வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

உலக நாயகனின் பொய்மூட்டைகள் : ‘மத மோதலாக’ மாறிய கமலின் விளம்பரப் பேராசை!

தான் என்ன நினைக்கிறோமோ அல்லது என்ன ஆசைப்படுகிறோமோ அதை மட்டுமே செய்து முடிப்பதில் தீவிரமாகவும்,பிடிவாதமாகவும் இருப்பவர் கமல்.

அவருடைய முந்தைய பல நடவடிக்கைகளில் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. கடைசிவரை அதற்கு மெனக்கிடுவார்; போராடுவார்; அதற்காக நிறைய நாடகங்களை தனது ரசிகர்களும், அவருடைய நலம் விரும்பிகளும் நம்புப்படி கனகச்சிதமாக நடத்துவார்.

அப்படித்தான் ‘விஸ்வரூபம்’ விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதமும்…இப்போதுவரை சொல்லிக்கொண்டிருக்கும் பொய்களும்…

யாருமே சீண்ட வராத நிலையில் இப்போது விஸ்வரூபத்துக்கு தான் எதிர்பார்த்ததற்கும் மேல் இலவசமாக பப்ளிசிட்டி அவர் எதிர்பார்த்ததுக்கும் மேல் கிடைத்திருப்பதில் உள்ளுக்குள் சந்தோஷமாகவும், வெளியில்

ஏதோ 100 கோடி ரூபாய் தன் கையை விட்டு போய் விட்டது என்ற சோகத்திலும் இருப்பது போன்ற ஒரு முகபாவத்தையும் நம்மிடம் காட்டி வருகிறார். ஆனால் இதில் சில உண்மைகளை நாம் சொல்லியே ஆக வேண்டும். சொல்லப்போனார் அவருடைய மிகச்சாதாரண விளம்பர பேராசை இந்தளவுக்கு மத மோதலாக மாறக்காரணமே அவர் திட்டமிட்டி செய்த

சில வேலைகளும், சொன்ன பொய்களும் தான்.

முதலில் ‘விஸ்வரூபம்’ படத்தை பொருத்தவரை இது அவருடைய சொந்தப்படம் என்பதால் சில கோடிகளைப் போட்டு பல கோடிகளை அள்ள வேண்டும் எபது தான் அவருடைய பேராசையின் ஆரம்பம்.

அதற்காக அவர் ஆரம்பத்திலிருந்தே சில பொய்களை தொடர்ச்சியாக கூறி வருகிறார். இப்போதும் அது தொடர்கிறது.

அதாவது முதன்முதலில் ‘விஸ்வரூபம்’ படத்துக்காக மீடியாவை சந்தித்த கமலிடம் “ இந்தப்படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று நிருபர்கள் கேட்டபோது ஒரு 100 கோடின்னு எழுதுங்களேன், ஏன் எனக்காக அப்படி எழுதமாட்டீர்களா..? என்று கேட்டார்.

அன்றிலிருந்து அந்த 100 கோடியைத் தான் அவர் படத்தின் பட்ஜெட்டாக சொல்லி வருகிறார். ஆனால் நிஜத்தில் அவ்வளவு ரூபாய்களை அவர் இந்தப்படத்தில் செய்யவில்லை என்பதே உண்மை. அதிகபட்சம் அவர் ரூ 45 கோடி செய்திருந்தாலே பெரிய விஷயம்.

இந்தப் படம் கேன்ஸுக்கு போகிறது என்றும் அதற்காக சிறப்பு அனுமதி பெற்றிருப்பதாகவெல்லாம் கமல் அடித்துவிட்டுக் கொண்டிருந்தார் கடந்த மே மாதத்தில். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பது கோலிவுட் அறிந்த கமல் சொன்ன ‘அண்டப்புழுகின்’ ரகசியம்.

அதேபோல டி.டி.ஹெச் ஒளிபரப்பில் பிரச்சனை ஏற்பட்டபோது அது சம்பந்தமாக சென்னையிலுள்ள ஹயாத் ஹோட்டலில் மீடியாக்களை சந்தித்த கமல், ‘கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து நான் செய்ய நினைத்தாலும் கிடைக்காத பப்ளிசிட்டி இன்று எனது ‘விஸ்வரூபம்’ படத்திற்கு தியேட்டர் காரர்களின் எதிர்ப்பால் எனக்கு இலவசமாக கிடைத்திருக்கிறது.

இதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,’ என்று சொன்ன கமல், நேற்று மும்பை மீடியாக்களிடம் “என் படத்தின் விளம்பரத்துக்காக நான் இந்த வேலைகளையெல்லாம் செய்கிறேன் என்று சொல்வது மோசமானது,” என்று கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

மேலும் ‘விஸ்வரூபம்’ படத்தில் பிரச்சனைக்குரிய காட்சிகள் இருக்கிறது என்று கேள்விப்பட்டு சில முஸ்லீம் அமைப்பினர் கமலிடம் எங்களுக்கு படத்தை போட்டுக்காட்டுங்கள் என்று சொன்னபோது அவர்களை ஒரு துச்சமாக எண்ணி “ஒரு சிரு கும்பல்” என்று அதிமேதாவித்தனமாக பேசினார்.

கடைசிவரை எந்த முஸ்லீம் அமைப்புகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமோ அவர்களை கொஞ்சமும் மதிக்காமல் தனக்கு ஆதரவாக இருக்கின்ற சில முஸ்லீம் நண்பர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு “ எங்களுக்குள் எந்த பிரச்சனைகளும் இல்லை” என்று மீடியாக்களிடம் கூசாமல் பொய் சொன்னார். தமிழக அரசிடம் அரசியல் பண்ண ஆரம்பித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக “தான் சொன்ன பொய்களை எல்லாம் கொஞ்சமும் எடிட் செய்யாமல் அதை அப்படியே வெளியிட்ட மீடியாக்களுக்கு நன்றி தெரிவித்து உங்களால் தான் என்னுடைய விளம்பரப்பேராசை நிறைவேறியது” என்று சொல்லாமல் சொன்னார்.

30 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இதுவரை யாருக்குமே இறங்கி வராத தமிழக முதல்வர் ஜெயலலிதா, முஸ்லீம் அமைப்புகளிடம் பேசி கமல் பிரச்சனையை தீர்த்துக்கொண்டால் விஸ்வரூபம் படத்துக்கு அரசு முடிந்த அளவு உதவியாக இருக்கும் என்று சொல்லியும் கூட ”இங்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை” என்று அரசை மறைமுகமாக குற்றம் சாட்டினார். நான் கோபமாக இருக்கிறேன் என்றார்.

ரசிகர்களிடம் சக திரையுலக பிரபலங்களிடமும் அனுதாபத்தை வாங்கி ரசிகர்கள் அவருக்கு 1,000 ரூபாய் 2,000 ரூபாய், சிலர் 10 ஆயிரம் ரூபாய் என்று மணியார்டர் அனுப்பும் அளவுக்கு மிக கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு அவருடைய நேர்மையை சற்றே சந்தேகத்தோடு பார்க்கும் அளவுக்கு நடந்து கொண்டார்.

அவருடைய அண்ணன் சந்திரஹாசன் “விஸ்வரூபம் தடைக்கு காரணம் அரசியல் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்க, கமலோ மும்பையில் உட்கார்ந்து கொண்டு இதேபோன்று ஒரு சூழ்நிலை இன்னொருமுறை எனக்கு நடந்தால் நான் வேறு இடத்துக்கு போகும் முடிவை பரிசீலனை செய்வேன்,” என்று அரசை மறைமுகமாக மிரட்டும் தொணியில் பேசினார்.

எல்லாவற்றுக்கும் மேல் ‘விஸ்வரூபம்’ படத்தின் 2-வது பாகத்தையும் சத்தமில்லாமல் எடுத்து வைத்து விட்டார். விஜய்டிவியில் இதைப்பற்றி வாய் உளறிய படத்தின் ஹீரோயின் பூஜாவை அங்கேயே கடிந்து கொண்ட கமல் இன்றுவரை அதைப்பற்றிய உண்மைகளை பேசாமல் மெளனம் காத்து வருவது அவரது நேர்மையின்மையின் உச்சம்.

இப்படி விஸ்வரூபம் விவகாரத்தில் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும், தனக்கு பக்கபலமாக நின்ற ஊடகத்தையும், பிரபலங்களின் ஆதரவையும் தனக்கும் தன் படத்துக்கும் சாதகமாக மாற்றி இப்போது உற்சாகத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் கமலின் அதிகபட்ச விளம்பரப் பேராசையை விட அவரது மதவாதப் போக்கை எதிர்க்கும் முஸ்லீம் அமைப்பினர் எவ்வளவோ மேல்…

உண்மையை அப்படியே பேசுவதில்!

- மிஸ்டர் ரைட்

ரைட் செய்திகள்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல