சனி, 29 மார்ச், 2014

ஜெயலலிதா விஜயகாந்துக்கு கொடுத்த ஷாக்! அண்ணனும், அண்ணியும் அதிரடி பிரசாரத்துக்கு ரெடி!!

தனது அரசியல் எதிரிகளுக்கு அவ்வப்போது ‘ஷாக்’ கொடுப்பதில் யாருக்கும் சளைத்தவரில்லை என்பதை மதுரையில் முதல்வர் ஜெயலலிதா நிரூபித்துள்ளார். விஜயகாந்த்தின் சகோதரர் பால்ராஜ், அவரது மனைவி வெங்கடலெட்சுமி ஆகியோரை அ.தி.மு.க.வில் இணைத்து விஜயகாந்த்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.



தமிழகத்தில் இரு துருவங்களாக இருக்கும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியலில் காய் நகர்த்துவதில் கை தேர்ந்தவர்கள். இருவரது பாணியும் தனிதான். தனது அரசியல் எதிரியின் குடும்பத்தில் நிலவும் குழப்பத்தை சாதுர்யமாகப் பயன்படுத்துவதில் கெட்டிக்காரர் ஜெயலலிதா.

போதைக்கு அடிமையான கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் மு.க. முத்துவை அவரது குடும்பத்தினர் கைவிட்டபோது, அதைப் பயன்படுத்தி கொண்டவர் ஜெயலலிதா. தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், அவர்களது குடும்பத்தினருக்கு உதவுகிறேன் என்று சொல்லி, மு.க.முத்துவை அழைத்து வந்து அ.தி.மு.க.வில் சேர்த்து செலவுக்காக ரூ.5 லட்சத்தை வழங்கி மறுநாள் பத்திரிகைகளில் படத்துடன் வெளியிடச் செய்தவர் ஜெயலலிதா.

அதேபோல, இன்று விஜயகாந்த் குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளை வைத்துக்கொண்டு அவரது சகோதரரை அ.தி.மு.க.வில் சேர்த்து அதை அரசியலாக்கியுள்ளார்.

விஜயகாந்த்தின் தந்தை அழகர்சாமியின் முதல் மனைவி ஆண்டாளின் வாரிசுகள் விஜயலெட்சுமி, நாகராஜன் (விஜயகாந்த்).

தற்போது அ.தி.மு.க.வில் சேர்ந்திருக்கும் பால்ராஜ், இரண்டாவது மனைவி ருக்மணியின் வாரிசுகளில் ஒருவர். மதுரை சதாசிவம் நகரில் வசித்து வரும் பால்ராஜ் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது.

அ.தி.மு.க.வில் சேர்ந்தும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில் கவலையில் இருந்த மதுரை மத்திய தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வான சுந்தர்ராஜன், அமைச்சர் செல்லூர் ராஜுக்கு விஜயகாந்தின் சகோதரர் பற்றி தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுந்தர்ராஜன் மூலமாகவே பால்ராஜை நாடி அ.தி.மு.க.வில் சேர்க்கும் ஐடியாவை கொடுத்துள்ளனர்.

முதலில் தயங்கிய பால்ராஜ், அ.தி.மு.க.வில் சேர்ந்தால் அம்மாவிடம் சொல்லி ‘கவனிப்பதாக’வும், மகனின் படிப்புக்கும் உதவுவதாகவும் உறுதி அளித்த பின்னர்தான் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்தே பால்ராஜும், அவரது மனைவி வெங்கிட லட்சுமியும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்து அவரது காலில் விழுந்து ‘ஆசி’ பெற்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.

விஜயகாந்த்துக்கு எதிராகப் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கும், அ.தி.மு.க. பேச்சாளர்களுக்கும் ஒரு விஷயம் கிடைத்துவிட்டது.

இனி மேடை தோறும் “சகோதரரை கைவிட்டவர்தான் விஜயகாந்த்” என்றும், “அரசியல் எதிரியாக இருந்தாலும் தாய் உள்ளத்தோடு விஜயகாந்த்தின் அண்ணனுக்கு அம்மா உதவி செய்துள்ளார்” என்றும் என்று முழங்குவதுதான் அந்த விஷயம். இனி அ.தி.மு.க. மேடைகளில் விஜயகாந்த்தின் அண்ணன் அ.தி.மு.க.வில் இணைந்தது விஷயம் கண்டிப்பாக இடம்பெறும்.

விஜயகாந்த்துக்கு எதிராக பால்ராஜும், பிரேமலதாவுக்கு எதிராக வெங்கிடலெட்சுமியும் பிரசாரம் செய்வதற்கு தயாராகிவிட்டனர். ஆனால், போயஸ்கார்டனிலிருந்து உத்தரவு வர வேண்டும் என்கின்றனர் மதுரை அ.தி.மு.க.வினர்.

viruvirupu
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல