புதன், 12 செப்டம்பர், 2012

அங்கே இருந்தவர் பின்லாடன் என தெரியாது - காட்டிக்கொடுத்த மருத்துவர் அப்ரிடி

“அமெரிக்கா எமது மோசமான எதிரி என்று அவர்கள் சொன்னார்கள். இந்தியாவை விடவும் மோசமான எதிரி என்றனர்”

ஒசாமா பின்லாடன் தாக்குதலில் தமக்கு தொடர்பிருப்பதாக தெரிந்திருக்கவில்லை என்று ஒசாமா பின்லாடனை கண்டுபிடிக்க அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தான் மருத்துவர் ஷகில் அப்ரிடி குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அப்ரிடி அமெரிக்காவின் பொக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். பெஷாவர் மத்திய சிறையில் இருக்கும் அப்ரிடி எவ்வாறு பேட்டி வழங்கினார் என்பது குறித்து விளக்கப்படவில்லை. எனினும் ஒசாமா கொல்லப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட அப்ரிடி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

ஒசாமா கொல்லப்பட்டதன் பின்னர் தாம் பாகிஸ்தானை விட்டு தப்பிச் செல்ல தேவை இருக்காது என அப்ரிடி நம்பி வந்த நிலையிலேயே அவர் பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ. எஸ். ஐயினால் கடத்தப்பட்டுள்ளார். ஐ. எஸ். ஐ. தம்மை துன்புறுத்தியதாக கூறியுள்ள அப்ரிடி அமெரிக்காவை மோசமான எதிரியாக ஐ. எஸ். ஐ. கருதுவதாகவும் அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.

அப்ரிடி போலியான மருத்துவ முகாமை நடத்தி ஒசாமாவை பிடிக்க டி. என். ஏ. மாதிரியை பெற முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இராணுவ குழுவொன்றுக்கு உதவிய குற்றத்திற்காக அப்ரிடிக்கு கடந்த மே மாதம் பாகிஸ்தான் நீதிமன்றம் 33 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஆனால் அமெரிக்க உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. வுடனான தொடர்புக்காகவே இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந் நிலையில் இரட்டை கோபுர தாக்குதலின் 11 ஆவது ஆண்டு நிறைவான நேற்றைய தினத்தில் அப்ரிடியின் பேட்டி வெளியிடப்பட்டது. இதே தினத்தில் அல் கொய்தா தலைவர் அய்மன் அல் சவாஹிரியும் தனது உரையை கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில் மேற்கு மற்றும் இஸ்லாமியவாதிகளுக்கு இடையில் அமைதி பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அய்மன் அல் சவாஹிரியின் சகோதரர் மொஹமட் அல் சவாஹிரி சி. என். என். தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த போட்டியில் குறிப்பிட்டார்.

பெஷாவர் மத்திய சிறையில் இருந்து பேட்டி அளித்துள்ள டொக்டர் அப்ரிடி, தம் மூலம் சி. ஐ. ஏ. ஒசாமா பின்லாடனை இலக்கு வைப்பது தமக்கு தெரியாது என கூறியுள்ளார். “எனக்கு கொடுக்கப்பட்ட வேலை எந்த இலக்கை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது என்பது எனக்கு தெரியாமல் இருந்தது” என்று பொக்ஸ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

“அந்த வளாகத்தில் யாரோ தீவரவாதி இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அது யாரென்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரது கொலைக்கு நான் பங்களிப்புச் செய்தது எனக்கு தெரியாமலேயே இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஒசாமா கொல்லப்பட்டதன் பின்னர் தம்மை ஆப்கானுக்கு தப்பியோடும்படி சி. ஐ. ஏ. தம்மை அறிவுறுத்தியதாக அப்ரிடி தெரிவித்துள்ளார். ஆனால் எல்லையை தாண்டும் அபாயகரமான அந்த பயணத்திற்கு நான் பயப்பட்டேன். அத்துடன் அந்த கொலைக்கு நான் சம்பந்தப்பட்டவன் என்று கருதவில்லை என்பதால் அவ்வாறு தப்பிச் செல்ல தேவையில்லை என கருதியதாக அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு 20 தினங்கள் கழித்து கடந்த ஆண்டு மே 22 ஆம் திகதி டொக்டர் அப்ரிடி ஹைத்ராபாத் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தாம் கைது செய்யப்பட்டதன் பின்னர் 8 மாதங்களாக தமது கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும் ஒருவருடமாக கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த காலத்தில் தாம் இஸ்லாமா பாத்தில் உள்ள ஐ. எஸ். ஐ. தலைமையகத்தில் சிறைவைக்கப்பட்டி ருந்ததாகவும் அப்ரிடி குறிப்பிட்டார்.

“உணவு உண்பதற்கு வளைந்து நாயைப் போன்று எனது வாயை மட்டுமே பயன்படுத்தினேன்” அப்ரிடி அந்த பேட்டியில் கூறினார். இதில் தன் மீதான புலன்விசாரணையின் போது சிகரட் துண்டுகள் மற்றும் மின் அதிர்வுகளால் தாம் துன்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கா எமது மோசமான எதிரி என்று அவர்கள் சொன்னார்கள். இந்தியாவை விடவும் மோசமான எதிரி என்றனர்” என்று அப்ரிடி சுட்டிக்காட்டினார்.

ஒசாமா மீதான தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் – அமெரிக்காவுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த தாக்குதல் நாட்டின் இறையான்மையை மீறும் செயல் என பாகிஸ்தான் கருதி வருகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல