ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

கணவன், மகன் கடல் கடந்து 3 ஆண்­டுகள் கண்­ணீரில் வாடும் மனைவி - தலை­ம­றை­வான தரகர்

வறுமை, கடன்­சுமை, நாட்டில் வாழ முடி­யாத நிலை, சீத­னப்­பி­ரச்­சினை, பொரு­ளா­தார முன்­னேற்றம், உயிர் அச்­சு­றுத்தல் போன்ற பல்­வேறு கார­ணங்­களின் நிமித்தம் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் படகு மூலம் அவுஸ்­தி­ரே­லியா செல்ல முற்­பட்ட பலர் இன்று நிர்க்­க­தியாய் உள்­ள­துடன் , தமது குடும்­பங்­க­ளையும் இக்­கட்­டான சூழ்­நி­லையில் வாழும் நிலைக்கு தள்­ளி­யுள்­ளனர்.
சிலர் பெரு­ம­ளவு பணத்தை செல­வ­ழித்து அவுஸ்­தி­ரே­லியா செல்ல முற்­பட்டு உடல், உள­ரீ­தி­யான சித்­தி­ர­வ­தை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு தமது இலக்கை அடைய முடி­யாமல் தாய் நாட்­டிற்கு திரும்­பிய நிலை­யிலும், சிலர் பல வரு­டங்­க­ளுக்கு முன் படகு மூலம் அவுஸ்­தி­ரே­லியா சென்ற தமது உற­வுகள் தொடர்­பாக இது­வரை எவ்­வித தக­வல்­களும் வெளி­வ­ராத நிலையில் தொடர்ந்து ஏக்­கத்­துடன் வாழ்­வ­தையும் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.



அந்­த­வ­கையில் தமது குடும்­பத்தின் பொரு­ளா­தார முன்­னேற்றம் கருதி பெருந்­தொ­கை­யான பணத்தை செல­வ­ழித்து பட­கு­மூலம் அவுஸ்­தி­ரே­லியா சென்ற தனது கண­வனும், மகனும் எங்கு இருக்­கின்­றார்கள்? அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? என்ற எவ்­வித தக­வல்­களும் கிடைக்­கப்­பெ­றாத நிலையில் வேத­னை­களை மனதில் சுமந்­த­வாறு அவர்­களை மீண்டும் காண மாட்­டேனா? என்ற ஏக்­கத்­துடன் வாழ்­கின்றார் அன்­ன­லட்­சுமி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது)

அன்­ன­லட்­சுமி மன­உ­ருகி தனது ஆதங்­கத்தை எம்­மோடு பகிர்ந்­து­கொண்ட போது,

எனக்கு மூன்று பெண்­பிள்­ளை­களும், ஒரு ஆண்­பிள்­ளையும். எனது கணவர் வாக­னங்­களை திருத்­து­பவர். நாங்கள் ஆரம்­பத்தில் யாழ்ப்­பா­ணத்­தி­லேயே வசித்து வந்தோம். எனினும், வறு­மையும் மரண பயமும் எங்­களை அங்கு வாழ விடாமல் துரத்­தின. எனவே, நாங்கள் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வவு­னி­யா­வுக்கு இடம்­பெ­யர்ந்து வந்தோம். அப்­போது எனது கடைசி மகள் எனது வயிற்றில். மற்ற பிள்­ளைகள் மூவரும் சிறி­ய­வர்கள். வந்த புதிதில் எங்­க­ளுக்கு வாழ்­வா­தார தொழி­லொன்று ஒன்று இருக்­க­வில்லை. இருப்­ப­தற்கும் நிரந்­த­ர­மான இட­மொன்று இல்­லாமல் பெரும் சிர­மப்­பட்டோம். அதன்­பின்­னரே எனது கண­வரின் உழைப்பில் சிறுக சிறுக சேமித்து வீடு, காணி என்று வாங்கி ஓர­ள­வுக்கு நிம்­ம­தி­ய­டைந்தோம்.

அதன்பின் பிள்­ளை­களும் வளர்ந்து பெரி­ய­வர்­க­ளா­னார்கள். அதுவும் எனது மூத்த மகள் திரு­மண வயதை அடைந்தாள். எனவே, மக­ளுக்கு திரு­மணம் செய்து வைப்­ப­தற்கு, சீதனம் கொடுப்­ப­தற்­கெல்லாம் பெரு­ம­ளவு பணம் தேவைப்­படும் அவற்­றுக்கு என்ன செய்­வது? என்று எமக்கு பெரும் யோச­னை­யா­க­வி­ருந்­தது.

இந்­நி­லையில், மகனும் வவு­னியா நக­ரி­லுள்ள மொபைல் கடை­யொன்றில் வேலைக்குச் சென்றான். எனவே கண­வ­னி­னதும், மக­னி­னதும் உழைப்பில் குடும்ப சக்­கரம் ஓடி­யது. இத்­த­கை­ய­தொரு தரு­ணத்தில் தான் எனது மூத்த மக­ளுக்கு கண­வரின் நண்­ப­ரொ­ரு­வரின் மூலம் லண்­ட­னி­லி­ருந்து திரு­மண வரன் ஒன்று வந்­தது. நாங்­களும் நல்ல வச­தி­யான இடம் என்­ற­வுடன் மகளின் எதிர்­காலம் கருதி அந்த வர­னுக்கு சம்­மதம் தெரி­வித்தோம். அத்­துடன் மகளின் புகைப்­ப­டத்தை மாப்­பிள்ளை வீட்­டா­ருக்கு அனுப்­பினோம். அதன்பின் அவர்­க­ளுக்கும் மகளை பிடித்­து­ப்போக இரு­வ­ருக்கும் திரு­மணம் செய்­வது பெரி­யோர்­களால் பேசி நிச்­ச­யிக்­கப்­பட்­டது.

அதனைத் தொடர்ந்து, சுமார் ஒரு வருட காலம் மகளும், மரு­ம­கனும் தொலை­பே­சியில் கதைத்­துக்­கொள்­வார்கள். இந்­நி­லையில், திரு­மண வைப­வத்தை இலங்­கையில் செய்ய ஏற்­பா­டுகள் நடை­பெற்­றன. எங்­களால் மரு­ம­கனின் வச­தி­வாய்ப்­பு­க­ளுக்கு ஏற்ப செய்ய முடி­யா­விட்­டாலும், கண­வரின் சேமிப்­பி­லி­ருந்த பணத்தை கொண்டு எங்­களால் முடிந்த அளவு ஏற்­பா­டு­களை செய்தோம்.

எனினும், மாப்­பிள்­ளையின் தாயார் இலங்­கைக்கு வந்­த­வுடன் எங்­க­ளு­டைய வசதி வாய்ப்­பு­க­ளுக்கு ஏற்­றாற் போல் நீங்கள் சீதனம் தர மறுத்தால் இந்த கல்­யாணம் நடக்­காது என்று உறு­தி­யாக கூறி­விட்டார். எனினும், மாப்­பிள்ளை அவ­ரு­டைய முடிவில் உறு­தி­யா­க­வி­ருந்தார்.

“ நான் ஒரு வருட கால­மாக தொலை­பே­சியில் கதைத்து வரு­கின்றேன். இனி நான் அவளை ஏமாற்­று­வது நியா­ய­மில்லை ” என்று கூறி தனது தாயை எதிர்த்து பதிவு திரு­மணம் செய்­து­கொண்டார். அதன்­பின்னர் மக­ளுக்கு விசா கிடைக்­கும்­வரை எங்­க­ளுடன் இருக்­கு­மாறு கூறி விட்டு மாப்­பிள்ளை லண்டன் பய­ண­மானார். எங்­க­ளுக்கு மகளின் திரு­மணம் நடை­பெற்­று­விட்­டது என்று திருப்­தி­ய­டைந்­தாலும் ஏனைய மகள்­மார்­களின் திரு­ம­ணத்தின் போது இதே பிரச்­சினை ஏற்­பட்டால் என்ன செய்­வது? என்­பது பெரும் யோச­னை­யா­கவே இருந்­தது.

இத்­த­கைய ஒரு சூழ்­நி­லையில் தான் மகனின் நண்பர் ஒருவர் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு படகு மூலம் சென்­றி­ருந்தான். எனினும், அவ­ருக்கு எந்­த­வி­த­மான பிரச்­சி­னை­களும் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. எனவே, அவன் அடிக்­கடி தொலை­பே­சியில் மக­னுடன் கதைப்பான். அவன் தான் "நீயும் வாடா இங்கு ஒரு பிரச்­சி­னை­யு­மில்லை” என்று கூறி­யி­ருக்­கின்றான். எனவே குடும்­பத்தின் பொரு­ளா­தார முன்­னேற்றம், சகோ­த­ரி­களின் திரு­மணம் என்­ப­வற்றை நினைத்து மகனும் அவுஸ்­தி­ரே­லியா செல்ல தீர்­மா­னித்தான்.

இதன்­போது தான் வவு­னி­யாவைச் சேர்ந்த கிரு­ஷாந்தன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்ற இடை தர­கரின் அறி­முகம் கிடைத்­தது. எனவே அவனும் அவுஸ்­தி­ரே­லியா செல்­வது தொடர்­பாக அள­வுக்­க­திக­மான ஆசை­களை மகனின் மனதில் விதைத்தான். எனினும், ஆரம்பத்தில் நானும் எனது கண­வரும் , அதற்கு சம்­மதம் தெரி­விக்­க­வில்லை. ஏனெனில், சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அவுஸ்­தி­ரே­லியா செல்­வது கடி­ன­மான, ஆபத்­தான காரியம் என்­பதை நாங்கள் ஊட­கங்கள் வாயி­லாக அறிந்­தி­ருந்தோம். எனவே, எங்­க­ளுக்கு இருப்­பது ஒரே மகன் பணத்­துக்­காக அவனை அங்கு அனுப்பி ஆபத்தில் தள்­ளி­விட நாங்கள் விரும்­ப­வில்லை. ஆயினும், மகன் பிடி­வா­தக்­காரன் நாங்கள் செல்­வது எதையும் கேட்க மாட்டான். தனது முடிவில் உடும்­புப்­பி­டி­யா­க­வி­ருந்தான். இறு­தியில் மகனின் விருப்­பத்­துக்கு நாங்­களும் சம்­மதம் தெரி­விக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. அது­மட்­டு­மின்றி மகனை தனி­யாக அனுப்­பாது தானும் மக­னுடன் படகில் அவுஸ்­தி­ரே­லியா செல்ல எனது கணவர் முடி­வெ­டுத்தார்.

எனது கணவர் உண்­மையில் படகு மூலம் அவுஸ்­தி­ரே­லியா செல்­வதை கடு­மை­யாக விமர்­சிப்­பவர். ஊட­கங்­களில் அவுஸ்­தி­ரே­லியா செல்­ப­வர்கள் தொடர்­பாக செய்­திகள் வெளி­யாகும் போதெல்லாம் ' படகு மூலம் அவுஸ்­தி­ரே­லியா செல்­ப­வர்­க­ளுக்கு நடுக்­க­டலில் தான் அந்­தி­யேட்டி செய்ய வேண்டி வரும்' என்று கூறுவார். அப்­ப­டி­யி­ருக்­கையில் அவரே அன்று படகில் அவுஸ்­தி­ரே­லியா செல்ல தீர்­மா­னித்­தது ஒரே மகனை எப்­படி தனி­யாக அனுப்­பு­வது என்று தான்.

அந்த தரகர் தந்­தை­யையும், மக­னையும் படகில் அவுஸ்­தி­ரே­லியா அனுப்ப இரண்டு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் ரூபா பணம் கேட்டான். எனினும், எங்­க­ளிடம் மொத்­த­மாக அவ்­வ­ளவு பணம் இருக்­க­வில்லை. எனவே, முதலில் ஐம்­ப­தா­யிரம் ரூபா பணத்தை கொடுத்து பின் அவுஸ்தி­ரே­லியா செல்ல புறப்­பட்ட பின்னர் மிகுதி இரண்டு இலட்சம் ரூபா பணத்தைக் கொடுப்­ப­தாக ஒப்­பந்தம் செய்­து­கொள்­ளப்­பட்­டது.

நாங்கள் எங்­க­ளி­ட­மி­ருந்த சிறிய காணி துண்­டொன்றை விற்று 50 ஆயிரம் ரூபா பணத்தை ஒரு வழியாய் முதலில் செலுத்­தினோம். இந்­நி­லையில், கண­வரும் மகனும் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அதி­காலை வேளையில் அவுஸ்­தி­ரே­லியா செல்­வ­தா­க­வி­ருந்­தது. பய­ணத்தின் போது தம்மை அடை­யா­ளப்­ப­டுத்தும் எந்­த­வொரு ஆவ­ணத்­தையும் கையில் வைத்­தி­ருக்க முடி­யாது என்று அந்த தர­க­ரினால் அறி­வுரை வழங்­கப்­பட்­டது.

அதன்­படி திரு­கோ­ண­மலை கடற்­ப­ரப்­பி­லி­ருந்தே படகில் ஏறு­வ­தா­க­வி­ருந்­தது. எனவே, 21ஆம் திகதி பிற்­பகல் 2.30 மணிக்கு வவு­னி­யா­வி­லி­ருந்து திரு­கோ­ண­ம­லைக்கு வேனில் சென்­றார்கள். இதன்­போது நானும் எனது மகள்­மார்­களும் திரு­கோ­ண­மலை வரை உடன் சென்றோம்.

நாங்கள் அவர்­களை திரு­கோ­ண­மலை நகரில் விட்டு விட்டு மீண்டும் வவு­னியா திரும்­பி­விட்டோம். அதன்பின் மறுநாள் காலை 7.30 மணி­ய­ளவில் பிறி­தொ­ரு­வரின் தொலை­பே­சி­யி­லி­ருந்து மகன் எங்­க­ளுக்கு அழைப்பை ஏற்­ப­டுத்தி, " அம்மா எங்­களை ஒரு அறையில் அடைத்து வைத்­தி­ருக்­கின்­றார்கள். நாங்கள் இன்னும் சாப்­பி­ட­வு­மில்லை ”என்று கூறினான். அத­னை­தொ­டர்ந்து, அந்த அழைப்பை துண்­டித்து நாங்கள் அந்த இடை­த­ர­க­ருக்கு தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்­தினோம்.

அப்­போது எனது மூத்த மகள் தான் அந்த தர­க­ரிடம் கதைத்தாள்.

22ஆம் திகதி அதி­கா­லை­யி­லேயே தானே புறப்­பட போவ­தாக கூறி­னீர்கள் இன்னும் ஏன் அனுப்­பாமல் வைத்­தி­ருக்­கின்­றீர்கள். அவர்­க­ளுக்கு சாப்­பி­டவும் ஒன்றும் கொடுக்­க­வில்­லை­யாமே ” என்று வின­வினாள். அதற்கு அந்த தரகர் " இல்லை. சிறிய பிரச்­சி­னை­யொன்று மாலை 5.30 மணிக்கு தான் இங்­கி­ருந்து புறப்­ப­டு­கின்­றார்கள். ” என்று கூறினான்.

அத­னை­த்தொ­டர்ந்து மாலை 5.30 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் மகன் பிறி­தொ­ரு­வரின் தொலை­பே­சி­யி­லி­ருந்து அழைப்பை ஏற்­ப­டுத்தி " அம்மா நாங்கள் செல்­லப்­போ­கின்றோம்” என்று கண்­ணீ­ருடன் கூறினான். இதன்­போது கண­வரும் என்­னு­டனும் மகள்­மார்­க­ளு­டனும் கதைத்தார். அன்று எங்­க­ளு­டைய வீடு கண்­ணீரால் நிரம்­பி­யது. அன்­றி­ரவு ஒரு­வரும் சாப்­பி­ட­வு­மில்லை. ஆளுக்­கொரு மூலையில் அமர்ந்து அழு­து­கொண்­டி­ருந்தோம்.

அன்­றைய பொழுது கழிந்­தது. மறுநாள் காலை நாங்கள் அந்த தர­க­ருக்கு தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி அவர்கள் சென்­று­விட்­டார்­களா?” என்று கேட்டோம். அதற்கு அந்த தரகர் படகில் ஏறி­விட்­டார்கள். இப்­போது அவர்கள் சென்­று­கொண்­டி­ருப்­பார்கள். அங்கு சென்­ற­டைய பல நாட்­க­ளாகும். அவர்கள் அங்கு சென்­ற­டைந்­த­வுடன் நான் உங்­க­ளுக்கு தகவல் தருவேன் என்று கூறினார். எங்­க­ளுக்கு வயிற்றில் நெருப்பை கட்­டிக்­கொண்டு இருப்­பது போல் பய­மா­க­வி­ருந்­தது.

நாட்­களும் உருண்­டோ­டின. அவர்­க­ளி­ட­மி­ருந்து எந்­த­வித தக­வல்­களும் வர­வில்லை. எனினும், அந்த தரகர் மட்டும் இரவு வேளை­களில் அடிக்­கடி பணம் கேட்டு வீட்­டுக்கு வந்து போவான். அன்­றைய நிலையில் எங்­களின் கையில் பண­மி­ருக்­க­வில்லை. நாங்கள் இன்று காலை, நாளை என்று தவணை சொன்னோம். எனினும், அந்த தரகர் அடிக்­கடி வீட்­டுக்கு வந்து பணத்தை கேட்டு தொந்­த­ரவு செய்வான்.

இதன்­போது எனது கணவன், மகன் தொடர்­பாக நாங்கள் விசா­ரித்தால், அவர்கள் படகில் தானே செல்­கின்­றார்கள். போய் சேர நாட்கள் செல்லும் , உனது மக­னுக்கு பழக்­க­மில்­லாதால் ஒரே வாந்­தி­யா­க­வி­ருக்­கின்­றது. என்­றெல்லாம் பொய்­யான கதை­களை கூறிச்­செல்வான்.

எங்­க­ளு­டைய வீடு ஆண் துணை­யொ­ருவர் இல்­லா­தது. நான் மூன்று பெண்­பிள்­ளை­களுடனே தனி­யாக வீட்­டி­லி­ருந்தேன். எனவே அடிக்­கடி அந்த தரகர் வீட்­டுக்கு வந்து செல்­வதை பார்த்த அய­ல­வர்கள் எங்­களை வித்­தி­யா­ச­மாக பார்த்­தார்கள். எனவே எங்­க­ளி­ட­மி­ருந்த தங்க நகை­களை விற்று அந்த மிகுதி பணத்தை தர­க­ருக்கு கொடுத்தோம். அவற்றை பெற்­றுக்­கொண்­டவன் அதற்கு பிறகு எப்­போ­துமே வீட்டுக்கு வரவில்லை.

அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினாலும் அவனுடைய தொலைபேசி நிறுத்தப்பட்டிருக்கின்றது. அதன்பின் தான் நாங்கள் அறிந்துகொண்டோம் அவன் எங்கோ தலை மறைவாகிவிட்டான் என்று.
எனது மகனிடமிருந்தும் கணவனிடமிருந்தும் இன்று தொலைபேசி அழைப்பு வரும், நாளை வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன.

இன்று வரை அவர்கள் தொடர்பாக எந்தவித தகவல்களும் வெளிவரவில்லை. அவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற காரணத்தினால் நாங்கள் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் சென்று முறைப்பாடு செய்யவில்லை.

இதுவரை சர்வதேச புலம்பெயர்வோருக்கான நிறுவனத்தில் மட்டுமே இது தொடர்பாக அறிவித்துள்ளோம். ஆயினும் இதுவரை எங்களுக்கு காத்திரமான எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

இன்று எனது மூத்த மகள் லண்டனிலுள்ள அவருடைய கணவரிடம் சென்றுவிட்டாள். கடைசி மகள் கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் கல்வி கற்கின்றாள். எனது இரண்டாவது மகள் வவுனியாவிலுள்ள சிறிய கடையொன்றில் தொழில் செய்கின்றாள். அவளுடைய வருமானத்தில் தான் இன்று நான் குடும்பத்தை நடாத்தி வருகின்றேன்...

வீரகேசரி

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல