப்பலம் கட்டமைத்த பிரபாகரனின் பிம்பம் அல்ல இது என்கிறார் அவர். சேகுவரா போன்ற ஒரு ஆளுமை போல வந்திருக்க வேண்டியவரான பிரபாகரன் தனது எதேச்சதிகாரத்தாலும் பிற தவறுகளாலும் அதை இழந்தார் என குறிப்பிட்டார் அவர்


தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று என்று கூறப்படும் ஆயதப்புரட்சியை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பிரபாகரன். ஆதன் சாதகங்களால் கிடைத்த அமைதிவாய்ப்புக்களை தவற விட்டவர் என்றும் அவர்மீது குற்றச்சாட்டு உண்டு. அவற்றின் விளைவாக மீண்டும் தந்தை செல்வாவின் வழிக்கு தமிழர்கள் திரும்புகிறார்கள்

சேகுவராவின் நாயகபிம்பம் அவரை எப்படி டி.சேர்ட் பனியன் வரை அழைத்து வந்திருக்கிறது என்பது சமகால யதார்த்தம். அத்தகைய வரிசையில் பிரபாகரன் இடம்பிடிப்பாரா இல்லையா என்பதற்கான பதிலை காலம்தான் பதில் சொல்லும் என்றாலும் ஒன்று மட்டும் நடக்கிறது. பிரபாகரன் பற்றிய புத்தகங்கள் மட்டுமன்றி அவரின் படத்தைப் போட்ட எதுவும் விற்கிறது. அட்டையில் பிரபாகரன் படத்தைப் போட்டால் 50,000 பிரதிகள் கூடுதலாக விற்கின்றன என்பது வாரம் இருமுறை வெளியாகும் ஒரு புலனாய்வு பத்திரிகை நிர்வாகியின் வாக்குமூலம். தமிழ்நூல்களின் விற்பனையில் டாப் 10 ஆளுமைகளில் பிரபாகரனும் இடம்பிடிக்கிறார் என்று குறிப்பிடுகிறார் பதிப்பாளர் ஒருவர்.

விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொடுப்பது, புனர்நிர்மாணம் உள்ளிட்டவற்றில் இலங்கையின் ராஜபக்ஷ அரசு தீர்க்கமாக செயல்படாததை தமிழ்த்தேசியவாத தலைமைகள் சுட்டிக்காட்டுகிறார்கள். தனிஈழமே ஒரே தீர்வு என்ற பிரபாகரனின் வாதம் சரி என்பதையே இது காட்டுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.

சிங்கள மண்ணில் ஆயதம் மூலமாகத்தான் இன விடுதலைபிறக்கும். அதற்கான அரசியல் தமிழகத்திலிருந்து செலுத்தப்படும் என்கிறார் சீமான். ஒரு தமிழனை தேசிய இராணுவத்தில் சேர்க்காத இலங்கை இராணுவமா அந்த மக்களின் உரிமையைப் பாதுகாக்கப் போகிறது?. ஈழப்போராட்டத்தின் முதல் 30 ஆண்டுகளில் தந்தை செல்வாவின் அறப்போராட்டங்கள் தோற்றதால்தானே ஆயதம் தூக்கவேண்டியதானது என்று கேட்கிறார் அவர்.

ஆனால் இலங்கையின் ஒரு நெடிய தொடர்போரின் முடிவில் அமர்ந்திருக்கும் தமிழ்மக்கள் மீண்டுமொரு ஆயுத அரசியலுக்குத் தயாராக இருப்பதாக தெரியவில்லை. இலங்கை அரசாங்கத்தின் மீது ஒட்டுமொத்தமாக நம்பிக்கை போய்விட்டது என்று கூறிவிட முடியாது என்கிறார் பாரதி. ராஜபக்ஷ அரசு தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு தர மறுப்பதுடன் சிங்கள குடியேற்றங்களை உள்ளே திணிப்பது யதார்த்தமான உண்மை. தமிழ்ப்பகுதிகளை சிங்கள மயமாக்கும் முயற்சி பெரிய அளவில் நடக்கிறது. ஆனாலும் கூட இலங்கை அரசாங்கத்தின் மீது தமிழர்கள் முழமையாக நம்பிக்கை இழக்கவில்லை. ராஜபக்ஷாவின் இடத்தில் மிதவாதிகள்ஆட்சிக்கு வரும்போது தமிழர்கள் மீது இந்த அளவுக்கு நெருக்கடி இருக்காது என்றும் மாற்றம் வரும் என்றும் தமிழர்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் எதிர்பார்க்கிறது என்கிறார் அவர்

டெஸோ அமைப்பை தி.மு.க ஆரம்பிப்பதற்கான உள்நோக்கங்கள் தமிழகத்தில் விமர்சிக்கப்பட்டாலும் தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற முயற்சிகளும் கொந்தளிப்புகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புக்களை இந்தியாவுக்குக் கொடுக்கின்றன என்கிறார் பாரதி.

பிரபாகரனின் தோல்வியை மீறி ஆயதப்போராட்டங்கள் வரவே வராது என இப்போதைய சூழலை வைத்து சொல்லிவிட முடியாது என்கிறார் அரசியல் நோக்கரும் கட்டுரையாளருமான ஞாநி. தனது ஆயதப்போராட்டத்தை பேச்சுவார்த்தைக்கான கருவியாக மாற்றாதது பிரபாகரனின் பெருந்தவறு என்று இந்தியாரூடேயிடம் கூறினார் அவர். நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தபோதும் கூட அவரின் கட்சி வெளியில் ஆயதப்போராட்டத்தில்தான் ஈடுபட்டு வந்தது. ஆனால் சரியான சமயத்தில் அவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தார்கள்.

பிரபாகரன் ஒரு ராணுவக் கட்டுறுதிமிக்க தியாகப்படையை உருவாக்கி வைத்திருந்தார். வேறு எந்த போராளிக்குழுவுக்கும் இல்லாத அளவிற்கு அவர்கள் முப்படைகளும் கொண்டிருந்தார்கள். வேறு யாரும் செய்திராத அளவுக்கு எதிரி நிலைகள் மீது அதிர வைக்கும் தாக்குதல்களை நடாத்தினார்கள். இவையெல்லாம் மெச்சத்தக்கதுதான் என்கிறார் பாரதி. விடுதலைப்புலிகளை காட்டமாக விமர்சிக்கும் தமிழர்கள் கூட ஒப்புக்கொள்ளும் உண்மை இது. பிரபாகரன் இல்லாத ஒரு விடுதலைப்புலிகள் அமைப்பைத் தக்க வைப்பது மூலம் இலங்கையின் சிங்கள அரசைக் கட்டுபடுத்தி வைத்திருக்கவும் முடியும் என இந்திய ராஜதந்திரி வட்டாரங்கள் கருதியதுண்டு என்கிறார் முராரி.

அத்தனை சாதகங்களையும் மீறி பிரபாகரன் தானும் தோற்று மக்களையும் முன்னெப்போதுமில்லாத நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறார். ஆயத பாணி அரசியலில் பிடிவாதம் கொண்டிருந்த பிரபாகரனின் எதேச்சதிகார குணாம்சத்தின் கோளாறையே இது காட்டுகிறது.

சரிவைத் தந்த சாதனை

விடுதலைப்புலிகளின் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்புக்கள் அந்த அமைப்பின் வீழ்ச்சிக்கும் மறைமுக காரணமாகின.

ஒருவரின் பலமே பலவீனமாகவும் மாறக்கூடும் என்பதற்கு விடுதலைப்புலிகள் ஒரு உதாரணம். வேறு எந்த போராளிக்குழுவுக்கும் இல்லாத அளவுக்கு அவர்களிடம் வான்படை இருந்தது. ஆனால் அதுவே புலிகளின் அழிவை இந்திய அரசு நாடுவதற்கான ஒரு காரணமாகவும் இருந்தது என்கிறார் பிரபாகரன் குறித்த நூல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் எஸ். முராரி. சென்னை இந்துஸ்தான் ஏரொநாட்டிங்கல்ஸ் கல்லூரியில் படித்த சங்கர் என்ற இளைஞர்தான் அந்த விமானத்தின் சூத்திரதாரி. ஆனால் இந்திய இலங்கை வான்பகுதியில் மூன்றாவதாக ஒரு விமானப்படை இருப்பதை இந்திய அரசு அமைப்பு ரசிக்கவில்லை. கூடன்குளம் உள்ளிட்ட பல இடங்களை வான்புலிகள் நினைத்தால் தாக்கமுடியும் என்பது அவர்களுக்கு கவலையளித்தது என்கிறார் முராரி. போராளக்குழவாக இருந்துகொண்டே நீண்டகாலம் ஒரு அரசாங்கம் போல தன்னை பாவித்துக்கொண்டே புலிகளின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.

முப்படைகள் உருவாக்கியதும், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வரிவசூல் உள்ளிட்ட நிர்வாகப்பணிகளை தாங்களே செய்து வந்ததும் விடுதலைப்புலிகளுக்கு தனித்தமிழ் ஈழம் அமைத்து விட்டதை போன்ற கற்பனையை உருவாக்கியது. ஆனால் ஈழப்போர் இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக நின்றது விடுதலைப்புலிகள் போராளிக்குழக்கள் மட்டுமே. ஒரு அரசாங்கம் அல்ல என்பதை கோரமான முறையில் நினைவூட்டின.

உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தன என்று தோல்வியிலும் ஒரு பெருமிதம் பொங்கும் விதத்தில் சொல்கிறார் நாம் அமைப்பின் சீமான். ஆனால் தங்களுக்கு கிடைத்த சாதகங்களை தவறவிட்ட பிறகு கிடைத்த தோல்வி வீரமும் அல்ல புத்திசாலித்தனமும் அல்ல என விமர்சிக்கப்படுகிறது.

தகவல் தொடர்பில் கில்லாடிக்களாக இருந்தவர்கள் புலிகள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன். துகவல் தொடர்பை மற்றொரு ஆயதமாக அவர்கள் பயன்படுத்தினார்கள். வானொலி, செய்திதாள், பத்திரிகைகள் போக பக்கவான இணையத்தளங்களும் அவர்கள் வசம் இருந்தன. ஆனால் சமீப வருடங்கள் அந்த ஊடகபலத்தை இலங்கை அரசும் கிட்டத்தட்ட சமன் செய்தது. புதிலடி ஊடகப்பிரச்சாரத்தின் மூலம் புலிகளுக்கும் தமிழர் பிரச்சினைக்கும் அனுதாபம் கிடைக்கவிடாமல் செய்கிறது.

மரண அரசியல்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் முக்கிய தளபதிகள் அனைவுக்கும் உலகெங்கும் மே 15ந்திகதி வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. ஆனால் அவர்களுடன் கொல்லப்பட்டதாக பரவலாக ஏற்கப்படும் பிரபாகரனுக்கு மட்டும் இதுவரை வீரவணக்கம் எதுவும் செலுத்தப்படவில்லை. தமிழ்தேசிய வாதிகளும் தீவிர அபிமானிகளும் அவரின் மரணத்தை ஏற்பதாக இல்லை.

பிரபாகரனின் வலதுகரமான பொட்டு அம்மானுக்கு வீரவணக்கம் செலுத்தப்படும் நிலையில் பிரபாகரன் இன்னமும் ஒரு ரகசிய இடத்தில் உயிரோடுதான் இருக்கிறார் என புலி அபிமானிகளும் தமிழ்தேசியவாதிகளும் கூறி வருகிறார்கள்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பது உண்மையானால் வருடா வருடம் நவம்பர் 27ந்திகதி அவர் தவறாது வழங்கும் மாவீரர் தினஉரை 2009க்குப்பிறகு வழங்கப்படாதது ஏன்?. ருகசிய இடத்தில் இருந்தால் உரை கூட வழங்க முடியாதா? ஓசாமா பின்லாடன் ரகசிய இடத்தில் இருந்தபோது அவரின் ஒலிப்பேழை வரவில்லையா?

போரில் இறுதிக்கட்டம்வரை தன்னையும் தனது குடும்பத்தையும் போர்க்களத்திலேயே வைத்திருந்த பிரபாகரன் தப்பிச்சென்று மூன்று ஆண்டுகளாக சிங்கள ஆதிக்கவாதிகளிடம் துன்புறும் தனது மக்களை காண வராமலிருக்கிறார் என்று கூறுவது மூலம் பிரபாகரனைத்தான் அவமானப்படுத்துகிறார்களா?

இந்தியாருடே
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல