புதன், 20 நவம்பர், 2013

அரசாங்கத்தின் தப்புக்கணக்கு!!!!

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், மாநாட்டின் பிரதான நிகழ்வாகிய நாட்டுத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர், யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயமும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்களை சுக்கு நூறாக்கிவிட்டிருக்கின்றன.

அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பொறுப்பை மிகவும் சாமர்த்தியமாகவும் சிறப்பாகவும் கொண்டு நடத்த முடியும் என்ற மனப்பதிவையும் திருப்தியையும் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த உலகளாவிய முக்கியஸ்தர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முனைந்திருந்தது. ஆனால், அதனுடைய எதிர்பார்ப்புக்கள் யாவும் நீர்மேல் குமிழியாகிப் போயின.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பற்றிய (CHOGM) பொதுநலவாய மாநாட்டை இலங்கை அரசாங்கம் மிகவும் கோலாகலமாக நடத்தி முடித்திருக்கின்றது. எனினும், CHOGM (சோகம்) - சோகமாக முடிந்திருப்பதாகவே தெரிகின்றது.

இளைஞர் மாநாடு, பொருளாதார மாநாடு, உலக நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு என்று மூன்று முக்கிய அம்சங்களை இந்த மாநாடு கொண்டிருந்தது.

அவற்றில் பொருளாதார மாநாட்டை ஆரம்பித்து வைத்துவிட்டு வெளியில் வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவிடம் சனல் 4 செய்தியாளராகிய ஜொனாதன் மில்லர் உங்கள் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றதே அதுபற்றி என்ன சொல்கின்றீர்கள் என கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி 'அது பற்றி எனக்குக் கவலையில்லை' என கூறியிருந்தார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவும், அவருடைய சகோதரர் கோட்டாபய ராஜபக் ஷவும், நாட்டில் 30 வருடங்களாக நீடித்திருந்த யுத்தத்தில் வெல்லப்பட முடியாதவர்கள் என பெயர் பெற்றிருந்த விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்து, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள். யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்கு மேலாகின்றது.

ஆனால் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அரசும், அரச படைகளும் அப்பட்டமாக மீறியிருந்தன என்றும் சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது.

யுத்தத்தின் இறுதி நாட்களில் மாத்திரம் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. மன்றம் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றது. யுத்த நேரத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பற்றிய விசாரணையொன்றை நடத்த வேண்டும், அவற்றுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்று ஐ.நா.வும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச நாடுகள் பலவும் வலியுறுத்தியுள்ள போதிலும், நம்பகமான பாரபட்சமற்ற விசாரணைகள் இன்னும் நடத்தப்படவில்லை.

அத்துடன், யுத்த நேரத்தில் மட்டுமல்லாமல், யுத்தம் முடிவடைந்த பின்னரும், நாட்டின் ஜனநாயகச் செயற்பாடுகள், நிர்வாக நடவடிக்கைகள், வர்த்தகம், உல்லாசப் பயணம், வெளிநாட்டு அரச தொடர்புகள் என பல துறைகளிலும் அரசாங்கம் இராணுவத்தைப் புகுத்தி அனைத்தையும் இராணுவ மயமாக்கியுள்ளதாகவும் பலதரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது. இத்தகைய இராணுவ மயமாக்கலின் மூலம், இன்னும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஜனநாயகப் பெறுமானங்கள் அழிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்திருக்கின்றன.

இந்தப் பின்னணியில் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்துவது பற்றி பல கேள்விகள் பல முனைகளில் இருந்தும் பலதரப்பட்டவர்களினாலும் எழுப்பப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் கடந்து, இந்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சனல் 4 செய்தியாளர் ஜொனாதன் மில்லர் ஜனாதிபதியிடம், அவரைக் காணக்கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்.

ஆனால், அதுபற்றி தான் கவலைகொள்ளவில்லை. அக்கறை கொள்ளவில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ மகிழ்ச்சிகரமான ஒரு மனநிலையில் அப்போது பதிலளித்திருந்தார். பொதுநலவாய மாநாட்டை கொழும்பில் நடத்த முடியுமா, முடியாதா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, மாநாட்டை நடத்துவது தொடர்பில் இருந்த ஒரு நிச்சயமற்ற நிலைமையைக் கடந்து வெற்றிகரமாக அதனை ஆரம்பித்து வைத்திருந்த நேரத்திலேயே அவர் போர்க்குற்றம் பற்றிய கேள்விக்கு அவ்வாறு பதிலளித்திருந்தார்.

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில்; நடத்துவது பற்றி எழுந்திருந்த சர்ச்சைகளுக்கு இலங்கையின் மனித உரிமை நிலைமைகளும், ஜனநாயகப் பெறுமானங்களைப் பின்பற்றுகின்ற நிலைமைகளுமே கருப்பொருளாக அமைந்திருந்தன.

இலங்கை மனித உரிமைகளைப் பேணுவதில் அடைந்துள்ள பின்னடைவை அளவீடாகக் கொண்டு சில நாடுகள் இந்தப் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள முடியுமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தன. இந்தக் கேள்விக்கு சரியான பதில் கிடைக்காத காரணத்தினாலேயே கனடா, மொரீசியஸ் போன்ற நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையும்கூட, சனல் 4 செய்தியாளர் ஜொனாதன் மில்லரை போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பச் செய்திருந்தது எனலாம்.

வருவோம்,..... ஆனால், வரமாட்டோம்

கொழும்பு மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனையும் தடுமாற்றத்தில் தள்ளியிருந்தது. மனித உரிமைகளையும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும் உரிய முறையில் மதித்துச் செயற்படாத, ஜனநாயக விழுமியங்களுக்கு உரிய மரியாதை செலுத்தாத நாட்டில் நடைபெறுகின்ற மாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் போகக் கூடாது என்று எழுந்த குரலை அவரால் இலகுவில் புறந்தள்ளிவிட முடியவில்லை.

எனினும், பொதுநலவாய மாநாட்டுக்கு உரித்துடைய பிரிட்டிஷ் மகாராணி கலந்து கொண்டு அதனை ஆரம்பித்து வைக்க வேண்டிய அரச பரம்பரை சம்பிரதாயம் இருக்கின்றது. அவ்வாறு மகாராணி கலந்து கொள்கின்ற ஒரு மாநாட்டை உலகளாவிய ரீதியிலான ஒரு நிகழ்வை பிரிட்டிஷ் பிரதமர் புறக்கணிக்க முடியாது. அது நடைபெறுகின்ற காரியமல்ல. எனவே, இந்த மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதில்லை. அதில் கலந்து கொள்வேன். அந்த மாநாட்டுக்குச் சென்று, அங்கு வெளிக் கொண்டுவர வேண்டிய முக்கிய விடயத்தை நான் வெளிக்கொண்டு வருவேன் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் ஆரம்பத்தில் கூறியிருந்தார். அதன்படியே அவர் மாநாட்டுக்கு வந்தார். வென்றார். வெற்றியோடு திரும்பிச் சென்றிருக்கின்றார்.

பிரிட்டிஷ் மகாராணியார் கலந்து கொள்ள வேண்டிய இந்த மாநாட்டுக்கு அவரும் வருகை தரவில்லை. தனக்குப் பதிலாக மாநாட்டை ஆரம்பித்து வைத்து அதில் கலந்து கொள்ளுமாறு இளவரசர் சாள்ஸை பிரிட்டிஷ் மகாராணி அனுப்பி வைத்திருந்தார். இதற்கு முக்கியமாக பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் வேறு முக்கிய காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் மகாராணியார் வருகை தராமையும்கூட, இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவது அவரை ஏதோ ஒரு வகையில் சங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது என்றே சொல்லப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு உணர்வு நிலை சார்ந்த வகையில்தான், இந்த மாநாட்டில் அநேக நாடுகள் கலந்து கொண்டிருந்த போதிலும், அவற்றின் தலைவர்கள் நேரடியாக மாநாட்டுக்குச் சமுகமளிக்கவில்லை. மாறாக, பொதுநலவாய மாநாட்டில் நாங்களும் கலந்து கொண்டோம் என்பதைக் காட்டுவதற்காக, சம்பிரதாயபூர்வமாக, அந்த நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டுக்குத் தமது பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருந்தார்கள்.

அந்த வகையில் பார்க்கும்போது, 'மாநாட்டுக்கு வருவோம். ஆனால் வரமாட்டோம்' என்ற நிலைப்பாட்டில் மாநாட்டுக்கு நேரில் சமுகமளிக்காத நாடுகளின் தலைவர்கள் - ஜனாதிபதிகளும், பிரதமர்களும் கொழும்பு மாநாட்டைப் புறக்கணித்திருக்கின்றார்கள் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

இத்தகையதொரு பின்னணியில்தான், பொருளாதார அமர்வைத் தொடக்கி வைத்துவிட்டு வெளியில் வந்த இலங்கை ஜனாதிபதியிடம் போர்க்குற்றம் தொடர்பாகக் கேட்கப்பட்ட இந்தக் கேள்வி பதிலையும், அது இடம்பெற்ற இடத்தையும் அப்படியே சனல் 4 தனது சேவையில் ஒளிபரப்பியிருந்தது.

இலங்கை அரசாங்கத்தினதும், அரச படைகளினதும் போர்க்குற்றம் தொடர்பாக 'கில்லிங் பீல்ட்ஸ்', 'நோ பயர் ஸோன்' போன்ற படங்களையும்,, போர்க்குற்றம் தொடர்பான சம்பவங்கள் எனக்கூறி, அதிரடியாக அவ்வப்போது போர்க்காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை உள்ளடக்கிய காணொளிகளையும் வெளியிட்டு, இலங்கையின் வயிற்றில் புளியைக் கரைக்கின்ற சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளரிடமே ஜனாதிபதி போர்க்குற்றம் தொடர்பில் கவலையில்லை, எனக் கூறியிருந்தார். அது மட்டுமல்ல. சனல் 4 நிறுவன செய்தியாளர் ஜொனாதன் மில்லரைப் பின்னர் சந்திப்பதாகவும், அவருடைய கேள்விகளுக்குப் பதிலளிப்பதாகவும் கூறியிருந்ததையும் சனல் 4 ஒளிபரப்பு செய்திருந்தது.

இதில் சோகம் என்னவென்றால், இலங்கை ஜனாதிபதி எதனைப் பற்றி கவலைப்படவில்லையோ, அது தொடர்பில் கூடுதலாகக் கவலையடைய வேண்டிய நிலைமைக்கு இலங்கை இந்தப் பொதுநலவாய மாநாட்டின் மூலம் தள்ளப்பட்டிருக்கின்றது.

தகர்ந்துபோன கோலாகலமும் எதிர்பார்ப்புக்களும்

பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு இலங்கைக்குக் கிடைத்த சந்தர்ப்பமானது ஒரு பொன்னான சந்தர்ப்பமாகும். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இலங்கை மாநாட்டுக்கு மாத்திரம் 53 நாடுகள் சமுகமளித்திருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை உறுப்பு நாடுகளில் இந்த மாநாடு நடத்தப்படுவதே வழமையாகும். அவ்வாறான நிலையில் இலங்கை இந்த மாநாட்டை மீண்டும் நடத்துவதற்கு இன்னும் 106 வருடங்களின் பின்னர்தான் சந்தர்ப்பம் கிடைக்கும். எனவே, 2013 ஆம் வருடத்திற்கான பொதுநலவாய மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பென்பது ஓர் அரிய வாய்ப்பாகும்.

தனது அரசியல் நலன்களைப் பேணுவதற்கும், சர்வதேச அளவில் தனது நிலைப்பாட்டை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையிலும் இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதில் கலந்து கொள்ளக்கூடும் என்று அரசாங்கம் முன்கூட்டியே எதிர்பார்த்திருக்கவில்லை. முப்பத்தேழு நாடுகள் வரையில் இதில் கலந்து கொள்ளலாம் என்ற உறுதிமொழி கிடைத்திருந்ததாக அரசாங்கம் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போது அறிவித்திருந்தது. எனவே சுமார் நாற்பது நாடுகள் கலந்து கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் மாநாட்டுக்கான கோலாகலமான ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டிருந்தன.

விசேடமாக அலங்கரிக்கப்பட்ட ஐம்பது யானைகள் அணிவகுத்து நின்று உலக நாடுகளின் தலைவர்களையும், பிரதிநிதிகளையும் வரவேற்றன. அனைவருக்குமே செங்கம்பள வரவேற்பு. இளைஞர் யுவதிகள் வண்ண வண்ணமாகத் தோன்றி நடத்திய விதம்விதமான கலை கலாசார நிகழ்வுகளும் இதற்கென விசேடமாகத் தயார் செய்யப்பட்டிருந்தன.

அதி உச்ச நிலையில், அதியுயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பையும், கௌரவத்தையும், வசதியையும் கருத்திற்கொண்டு, அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பிரயாணம் செய்வதற்கான வாகனங்கள் விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் மனதுக்கு இனிமையும், அமைதியையும் தரத்தக்க வகையிலான அழகிய காட்சிகள். இதமான வரவேற்பு. கோலாகலமான கொண்டாட்டங்கள் என்று மாநாடு களைகட்டியிருந்தது.

இத்தகைய ஒரு விழா சூழலில் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் மத்தியில் இலங்கை தன்னுடைய இராஜரீக அந்தஸ்தை உயர்த்திக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பொறுப்பை மிகவும் சாமர்த்தியமாகவும், சிறப்பாகவும் கொண்டு நடத்த முடியும் என்ற மனப்பதிவையும், திருப்தியையும் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த உலகளாவிய முக்கியஸ்தர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முனைந்திருந்தது.

ஆனால், அதனுடைய எதிர்பார்ப்புக்கள் யாவும் நீர்மேல் குமிழியாகிப் போயின.

சுற்றிச் சுற்றி சுப்பர்ட கொல்லையில் என்று சொல்வார்கள். அதுபோன்று மாநாட்டு நிகழ்வுகளில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளும், ஜனநாயக விழுமியங்கள், ஊடக சுதந்திரம் என்பன சுற்றிச் சுற்றி வந்து அரசாங்கத்தின் அரசியல் எதிர்பார்ப்புக்களை சிதறடித்திருக்கின்றன. அந்த வகையில் சனல் 4 செய்தியாளர் ஜெனாதன் மில்லர் ஒழுங்கு செய்யப்பட்ட ஓர் ஊடக சந்திப்புக்கு வெளியில் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதியிடம் கேட்ட கேள்வியும் முக்கியத்துவம் மிக்கது என்றே சொல்ல வேண்டும்.

இலங்கையின் போர்க்கால மனித உரிமை மீறல்களை அப்பட்டமாகச் சுட்டிக்காட்டி, போர்க்குற்றச் சாட்டுக்களுக்குள் தள்ளிய இரண்டு தொலைக்காட்சி ஆவணப் படங்களைத் தயாரித்திருந்த சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர் கலம் மக்ரேக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலையத்திலும், அனுராதபுரம், வவுனியா போன்ற இடங்களிலும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், அரசாங்கத்திற்கே பாதகமாக மாறிப்போயின.

அதேபோன்று பிரித்தானியாவில் இருந்து வருகை தந்திருந்த பி.பி.சி. செய்தியாளர்களை, அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம், அரச புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து, கண்காணித்தமையும், செய்தி சேகரிப்பதற்கு இடையூறு விளைவித்தமையும்கூட, அரசாங்கத்திற்கே கஸ்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றது.

மறுபுறத்தில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், மாநாட்டின் பிரதான நிகழ்வாகிய நாட்டுத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர், யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயமும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்களை சுக்கு நூறாக்கிவிட்டிருக்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமரின்

யாழ் விஜயம்

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என்ற தகவல் எற்கனவே வெளியாகியிருந்தது. உலகின் முக்கிய தலைவர்களில் ஒருவராகிய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் விஜயம் செய்கின்றார் என்ற அளவில் மாத்திரமே அவருடைய விஜயம் அறியப்பட்டிருந்தது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய வேண்டும் என்று பொதுநலவாய மாநாடு நடைபெறவிருந்த சமயத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்த அழைப்பு பெரும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில் பத்தில் ஒரு வீதம் அளவிலான ஆர்வத்தைக் கூட பிரிட்டிஷ் பிரதமரின் யாழ் விஜயம் பற்றிய தகவல் ஏற்படுத்தியிருக்கவில்லை. கொழும்பில் நடைபெறுகின்ற பொதுநலவாய மாநாட்டை இந்த விஜயம் பெரிய அளவில் பாதிக்கப்போகின்றது என்று எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அவருடைய யாழ்ப்பாணத்திற்கான விஜயம் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் வடமாகாண முதலமைச்சர் விக்கி்னேஸ்வரனைச் சந்திப்பார். அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்பதே நிகழ்ச்சி ஒழுங்காகும். பல வழிகளிலும் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்ற வடமாகாண சபைத் தேர்தலின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள முக்கியஸ்தராகிய முதலமைச்சரைச் சந்திப்பதே பிரிட்டிஷ் பிரதமருடைய நோக்கமாகும்.

வடமாகாண முதலமைச்சரைச் சந்திப்பதற்காக அவர் யாழ் நூலகத்திற்குச் சென்றபோது, நூலகத்தின் நுழை வாயிலுக்குத் திரும்புகையில், பிரித்தானிய காலனித்துவ காலத்தில் செய்த குற்றங்களுக்கு விசாரணை அவசியம் என்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகள் அவருடைய பார்வையை ஈர்த்திருந்தன. நூலகத்தில் சந்திப்பை முடித்துக்கொண்டு அவர் வெளியில் வந்தபோது, அல்லோலகல்லோலப்பட்டு, அவருடைய வாகனத்தைத் தடுத்து நிறுத்தி கையில் இருந்த புகைப்படங்களையும் கடிதங்களையும் கையளிப்பதற்கு முயன்றிருந்த தாய்மார்கள், ஆண்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்களையும் அவர் கண்டார்.

கலகம் நடைபெறுகின்ற ஓர் இடமாக நூலக வாயில் பகுதி மாறியிருந்ததை அவர் தெளிவாகவே கண்டிருந்தார். அதன் பின்னர், அங்கு நடந்ததென்ன என்பதுபற்றிய விபரங்களை உதவியாளர்கள், செய்தியாளர்கள், அதிகாரிகள் மூலமாக அறிந்து கொண்டார்.

முதலமைச்சருடனான சந்திப்பின் பின்னர், உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்ற அவர், அங்கு யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையுடன் சம்பந்தப்பட்ட ஊடக சுதந்திர நிலைமை குறித்த ஆதாரங்களை நேரில் கண்டறிந்தார். இதனையடுத்து, அவர், வலிகாமம் வடக்கில் இருந்து 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து சுன்னாகத்தில் உள்ள சபாதிப்பிள்ளை முகாமில் வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களின் அவல நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.

அரசாங்கம் தமது குடியிருப்பு காணிகளை அபகரித்திருப்பதனால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றியும் தமது வாழ்க்கையின் அவல நிலைமைகள் பற்றியும் அவர்கள் கண்ணீர் சொரிந்தபடி எடுத்துக் கூறினார்கள். யாழ் விஜயத்தின்போது இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் ஒடுக்குமுறை நிலைமைகள், காணாமல் போயுள்ளவர்களின் நிலைமைகள், ஊடக சுதந்திரம், தமிழ் மக்களின் குடியிருப்பு காணிகளைக் கைப்பற்றுகின்ற காணி அபகரிப்பு நடவடிக்கைகள் போன்ற மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களைக் கடைப்பிடிக்கின்ற அரசாங்கத்தின் நடைமுறை நிலைமைகள் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் மிகவும் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.

சுதந்திரமான விசாரணை இல்லையேல் சர்வதேச விசாரணை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு திரும்பியதும், பிரித்தானிய பிரதமர் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியபோது, அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறைகள், மனித உரிமைச் செயற்பாடுகள் குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருகின்றார். அது மட்டுமல்லாமல், போர்க்குற்றம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் ஆழமாகவும் கண்டிப்பாகவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

இலங்கை ஜனாதிபதிக்கும் பிரிட்டிஷ் பிரதமருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இராஜதந்திர ரீதியிலான அரச தலைவர்களுடனான சந்திப்பின் எல்லைகளைக் கடந்திருந்தது என்று சனல் 4 செய்தியாளர் வர்ணித்திருக்கின்றார். சந்திப்பு நடைபெற்ற மண்டபத்தில் இருந்து வெளியில் வந்த பிரிட்டிஷ் பிரதமருடைய முகம் கடுமையாக இருந்தது என்றும், அவருடன் பேச முற்பட்ட இலங்கைத் தூதுவர் பக்கம் தமது கவனத்தைத் திருப்பாமல் வந்தார் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

பொதுநலவாய மாநாட்டின் மூலம், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச்சாட்டுக்கள் என்பவற்றில் இருந்து இராஜதந்திர முறையில் தப்பிவிடலாம் என கணக்கு போட்டிருந்த இலங்கை அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளித்தே ஆகவேண்டிய கட்டாய நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. எதிர்வரம் மார்ச் மாத்திற்கிடையில் சுதந்திரமான விசாரணையொன்றை நடத்தாவிட்டால், ஐ.நா.வின் மனித உரிமை ஆணையகத்துடன் இணைந்து சர்வதேச விசாரணையொன்றைக் கோரப் போவதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் கண்டிப்பாகவும், கடுந்தொனியிலும் இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்கை செய்திருக்கின்றார்.

இந்த எச்சரிக்கையை அரசு வெளிப்படையாக நிராகரித்திருக்கின்றது. இருப்பினும், சாண் ஏறி, முழம் சறுக்கிய நிலையில் மிகவும் மோசமான சர்வதேச வலைக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாகவே அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர் முற்றும்.


செல்வரட்னம் சிறிதரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல