ஞாயிறு, 14 அக்டோபர், 2012

நோர்வேயை பழிவாங்க ஈழத்தமிழர்களை பயன்படுத்தும் சிறிலங்கா

போர்நிறுத்த ஒப்பந்த மீறல், போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்த நோர்வேயை பழிவாங்குவதற்கு சிறிலங்காவுக்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல அந்த குற்றச்சாட்டிற்கு ஈழத்தமிழர்களையே சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது.

அண்மைக்காலத்தில் இலங்கையிலிருந்து வெளிவந்த செய்திகளில் ஒன்று நோர்வேயில் குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்பதாகும். நோர்வேயில் சுமார் 30க்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்களின் குழந்தைகளை நோர்வே அரசாங்கம் பெற்றோரிடமிருந்து பிரித்து சிறுவர் காப்பகத்தில் வைத்திருக்கிறது என்ற செய்தி பெரிய அளவில் வெளிவந்திருக்காத போதிலும் தமிழ் பெண்கள் இருவர் உண்ணாவிரதம் இருந்ததும், கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும் இந்த விடயத்தின் பால் இலங்கையில் உள்ளவர்களுக்கு முக்கியமாக தமிழர்களுக்கு கவனத்தை திரும்பியிருந்தது.
நோர்வேயில் பெற்றோரிடமிருந்து ஏன் பிள்ளைகள் பிரிக்கப்பட்டு சிறுவர் காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள், இதில் நோர்வேயில் இருக்கும் சிறிலங்கா தூதரகத்திற்கு திடீரென ஈழத்தமிழர்கள் மீது பரிவும் பாசமும் அக்கறையும் ஏற்பட்டதேன் என்பதை ஆராய்ந்தால் இதில் உள்ள அரசியலும் அதன் பின்னணியும் தெரியவரும்.
 
நோர்வேயில் பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் ஏன் பிரித்தெடுத்து சிறுவர் காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.
நோர்வேயில் இருக்கும் சுமார் 35 ஈழத்தமிழ் குடும்பங்களின் பிள்ளைகள் சுமார் 100க்கு மேற்பட்டவர்கள் சிறுவர் காப்பகத்தில் உள்ளனர். இந்த பிரச்சினை இன்று நேற்றல்ல 10வருடங்களுக்கு முதல் இருந்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது நோர்வே குடியுரிமை பெற்றவர்கள்.
பிள்ளைகளை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அல்லது கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினை என்றால் பிள்ளைகளை அரசாங்கம் பொறுப்பெடுத்து சிறுவர் காப்பகத்தில் வைக்கும் நடைமுறை நோர்வேயில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் உண்டு.
 
ஈழத்தமிழர்களின் பிள்ளைகள் மட்டுமல்ல, இந்தியா, உட்பட ஆசிய ஆபிரிக்க ஏன் நோர்வே நாட்டவர்களின் பிள்ளைகளையும் நோர்வே அரசாங்கம் பெற்றோரிடமிருந்து பிரித்து சிறுவர் காப்பகத்தில் வைத்திருக்கிறது.
 
அண்மையில் இந்திய குடும்பம் ஒன்றின் பிள்ளைகளை நோர்வே சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் பெற்றோரிடமிருந்து பிரித்து சிறுவர் காப்பகத்தில் வைத்த விடயம் இந்திய வெளிவிவகார அமைச்சர் மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை. கையால் உணவு உண்டகாரணத்திற்காகவே தம்மிடமிருந்து பிள்ளைகளை பறித்து சென்றார்கள் என பெற்றோர் முதலில் குற்றம் சாட்டியிருந்த போதிலும் பின்னர் மனைவி மனநோயாளி என்பதையும் இதனால் வீட்டில் தினமும் பிரச்சினைகளை பிள்ளைகள் எதிர்நோக்கியிருந்தார்கள் என்பதையும் கணவன் ஒத்துக்கொண்டிருந்தார்.
 
பெற்றோருடன் இருப்பதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என நோர்வே அரசாங்கம் கருதும் பட்சத்தில் அக்குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து சிறுவர் காப்பகத்தில் வைத்து பராமரிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு.

கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெறும் சண்டை, கணவன் குடித்து விட்டு மனைவிக்கு அடிப்பது, பிள்ளைகளுக்கு அடிப்பது, பிள்ளைகளுடன் கணவன் மனைவி ஒரே அறையில் தூங்குவது, பிள்ளைகள் விரும்பாத விடயத்தை பெற்றோர் அவர்கள் மீது திணிப்பது போன்ற காரணங்களால் பிள்ளைகள் பாதிக்கப்படும் போது அவர்களை நோர்வே அரசாங்கம் பெற்றோரிடமிருந்து பிரித்து சிறுவர் காப்பகத்தில் பராமரித்து வருகிறது.
 
இலங்கை போன்ற கீழத்தேய நாடுகளில் பெற்றோர் பிள்ளைகளுக்கு அடிப்பது உரிமை என எண்ணுகின்றனர். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் அது கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது. பிள்ளை ஒன்றுக்கு பெற்றோர் அடித்தால் அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.
 
ஐரோப்பா கனடா உட்பட மேற்குலக நாடுகள் என்றதும் இலங்கையில் இருப்பவர்கள் ஒரு சொர்க்கமான வாழ்க்கை என எண்ணுவதுண்டு. ஆனால் ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் குடும்பங்களில் நூற்றுக்கு 90வீதமான குடும்பங்கள் பிரச்சினைகள் குடும்ப சண்டைகள், போராட்டங்கள், நிதி நெருக்கடிகளுடனேயே வாழ்கின்றனர்.
 
ஐரோப்பாவில் உள்ள தமிழ் குடும்பங்கள் தங்களைப்பற்றி இலங்கையில் இருக்கும் தங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு காட்டும் முகம் வேறு. இங்கு அவர்களின் உண்மை முகம் வேறு.
 
ஐரோப்பிய நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வெறும் கல்வியை மட்டும் புகட்டுவதோடு ஆசிரியர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. மாணவர்களின் குடும்ப நிலமை, வீட்டில் ஏற்படும் பிரச்சினை, அவர்கள் படிப்பதற்கு வீட்டில் இருக்கும் முட்டுக்கட்டைகள் பற்றியும் வகுப்பாசிரியர் விசாரிக்கும் போது பிள்ளைகள் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை சொல்லி விட்டால் உடனடியாகவே அது பொலிஸின் கவனத்திற்கு சென்று விடும். வீட்டில் பிரச்சினை என கண்டுகொண்டால் முதலில் அவர்கள் செய்வது அந்த வீட்டில் இருக்கும் பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து சிறுவர் காப்பகத்திற்கு கொண்டு சென்று விடுவதுதான்.
 
நோர்வேயில் குழந்தைகளை பறிகொடுத்த பல குடும்பங்களில் கணவன் மனைவி குடும்ப சண்டை, அதிக குடிப்பழக்கம், கணவன் மனைவி வேறு நபர்களுடன் தொடர்பு, வீட்டில் பிள்ளைகளை கவனிக்காது கணவனும் மனைவியும் ஒவ்வொரு திசையில் செல்வது, பிள்ளைகளை கவனிக்க நேரம் இன்றி இருவரும் இரவு பகலாக வேலைக்கு செல்வது போன்ற பிரச்சினைகளாலும் பிள்ளைகள் பாதிக்கப்படும் போது அவர்கள் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்படுகிறார்கள்.
 
ஒரு குடும்பத்தில் நான்கு அல்லது ஐந்து பிள்ளைகள் இருந்தால் அவர்கள் அனைவரையும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்டு சென்று சிறுவர் காப்பகத்தில் சேர்த்து விடுவார்கள். தங்களுக்கிடையில் தினமும் நடக்கும் சண்டையால் பெற்ற குழந்தைகள் அனைத்தையும் பறிகொடுத்து விட்டு இதனால் கணவனும் மனைவியும் தனித்தனியாக பிரிந்து வாழும் குடும்பங்களும் பல உண்டு. இதனால் விவாகரத்துக்களும் அதிகரித்து காணப்படுகிறது.
 
பிள்ளைகளை பிரிந்து வாழ்வது என்பது மேற்கத்தேய கலாசாரத்தில் பழக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்றுக்கொள்ள கூடிய அல்லது தாங்கிக்கொள்ள கூடிய விடயம் என்றாலும் இலங்கை போன்ற கீழைத்தேய கலாசாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு பெரும் தாக்கத்தை கொடுக்க கூடியதாகும்.
 
ஆனால் நோர்வே அரசாங்கத்தின் வாதமும் நிராகரிக்க கூடியது அல்ல, தினமும் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினை என்றால் குழந்தைகளை அது வெகுவாக பாதிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் என்பது நோர்வேயின் வருங்கால சந்ததியின் எதிர்காலம். எனவே நோர்வே வருங்கால சந்ததியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாக நோர்வே அரசாங்கம் கூறுகிறது. குழந்தைகள் வளர்ந்து 18வயதை அடைந்த பின் அவர்கள் சுயமாக முடிவு எடுத்து பெற்றோருடன் சேர்ந்து வாழ்வதா என்பதை முடிவெடுக்கலாம்.
 
நோர்வே அரசாங்கத்தின் இந்நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களின் விபரங்களை அறிந்து கொண்ட ஒஸ்லோவில் இருக்கும் சிறிலங்கா தூதரகம் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.

நோர்வேயில் இருக்கும் மனிதாபிமான பிரச்சினை ஒன்றை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் பிரச்சினை ஒன்றை அரசியல் பிரச்சினையாக்கி அதன் ஊடாக நோர்வே மீது குற்றச்சாட்டை சுமத்துவதற்கும் ஈழத்தமிழர்கள் மீது தனக்கு அக்கறை இருக்கிறது என காட்டுவதற்காகவும் ஒரு கல்லில் இரு மாங்காயை பறித்து கொண்டது.
 
இந்த பிரச்சினையை ஒஸ்லோவில் இருக்கும் சிறிலங்கா தூதுவர் பல வழிகளில் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட இந்த குடும்பங்களை அணுகிய நோர்வேயில் இருக்கும் சிறிலங்கா தூதுவர் றொட்னி பெரேரா இக்குடும்பங்கள் உட்பட நோர்வேயில் உள்ள ஐந்து தமிழர்களை இலங்கைக்கு அழைத்து சென்று அலரி மாளிகையில் மகிந்த ராசபக்சவை சந்திக்க வைத்ததுடன் நோர்வேயில் இருக்கும் தமிழர்கள் இப்போது சிறிலங்கா அரசாங்கத்திற்கே ஆதரவை தெரிவித்து வருகிறார்கள் என்று அழைத்து சென்ற தமிழர்களை வைத்தே சொல்ல வைத்தார். கடந்த மாதத்துடன் நோர்வேக்கான தூதுவர் பதவிக்காலம் றொட்னி பெரேராவுக்கு முடிவடைய இருந்த நிலையில் அழைத்து சென்ற தமிழர்களை கொண்டே றொட்னி பெரேராவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
நோர்வேயில் பிள்ளைகளை இழந்த பெற்றோரை வைத்து அவர்களின் உறவினர்கள் மத்தியில் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கான ஆதரவு தளத்தை உருவாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. யாழ். மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் அங்கஜன் ஊடாக மகஜர் ஒன்று ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு அனுப்பபட்டு அதை நோர்வே வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கும் நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது.
இதன் ஒரு கட்டமாகவே ஒஸ்லோவில் உள்ள டோம் தேவாலயத்தில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டமாகும். இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதரகமே செய்திருந்தது.

உண்ணாவிரதம் இருந்த இரு பெண்களில் ஒருவர் மட்டுமே குழந்தைகளை பறிகொடுத்தவராவர். மற்றவர் அவரின் உறவினர்.
10 நாட்களாக நடத்தப்பட்ட உண்ணாவிரதம் ஒஸ்லோவில் இருக்கும் சிறிலங்கா தூதரகத்தின் முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. உண்ணாவிரதத்திற்கு ஏற்பாட்டை செய்த சிறிலங்கா தூதரகம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்திருக்கிறது.
 
உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு நோர்வே அரசாங்கம் எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை. இவர்கள் உண்ணாவிரதம் இருந்த தேவாலய நிர்வாகம் மட்டும் தாங்கள் நோர்வே அரசாங்கத்துடன் பேசுவதாக உத்தரவாதம் வழங்கியிருக்கிறது.

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்திற்கு முன்னால் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் கூட பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோரின் உறவினர்களால் நடத்தப்படவில்லை. முழுக்க முழுக்க ஒஸ்லோவில் இருக்கும் சிறிலங்கா தூதரகமும் யாழ். சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அங்கஜன் ஆகியோரின் ஏற்பாட்டிலேயே நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களோ அல்லது தமிழர்களோ அல்ல என்பதை ஆர்ப்பாட்ட காணொளியை பார்ப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு சிங்களவர்களாவர். இவர்களுக்கு நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர்கள் மீது பரிவும் பாசமும் அக்கறையும் வந்ததுதான் வேடிக்கையான விடயம்.
 
இந்த உண்ணாவிரதப் போராட்டம் சிறிலங்கா தூதரகத்தின் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கத்தின் நலன்களுக்காக நடத்தப்படுகிறது என்பதை அறிந்து கொண்ட நோர்வேயில் உள்ள தமிழர்களும், நோர்வே ஊடகங்களும் இந்த விடயம் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. நோர்வேயில் வழமையாக தமிழர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பெருந்தொகையாக கலந்து கொள்ளும் தமிழ் மக்கள் இந்த உண்ணாவிரத போராட்டம் பற்றி கவனம் செலுத்தியிருக்கவில்லை.
 
பிள்ளைகளை சரியாக வளர்க்க தெரியாதவர்கள், குடும்பங்களில் சண்டை பிடித்து வாழ்க்கையை சீரழித்து கொள்பவர்களுடன் பிள்ளைகள் இருந்து அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை விட சிறுவர் காப்பகங்களில் வளர்வது சிறப்பானது என்றே நோர்வேயில் இருக்கும் பெரும்பாலான தமிழர்களின் கருத்தாகும். இதனாலேயே நோர்வேயில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் இந்த விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை.

ஆனால் ஆடுநனைகிறது என ஓநாய் அழுத கதையாக சிறிலங்கா தூதரகம் இந்த விடயத்தை கையில் எடுத்திருக்கிறது.
 
தன் மீது போர்க்குற்றத்தை சுமத்தி வரும் நோர்வே மீது பதிலடி கொடுக்க ஒரு சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது சிறிலங்கா.
இதன் மூலம் ஈழத்தமிழர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள், அவர்களுக்காக பேசும் தகுதி தனக்கு கிடைத்திருப்பதாக சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு சிறிலங்கா முற்பட்டிருக்கிறது. இதற்காக அவர்கள் நோர்வேயில் பிள்ளைகளை பறிகொடுத்தவர்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றனர்.

- இரா.துரைரத்தினம்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல