சனி, 19 ஏப்ரல், 2014

இறைவன் எம்மிடம் நேரில் வந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா?

பொது விடயங்கள் தொடர்பில் வேதனை அடைகின்ற பலர் இந்த மண்ணில் உள்ளனர். அநியாயத்தைக் கண்டு அவர்கள் மனம் கொதிக்கின்றனர். அவர்களின் மனக்கொதிப்பு நியாயமானது. இருந்தும் நியாயங்கள் அரங்கேறுவது என்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல.



தூய்மையாக வாழ வேண்டும் என்று நினைப்பதையே களங்கப்படுத்தும் அளவில் எங்கள் மனங்கள் மிருகத்தனமாகி விட்டன.

கற்பில் சிறந்தவள் கண்ணகி என்று நாம் புராணம் எழுதிப் படிக்கின்றோம். ஆனால் இங்கோ கற்பைக் காப்பாற்றப்படாப்பாடுபடும் கண்ணகிகளின் பரிதாப நிலையை அறிவதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் ஆளில்லை இது ஒரு புறம்.

மறுபுறத்தில், மற்றவர்களின் இழப்பில் இன்புறுவோரும் வாய்க்கு வந்த படி கதை கட்டுவோரும் நாளை நமக்கு இந்நிலை என்றால் எப்படியாகும்? என்று சிந்திக்காமல் வீம்பு பேசுவோருக்கும் எங்களிடம் குறைவேயில்லை.
இந்த நிலைமைகளை எல்லாம் நினைக்கும் போது சீ… நியாயமற்ற இந்தக் கொடுமைக்காரர்கள் கொல்லப்பட வேண்டும் என நல்லோர் மனம் நினைக்கிறது.

அந்தளவிற்கு நாசகாரம் தலை விரித்தாடுகிறது. இத்தகைய நாசகாரச் சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் கடவுளே நீ என்முன் தோன்ற மாட்டாயா? என்ற நினைப்பு ஏற்படவே செய்யும்.

இறைவன் நம் முன் தோன்றினால், அந்நியன் படத்தில் வரும் அம்பிக்கு இருக்கக் கூடிய சக்தியை எமக்குத் தா! என்றுதான் நாம் அவனிடம் கேட்போம்.

அது மட்டுமல்ல; கருட புராணத்தை நீ உன் தேவலோகத்தில் வைத்துக் கொள். பூலோ கத்தில் கருடபுராணத்தை அமுல்படுத்தும் முழு அதிகாரத்தையும் எம்மிடம் தா! என்று இறைஞ்சிக் கேட்போம்.

ஏனெனில்; பாவச் செயல்களுக்காக, கருட புராணத்தில் கூறப்படுகின்ற தண்டனைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

வீதி விபத்தில் வீழ்ந்து கிடப்பவரைத் தூக்குவாருமில்லை. தூக்க முன்வருவோருக்கு உதவுவோருமில்லை என்ற நிலைமை எங்களிடம் மலிந்து விட்டது.

சிறு விபத்து என்றால் கூட, வீதியில் நின்று வேடிக்கை பார்க்கின்றவர்களுக்கு வீழ்ந்து கிடப்பவரைத் தூக்க முடியவில்லை என்றால் அதனை ஒரு போதும் மன்னிக்க முடியாது.

இது மட்டுமல்ல; பெண்கள் மீதான சேட்டைகள், அடாவடித்தனங்கள், குழுச்சண்டை கள், சண்டித்தனங்கள், பேஸ்புக் சீரழிவுகள், குறுஞ்செய்தி மூலமான ஆபாசக் கொடுமைகள் என ஏராளமான அட்டூழியங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

இத்தகைய செயல்கள் நியாயப்படுத்தப்படுமாயின்- இத்தகைய செயல்களில் ஈடுபடு வோர் காப்பாற்றப்படுவார்களாயின் நிலைமை மிகவும் மோசமாகும் என்பதால் இறைவன் எம்மிடம் நேரில் வந்தால், அந்நியன் படத்தில் வரும் அம்பி போல எமக்கும் அதி சக்தியைத் தா! என்று கேட்பதே எங்கள் இனத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வரமாகும்.

editorial/valampurii
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல