திங்கள், 17 டிசம்பர், 2012

இராஜவரோதயம் சம்பந்தர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் 2

எல்.ரீ.ரீ.ஈ யின் மறைவின் விளைவாக மட்டுமே தமிழர்களின் பிரச்சினைகள் மிகப்பெரிய தார்மீக பலத்தையும் மற்றும் பெரியளவிலான சட்டப்பேற்றையும் கையகப் படுத்திக் கொண்டுள்ளன. (2)

- இராஜவரோதயம் சம்பந்தர் பா.உ.

(2012 டிசம்பர்,7ல் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கைகள் நிச்சயமாக எங்களை கவலையடைய வைத்தன. குறிப்பாக வடக்கில் மற்றும் கிழக்கிலும் கூட, இராணுவம் மிகப் பரந்து விரிந்தளவு நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. நாங்கள் பதட்ட நிலை உருவாவதை விரும்பவில்லை. நாங்கள் இயல்பு நிலமையில் வாழ விரும்புகிறோம். எங்கள் பிரதேசங்களில் குழப்பங்கள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆயுதப் படைகளுடன் மோதிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் சமாதானமாக வாழ விரும்புகிறோம். அவர்கள் அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அங்கிருப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில் அவர்கள் அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அங்கிருக்கும் வேளையில்,அவர்களது பிரசன்னம் எங்களுக்கு பெருஞ்சுமையாக உள்ளது.அவர்களது பிரசன்னம் எங்களை அவமதிப்பது போலுள்ளது. அவாகளது பிரசன்னம் எங்களது சுய மரியாதை மற்றும் தன்மானத்தின்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அது எங்களை சமம் அற்றவர்களாக ஆக்குகிறது. அது எங்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக்குகிறது. அதனால்தான் நாங்கள் அதனை விரும்பவில்லை.

ஐயா, இப்போது எங்கள் மக்களால் வலிகாமத்தில் மீள் குடியேற முடியவில்லை. எங்கள் மக்களால் சம்பூரில் மீள் குடியேற முடியவில்லை. இந்த மக்கள் வலிகாமம் மற்றும்; சம்பூர் பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப் பட முடியும் என்று அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தனது கடப்பாட்டை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மற்றும் கோப்பாபிலவு பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் சொந்தக் காணிகளில் குடியேற இயலாமல் உள்ளது, மற்றும் அவர்களை வெகு தொலைவில் உள்ள கோம்பாவில் என்கிற இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் இன்னமும் 551 வீடுகள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 308 இராணுவ முகாம்கள் தனியார் நிலங்களில் நிறுவப்பட்டுள்ளன. வடக்கிலுள்ள 153 கிராம அலுவலர் பிரிவுகளில் இராணுவ முகாம்கள் உள்ளன. இதைத்தான் நாங்கள் அளவுக்கு மீறிய பிரசன்னம் என்று முறையிடுகிறோம். அவர்கள் அங்கு இருக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. சில குறிப்பிட்ட முகாம்களில் அவர்கள் அங்கு இருந்துகொண்டு, போருக்கு முன்னர் செய்ததுபோல தங்கள் நடவடிக்கைகளை செய்து வரலாம்,தங்கள் புலனாய்வு பணிகளை பராமரித்துக்கொண்டு,கண்காணிப்புகளை மேற்கொள்ள முடியும். அந்த விடயம் சம்பந்தமாக எந்தப் பிரச்சினையும் இல்லை.

அது அவர்களின் கடமை. ஆயுதப்படையினர் எங்கள் மக்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு, இந்த நாட்டில் தாங்கள் ஒரு கீழ் நிலையிலுள்ள மக்கள், இந்த நாட்டில் தாங்கள் சம அந்தஸ்து உள்ள மக்கள் அல்லர் என்று அந்த மக்கள் எண்ணும்படி செய்வது மட்டுமே எங்களுக்கு வேண்டாம் என்கிறோம்.

ஐயா, இரணைமடுக் குளத்திற்கு மேற்கிலும், ஏ - 9 நெடுஞ்சாலைக்கு கிழக்கிலும் உள்ள 4,600 ஹெக்டேர் நிலத்தில், கிட்டத்தட்ட 12,000 எக்கர் நிலப்பரப்பில் சுமார் 10,000 வீடுகள் இராணுவத்தினருக்காக அமைக்கப்பட்டு வருகிறது, இந்த முகாம்களில் இராணுவத்தினரை குடியேற வைப்பது சற்று வித்தியாசமானதாகத் தோன்றுகிறது. இராணுவத்தினருக்காக பத்தாயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இது ஒரு மிகப் பெரிய வீட்டுத்திட்டம். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் நாட்டின் ஏனைய பாகத்திலுள்ள வீரர்கள். அவர்கள் அங்கு தங்கள் குடும்பத்துடன் வந்து குடியேறப் போகிறார்கள் - (குறுக்கீடு) தயவு செய்து என்னைக் குழப்பாதீர்கள். தயவு செய்து பிறகு பேசுங்கள். தயவு செய்து நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் அங்கு நிரந்தரக் குடியிரப்பாளர்களாக மாறப் போகிறார்கள், அவர்கள் அங்கு நிரந்தர வாக்காளர்களாகப் போகிறார்கள் - (குறுக்கீடு)

ஐயா,இந்தச் சபையில் எங்களுக்கு ஒரு ஒழுங்கு இருக்கவேண்டும்.

இந்த முழு விடயத்துக்கும்; ஒரு சமநிலை ஒழுங்கினை வழங்குவதற்கு, இந்த விடயத்தை ஒரு இனக் கண்ணோட்டத்தில் வைத்து நோக்கவேண்டும், சமீபத்தில் ஆயுதப் படையினர் சில தமிழ் பெண்களை இராணுவத்தில் ஆட்சேர்ப்புச் செய்யத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு மாதம் 35,000 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு 118 பெண்கள் சமீபத்தில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது,மற்றும் மேலும் சிலரை சி.எஸ்.டி எனப்படும் சிவில் பாதுகாப்புச் சேவையில் ஆட்சேர்ப்புச் செய்கிறார்கள், கறுப்பு நிற ரீ சேட்டில் மஞ்சள் நிற எழுத்துக்களால் சி.எஸ்.டி என பொறிக்கப்பட்ட ரீ சேட் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இவ்வாறு ஆண்களும் மற்றும் பெண்களும் அடங்கலாக இரண்டாயிரத்து ஐநூறு பேர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டள்ளார்கள். இவர்களுக்கு மாதாந்தம் 18,000 ரூபா வீதம் ஊதியம் வழங்கப்படுகிறது,ஆனால் அவர்கள் பெருமளவில் இராணுவ முகாம்களில் தொழிலாளர்களாக வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இப்போது எங்கள் மக்களுக்கு தேவையாக உள்ளது இந்த வகையான பொருளாதார நடவடிக்கை அல்ல. எங்கள் மக்கள் தங்கள் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும்,எங்கள் மக்கள் தங்கள் மீன்பிடித் தொழில்களை ஆரம்பிக்க வேண்டும்.

எங்கள் மக்கள் தங்கள் கால்நடை பண்ணைகளையும் மற்றும் கால்நடை வளர்ப்பு அபிவிருத்திகளையும் மற்றும் தங்கள் தொழிற்சாலைகளையும் ஆரம்பிக்க வேண்டும். இதற்காக அந்தப் பிரதேசங்களில் என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டள்ளது? உங்களுக்கு கிழ்படிவான சில மக்களையே நீங்கள் தேடுகிறீர்கள், தமிழ் மக்களுக்கு சில நன்மைகளைச் செய்வது போன்ற போலித் தோற்றத்தில் அவர்களுக்கு சிறிது வேதனங்களை வழங்குகிறீர்கள்,மற்றும் சிலரை இராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்கிறீர்கள். நீங்கள் இந்த மக்களை, ஆயுதப் படைக்கான தேவைகள் என்று ஆட்சேர்ப்பு செய்து உங்கள் சொந்தத் தேவைகளை பெருமளவு பூர்த்தி செய்யும் நோக்கங்களுக்காக அவர்களைப் பயன்படுத்துகிறீர்கள்.

இரணைமடுவில் 25 ஏக்கர் நிலத்தில் இராணுவத்தால் காய்கறி பயிர் செய்யப்கடுகிறது,தேராவில் பகுதியில் கிட்டத்தட்ட 150 ஏக்கர் நிலத்தில் இராணுவத்தினர் பழச் செய்கை பயிர் செய்துள்ளனர். வெள்ளாங்குளம் பிரதேசத்தில் 600 எக்கர் பரப்பளவில் இராணுவத்தினரால் கஜூ செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,முக்கொம்பில் 100 ஏக்கர் காணியில் இராணுவத்தினரால் தெங்குப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,சுன்னாவிலில் இராணுவம் 600 ஏக்கர் காணியில் கஜூ பயிரிட்டுள்ளது. இவை அனைத்தும் வன்னியில் இடம்பெற்றுள்ளன. கிராமக் குளங்களுக்கு அருகில் உள்ள பெருமளவிலான நெல்வயல்களில் இராணுவம் நெற் செய்கை மேற்கொண்டுள்ளது.

பொதுமக்கள் ஈடுபடுத்தப் படவேண்டிய மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளவேண்டிய இவ்வாறான நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடுத்தப் பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியாதுள்ளது,பொதுமக்கள் இந்த இடங்களில் வாழமுடியாது,மற்றும் பொதுமக்கள் இந்த இடங்களில் நடமாடக்கூட முடியாது ஏனெனில் இந்த இடங்கள் யாவும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ளன. ஒரு இடம்பெயர்ச்சிக்கு ஆளான குடும்பத்துக்கு அதிக பட்சமாக கால் ஏக்கர் நிலம் மட்;டுமே குடியிருப்பதற்கும் தங்கள் தொழிலைச் செய்வதற்குமாக வழங்கப்பட்டுள்ளது.

அவனால் அந்த சிறு துண்டு நிலத்தில் வாழ முடியுமா? இராணுவம் அத்தகைய பெரிய நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள வேளையில் அந்த சின்னஞ் சிறிய நிலத்தை வைத்துக் கொண்டு ஜீவனம் நடத்த அவனால் முடியுமா? ஐயா எனக்கு மிகவும் நம்பகரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இரணைமடு குளத்திற்கு பின்புறமாக, இரணைமடு குளத்திற்கும் இராணுவ குடியிருப்புகளுக்கும் இடையே டொலர் மற்றும் கென்ட் பண்ணைகள் மற்றும் அதன் பின்புறமாக வெலிஓயா உள்ளது. அந்த இடைப்பட்ட தூரமான 70 மற்றும் 80 கிலோமீற்றர் தூரத்துக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் திட்டம் உள்ளது. 70 மற்றும் 80 கிலோ மீட்;டர் மேலான நிலப்பரப்புக்கு ஒரு இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஐயா அப்படியான நடவடிக்கைகளுக்கு தவிர்க்க முடியாதபடி கெட்ட நோக்கங்கள் உள்ளன. அப்படியான விடயங்களைக்கண்டு நாம் வெறுமனே அதைப் பார்க்காதவர்களைப் போலவும், பேசாதவர்களைப் போலவும், கேட்காதவர்களைப் போலவும் இருக்க முடியாது.

என்னுடைய சமர்ப்பிப்பு, குறிப்பாக வடமாகாணத்தில் அதிகளவு இருப்பில் ஆயுதப்படையினரை பயன்படுததுவது அரசியல் நோக்கங்களை அடையவேண்டும் என்ற நோக்கத்திலே என்பதாகும். அதை நிச்சயம் அனுமதிக்க முடியாது. இது இராணுவத்தின் வேலை அல்ல. இராணுவம் யுத்தத்தில் சண்டையிட்டது. இப்போது அது முடிந்துவிட்டது. இராணுவம் அதன் முகாம்களுக்குள் இருந்து அவர்களுக்கு தேவையான ஏனைய சட்டபூர்வமான வேலைகளில் மட்டும் ஈடுபட வேண்டும். ஆனால் தமிழ் மக்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளும் வகையிலோ அல்லது அவர்களை தொந்தரவு செய்யும் வழிவகைகளிலோ இராணுவத்தினரை நீங்கள் பயன்படுத்தக் கூடாது.

ஐயா இந்த நடவடிக்கைகள் கூட சில திட்டவட்டமான குறிக்கப்பட்ட அரசியல் நோக்கங்களை அடைவதிலிருந்து வெகுதூரம் விலகிப்போய் விடவில்லை,அதாவது குறிப்பாக இப்போது வடக்கில் குடிசனப் பரம்பலில் கணிசமானளவு மாற்றங்களை ஏற்படுத்துவது, ஐயா, இந்த மாற்றங்கள் கிழக்கில் ஏற்கனவே நடந்திருப்பதுடன் இப்போதும் கிழக்கில் நடைபெற்றும் வருகின்ற ஒன்றாகும்.

நான் எப்போதாவது தீங்கிழைத்திருப்பதாக ஒரு சிங்களவர் கூட எனக்கு எதிராக புகார் தெரிவிக்க மாட்டார். கௌரவ பசில் ராஜபக்ஸ அவர்களே, உங்களுக்கு தெரியும் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருகோணமலைக்கு வந்துள்ளார்கள்,உங்கள் அமைச்சர்களும் திருகோணமலைக்கு வந்துள்ளார்கள் அவர்கள் சிங்கள மக்களை சந்தித்த போது அந்த மக்கள் அதை அவர்களிடம் சொல்லியிருப்பார்கள். ஐயா, அது எங்கள் நிலைப்பாடு.ஒ ருவேளை அங்கு எல்.ரீ.ரீ.ஈ யினரால் இன அழிப்பு நடவடிக்கைகள் நடந்திருக்கலாம்,இந்த இனப்படுகொலைகள் எல்லாம் நடந்தபோது,தமிழர்கள் மீதான இனச்சுத்திகரிப்பும் இடம்பெற்றே வந்தது. இந்த புலம்பெயர் அமைப்பு எப்படி வந்தது?

இப்போது அதைப்பற்றி புகார்கள் கூறப்படுகின்றன.1950 களில் 1960 களில் மற்றும் 1970களில் இந்த இனப்படுகொலைகள் இடம் பெற்றதினால் ஏற்பட்ட விளைவின் காரணமாகமே இந்த புலம்பெயர் சமூகம் உருவானது. வன்முறைகளின் விளைவினால் மக்கள் வெளியேறினார்கள். அதன் காரணமாக புலம்பெயர் சமூகம் உருவானது. எனவே, ஐயா, இன சுத்திகரிப்பினை நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்கு வாழ்ந்தார்களோ அவர்கள் அங்கேயே வாழ்வதற்கு எல்லா மக்களுக்கும் உரிமையுள்ளது,என்பதுதான் எங்கள் கருத்து.

அவர்கள் யாராக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும், சிங்களவர்களாக இருந்தாலும் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அது அவர்களின் அடிப்படை உரிமை. நாங்கள் எதிர்க்கும் ஒரே விடயம், பண்டாரநாயக்கா - செல்வநாயகம் மற்றும் டட்லி சேனநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ளதற்கு எதிராக, அந்தப் பிரதேசங்களின் குடிசனப் பரம்பல் விகிதத்தில்; மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தால் மக்கள் குடியேற்றப்படுவதையே. நாழ் வாதாடுவது அதற்காக மட்டும்தான்,நாங்கள் கோரிக்கை விடுப்பது அதற்காகத்தான்.

அதற்கு மேலாக எந்தக் கோரிக்கையையும் நாங்கள் முன் வைக்கவில்லை. எந்த இனத்தை சேர்ந்த எவரும் வடக்குக்கு மற்றும் கிழக்குக்கு வந்து குடியேறுவதைப் பற்றியோ மற்றும் தனது தொழில் முயற்சியை தொடருவதைப் பற்றியோ, நாங்கள் எந்தவிதமான ஆட்சேபணையோ அல்லது வேறெதுவுமோ தெரிவித்ததில்லை. நாங்கள் அதை ஒருபோதும் எதிர்த்ததில்லை. அதுதான் எங்கள் நிலைப்பாடு ஐயா. (குறுக்கீடு)

போர் முடிவடைந்து மூன்றரை வருடங்களுக்குப் பிறகு வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் சமாதானத்துடன் ,சுயமரியாதை மற்றும் தன்மானத்துடன் வாழக்கூடியதை, தாங்கள் தாழ்வு நிலையில் உள்ளோம் என்கிற உணர்வு இல்லாமல் வாழ்வதை, உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியதற்கான நேரம் இப்போது வந்து விட்டது என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் சமரசத்துக்கான அடிப்படை அதுதான்.

இந்த நாட்டில் பல்வேறு இனச் சமூகங்களிடையே சமரசம் நிலவ வேண்டுமானால்,மற்றும் இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு அத்தகைய நல்லிணக்கம் அடிப்படையாக இருக்க வேண்டுமானால், நாங்கள் அனைவரும் எங்கள் உரிமைகள் யாவும் நிலைநிறுத்தப்பட்டு,சமமானவர்களாகவும் சுய மரியாதை மற்றும் கண்ணியம் என்பனவற்றுடன் வாழக்கூடியதாக இருக்கவேண்டியதும் கூட அடிப்படையானதுதான். ஐயா, இந்தச் சபையில் இன்று நான் நடத்தப்பட்ட விதம், அத்தகைய ஒரு நம்பிக்கையை ஊக்குவிக்கவில்லை.

எனவே இது என்னுடைய வேண்டுகோள் ஐயா, உருவாகிவரும் இந்த புதிய இராணுவ வீட்டுத்திட்டம் உட்பட, இராணுவம் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்கள் யாவும் கைவிடப்பட வேண்டும்,அவை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். இந்தச் சபையின் முன்னால் நின்று நாங்கள் அந்த வேண்டுகோளை விடுக்கிறோம்,எங்களுக்கு அதற்கான உரிமை உள்ளது,இந்த திட்டமிட்ட முயற்சிகள், வடக்கு மற்றும் கிழக்கிற்கு தங்கள் குடும்பங்களை கொண்டுவந்து குடியேற்றுவதன் வழியாக இராணுவத்தின் பலத்தை அதிகரிகச் செய்து அதன்மூலம் இந்தப் பிரதேசங்களின் குடிசனப்பரம்பல் விகிதங்களை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளாகும்.

பல்வேறு நிலங்களிலும் இராணுவம் இவ்வளவு பாரிய அளவில் வித்தியாசமான இனங்களான பயிர்ச் செய்கையை செய்வதன் மூலம்,இந்த ஆயுதப் படையினர் இராணுவத்திலிருந்து அகற்றப்படும்போது, அவர்களுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளதோடு, அபிவிருத்தி செய்துள்ள நிலங்களிலிருந்து தங்கள் இருப்பிற்கான வாழ்க்கை வசதிகளையும் அவர்களால் தேடிக்கொள்ள முடியும். அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இங்கேயே தேடிக்கொண்டு வடக்கு மற்றும் கிழக்கின் நிரந்தர வதிவிடதாரிகள் ஆகிவிடுவார்கள்.

இந்த திட்டம்தான் இப்போது நடக்கிறது,அது அரசாங்கத்தால் வெகு சுறுசுறுப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது,மற்றும் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று நாங்கள் விநயத்துடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

ஐயா, உங்களுக்கு நன்றி

மொழிபெயர்ப்பு:எஸ்.குமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல