புதன், 16 ஜனவரி, 2013

சிறிதரனின் அலுவலகத்தில் ஆபாசப்படம்: நடந்தது என்ன?

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலத்திலிருந்து வெடிபொருள்கள், ஆபாசப்பட சீடி, உள்ளூர் பெண்கள் சிலரின் படங்கள், ஆணுறைகள் என்பன கைப்பற்றட்டமை ஒரு திட்டமிட்ட நாடகம் என்றும், இதில் ஊடகவியலாளர்கள் சிலரும், கிளிநொச்சி மாவட்ட போட்டி பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் வழக்கம்போல தமிழ் இணையங்கள் சிலவும், யாழ் பத்திரிகைகளும் ஊ(ட)கச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

சிறிதரனின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தப்பட்டது தவறானது, தேடுதலின்போது கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வெடிமருந்துகள் முதற்கொண்டு, ஆபாச சிடிக்கள், ஆணுறைகள், பெண்களின் படங்கள் என அனைத்துமே தேடுதல் நடத்தியவர்களால் கொண்டு வந்து வைக்கப்பட்டு வேண்டுமேன்றே சோடிக்கப்பட்டிருக்கிறது என்றவிதமாக, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனோ அல்லது அலுவலகத்தில் இருந்தவர்களோ எதுவும் கூற முன்னராகவே இந்த ஊ(ட)கங்கள் சொல்லி விட்டன.

சம்பவ இடத்தில் நேரடியாகச் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளர்களை இலக்கு வைத்த தாக்குதல்களின் மூலம், நடைபெற்ற விடயத்தின் மீதான கவனத்தை திசைதிருப்பி இதுவும் ஒரு தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சதி முயற்சி என்ற விதமாக உடனடியாகவே  ஊ(ட)க அரசியல் நடத்தப்பட்டுவிட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக களத்திலிருந்து செய்தியாளர்கள் செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதற்கு முன்னதாகவே, பிரித்தானியாவிலிருந்து நடத்தப்படும் இணையமொன்று, சிறிதரனின் அலுவலகத்தில்(அது அவருடைய பத்திரிகை அலுவலகம் என்று வேறு குறிப்பிட்டு) திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டதாகச் செய்தி வெளியிட்டு, செய்தியின் முக்கியத்துவத்தைவிட, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் பற்றிய சந்தேகங்களையும், அவர்கள் மீதான அவதூறுக் குற்றச்சாட்டுக்களையும் அவசர அவசரமாக வெளியிட்டு வைத்தது.

செய்தியைவிட, செய்தியாளர்கள் எப்படி அந்தச் செய்தியைச் சேகரிக்க அங்கே சென்றார்கள் என்ற சந்தேகத்தையே பிரித்தானியாவிலிருந்து இயங்கும் அந்த இணையத்தளம் முக்கியத்துவப்படுத்தியிருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் ஒரு ஊடகவியலாளர் எப்படி கிளிநொச்சியில் சிறிதரனின் அலுவலகத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தும்போது அங்கே நின்றார்? என்பதுதான் இந்த இணையத்தளத்தினதும், தொடர்ந்து இதுபற்றி எழுதிய ஏனைய சில இணையத்தளங்களினதும் பிரதான சந்தேகமாக இருந்தது-இருக்கிறது.

மேற்படி செய்தியை நேரடியாகக் களத்தில் நின்று சேகரித்தவன் என்ற வகையிலும், இது தொடர்பான செய்திகளை முழு விபரங்களுடன் வெளியிட்ட ஊடகம் என்ற வகையிலும், இவர்களது மண்டையைக் குழப்பும் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டிய கடப்பாடு ஏற்பட்டுள்ளது.

யாழ் ஊடகவியலாளர் எப்படி அங்கே சென்றார்?

இது இந்த இணையத்தளக்காரரின் மண்டையைப் பிய்க்கும் மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது. அட, ஒரு சம்பவம் தொடர்பான செய்தி குறித்த தகவல் ஒரு ஊடகவியலாளருக்குக் கிடைப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். அவ்வாறு ஒரு செய்தி குறித்த தகவலை முன்கூட்டியே வேகமாகப் பெற்றுக்கொள்வதில்தான ஒரு செய்தியாளரின் திறமையே தங்கியிருக்கிறது. ஒரு செய்தியாளருக்கு இருக்கக்கூடிய தொடர்பு வலைப்பின்னலின் பலத்தைப் பொறுத்து அவருக்குச் செய்திகள் அதிவேகமாகக் கிடைக்க வாய்ப்புக்கள் உண்டு.

சிறிதரனின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தப்படுவது தொடர்பான தகவல்  கிடைத்து அங்கே வசந்தம் தொலைக்காட்சி, உதயன், தினமுரசு ஆகியவற்றின் செய்தியாளர்களுடன், மேற்படி இவர்கள் குறிப்பிடும் யாழ் ஊடகவியலாளரும் அங்கு சென்றிருந்தார். இவர்கள் தமது ஊ(ட)கச் செய்தியில் குறிப்பிடுவது போல ஒரேயொரு ஊடகவியலாளரை வைத்து நடத்தப்பட்ட தேடுதல் என்பது, அங்கு என்ன நடந்தது என்பதை அறியாத பேதமைத்தனமே தவிர வேறொன்றுமில்லை.

களத்திற்கு நேரில் சென்று செய்தி சேகரித்தல் என்ற ஊடகவியல் விதிமுறைக்கு மாறாக, எங்கெங்கோ தூர தேசங்களிலிருந்துகொண்டு இங்கே என்ன நடைபெறுகிறது என்பதை வெறும் ஊகங்களாகச் செய்தியாக வெளியிட்டு வியாபாரம் நடத்துபவர்களுக்கு, களச் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றியும், களத்தில் என்ன நடந்தது என்பது பற்றியும் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான்.

ஆனாலும், யாழ்ப்பாணத்திலிருக்கும் இவர்கள் குறிப்பிடும் செய்தியாளர் எப்படி கிளிநொச்சிக்கு வந்து தொலைத்தார் என்பதுதான் பிரித்தானியாவிலும், சுவிற்சர்லாந்திலுமிருக்கும் இந்த ஊ(ட)கக்காரர்களின் தலையைப் பிய்க்கும் விவகாரம்.

சிறிதரனின் அலுவலகத்தில் மாலை 3 மணி முதல் 8 மணி வரையில் சோதனை நடைபெற்றதாக இவர்களே தமது செய்திகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான சுமார் 65 கிலோமீற்றர் தூரத்தை அதிக பட்சம் ஒரு மணிநேரத்தில் கடக்கக்கூடியதாக ஏ-9 வீதி திருத்தப்பட்டுவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு ஊடகவியலாளர் சம்பவ இடத்துக்கு வந்ததில் அப்படி என்ன தலையைப் பிய்க்கும் அளவு பிரச்சினை இருக்கிறது?

இன்னும் ஒருவேளை, இவர்கள் குறிப்பிடும் அந்த யாழ்ப்பாணச் செய்தியாளர், அவரது சொந்தப் பணிகள் நிமித்தம் கிளிநொச்சிக்கு வந்திருக்கலாம் என்ற சாத்தியப்பாடு குறித்தும் விரிவாகச் சிந்திக்கும் அளவுக்கு, ஆழமான ஊடகவியலுக்குப் பழக்கப்படாத மூளை, முன்கூட்டியே தமது மனதில் ஏற்படுத்திவைத்திருக்கும் விம்பங்களின் அடிப்படையில் ஒரு ஊகத்தைச் செய்து அதையே எழுதித் தொலைத்துவிட்டது.

நடந்தது என்ன?

இவர்கள் சொன்ன அந்தச் செய்தியாளர் தன்னுடைய நிறுவனத்தின் கல்வி-தொழில் வழிகாட்டல் பணி நிமித்தம் தமது சக பணியாளர்களுடன் அன்று காலை தமது வாகனத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்றிருக்கிறார். வவுனியாவில் அவரது நிறுவனம் கல்வி-தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் நடத்துவது ஒன்றும் சிதம்பர இரகசியமும் இல்லை.

வவுனியாவில் பணி முடித்து யாழ்ப்பாணம் திரும்பும் வழியில், கிளிநொச்சி உதயநகர் கிழக்கு மாதர் சங்கத்தினருடன் கல்வி-தொழில் வழிகாட்டல் கலந்துரையாடலொன்றை நடாத்தி, அந்தப் பகுதி இளைஞர் யுவதியர் பொருத்தமான கல்வி வாய்ப்புக்களைத் தெரிவுசெய்வதற்கான வழிகாட்டலையும், மாதர் சங்கப் பெண்கள் குழுக்கள் தமது சேமிப்பு மற்றும் கடன் வசதிகள் மூலம் செய்யக்கூடிய தொழில் முயற்சிகள் குறித்த ஆலோசனைகளையும் அந்த நிறுவனப் பணிப்பாளரான இவர்கள் குறிப்பிடும் ஊடகவியலாளர் வழங்கியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்தவேளை, சுமார் 5.30 மணியளவில் கிளிநொச்சியில் சிறிதரனின் அலுவலகத்தில் சோதனை ஒன்று நடத்தப்படுவது தொடர்பான கொழும்பு இணையத்தளச் செய்தியொன்றைப் பார்த்த நண்பரின் தொலைபேசி அழைப்பு மூலம் அதை அறிந்துகொண்ட அவர், ஓர் ஊடகவியலாளர் என்ற வகையில் உடனடியாகவே சம்பவ இடத்துக்குச் சென்றார்.

அவர் அங்கு சென்றபோது ஏற்கனவே அங்கு வசந்தம் தொலைக்காட்சி செய்தியாளர் உட்பட ஒரு சில செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இவரும், தம்முடன் வந்த ஊடகப் பயிற்சிபெற்ற சக பணியாளர்களின் உதவியுடன் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆக, இந்த இணையத்தள ஊ(ட)கச் செய்திகள் கூறுவது போல, முன்கூட்டியே இந்தச் சோதனை நடவடிக்கை குறித்து அறிந்துகொண்டு அந்தச் செய்தியாளர் சம்பவ இடத்துக்குச் சென்றார் என்பதும், அவர் மட்டுமே அங்கு செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டார் என்பதும், களத்தில் என்ன நடந்தது என்று தெரியாத ஊக நிலை அல்லது, தெரிந்தும் உள்ளதை மறைத்து தாங்கள் விரும்பியதைச் செய்தியாக்கி மக்களை ஏமாற்றும் வழமையாக ஊ(ட)க வியாபாரத் தந்திரமேயன்றி வேறொன்றுமில்லை.

மற்றுமொரு சுவிஸ் இணைய ஊ(ட)கம் சொல்வது போன்று இந்தச் செய்தியாளர் சோதனை ஆரம்பித்த 3 மணிக்கே அங்கு சென்றுவிட்டார் என்பதும், அவர்தான் முதலாவதாக அங்கே சென்றார் என்பதும்கூட அடிப்படையற்ற தகவல். குறைந்தபட்சம் சிறிதரனின் அலுவலகத்தில் சோதனை நடத்தும்போது அங்கே இருந்து, ஊடகவியலாளர்களிடம் ஆபாசப்பட வீடியோக்களையும், பெண்களின் ஒளிப்படங்களையும், ஆணுறைகளையும் காண்பித்த, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஊடகச் செயலாளர் என்று சொல்லப்படும் பொன்னம்பலம் லக்சுமிகாந்தனை(பொன்காந்தன்)க் கேட்டாலே, அங்கே எந்தெந்தச் செய்தியாளர்கள் எத்தனை மணிக்கு வந்தார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.

உண்மையில் இங்கே பிரச்சினை சிறிதரனின் அலுவலகத்தில் வெடிபொருள், ஆபாசப்பட வீடியோ உள்ளிட்ட பொருள்கள் இருந்ததோ, படையினர் அங்கு சோதனை நடத்தியதோகூட இல்லை. அலுவலகத்திலிருந்த பணியாளர் கைதுசெய்யப்பட்டிருப்பதால், சட்டத்தின் முன் அவர் நிறுத்தப்படும்போது உண்மை நிலையை பாதுகாப்புத் தரப்பு வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பின்னர் கூறியிருப்பதுபோன்று, இவை எல்லாமே இட்டுக்கட்டிய நாடகம்தான் என்றால், சட்டத்தின் முன் இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்படும்போது அதை நிரூபிப்பதற்கு அவருக்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

ஆக, இங்கே பிரச்சினை சிறிதரனோ, அவரது அலுவலகமோ, அங்கு கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பொருள்களோகூட கிடையாது. மாறாக, இந்த விடயம் தொடர்பாக நமது செய்தி ஊ(ட)கங்கள் நடந்துகொண்ட விதம், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள்மீது அவர்கள் மேற்கொள்ள முயன்ற அவதூறுப் பிரசாரம் எல்லாமே, இந்த விடயத்தைவிட, இந்த ஊ(ட)கங்களை நடத்துவோரின் ஊடக அறிவு தொடர்பான கேள்விகளையே அதிகம் எழுப்புகின்றன.

அல்லது, உண்மைகள் தெரிந்தும், அவற்றை அறிந்துகொள்ள முயலாது இருந்த இடத்தில் இருந்துகொண்டு தாம் சொல்ல விரும்பியதையே உண்மையாகத் திரித்துக் கதைவிடும் ஊ(ட)க வியாபாரத் தந்திரமாகவே இது கொள்ளப்படவேண்டியிருக்கிறது.

இரணைமடு குளத்து நீர் விவகாரத்தை இராணுவ அரசியல் பூதாகரமாக்கியது, இராணுவத்தில் இணைந்துகொண்ட தமிழ்ப் பெண்கள் விவகாரத்தை பாலியல் விவகாரமாக்கியது என்று இதுவே இவர்களது ஊ(ட)க வழக்காக இருந்து வருகிறது.

சரி, இவர்கள் ஏன் இப்படிச் செயற்படுகிறார்கள்? இதற்கான காரணம் என்ன?

இதுபற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

சிகரம் இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல