சனி, 15 மார்ச், 2014

மாயமான மலேசிய விமானம் (1)


மலேசிய விமானத்திலிருந்து இன்னும் சேட்டிலைட் சிக்னல் வருகிறது... கடத்தப்பட்டுள்ளது உறுதி!- அதிகாரிகள்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளனர்.

ஆங்கிலத்தில் Mysterious case என்பார்களே.. அதற்கு சரியான உதாரணம் இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதுதான்.



கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகரிலிருந்து 239 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் அடுத்த ஒரு மணி நேரத்தில் விமான நிலையத் தொடர்பை இழந்தது.

அன்றிலிருந்து உலக நாடுகள் பலவும் தங்களிடமுள்ள அதி உயர் தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி தேடிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் இருக்கட்டுமே என்று சூனியக்காரர்கள், ஜோசியர்களைக் கூட கேட்டுப் பார்த்துவிட்டார்கள்.

இதுவரை உறுதியான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தென் சீனக் கடல், வியட்நாம் கடல் என கடல் பகுதிகளில் முழுவதுமாக தேடிப் பார்த்துவிட்டார்கள். இப்போது இந்தியப் பெருங்கடலின் வட பகுதியில் இந்திய கப்பல்களும், தென் பகுதியில் அமெரிக்கக் கப்பல்களும் தேடிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு 1000 கிமீ தொலைவில் இந்த விமானம் வந்ததற்கான தடயங்கள் ஆஸ்திரேலிய ரேடாரில் பதிவாகி இருப்பதாகக் கூறப்பட்டது.

கடத்தல்தான்

இந்த நிலையில், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கண்டுபிடிக்கும் விசாரணைக் குழு அதிகாரிகள் இந்த விமானம் எங்கும் விழுந்து நொறுங்கவில்லை. கடத்தப்பட்டதுதான் உண்மை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த விசாரணக்குழுவின் அதிகாரி ஒருவர் இதனை செய்தியாளர்களிடமும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்பதை இனியும் யூகமாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. காரணம், கடத்தப்பட்டது என்பதுதான் உண்மை. விமான ஓட்டிகளில் ஒருவர் அல்லது விமானத்தில் பயணித்த வேறு யாரோ ஒரு தேர்ந்த விமானி இந்த கடத்தலை நிகழ்த்தியிருக்கலாம்.  இனி இந்தக் கோணத்தில் விசாரணையைத் தொடரப் போகிறோம்," என்றார்.

விசாரணைக் குழு அதிகாரப்பூர்வமாக இந்த முடிவை இன்று அறிவிக்கவிருக்கிறதாம்.

எங்கே தரையிறங்கி இருக்கும்?

இந்த விமானம் கடத்தப்பட்டது என்பதை எதை வைத்து இத்தனை உறுதியாகச் சொல்கிறார்கள்?

அமெரிக்கா அளித்த தெளிவான தகவல்கள் அடிப்படையில்தான். அந்தத் தகவலின்படி, கோலாலம்பூரிலிருந்து கிளம்பிய விமானத்தின் டிரான்ஸ்பான்டரை யாரோ வேண்டுமென்றே துண்டித்திருக்கிறார்கள்.
ரிபோர்டிங் சிஸ்டம் மற்றும் ட்ரான்ஸ்பாண்டர் இரண்டையும் அதிகாலை 1:07 மற்றும் 1:21-க்கு தனித்தனியாகத் துண்டித்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது 12 நிமிடங்கள் வித்தியாசத்தில் இந்த இரு தகவல் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த வேலையை ஒரு தொழில்முறை கடத்தல்காரனால் கூட செய்ய முடியாதாம். விமானி அல்லது விமானத் தொழில்நுட்பம் அத்துப்படியாகத் தெரிந்த ஒருவர்தான் இப்படிச் செய்ய முடியும். ஏற்கெனவே இருமுறை கடந்த காலங்களில் இப்படி நடந்திருப்பதாக சர்வதேச விமானிகள் அமைப்பின் உறுப்பினர் மைக் க்ளைன் தெரிவித்துள்ளார்.

இன்னும் சிக்னல் இருக்கு...

தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் அத்தனைத் தொடர்புகளும் அறுந்து போய்விட்டாலும், விமானத்தின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மட்டும் இன்னும் செயல் நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விமானத்தின் இந்த சேட்டிலைட் கம்யூனிகேஷன் லிங்கிலிருந்து சிக்னல் வந்து கொண்டிருக்கிறது. இதனை 'ஹேன்ட்ஷேக்' என்று சொல்வார்கள். அதாவது செல்போன் ஆன்டெனா சிக்னல் தேடும்போது வருகிற சமிக்ஞை மாதிரி இது. அந்த 'ஹேன்ட் ஷேக்' இருப்பதை வைத்துதான் விமானம் எங்கோ பத்திரமாக தரை இறங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறது அமெரிக்கா.
கடத்தல்காரர்கள் விமானத்தை மலேசிய தீபகற்பத்து நேர் மேற்கில் திருப்பியுள்ளதை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரைப் பகுதிகள், அந்தமான் தீவுகள் மற்றும் மடகாஸ்கர் வரையிலான ஏதோ ஒரு பகுதியில் விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.


மலேசியா விமானத்தை தேடும் பணி சென்னை கடற்கரை வரை நீட்டிப்பு

காணாமல் போன மலேசியா விமானத்தை தேடும் பணி சென்னை கடலிலில் இருந்து சுமார் 300 கி.மீட்டர் தொலைவு வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று மலேசியாவில் இருந்து பெய்ஜிங் புறப்பட்ட மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் 8 நாட்களாகி விட்டன. 239 பேருடன் வானில் பறந்த அந்த விமானத்தின் கதி என்ன ஆனது இன்னும் மர்மமாகவே உள்ளது.

இந்த விமானம் மாயமான பிறகு தொடர்ந்து 4 மணி நேரம் செயற்கை கோளுக்கு சிக்னல்களை அனுப்பி உள்ளது. இதை தெரிவித்த அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், "மாயமான மலேசிய போயிங் 777-200 விமானம், செயற்கைக் கோளுக்கு சிக்னல்களை அனுப்பியது. ஆனால் தகவல்கள் அனுப்பவில்லை" என்றனர்.

இந்தியப்பெருங்கடல் பகுதியில்

இந்த நிலையில் மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் தேட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் அடிமட்டத்தில் அந்த விமானம் சிக்கி இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்தான், இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளதாக அமெரிக்க ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து துறை வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
அந்தமான் கடல் பகுதியில்

மலாக்கா ஜலசந்திக்கு மேற்கே அந்தமான் கடல் பகுதியில் இந்த விமானத்தை தேடும் பணியில், இந்தியாவுடன் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி-3சி ஆரியன் கண்காணிப்பு விமானம் ஈடுபட உள்ளது.

சென்னை கடற்கரை வரை

இந்த நிலையில், மலேசிய விமானத்தை தேடும் பணி சென்னை கடற்கரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியா அரசின் வேண்டுகோளை அடுத்து வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் தேடுதல் பணியை இந்தியா தொடங்கியுள்ளது.

வங்காள விரிகுடா பகுதியில்

மலேசிய அரசின் வேண்டுகோளை அடுத்து, இந்தியா 9,000 சதுர கிலோமீட்டர் வங்காள விரிகுடா கடல்பகுதியில் தேடும் பணியை விரிவுபடுத்தியுள்ளது. சென்னை கடலிலில் இருந்து சுமார் 300 கி மீட்டர் தொலைவு வரை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மாயமான மலேசிய விமானத்திற்கு இப்படி ஏதாவது ஆகியிருக்குமோ?

மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது என்ற தகவலைத் தான். இந்நிலையில் விமானம் எரிந்திருக்கலாம், கடலுக்குள் விழுந்திருக்கலாம், கடத்தப்பட்டிருக்கலாம் என்று பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளது. விமானம் தீப்பிடித்திருந்தால் அது தெரிந்திருக்கும், உடைந்த பாகங்கள் கிடைத்திருக்கும். ஆனால் கிடைக்கவில்லை. இது தீவிரவாதிகளின் சதியா என்பதும் தெரியவில்லை.


போயிங் விமானம்

போயிங் 777 ரக விமானம் பெரிய விமானம் ஆகும். அது திடீர் என்று மாயமாகிவிட முடியாது. ஏதாவது காரணம் நிச்சயம் இருக்க வேண்டும். விமானம் பறக்கையில் வானிலை மோசமாகவும் இல்லை, விமானிகளும் அனுபவம் இல்லாதவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ஜின் கோளாறு?
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தாலோ அல்லது என்ஜின் பழுதாகியிருந்தாலோ விமானிகள் உதவி கோரியிருப்பார்கள். அல்லது சில ஆபத்து சிக்னல்களை கொடுத்திருப்பார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை.

கருப்பு பெட்டி

விமானத்தின் கருப்பு பெட்டி விமானம் தண்ணீரில் இருந்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அப்படி என்றால் ஒன்று விமானம் நீரில் இல்லை அல்லது தேடுபவர்கள் விமானத்தை தவறான இடத்தில் தேடுகிறார்கள்.

ரேடார்

விமானம் ரேடாரில் இருந்து மாயமானது தான் பெரிய அதிசயமாக உள்ளது. விமானிகள் ஏன் எந்த ஒரு ஆபத்து சிக்னலும் கொடுக்கவில்லை? அவர்கள் உதவி கோர முடியாத அளவுக்கு ஏதோ திடீர் என்று நடந்திருக்க வேண்டும்.

எரிபொருள்
விமானம் 7.5 மணிநேரம் பறக்கத் தேவையான எரிபொருள் அதில் இருந்துள்ளது. விமானம் தரை நோக்கி வந்திருந்தாலும் விமானி அவசர சிக்னல் கொடுத்திருக்கலாம். ஆனால் இல்லை. அப்படி என்றால் விமானத்தை வேறு யாராவது ஓட்டினார்களா? விமானத்தில் உள்ள டிரான்ஸ்பான்டர்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

கட்டுப்பாட்டை இழந்ததா?

விமானத்தில் காற்றழுத்தம் குறைந்திருந்தால் விமானிகள் ஆக்சிஜன் மாஸ்குகளை பயன்படுத்தியிருப்பார்கள். உடனே உதவி கோரி அழைத்திருந்திருப்பார்கள். விமானம் முழுவதுமாக வெடித்துச் சிதறாமல் இருந்தாலும் விமானிகள் உதவி கோரியிருப்பார்கள்.

ராணுவ ரேடார்
விமானம் வழக்கமான பாதையில் இருந்து மாறிச் சென்றுள்ளதா? அப்படி சென்றது ரேடாரில் இப்பொழுது காலதாமதமாக ஏன் தெரிய வேண்டும். உடனே தெரிந்திருக்க வேண்டும் அல்லவா. அப்படி என்றால் உண்மை மறைக்கப்படுகிறதா?

9/11 தாக்குதல் போன்றா?
தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியது போன்று ஏதாவது தீவிரவாதிகள் முயற்சித்து பல்லாயிரக் கணக்கான உயிர்களை காக்க விமானி விமானத்தை இறக்கி விட்டாரா?

 மாயமான மலேசிய விமானம்


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல