திங்கள், 30 ஜூன், 2014

“கோழி 65”... கண்டுபிடிச்சது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?

சென்னை: சரியான பசி.. வயிற்றுக்கு உய்ய வேண்டிய நேரத்தையும் தாண்டி ஓடியிருந்தது கடிகாரத்தின் முள்.. கண்ணில் பட்ட அந்த ஹோட்டலுக்குள் நுழைந்து டேபிளில் பாயாத குறையாக உட்கார்ந்து மெனு கார்டைப் பார்க்கக் கூட நேரமில்லாமல் கடகடவென ஆர்டர் கொடுத்து விட்டு சற்று ஆசுவாசமாக டேபிளைப் பார்த்தபோது கண்ணில் பட்டது..

அந்த வண்ண நிறத் தாள்!.அது புஹாரி ஹோட்டல்.. டேபிள் மீது இருந்தது "புஹாரி மெயில்" என்ற ஹோட்டலின் விளம்பரத் தாள்.

என்ன என்று எடுத்துப் பார்த்தபோது படித்த விஷயம் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது.. அட அப்படியா என்று வியந்தபடி அருகில் நின்றிருந்த "கோட் சூட் சூப்பர்வைசரை" அழைத்து மெய்யாலுமா என்று கேட்டபோது ஆமாம் சார் என்றார் புன்னகைத்தபடி.

அந்த புஹாரி மெயில் பேப்பரில் சொல்லப்பட்டிருந்த சமாச்சாரம் இதுதான்.. அதாவது சிக்கன் 65 என்ற ஐட்டத்தை அவர்கள்தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினராம். அதன் பிறகுதான் அது தமிழகம் முழுவதும் பரவியதாம்.

புஹாரி ஹோட்டல் 1951ம் ஆண்டு அண்ணா சாலையில் தொடங்கப்பட்டதாகும். பிரியாணிக்குப் பெயர் போன ஹோட்டல்களில் இதற்குத் தனி இடம் உண்டு. இன்றளவும் புஹாரி பிரியாணி என்றால் நாவில் எச்சில் ஊறுவதை யாராலும் தடுக்க முடியாது.. அப்படி ஒரு அசாத்திய சுவை இந்த பிரியாணிக்கு உண்டு.

1965ம் ஆண்டு புஹாரி ஹோட்டலில்தான் சிக்கன் 65 என்ற கோழி வறுவல் அறிமுகமானதாம். அந்த சிக்கனுக்குக் கிடைத்த வரவேற்பு பலமாக இருக்கவே குறுகிய காலத்திலேயே இந்த பதார்த்தம் பிரபலமாகி விட்டது.

புஹாரி ஹோட்டலின் உரிமையாளரும், தென் இந்திய உணவுத்துறையின் முக்கிய முன்னோடிகளில் ஒருவருமான ஏ.எம். புஹாரிதான் இதை அறிமுகப்படுத்தியுள்ளார்.

சிக்கன் 65 பிரபலமானதைத் தொடர்ந்து 1978ல் சிக்கன் 78, 82ல் சிக்கன் 82, 1990ம் ஆண்டு சிக்கன் 90 என அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அமிதாப் பச்சன் நடத்திய முதலாவது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியிலும் கூட சிக்கன் 65 ஐ அறிமுகப்படுத்தியவர் யார் என்ற கேள்வியைக் கேட்டு ஏ.எம்.புஹாரி என்ற பதிலையும் கொடுத்துள்ளாராம்.

அதுவரை சிக்கன் 65 என்ற பதார்த்தமே இல்லை என்பதால் இதை தேசிய நாளிதழ்களில் விளம்பரமும் செய்து அமர்க்களப்படுத்தியுள்ளார் ஏ.எம். புஹாரி

அதை விட முக்கியமானது புஹாரியின் தாராள மனப்பான்மை. அதாவது இந்த உணவுப் பொருளுக்கு அவர் காப்புரிமை எதையும் பெற விரும்பவில்லை. தான் கண்டுபிடித்து அறிமுகம் செய்ததாக இருந்தாலும் கூட அனைவரும் இதை சாப்பிட்டு ருசிக்கட்டும் என்ற நோக்கில் காப்புரிமை பெறாமலேயே விட்டு விட்டாராம்.

அதேசமயம், சிக்கன் 65 என்ற பெயர் வந்ததற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். அதாவது சென்னையில் 1965ம் ஆண்டு இருந்த ராணுவ உணவகத்தில் விதம் விதமான உணவு வகைகளின் பெயர்களை உணவுப் பட்டியல் கார்டில் எழுதி வைத்திருப்பார்களாம். அதில் 65வது உணவாக இந்த சிக்கன் 65 இருந்துள்ளது.

அப்போது உணவகத்திற்கு வரும் இந்தி மட்டுமே பேசப் படிக்கத் தெரிந்த வட மாநில ராணுவ வீரர்களுக்கு சிக்கன் 65 பெயரைச் சொல்லத் தெரியாமல், நம்பர் 65 என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். காலப் போக்கில் அது சிக்கன் 65 என்று மாறி விட்டதாம்.

மற்றபடி சிக்கன் 65ஐ வைத்து வடிவேலுவும், முத்துக்காளையும் ஒரு படத்தில் கலகலக்க வைத்திருப்பார்களே.. அப்படியெல்லாம் எதுவும் இல்லையாம்!

எது எப்படியோ புஹாரியிலிருந்து புறப்பட்டு இன்று முனியாண்டி விலாஸ் வரைக்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது இந்த சிக்கன் 65.. யார் கண்டுபிடிச்சா என்ன.. நல்லா ருசிச்சு சாப்பிட வேண்டியது மட்டுமே நம்ம கடமை.. என்ன சொல்றீங்க?
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல