சனி, 19 ஏப்ரல், 2014

யாரைத்தான் நம்புவதோ .... நெஞ்சம்..“

சித்திரைப் புத்தாண்டு ஆசிரியர்களுக்கு தண்ணியை வாக்கப்போகிறதோ அல்லது அவர்களைப் போட்டு அலைக்கழிக்கப்போகிறதோ தெரியவில்லை. ஆசிரியர்களைப் பற்றிய இரண்டு செய்திகள் பத்திரிகைகளில் வந்து 'கலக்கி'யிருக்கின்றன.

'ஆசிரியர்கள் சதந்திரமாகப் பணியாற்ற பதிய ஆண்டு வழிசமைக்கட்டும்' என்று ஒரு செய்தியை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விட்டுள்ளது.



அந்தச் செய்தியில் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்திக் கூறியுள்ள முக்கியமான விடயம், 'முன்னரெல்லாம் வருட இறுதியில் இடமாற்றச் சபைகளின் தீர்மானத்திற்கமைவாக நேர்மையாக, நீதியாக இவ்விடமாற்றங்கள் நடைபெற்று முடிந்து விடும். ஆனால், இன்று நிலைமை வேறு. தற்போது ஆசிரியர் இடமாற்றம் என்பது எப்போதும் எந்நேரமும் நடக்கலாம் என்ற துரதிருஸ்ட நிலைமை காணப்படுகிறது. குறிப்பாக வடக்குக் கிழக்கில் வருடம் பூராக இந்நிலமை காணப்படுகிறது. ஆசிரியர்கள் இவ்வாறு நேரம் காலம் இல்லாமல் இடமாற்றம் செய்யப்படுவதனால், அவர்கள் நிம்மதியில்லாமல், சீரான கற்பித்தலை மனம் வைத்துக் கற்பிக்க முடியாமலுள்ளது. எனவே அவர்களை சுதந்திரமாக, நிம்மதியாக பணியாற்ற விட வேண்டும்' என்பதாகும்.

மற்றச் செய்தியை, வடமாகாணசபையின் கல்வி அமைச்சு விட்டிருக்கிறது.

'வடமாகாண பாடசாலைகளின் அதிபர,; ஆசிரியர் ஆளணி விவரம் கணனி மயப்படுத்தப்பட்டு, இணையவழி மூலம் மாகாணக் கல்வி அமைச்சு. மாகாணக் கல்வித்திணைக்களம், வலயக்கல்வி அலுவலகம், கோட்டக்கல்வி அலுவலகம் உள்ளிட்ட நிலையங்களுடன் இணைப்புச் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாடசாலை அதிபர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததோடு தவறுகளும் ஏற்பட்டு வந்தன. அதிபர் - ஆசிரியர்களின் சேவை விவரங்களோடு கூடிய நிலையில் தகவல்கள் நிரல்படுத்தப்பட்டிருப்பதால், பொருத்தமான சேவைநிலையைக் கண்டறிந்து இடமாற்ற வேலைத்திட்டங்களை மேள்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது' என்று இந்த அறிக்கை சொல்கிறது.

அடிசக்கை எண்டானாம்....

இப்பிடி ஏட்டிக்குப்போட்டியாக அறிக்கைகள் வந்தால் ஆசிரியர்களின் பாடு பெரும்பாடுதான். ஆசிரியர்களின் பாடு பெரும்பாடாகினால், அதன் விளைவு மாணவர்களையே பாதிக்கும். அப்படியென்றால், மாணவர்களின் பாடு பெரும்பாடுதான். மாணவர்களின் பாடு பெரும்பாடாகினால், கல்வியின் பாடு பெரும்பாடாகும். கல்வியின் பாடு பெரும்பாடாகினால், சமூகத்தின் பாடு பெரும்பாடாகும்.

ஒரு காலம் 'தரப்படுத்தல்முறை' தவறு, அது ஒரு பிழையான நடவடிக்கை என்று சொல்லியே தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டம் வரை சென்றார்கள். இதைத் தமிழச் சமூகமும் சரியென்று ஏற்றுக்கொண்டது. 'கல்வியே நம் கண்' என்று சொன்னவர்களுக்கு அந்தக் கல்வியில் குறைபாடுகளோ முறைகேடுகளோ அணுகுமுறைத் தவறுகளோ ஏற்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

எனவே போராட்டமே முக்கியம் என்று சொல்லி கல்வியைக் கைவிட்டுப் போராட்டத்தில் குதித்தனர் ஆயிரமாயிரம் இளைஞர்கள்.

இதேவேளை மிகக்கொடிய யுத்தம், மிக அவலமான இடப்பெயர்வு போன்ற மிகப்பெரும் நெருக்கடிகளின் மத்தியிலும் கல்வியில் நாட்டம் கொண்டிருந்தது தமிழ்ச் சமூகம்.

ஆனால், இன்று வடக்குக் கிழக்குப் பகுதிகள் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. அதிலும் போர் நடந்த படுவான்கரை, வாகரை மற்றும் வன்னிப்பகுதிகளின் நிலை இன்னும் கீழானதாகவே உள்ளன.

இதற்கு போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் சொத்திழப்புகளும் இடப்பெயர்வுகளும் காரணங்கள். அதேயளவு காரணம் இந்தப் பிரதேசங்களுக்கான ஆசிரியர்களைப் பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்டுள்ள பிணக்குகளும் இழுபறிகளும்.

'தேவையான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள் அந்த இடங்களுக்குப் போகாமல் மறுத்து வருகிறார்கள். இப்படியான ஆசிரியர்களை ஆசிரியர் சங்கங்கள் காப்பாற்றி வருகின்றன' என்று வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சொல்கிறார்கள்.

'தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களுக்கு அவர்களுக்குத் தேவையான பாடசாலைகளுக்கு இடமாற்றங்களைச் செய்கின்றனர் மாகாணக்கல்வித் திணைக்களத்தினர். மற்றவர்களைத் தண்டிக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர்' என்று முறையிடுகிறார்கள், கஸ்டப்பிரதேசங்களில் படிப்பிக்கின்ற ஆசிரியர்கள்.

'மாகாணக் கல்வித்திணைக்களத்தினாலும் செல்வாக்கான ஆசிரியர்களாலும் ஆசிரியர் சங்கங்களினாலும் எங்கள் பாடசாலைகளும் மாணவர்களும் பாதிப்புக்குள்ளாக வேண்டியிருக்கிறது. இதற்கான தீர்வைக் காண்பதற்கு யாருமே இல்லையா? முன்னர் என்றால் குறைந்த பட்சம் ஆளுநரும் அமைச்சரும் தங்களால் முடிந்த அளவுக்கு ஆசிரியர்களைப் பகிர்ந்து தந்தார்கள்' என்று முறையிடுகின்றனர் அதிபர்கள்.

இந்த நிலையில்தான் இப்பொழுது சித்திரைப் புத்தாண்டு போனஸாக இந்த இரண்டு அறிக்கைகளும் வந்துள்ளன.

இது ஆசிரியர்களின் அடிவயிற்றைக் கலக்குகிறதோ.. அடிவயிற்றில் பாலை வார்க்கிறதோ தெரியாது.

ஆனால், ஆசிரியர்களின் இடமாற்ற விடயம் ஒரு தீர்க்க முடியாத இடியப்பச் சிக்கலாக - சூடு ஆறாத அப்பச் சட்டியாக – நீளத்தான் போகிறது.

'கல்வியே எங்கள் கண்' என்று சொல்லிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம், 'தேசியமே எங்கள் உயிர்' என்று சொல்லிப் பாடம் நடத்துகின்ற ஆசிரியர் குழாமும் கல்வித்துறையிரும் தங்களுடைய அகக்கண்களைத் திறப்பது எப்பொழுது?

அல்லது இன்னும் ஒளித்துப் பிடித்து இப்படியே விளையாடிக் கொண்டிருக்கத்தான் போகின்றார்களா?....

 - வடபுலத்தான்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல