உலக நாடுகள் ஆளில்லா விண்கலம் ஆளில்லா விமானம் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளதன் வரிசையில் இலங்கை சாரதியில்லா ரயிலை பரீட்சித்துப் பார்த்துள்ளது.
கடந்த 5 ஆம் திகதி பதிவான சாரதியின்றி பயணித்த ரயில் என்ஞின் தொடர்பான செய்திக்கு வாசகர் ஒருவர் கொடுத்திருந்த பின்னூட்டலே அது.
கடந்த 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நேரம் அதிகாலை 1.45 இருக்கும். மாளிகாவத்தை ரயில் சேவை வளாகத்தில் வழமை போன்றே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
திடீர் என அப்போது இயக்க நிலையிலிருந்த வை- கிளாஸ் ரகத்தை சேர்ந்த ரயில் என்ஜினொன்று சாரதியின்றி பயணிக்கத் தொடங்கியது.
சேவை வளாகத்தினுள் ரயில் பெட்டிகளை அங்கும் இங்கும் இழுப்பதற்கும் தள்ளுவதற்கும் பயன்படுத்தப்பட்ட இந்த என்ஜின் திடீர் என பயணிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மருதானை புகையிரத சேவை வளாகத்தில் கடமையிலிருந்த ஊழியர்கள் குறித்த ரயில் என்ஜினின் சேவை அவசியமற்ற அந்த நடுநிசியில் அது பயணிப்பதை கண்டு யார் அந்த எஞ்சினை செலுத்துவது எதற்காக செலுத்துகின்றார்கள் என எண்ணத் தொடங்கியுள்ளனர். இதன்போதே அந்த ரயில் என்ஜின் ஆளில்லாமல் பயணிப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட ரயில் சேவையாளர்கள், ரயில் தண்டவாள ஒழுங்குபடுத்தல் பொறியியலாளரான அனுர சமரகோனுக்கு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் புகையிரத கட்டுப்பாட்டறைக்கு தெரியப்படுத்திய குறித்த பொறியியலாளர் அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் தொழில்நுட்ப அதிகாரியான டப்ளியூ. உமங்ககே –முகாமைத்துவ உதவியாளர் இந்திக ரொட்ரிகோ உள்ளிட்ட சிலரை காலி வீதியூடாக அனுப்பி வைத்ததுடன் தானும் புறப்பட்டுச் சென்றார்.
கரையோர புகையிரத தண்டவாளத்தில் பயணித்துக் கொண்டிருந்த அந்த என்ஜினை அருகிலுள்ள ரயில்வே நிலையம் ஒன்றில் நிறுத்துவதற்கான முயற்சிகளை ரயில்வே திணைக்களம் மேற்கொண்ட போதும் அது சாத்தியமற்று போனது.
இந்நிலையில் சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் எட்டு புகையிரத நிலையங்களை தாண்டி அந்த என்ஜின் பயணித்துக் கொண்டிருந்தது. மருதானை, கோட்டை, ஜனாதிபதி செயலகம், கொம்பனி வீதி, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸை ஆகிய ரயில் நிலையங்களை தாண்டி ரத்மலானை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அந்த ரயில் என்ஜின் ரத்மலானைக்கும் கல்கிஸ்ஸைக்கும் இடைப்பட்ட பிரதேசம் ஒன்றில் தடுத்து நிறுத்தப்பட்டது.
மணித்தியாலத்துக்கு 5 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த அந்த என்ஜினில் பயணித்துக் கொண்டிருந்த நிலையிலேயே சினிமா பாணியில் தாவி ஏறிய தொழில் நுட்ப அதிகாரியான உமங்ககே அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.
சாரதியின்றி பயணித்த ரயில் என்ஜினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தும் போது நேரமோ அதிகாலை 2.30 ஐ எட்டியிருந்தது. சுமார் 150 வருடங்கள் பழைமையான அந்த ரயில் என்ஜின் சாரதியில்லாமல் அவ்வளவு தூரம் பயணித்தது எவ்வாறு என்பது தொடர்பில் ஆராய மூவர் கொண்ட விசாரணைக்குழு உடனடியாக நியமிக்கப்பட்டது. அத்துடன் அந்த வை- கிளாஸ் ரகத்தை சேர்ந்த 786ஆம் இலக்கத்தைக் கொண்ட அந்த என்ஜின் பொறுப்பளிக்கப்பட்டிருந்த சாரதி மற்றும் உதவியாளரும் வேலையிலிருந்து இடை நிறுத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.உண்மையில் ரயில் என்ஜின் ஒன்று சாரதியின்றி பயணிப்பது இது முதன் முறையல்ல. இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் ரயில் சேவை இருந்த போது இவ்வாறானதோர் சம்பவம் பதிவாகியுள்ளது. அதாவது 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி அதிகாலை 1.45இற்கு இச்சம்பவம் அப்போது பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்தே தற்போது 2013ஆம் ஆண்டு டிசம்பர் 05ஆம் திகதியும் அதிகாலை 1.45இற்கு இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது இடம்பெற்ற குறித்த சம்பவமானது ‘தினமின’ என்ற சிங்கள பத்திரிகையில் செய்தியாக பதிவாகியுள்ளது.
இந்நிலையிலேயே அந்த ரயில் என்ஜினை பேய் செலுத்திச் சென்றதா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஏனெனில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் என்ஜினின் திறப்பானது 4ஆம் திகதி இரவு 10.30 மணிக்கே வழமையாக திறப்புகள் வைக்கப்படும் பகுதிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.அத்துடன் ரயில் என்ஜின் பயணித்த போதும் திறப்பானது மாளிகாவத்தை சேவை வளாகத்திலேயே பாதுகாப்பாக இருந்துள்ளது. எனினும் ரயில் ரத்மலானை பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்ட போதும் அதிலும் ஒரு எஸ்–-ii ரக திறப்பொன்று இருந்துள்ளது.
இந்நிலையில் பேயின் செயல் என்பதைத் தாண்டி இது ஒரு சதியா எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரயில் எஜ்சினிலிருந்து மீட்கப்பட்ட எஸ்-ii ரக திறப்பானது அலவ்வ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தின் போது காணாமல் போன என்ஜின் திறப்பாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
1913ஆம் ஆண்டு இவ்வாறு பயணித்த ரயிலானது 3.5 கிலோ மீற்றர்கள் களனி வெளி ரயில் பாதையூடே கப்பிதாவத்தை ---------------------கோவில் வரை பயணித்துள்ளது. எனினும் தற்போது 15 கி.மீ. ரயில் என்ஜின் பயணித்துள்ளது.இந்த பயணத்தின் போது கடவைகள் அனைத்தும் சுயமாக இயங்கக் கூடியவை என்பதால் விபத்துக்கள் தடுக்கப்பட்டதுடன் பாரிய அசம்பாவிதமும் தடுக்கப்பட்டது.
ரயிலை இயக்க நிலையில் பரிசோதகர்கள் வைத்து விட்டு தேநீர் அருந்தச் சென்ற போதே சம்பவம் பதிவாகியுள்ளதாக ரயில்வே உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இன்னும் விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாத நிலையில் உடனடியாக எதனையும் கூற முடியாது.
உண்மையில் ரயிலை இயக்க நிலையில் விட்டது யார்? தொழில் நுட்ப பிரச்சினை இல்லாத என்ஜின் எவ்வாறு தானே சென்றது? பேய் ஓட்டியதா? விடை தெரியாத கேள்விகள் தொடரும் நிலையில் பேய் ரயிலின் விசாரணை அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம்.
எம்.எப்.எம்.பஸீர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக