திங்கள், 27 மே, 2013

விஷம் வென்று வருகிறது – மனிதன் தோற்று விட்டான்.!

“”வானில் உள்ள தேவர்களை வாழ வைக்க விஷம் குடித்தான். நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் “”நான்” குடிக்க விட்டு விட்டான்…

” கவிஞர் “”நான்” என்றுதான் எழுதியுள்ளார். கவிஞரின் தனித்துவத்தை சமூகப் பார்வையாக கவனிக்கும்போது “”நாம்” என்பது நல்ல பொருத்தம்.

“ரசாயனப் புரட்சி’யால் உணவும் வெளியும் விஷமானதால் நாம் உண்பதும் உறங்குவதும் விஷமே. சுவாசிக்க நல்ல காற்று இல்லை. குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை. உண்ண நல்ல உணவு இல்லை. இதற்கெல்லாம் காரணம் 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட ரசாயனப் புரட்சிதான்.

நமது உணவும் சூழலும் விஷமானதற்குரிய காரணம் “பசுமைப் புரட்சி’யா? “ரசாயனப் புரட்சி’யா? என்று பட்டிமன்றமே நடத்தலாம். அடுத்தகட்டமாக மற்றொரு பட்டிமன்றமும் நடத்தலாம். ரசாயன உரமிட்டு பூச்சி மருந்து அடித்து விளைவித்த தானியங்களிலும் பழங்களிலும் விஷம் அதிகமா? பதனப் பொருள், நிறங்கள் சேர்த்த உணவில் விஷம் அதிகமா? என்றும் பட்டிமன்றம் நடக்கலாம்.
24 m - sugar-deadly-poison1
வரலாறு ரீதியாகப் பசுமைப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பே விவசாயத்தில், ரசாயனப் புரட்சி ஏற்பட்டுவிட்டது. 1962-ஆம் ஆண்டில்தான் குள்ள ரக மெக்சிகன் வெள்ளை கோதுமையை, நார்மன் பார்லாக் கண்டுபிடித்து அதன் வெற்றிக்குப் பின் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியதாக நோபல் பரிசு சில ஆண்டுகளுக்குப் பின் கிட்டியது.

ஆனால், விவசாயத்தில் ரசாயனத்தை அறிமுகப்படுத்திய விஞ்ஞானி பேரன் யோஸ்டஸ் வான் லீபக். ஜெர்மானியரான இந்தப் படுபாவி விஞ்ஞானி பசுமைப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பே விவசாயத்தில் “என்.பி.கே.’ பாக்கேஜைக் கண்டுபிடித்த காலம் 1840. பல வகையான உணவுத் தாவரங்களை எரித்துக் கிடைத்த சாம்பலில் உள்ள உப்புக்களை அளவிட்டுப் பார்த்து நைட்ரஜன், பாஸ்வரம், பொட்டாசியம் கலவையைச் சரியான விகிதாசாரத்தில் “சிந்தட்டிக்காக’ (செயற்கை) உப்பு வடிவில் சிறிது சுட்ட சுண்ணாம்பு (ஜிப்சம்) சேர்த்து மண்ணில் வழங்கியபோது, உயர்ந்த விளைச்சல் கிட்டியது. 1840-இல் மண்ணில் ரசாயன உரங்களை இட்டு விவசாய உற்பத்தியை உயர்த்தலாம் என்று கூறியதோடு நிற்காமல், உணவிலும் “சிந்தட்டிக்’ உப்புக்களைச் சேர்த்து உண்பதின் மூலமே மனித நலவாழ்வு சிறக்கும் என்று போதித்தார்! ஆகவே, பசுமைப் புரட்சி தோன்றுவதற்கு நூறு ஆண்டுகள் முன்பே “ரசாயனப் புரட்சி’ வந்துவிட்டது.

உண்மையில் லீபக் ஒரு “வெடிகுண்டு’ விஞ்ஞானியே தவிர “மண் ரசாயன’ விஞ்ஞானி அல்லர். இவரின் கண்டுபிடிப்புகளான சூப்பர் பாஸ்பேட், பென்சீன், ஆல்கலி என்பன வெடி உப்புக்களே தவிர விவசாய உரங்கள் அல்ல. மண்ணுக்கு இயற்கை உரமே தேவை இல்லை என்றும், மேற்படி ரசாயனங்களே போதும் என்று கூறிய லீபெக்கை வெடிமருந்து நிறுவனங்கள் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடின. முதல் உலகப் போர் காலகட்டத்தில் மண் மீது ரசாயன உரங்கள் தூவப்பட்டன. ரசாயனப் பசுமை மிகுதியால் பூச்சி பூசண நோய்களும் பயிர்களைத் தாக்கின. அவற்றைக் கட்டுப்படுத்த உயிர்க்கொல்லிகள், பூச்சி மருந்துகளாகப் பயனாயிற்று. பசுமைப் புரட்சிக்கு முன்பே உலகில் மண் விஷமானது. எனினும் இந்தியாவில் மட்டும் பசுமைப் புரட்சியும் ரசாயனப் புரட்சியும் 1960-களில் ஒரே சமயத்தில் விவசாயத்தில் அறிமுகமானது. உணவைப் பதனிடும் நுட்பத்தில் பசுமைப் புரட்சிக்கு முன்பே இந்தியாவில் ரசாயனம் அறிமுகமாகிவிட்டது.

உலகில் முதல் முறையாக விவசாயத்தில் ரசாயன உரம் – பூச்சி மருந்து உபயோகத்தால் உணவும் விஷமாகும் என்ற உண்மையைக் கூறிய விஞ்ஞானி டாக்டர் அலக்சிஸ் கேர்ரல். இவர் எழுதிய நூல் “”மனிதன் — ஒரு புதிர்” (தி மேன் – அன்நோன்). மண்ணில் ரசாயனப் பயனீட்டால் மண் விஷமாகிறது என்றும், அப்படி விஷமாக்கப்பட்ட மண்ணில் விளையும் உணவை உண்டால் மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படுமென்றும், மாசுபடாத மண்ணில் உள்ள இயற்கையான தாதுப்புக்களே மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உயர்மங்களைக் (செல்) காப்பாற்றும் என்றும், சிந்தட்டிக் ரசாயன உரங்கள் வழங்கும் உப்புக்களால் பசு-மனித உயிர்மங்கள் நோயுற்று பசுக்களும் மக்களும் மடிவர் என்றும் கூறியுள்ளார். இன்றைய இந்தியாவில் யூரியா உரத்தைப் பாலில் நேரடியாகவே கலக்கின்றனர். யூரியாவைக் கொண்டு வைக்கோலில் ஊட்டமேற்றிப் பசுக்களுக்கு வழங்குமாறு போதிக்கின்றனர்.

கேர்ரல் ரசாயனங்களை மண்ணில் இடும் கேட்டைத்தான் கூறினார். “”மண்ணில் ரசாயனங்களை வழங்குவதால் மண்ணில் நுண்ணுயிரிகளின் இயக்கங்கள் அழிந்து மண், காற்று, உணவு எல்லாமே விஷமாகிறது என்றும், மனிதன் தன்னுடைய வாழ்விடத்தை மாசுபடுத்துவதில் பன்றியைவிட மோசமானவன்…..” என்றும் டாக்டர் கேர்ரல் எழுதிய “”மனிதன் – ஒரு புதிர்” நூலுக்கு 1912-ஆம் ஆண்டில் நோபல் பரிசும் கிடைத்தது.

அடுத்தபடியாக டாக்டர் ஜோசப் வீயிஸ்மேன். இவர் நீண்டகால ஆராய்ச்சிக்குப் பின் திடுக்கிடும் ஒரு உண்மையை வெளியிட்டார். “”முற்காலத்தில் நோய் என்றால் அம்மை, பிளேக், காசநோய் ஆகியவற்றுக்கு மட்டுமே அஞ்ச வேண்டியிருந்தது. இவ்வாறு அஞ்ச வேண்டிய நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையில் தொற்றிக் கொள்ளாத நோய்களுக்குத்தான் இப்போது பயப்பட வேண்டும். 20-ஆம் நூற்றாண்டு விவசாயத்தில் பயன்படுத்திய ரசாயனங்களால்தான் மாற்று இதயம், மாற்றுச் சிறுநீரகம், புற்றுநோய், பை-பாஸ் சர்ஜரி, பல வகையான வாத நோய்கள் ஏற்பட்டு, அவற்றின் மருத்துவ சிகிச்சை, மருந்து கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிக்காகவே பில்லியன் பில்லியன் டாலர் செலவாவதை 50 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக்காட்டியுள்ளார். முதல் முறையாக 1910-இல்தான் ரத்தக்குழாய் வெடித்து மனிதன் இறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய இந்தியாவில் 70 சதவீத மக்கள் இதய நோயால் இறக்கின்றனர். 15 சதவீத மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர். நீரிழிவு நோயால் 50 சதவீத மக்கள் அவதியுறுகின்றனர். இது ஒரு பக்கம்.

ரசாயன உரம் கண்டுபிடித்த லீபக்கின் சீடர் பிரட்ரிக் வான் கெக்கூல் ஏராளமான மருந்துகளுக்குக்குரிய மூலக்கூறு சேர்க்கையைக் கண்டுபிடித்து விருது பெற்றார். இதுவே ரசாயனப் புரட்சியின் இரண்டாவது படி. பென்சின் மாலிக்யூலில் ஆறு கார்பன் அணுக்களைச் சுற்றச் செய்து ஒரு ஹைட்ரஜன் அணுவைச் சேர்த்தால் உருவாக்கப்படும் காம்பவுண்டுகளுக்கு (கூட்டுப் பொருள்களுக்கு) எல்லையே இல்லையாம்.

கெக்கூலைத் தொடர்ந்து ஜெர்மானிய விஞ்ஞானிகள் சோதனைக் குழாய்களில் கார்பன் அணுக்களுடன் ஹைட்ரஜன், நைட்ரஜன், கந்தகம், குளோரின் என்று கண்டவற்றையும் சேர்த்து மருந்துகள் கண்டுபிடித்தனர். கார்பனுக்கு அடிப்படை நிலக்கரித் தாராகிய பிச்சுக்கட்டிதான். ஜெர்மனியிலும் ஸ்விஸ் நாட்டிலும் சாய – மருந்து நிறுவனங்கள் பிச்சுக்கட்டியப் பல சிந்தட்டிக் உப்புகளுடன் கலந்து மருந்து தயாரித்தனர்.

1905-இல் ஃப்ரிட்ஸ் ஹேபர் காற்றில் உள்ள 82 சதவீத இலவச நைட்ரஜனை சோதனைக் கூட வழிமுறையில் அமோனிய திரவமாக்கும் உத்தியைக் கண்டுபிடித்தார்.

1915-இல் காரல் போச், ஹேபருடன் கூட்டு சேர்ந்து ரீச்சில் (பெர்லின்?) முதல் அமோனிய விஷ வாயு உலையை நிர்மானித்தார். ஜெர்மன் தேசாபிமானமும் வர்த்தக லாபமும் ஒருங்கிணைந்து வெடிகுண்டுகளுடன் மருந்துகளும், உரங்களும் உற்பத்தியாகி முதல் உலகப் போரில் அமோனியா விஷவாயு மூலம் 8 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட காலகட்டம் ரசாயனப் புரட்சியின் மூன்றாவது படி.

விஷவாயு – வெடிகுண்டு ரசாயன நிறுவனங்களுக்கு அமெரிக்க முதலீடு பெறப்பட்டது. இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனியிடம் சரணாகதியடைந்த பிணைக் கைதிகளை அடிமைகளாக்கி ஐ.ஜி ஃபார்பெனுக்கு அடிமையாக்கினார். ஐ.ஜி ஃபார்பென் அமெரிக்க உதவியால் 1925-இல் மாபெரும் பன்னாட்டு நிறுவனமானது. ஹிட்லரின் உத்தரவுக்கு இணங்க ஆஷ்விட்சில் பல லட்சக்கணக்கான யூதர்கள் மீது ஃபார்பென், அமோனியா விஷவாயுவைச் செலுத்திக் கொன்றார்.

இரண்டாவது உலகப் போர் சமயம் அமெரிக்க முதலீட்டில் இயங்கிய ஃபார்பென் சோவியத் – போலந்து படையெடுப்புக்கு உதவியது. ஜெர்மனிக்கு நியூஜெர்சி ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனி வழங்கிய பெட்ரோல் உதவியால் ஜெர்மானிய டாங்குகள் சோவியத்தில் நுழைந்தன.

அதேசமயம் ஜெர்மானிய ரசாயன உயிர்க்கொல்லித் தொழில்நுட்பங்கள் அமெரிக்காவை அடைந்து ஏராளமான ரசாயனக் கம்பெனிகள் லாபத்தில் கொழித்தன. மக்களின் வரிப்பணம் எல்லாம் அமோனியா – நைட்ரஜன் குண்டுகளாக மாறி சுமார் 10 லட்சம் எடையுள்ளவை ஜெர்மனியில் கொட்டி பெர்லின் தரைமட்டமாக்கிய பின் உலகப் போர் முடிவுக்கு வந்தாலும் ரசாயனப் புரட்சியின் மூன்றாவது படியாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது.

உலகப் போர் காலகட்டத்தில் இப்படியாக அமெரிக்காவில் வளர்ந்த 18 மாபெரும் அமோனியா விஷ வாயு — வெடிமருந்து நிறுவனங்களில் டூபாண்ட், டொவ், மான்சென்டோ அமெரிக்கன் செனமெட் குறிப்பிடத்தக்கவை.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. ஆனால் வெடி உப்புக்கள் தீர்ந்தபாடில்லை. விஷவாயுவாக பகைவர்களை அழிக்கப் பயன்படுத்திய அமோனியா உப்பு இன்று உற்பத்தியை உயர்த்த ரசாயன உரமாக மண்ணில் பயன்படுவதால் விஷ உற்பத்தி நின்றபாடில்லை. இப்படியாக மண்ணை விஷமாக்கி வரும் ரசாயனம் அறுவடைக்குப் பின் உணவைப் பதனப்படுத்தும்போது எப்படியெல்லாம் இரண்டாம் நிலை விஷம் தொடர்கிறது என்பதைக் கவனிப்போமா?

ஒவ்வொரு உணவு தானியத்திலும் மூன்று தவிட்டுத் தோலி உண்டு. முனையில் மொக்கு உண்டு. இந்த மொக்கில் பேரியம் என்ற அற்புதச் சத்து உண்டு. இதயத்தைக் காக்கும். தவிட்டுத் தோலிகளில் உடல்நலத்தைப் பேணும் என்சைம்கள், வைட்டமின் தாதுப்புக்கள் உண்டு. இவையெல்லாம் நீக்கப்பட்டு விஷமான தவிட்டு எண்ணெய்யாக மாற்றிவிட்டு மாவுச் சத்தை மட்டும் மிச்சம் வைக்கின்றனர். ரொட்டி மாவை வெள்ளையாக்க ரசாயனம் சேர்க்கப்படுகிறது. பென்சாயில் பராக்சைடு, பொட்டாசியம் புரோமேட், அமோனியம்-பர் சல்பேட், அல்லோக்சான். சல்பேட் என்றால் கந்தக அமிலம். சீனி, பால், மாவு என்று எல்லா உணவையும் வெள்ளையாக்குகிறது.

வெள்ளை வெளேரென்று துணியைத்தான் சலவை செய்வார்கள். மனித உணவுக்கும் வெள்ளை சலவையா? வெள்ளைச் சலவை மட்டுமா? கேக்குகளிலும் இனிப்புப் பண்டங்களிலும் பலவித வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறங்கள் சேர்க்கப்படுகின்றன. பாதாம் அல்வா, பாதாம் கட்லி, லட்டு, ஜாங்கிரி, பலவிதமான கேக்குகள் எல்லாமே விஷ வண்ணங்கள். கடைகளில் ரசாயனம் சேர்க்கப்படுவது தவறு என்றாலும் விற்பனைக்காகத் தின்பண்டங்களில் வண்ணம் சேர்க்கப்படுகிறது.

வீடுகளிலும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. ஆசை ஆசையாக ரவா கேசரி செய்வார்கள். முதல் விஷம் வனஸ்பதி, இரண்டாவது விஷம் அலுமினியம் குரோமைட். அதாவது கேசரி பவுடர் என்று கடையில் வாங்குவது குரோமைட். நல்ல ஆரஞ்சு நிறத்தை வழங்கும். முதலில் கேசரி பவுடர் என்றால் என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சுத்தமான குங்குமப்பூத் தூள் தான் அசலான கேசரிப் பவுடர். குங்குமப்பூ மருந்து. புற்றுநோய்க்கு எதிரி. சிந்தட்டிக் கேசரிப் பவுடர் (குரோமைட்) புற்றுநோயின் நண்பன். “குக்கீஸ்’ “குக்கீஸ்’ என்று விளம்பரமாகும் அனைத்து உணவுகளிலும் ரசாயன விஷம் உண்டு.

இருபதாம் நூற்றாண்டை ரசாயனப் புரட்சி நூற்றாண்டாக விஷ விஞ்ஞானிகள் வாழ்த்தலாம். போர்க் காலத்தில் அமோனிய விஷவாயுவால் மனிதர்கள் கணப்பொழுதில் இறந்தார்கள். அமைதிக்காலத்திலும் அமோனியத்துடன் வேறு பல விஷங்களும் சேர்ந்து விவசாயத்தில் அறுவடைக்கு முன்பும் அறுவடைக்குப் பின்னர் உணவிலும் கலந்து மனிதர்களை நிரந்தர நோயாளிகளாக்கி விட்டது. விஷம் வென்று வருகிறது. மனிதன் தோற்றுவிட்டான்.

ஆர்.எஸ். நாராயணன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல