ஞாயிறு, 28 ஜூன், 2015

ஒரு மாடமாளிகையில் புகலிடம் கோரும் சேரிவாசிகள்

ஐரோப்பிய ஒன்றிய புகலிடக் கோரிக்கையாளர் உடன்படிக்கை பற்றிய யதார்த்தம்

அண்­ணாந்து பார்க்கும் மாளி கைக் கட்டி, அதன் அரு­கி னில் ஓலைக் குடிசை போட்ட பொன்­னான உலகம்.

வறி­ய­வர்கள் வாழ்க்கைப் போராட்­டத்தில் தினமும் செத்துப் பிழைக்கும் சேரிப்­புறம். செல்­வந்­தர்கள் ஆடம்­பர வாழ்க்­கையில் மூழ்கித் திளைக்கும் மாடமாளிகை.



கொடி­ய­தொரு சேரிப்­புற வாழ்க்­கையில் அடுத்த வேளை சோறு என்­பது மாத்­திரம் பிரச்­சினை அல்ல. கும்பல் மோதலில் தப்பி அடுத்த கணம் உயி­ருடன் இருப்­பதும் சவாலே.

சேரி­வா­சி­க­ளுக்­காக மாட­மா­ளி­கையின் கத­வுகள் என்றும் திறப்­பது கிடை­யாது. முத­லைகள் நிறைந்த அகழி கடந்து, மாட­மா­ளி­கையின் சுவர்­களைத் தாண்டி உள்ளே குதிப்­பது வழக்கம்.

இந்த குறுக்கு வழியின் ஆபத்­துக்கள் பற்றி சொல்­லவே தேவை­யில்லை. மரண முத­லைகள் வாய்­தி­றந்து காத்­தி­ருக்கும். முத­லை­க­ளுக்கு இரை­யா­ன­வர்கள் ஏராளம். மரணம் தாண்டி மாட­மா­ளி­கைக்குள் சென்றால் இன்­னொரு போராட்டம்.

மாட­மா­ளி­கைக்குள் செல்­வந்­தர்கள் கூட் டுக் குடும்­ப­மாக வாழ்­வார்கள். அந்தக் கூட்டுக் குடும்­பத்­திற்குள் சேரி­வா­சி­களை சேர்த்துக் கொள்ள செல்­வந்தக் குடும்­பங்கள் விரும்­பு­வ­தில்லையென்றால், அதற்கு கார­ணங்­களை விப­ரிக்கத் தேவை­யில்லை.

தடுப்புச் சுவர் தாண்டிக் குதித்து விட்ட சேரி­வா­சிகள் சிலரை என்ன செய்­வது என்­பது மாட­மா­ளி­கையின் பிரச்­சினை. இந்த சேரி­வா­சி­களை பங்கு போட்டுக்கொண்டு தமது குடும்­பங்­க­ளுக்குள் சேர்த்துக் கொள்­வ­தென செல்­வந்­தர்கள் இணங்­கி­யுள்­ளனர்.

இந்த செய்தி, 'எல்­லாரும் எல்­லாமும் பெற்று இல்­லாமை இல்­லாத நிலை வேண்டும்' என்று எண்ணும் இலட்­சி­ய­வா­தி­க­ளுக்கு உவப்­பா­ன­தாக இருக்­கலாம். செல்­வந்­தர்கள் மத்­தியில் நீடித்த குடுமிச் சண்­டையை ஆராய்ந்தால், இது பகற்­க­னவு என்­பது புரியும்.

வடக்கு ஆபி­ரிக்க, மத்­திய கிழக்கு நாடு­களில் இருந்து மத்­திய தரைக்­கடல் வழி­யாக வரு­ப­வர்கள் சேரி­வா­சிகள். 28 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்­பிய ஒன்­றி­யமே மாட­மா­ளிகை என்றால் பிரச்­ச­ினையின் ஆழத்தைப் புரிந்து கொள்­ளலாம்.

புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களை மீளக் குடி­ய­மர்த்தும் யோச­னைகள் குறித்து ஐரோப்­பிய ஒன்­றியத் தலை­வர்கள் இணக்கம் கண்­டுள்­ளார்கள் என்­பது தெரிந்த விடயம். இந்த இணக்­கப்­பாட்­டுக்குள் நீடிக்கும் முரண்­பா­டுகள் தெரி­யாத விடயம் எனலாம்.

புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் அறு­ப­தா­யிரம் பேரை ஐரோப்­பிய நாடு­க­ளுக்குள் மீளக் குடி­ய­மர்த்­து­வது என்­பது இணக்­கப்­பாடு. இவர்­களை எவ்­வாறு மீளக் குடி­ய­மர்த்­து­வது என்­பது பற்­றிய கருத்து மோதல்கள் முரண்­பா­டாக நீடித்­தன.

மத்­திய தரைக்­கடல் தாண்டி ஐரோப்­பிய மண்ணில் கால்­ப­தித்த குடி­யேற்­ற­வா­சி­களின் எண்­ணிக்கை சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாண்டு 114,000 பேர் மத்­தியதரைக் கடலில் இருந்து காப்­பாற்­றப்­பட்­டார்கள். 2,600 பேர் கடலில் மாண்­டார்கள்.

இன்று இத்­தா­லி­யிலும், கிரேக்­கத்­திலும் தங்க வைக்­கப்­பட்­டுள்ள 40,000 பேரை ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அங்­கத்­துவ நாடுகள் மத்­தியில் பகிர்ந்து கொள்­வது பற்றி பெல்­ஜியத் தலை­ந­கரில் இடம்­பெற்ற மாநாட்டில் இணக்கம் காணப்­பட்­டது.

இதற்கு அப்பால், சிரியா, எரிட்­ரியா ஆகிய நாடு­களில் இருந்து வெளி­யேறி ஐரோப்­பாவை அடை­ய முடி­யாத நிலையில் தத்­த­ளிக்கும் 20,000 பேர் பற்­றியும் ஆரா­யப்­பட்­டது. இவர்­களும் ஐரோப்­பிய நாடு­களில் மீளக் குடி­ய­மர்த்­தப்­ப­டு­வார்கள்.

இந்த இணக்­கப்­பாட்டின் பிர­காரம், ஒவ்­வொரு நாடும் தாமாக முன்­வந்து தாம் எத்­தனை பேரை ஏற்றுக் கொள்­கிறோம் என்­பதை அறி­விக்க வேண்டும். சுய­வி­ருப்ப கோட்டா முறையின் கீழ் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் பங்­கி­டப்­ப­டு­வார்கள்.

புக­லிடக் கோரிக்­கை­யாளர் எவ­ரேனும் ஐரோப்­பாவில் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­பட அரு­கதையற்­ற­வர்கள் என்று தீர்­மா­னிக்­கப்­படும் பட்­சத்தில், அவரை சொந்த நாட்­டுக்குத் திருப்பி அனுப்பும் ஏற்­பாடும் உள்­ளது.

இந்தக் கோட்டா முறையின் கீழ், எந்­தெந்த நாடு எத்­தனை பேரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்­பது குறித்து அடுத்த மாதம் ஆரா­யப்­படும். அதற்­கான கூட்­டத்தில் உள்­நாட்டு அலு­வல்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­சர்கள் பங்­கேற்­பார்கள்.

ஐரோப்­பாவை நாடும் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் என்­பது சம­கால உலகின் சிக்­க­லான நெருக்­க­டி­யாகும். இந்த நெருக்­க­டிக்கு பல பரி­மா­ணங்கள் உண்டு. இதனை பொரு­ளா­தார கண்­ணோட்­டத்தில் ஆரா­யலாம். மனி­தா­பி­மான கண்­ணோட்­டத்­திலும் பார்க்­கலாம்.

பிரசல்ஸ் மாநாட்டில் பங்­கேற்ற ஐரோப்­பிய தலை­வர்கள், இதனை சுய­நலக் கண்­ணோட்­டத்தில் மாத்­தி­ரமே ஆராய்ந்­தார்கள். வந்­த­வர்­களை ஒவ்­வொரு நாட்­டுக்­குள்ளும் தள்­ளி­விட்டு வர­வி­ருப்­ப­வர்களைத் தடுத்து நிறுத்­து­வதில் அதிக அக்­கறை காட்­டி­னார்கள்.

வந்­த­வர்­களை பகிர்ந்து கொள்­வ­திலும் வாதப் பிர­தி­வா­தங்கள். இந்த வாதப் பிர­தி­வா­தங்கள் கார­ண­மாக, வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் ஆரம்­பித்த கூட்டம் வெள்­ளிக்­கிழமை அதி­காலை வரை நீடித்­தது.

மாட­மா­ளிகை என்­பது கூட்டுக் குடும்பம் என்றால், அழையா விருந்­தா­ளி­க­ளாக வந்த புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களின் பிரச்­சி­னையை சமா­ளிப்­பதில் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் சம­பங்கு இருக்க வேண்டும் என்­பது தானே நியதி.

ஆனால், பிரசல்ஸ் மாநாட்டில் சுமையை அடுத்­தவன் தோள்­களில் திணிப்­பதன் மீதே ஐரோப்­பிய நாடு­களின் தலை­வர்கள் ஆர்­வ­மாக இருந்­தார்கள். அதன் கார­ண­மாக, ஒரு­வரை ஒருவர் பெயர் சொல்லித் திட்டும் அள­விற்கு நிலைமை மோச­மா­ன­தாகத் தெரி­கி­றது. இத்­தா­லிய பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும், லித்­து­வே­னிய ஜனா­தி­ப­திக்கும் இடையில் கார­சா­ர­மான வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது. கோட்டா முறை தீர்வை நீங்­களே வைத்துக் கொள்­ளுங்கள் என்று லித்­து­வே­னிய ஜனா­தி­பதி விமர்­சித்­த­தாகத் தெரி­கி­றது.

*பிரிட்டன் பிர­தமர் பிரச்­ச­னைக்குள் மூக்கை நுழைத்துக் கொள்ள விரும்­ப­வில்லை. அக­தி­களைப் பங்­கிட்டுக் கொள்ளும் உடன்­ப­டிக்­கையில் இணையப் போவ­தில்­லை­யென அவர் குறிப்­பிட்டார்.

ஐரோப்­பிய பிர­ஜை­யொ­ருவர் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அங்­கத்­துவ நாடுகள் மத்­தியில் கட­வுச்­சீட்டு இல்­லாமல் பய­ணிக்­கக்­கூ­டிய ஷெங்கன் வலய ஏற்­பாட்­டுக்குள் பிரிட்டன் இல்லை என்­பதை பிர­தமர் சுட்­டிக்­காட்­டினார்.

கூட்ட நில­வ­ரங்­களை ஆராய்ந்தால், இத்­தாலி, கிரேக்கம் போன்ற நாடுகள் கோட்டா முறையின் ஊடாக புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களைப் பங்­கீட்டுக் கொள்­வதில் அதிக ஆர்வம் காட்­டு­வதைக் காணலாம்.

எனினும், அக­தி­களை கையாள்­வதில் அனு­பவம் இல்­லாத மத்­திய ஐரோப்­பிய நாடுகள் கோட்டா முறையை ஆட்­சே­பிப்­பதும் தெரி­ய­வரும். பத்­துக்கு மேற்­பட்ட நாடுகள் கோட்டா முறையை ஆட்­சே­பிக்­கின்­றன.

புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களை மீளக்­கு­டி­ய­மர்த்தும் யோசனை குறித்து ஐரோப்­பிய ஒன்­றியம் இணக்கம் கண்­ட­தாகக் கூறப்­பட்­டாலும், அந்த யோச­னையின் மீது அனைத்து நாடு­களும் கடப்­பாடு கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது கண்­கூடு.

இந்த நிலையில், 60,000 பேரை ஐரோப்­பிய நாடுகள் எவ்­வாறு பகிர்ந்து கொள்ளப் போகின்­றன என்­பது முக்­கி­ய­மான பிரச்­சனை. ஒரு நாடு கூடு­த­லான சுமை­களை ஏற்று மற்­றைய நாடு சும்மா இருக்­கக்­கூ­டிய நிலையே தென்­ப­டு­கி­றது.

இது ஆரோக்­கி­ய­மற்ற நிலை­மை­யாகும். இந்த நிலை­மையால் ஐரோப்­பிய ஒன்­றியம் என்ற அமைப்பின் எதிர்­காலம் மாத்­தி­ர­மன்றி, புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் தொடர்­பான பிரச்­ச­னையைத் தீர்க்கும் முயற்­சி­களும் தீவி­ர­மாக பாதிக்­கப்­ப­டக்­கூடும்.

இன்று மத்­திய கிழக்­கிலும், வட ஆபி­ரிக்க நாடு­க­ளிலும் நீடிக்கும் ஆயு­த­மோ­தல்கள் முடி­வ­டை­யக்­கூ­டிய அறி­கு­றிகள் எதுவும் தென்­ப­ட­வில்லை. மாறாக, அவை உக்­கி­ர­ம­டைந்து வரு­வ­தையே காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

இந்த நிலையில், சிரியா போன்ற நாடு­களில் இருந்து ஐரோப்­பிய நாடு­களை அடையக் கூடிய புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­களன் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும். அதனை எந்­த­வ­கை­யிலும் தடுக்க முடி­யாது.

சிரி­யா­வையே உதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ள முடியும். இந்த நாட்டில் இருந்து தப்பிச் சென்ற ஒரு இலட்சம் அக­திகள் லெப­னானில் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்­களை சமா­ளிப்­பதில் லெபனான் சிரமங்களை எதிர்கொள்கிறது.

இன்று ஐரோப்­பிய நாடு­களின் முன்­னி­லையில் இருப்­பது, சில ஆயிரம் அக­தி­களின் பிரச்­சினை. உலகம் முழு­வ­திலும் நிர்க்­க­தி­யான நிலையில் இருக்கும் அக­தி­களின் எண்­ணிக்கை இலட்­சங்­களைத் தாண்டுகிறது.

வறுமை, போர் முதலான கொடுமைகள் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் சேரியாக மாறுகையில், ஒரு மாடமாளிகை மாத்திரம் கதவுகளை அடைத்துக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் என்ன எவரும் கேள்வி எழுப்பலாம்.

மாடமாளிகையின் கதவுகள் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், சேரிவாசி கள் சேர்ந்து மாடமாளிகையின் சுவர்களை தகர்க்கக்கூடிய நிலைமை ஏற்படக்கூடும்.

இந்த நிலையைத் தவிர்க்க வேண்டுமானால், மாடமாளிகையின் கூட்டுக் குடும்பம் ஒற்றுமை கண்டு ஒட்டுமொத்த உலகநலனுக்காக பாடு பட வேண்டும்.


சதீஸ் கிருஷ்ணபிள்ளை - வீரகேசரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல