சனி, 19 ஏப்ரல், 2014

யாழ்ப்பாண நூலகம் – வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையா?

´´யாழ்ப்பாணத்தில் உள்ள வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குப் போயிருக்கிறீர்களா? என்று கேட்டார்ஒருவர். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தேன்.அவர் சொன்னார், வெள்ளையடிக்கப்பட்ட அந்தக் கல்லறையைப் பார்ப்பதற்காகத் தினமும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் என்று கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இதைப் பற்றித் தெரியாமல் இருக்கிறீங்களே! அப்பொழுதான் எனக்கு விவரம் புரிந்தது. அவர் குறிப்பிட்டது, யாழ்ப்பாணப் பொது நூகலத்தையே. அவர் குறிப்பிட்டதைப்போலத்தான் யாழ்ப்பாணப் பொது நூலகம் இப்போது மாறியுள்ளது. மாறியுள்ளது என்று சொல்வதை விட, அப்படி மாற்றப்பட்டுள்ளது. இப்படி மாற்றிச் சாதனை செய்தவர்கள், வேறு யாருமல்ல.யாழ்ப்பாணச் சமூகத்தினரே.


முந்தி நூலகத்துக்குப் படிப்பதற்காகவே ஆட்கள் வருகிறார்கள். இப்பொழுது படிப்பதற்காக வருகின்ற கூட்டம் மிகக் குறைவு. வேடிக்கை பார்க்க வாற கூட்டம்தான் அதிகம். இதிலும் தென்பகுதி ஆட்களே அதிகம். யாழ்ப்பாணத்து வாசிகளில் சிலர் பழக்கதோசத்தால் ஏதோ வந்து போவதைப்போல இன்னும் வந்து போகிறார்கள். மற்றும்படி அதிகமானவர்கள் நூலகத்தை நாடுவது குறைவு. இந்தச்சிறப்பில் சிங்கப்பூர்க்காரர்களும் வந்து யுத் கோணர் (Youth Cornar) ஒன்றை, இளையதலைமுறையினருக்காகத் திறந்திருக்கிறார்கள். ஆனால், இதை யார், எத்தனைபேர், எப்படியெல்லாம் பயன்படுத்தப்போகிறார்கள்?

ஏற்கனவே யாழ்ப்பாண நூலகத்தின் கணினியில் இருந்து யாழ்ப்பாணக் கொஸிப் கலாச்சாரத்தை மேம்படுத்தும் பணியாக – தமிழ் இணையத்தளப் பண்பாட்டின் அடிப்படையில் தாராளமான புனைவுகளோடும் அவதூறுகளோடும் ஒரு இணையத்தளம் உத்தியோகப்பற்றற்ற முறையில் நடத்தப்பட்டது.

அதைப்போல இந்த யுத் கோணரையும் நம்மவர்கள் (போலி) தேசியப்பணிக்காகப் பயன்படுத்தலாம் (நாசமறுக்கலாம்).1981 இல் இந்த நூலகம் எரிக்கப்பட்டபோது, யாழ்ப்பாணச் சமூகம் கண்ணீர் விட்டது. தனிநாயகம் அடிகளார் உயிரை விட்டார். உலகெங்குமுள்ள தமிழ்மக்கள் கொதித்தனர். தமிழர்களின் ஆன்மா வேதனையால் விம்மியது. பல கவிஞர்கள் இந்த நூலக எரிப்பை எதிர்த்துக் கவிதை யாத்தனர். எழுத்தாளர்கள் எழுதினார்கள்.

இந்த நூலக எரிப்பை – ஒரு வன்கொடுமையாக உணர்ந்து, உணர்ச்சிகரமான ஆவணப்படமும்ஆக்கியிருந்தார் ஒருவர். அந்த அளவுக்கு எல்லோருடைய ஆன்மாவையும் இந்த நூலக எரிப்பு வாட்டி வதைத்தது. அன்று யாழ்ப்பாண நூலகம் யாழ்ப்பாண மக்களின் வாழ்வோடு அப்படிப் பின்னிப் பிணைந்திருந்தது. யாழ்ப்பாண நகரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, அதற்கு அப்பால் மிகத் தொலைவிருக்கும் காங்கேசன்துறை, அச்சுவேலி, பருத்தித்துறை, காரைநகர், பண்டத்தரிப்பு, சண்டிலிப்பாய், ஊர்காவற்றுறை உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் இருந்தெல்லாம் இந்த நூலகத்திற்கு சைக்கிள் மிதித்து வந்தார்கள்.

யாழ்ப்பாணத்தாரின் கல்விச் சொத்து, முதுசம் என்ற உணர்வு எல்லோரிடமும் இருந்தது. அப்படி அவர்கள் அன்று நூலகத்தை நேசித்தார்கள். அந்த அளவுக்கு அதைப் பயன்படுத்தினார்கள். அப்படிப் பயன்படுத்தியதால்தான், அது எரியூட்டப்பட்டபோது அவர்களுடைய ஆன்மா துடித்தது. ஆனால், இன்று தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் அது ஒரு வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை மட்டுமே.

அப்படி நினைத்துக் கொண்டே அதைப் பார்க்க வருகிறார்கள். புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வரும்பொழுது தப்பாமல் பார்ப்பதும் பார்க்க விரும்புவதும் இந்த நூலகத்தையே. ஆகவே இப்பொழுது நூலகம் ஒரு வேடிக்கைப் பொருளே! எனவே எல்லோரும் அதைப் பார்க்கத்தான் வருகிறார்களே தவிர, அதைப் பயன்படுத்தவல்ல. கடந்தவாரம், நூலகத்திற்குப் போயிருந்தேன். மீண்டும் அதற்கு வெள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த நண்பர் சொன்னதைப்போல ஒரு கல்லறைக்கு வெள்ளையடிப்பதைப்போலவே தோன்றியது. வாசிக்கப்படாத நூல்களும் படிப்புக்குப் பயன்படாத நூலகமும் கல்லறையேயன்றி வேறென்ன? யாழ்ப்பாண நூலகத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான புத்தகங்களை பல நாடுகளும் அமைப்புகளும் அன்பர்களும் அன்பளிப்பாக வழங்குகிறார்கள்.

புத்தம் புதிய நூல்கள் வகை வகையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பல புத்தகங்கள் ஒரு தடவை கூடப் பிரித்துப் பார்க்காமல் உள்ளன. (இது தனியே, யாழ்ப்பாண நூலகத்திற்கு மட்டும் உரிய சோதனை அல்ல. தமிழ்ப்பகுதிகளில் உள்ள நூலகங்கள் அனைத்துக்கும் உண்டாகியிருக்கும் சோதனை). இதில் மக்களைக் குறை சொல்லி என்ன பயன்?

இந்த நூலக எரிப்பை வைத்தும், பிறகு இந்த நூலகம் புனரமைக்கப்பட்டபோது, அதை வைத்தும், பிறகு அதைத்திறக்க முற்பட்டபோது அதை வைத்தும் அரசியல் பண்ணிய, இன்னும் அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிற ஒரு அரசியல்வாதியாவது சொல்லட்டும், தான் கடைசியாக இந்த நூலகத்துக்கு எப்பொழுது சென்றேன்? அங்கே தன்னுடைய அங்கத்துவ இலக்கம் என்ன? எத்தனை புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறேன்? இந்த நூலகத்தின் வளர்ச்சிக்கு என்னமாதிரியான பங்களிப்பைச் செய்திருக்கிறேன்? என்று.

சிங்களச் சனங்களாவது வந்து வேடிக்கையாவது பார்த்திட்டுப் போகிறார்கள். இவர்கள் அப்படியாவது…. சீ…!

வடபுலநாதன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல