'ராதிகாவைப் பின்தொடர்கிறார்களாம். ராதிகாவை விசாரிக்கிறார்களாம். உங்களுக்கு இதைப்பற்றி ஒண்டும் தெரியாதோ!' என்று கேட்டார் கனடா நண்பர் ஒருத்தர்.
ராதிகா இலங்கைக்கு வந்தாரா? எப்ப வந்தார்? எதற்காக வந்தார்? ஒரு மண்ணும் விளங்கவில்லை எனக்கு.
ராதிகா இலங்கையில் பிறந்திருந்தாலும் அதை ஒரு ரத்தபந்தமாக அவர் பின்னர் கொண்டாடியதாக நானறியவில்லை. இப்பொழுது அவர் அரசியல் ஈடுபாடுள்ள ஒருவர் என்ற போதும் கூட இலங்கை அரசியலில் அவ்வளவு நாட்டத்தைக் காட்டியதாக இல்லை.
அப்படியென்றால், எதற்காக இலங்கை வந்தார்? சிலவேளை நாடு வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதால் சுற்றுலாவுக்கு வந்திருப்பாரா? அல்லது அவருடைய தொழில்முறையாக – நடிப்புக்காக - படப்பிடிப்புக்காக வந்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு நண்பரிடமே விசாரித்தேன்.
'எனக்குச் சரியாக விவரம் தெரியாது. நீங்கள் கொஞ்சம் விவிரமாகச் சொல்லுங்கோ. ராதிகா எப்ப வந்தவா?' என்று.
'என்னய்யா... இங்க (கனடாவில்) ராதிகாவைப் பற்றித்தான் செய்திகள். நீங்கள் ஒண்டுமே தெரியாது எண்டிறீங்கள்...!' என்று திரும்பவும் கேள்விக்கணையை என்னிடமே திருப்பினார்.
தெய்வமே, நான் என்ன செய்வேன்!
உண்மையாகவே எனக்கு அடிநுனி ஒன்றும் விளங்கவில்லை.
அதைவிட ராதிகாவைப் பின்தொடரக்கூடிய வயதில் அவரில்லையே! என்ன வம்படா இது? காலையிலேயே மனுசன் குழப்பிக் கொண்டிருக்கிறாரே!
ராதிகாவை நான் அவருடைய முதற்படத்திலிருந்து நன்றாக அறிவேன். இன்றைக்கும் திரையில் உலாவிக்கொண்டிருக்கின்றார். அவருடன் திரைக்கு வந்தவர்கள் யாருமே அவரளவுக்கு இல்லை. ஓய்ந்து விட்டார்கள். இதுமட்டும் 'ஓயாத அலை' என்ற மாதிரி இன்னும் களத்தில் நிற்கிறது. அஞ்சாத சிங்கம் எம்.ஆர். ராதாவின் மகள் அல்லவா!
எனக்கும் ராதிகாவில் கொஞ்சம் விருப்பமுண்டு. சில படங்களில், சில பாத்திரங்களில் முத்திரை பதித்தவர். அதைவிட நிறம்மாறாத பூக்களில் அவர் ஒரு கலக்கல். அதிலிருந்து மனதின் எங்கோ ஒரு மூலையில் இன்னும் நிறம்மாறாத பூவாகவே உள்ளார்.
இப்பொழுது என்னுடைய நெஞ்சிலும் மெல்லியதாக ஒரு வலி எழத்தொடங்கியது. ராதிகாவை யார் பின்தொடர்கிறார்கள்? ஏன் பின்தொடர்கிறார்கள்... எதற்காக... எதற்காக....?
'ஐயா குழப்பாமல் விசயத்தைத் தெளிவாகச் சொல்லுங்கள். நான் இன்னும் அப்படியான செய்திகளை அறியவில்லை. ராதிகாவை யார் பின்தொடர்கிறார்கள்? அவர் ஏன் இலங்கைக்கு வந்தார்? நீங்கள் அறிந்த செய்திகள் என்ன?...' என்று கேட்டேன் நண்பரிடம்.
'யோவ், நீர் ஒரு சுத்தமான களிமண்ணப்பா. (நல்லவேளை, கலப்படமான களிமண் என்று சொல்லாமல் விட்டார்) இஞ்ச எலெக்ஷன் நடக்கப்போதுதல்லோ..! அதுக்காக ராதிகா அங்க வந்திருக்கிறார். அங்க வந்து, வன்னிப் பகுதியில நாலு ஏழைக்குடும்பங்களோடயும் யாழ்ப்பாணத்துக்குப் போய் ஒரு அகதி முகாமிலையும் நிண்டு ஐந்தாறு படம் எடுத்திட்டால், பிறகென்ன? தேர்தலில் அதை வைச்சே ஒரு பரப்புரைப் போரைத் தொடுக்கலாம். இந்தமுறை இஞ்ச (கனடாவில்) ராதிகா மண்கவ்வும் நிலையிலதான் இருக்கிறார். அதைத் தவிரக்கிறதுக்காக அங்க வந்திருக்கிறார். அப்பிடி வந்த இடத்தில யாரோ பின்தொடர்கிறார்களாம்...! அநேகமாக இலங்கைப் புலனாய்வுத்துறையினராக இருக்கும் எண்டு இணையத்தளத்தில் செய்திகள் வந்திருக்கு....' என்று விளக்கினார் நண்பர்.
ஓ.. அப்படியா சங்கதி?
நன்றாக வாய்த்தோம் நாம் எல்லோருக்கும். பிரித்தானியாவில் நடக்கும் தேர்தலில் ஈழத்தமிழர்களின் ஆதரவைப் பெறுவதற்காக டேவிற் கமரூன் யாழ்ப்பாணத்துக்கு வந்து போஸ் குடுக்கிறார்ளூ படமெடுக்கிறார்.
இந்தியத் தேர்தற் களங்களிலும் வை.கோவிலிருந்து சிதம்பரம் வரை இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் போலிக்கண்ணீர் எல்லாம் வடிக்கிறார்கள். (இந்தியாத் தேர்தலில் இலங்கைத் தமிழர் விவகாரமே கச்சாப் பொருள்).
இப்பொழுது கனடியத் தேர்தலுக்கும் இலங்கைத் தமிழரா பயன்படுகிறார்கள்?
ஈழத்தமிழரின் துயரமும் அவலமும் நன்றாகத்தான் விலைபோகிறது. இதற்கெல்லாம் ஒத்துப் பாடுவதற்குத் தோதாக இருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சில எம். பி மார்.
வெளியாரின் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும் இந்த எம்பி மார் இங்கே இருக்கின்ற பாவப்பட்ட சனங்களை வைத்தே தங்களின் வியாபாரத்தைச் செய்து கொள்கிறார்கள்.
காயங்களை ஆற்றாமல், வலிகளைப் போக்காமல் புண்ணைப் பெருப்பித்துப் பெருப்பித்தே மருந்துக்கடை வைத்திருக்கிறார்கள் இந்த மாயாவிகள்.
ராதிகா சிற்சபேசனும் குறைந்த ஆளில்லை. ஆளுக்கு வயசு குறைவெண்டாலும் அரசியலில் சிங்கி ஒரு சின்னப் புலிதான்.
இல்லையென்றால், இலங்கைக்கு வந்து சிறிதரன் எம். பியைப் பிடிச்சிருக்கிறார் என்றால் சும்மாவா? அவரைப்பிடித்தால்தான் தன்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கும் என்று தெரிந்திருக்கிறது.
சிறிதரனைப் பிடித்தால் அவர், வன்னியில் தோதாகப் படம் எடுக்கக் கூடிய இடங்களுக்குக் கூட்டிச் செல்வார். அவரோடு திரிந்தால்தான் புலனாய்வுத்துறை தேடுவதாக, துரத்துவதாக, கண்காணிப்பதாக, விசாரிப்பதாக எல்லாம் செய்திகள் வரும்.
இப்படிச் செய்திகள் வந்தால் அங்கே தேர்தற் காட்டில் மழை பொழியும். இந்தச் செய்திகளால் இங்கே சிறிதரனின் காட்டிலும் மழைகொட்டும்.
ஆகவே எனக்கு நீ சொந்தம்... உனக்கு நான் சொந்தம்... என்ற கணக்கில் ஆளுக்கு ஆள் உதவி.
'ஐயா, இந்த ராதிகா நிறம்மாறிய பூ...' என்று நண்பருக்குச் சொல்ல வேண்டும் என நினைத்திருக்கிறேன்.
- வடபுலத்தான்
தேணி இணையம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக