திங்கள், 28 மார்ச், 2016

“கள்ள இன்பம்“ தேடும் தமிழ்த்தேசியவாதிகள்


தமிழியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“

“யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்“ என்பார்கள். விடுதலைப் புலிகளும் அப்படித்தான். அந்த இயக்கம் களத்திலிருந்து அகற்றப்பட்டாலும் அதை வைத்துப் பயன்படுத்தும் நிலை மாறவில்லை. கொழும்பு அரசியலும் சரி, தமிழர்களின் அரசியலும் சரி, விடுதலைப் புலிகளை மையமாக வைத்துத்தான் இன்னும் நடக்கிறது. புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு புலிகள் இன்றும் ஒரு கவர்ச்சிப் பொருளே. தமிழ் நாட்டு அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் புலிகள் விரும்பியமாதிரி எல்லாம் கையாளக்கூடிய லாபத்தைக் அள்ளிக் குவிக்கும் ஒரு பெயர். சிலர் ஆதரவாக. சிலர் எதிராக. உலகெங்கும் உள்ள தமிழ் ஊடகங்களில் பெரும்பாலானவைக்கு புலிகளே தீனி. உச்சக்கட்டமாகத் தமிழ் முகப்புத்தகம் புலிகளின் வாலில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளப் புலிகளே தேவை. “புலிகளின் நிழலின்றி எதுவுமில்லைப் பராபரமே“ என்று சொல்லும் அளவுக்கு எல்லாம் “புலி மயம்“.



இந்த நிலையில்தான் இப்பொழுது புதியதொரு அலையைக் கிளப்பியிருக்கிறது புலிகளின் முன்னாள் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான தமிழினியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“ என்ற புத்தகம். இது தமிழினியின் சுயசரிதை. தமிழினி விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினுடைய மகளிர் பிரிவுக்கான பொறுப்பாளராகச் செயற்பட்டவர். புலிகளின் முக்கிய பொறுப்பிலிருந்த போராளி. இறுதிவரை களத்தில் நின்றவர். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் புலிகளின் இறுதி நாட்களான 2009 மே 18 வரை புலிகளின் வரலாற்றோடு பல நிலைகளில் கலந்திருந்தவர். இறுதி யுத்தத்தின் சாட்சிகளில் ஒருவர். புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவர் படையினரிடம் சரணடைந்து, விசாரணை, சிறை, புனர்வாழ்வு என்ற நிலைகளைக் கடந்து பொது வாழ்வில் ஈடுபட்ட வேளை புற்றுநோயினால் மரணத்தைத் தழுவிக் கொண்டவர்.

தான் பிறந்து வளர்ந்த சூழல், இயக்கத்தில் இணைந்த 1991 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரையான புலிகளின் எழுச்சி, 2009 மே 19 இல் நிகழ்ந்த புலிகளின் வீழ்ச்சி மற்றும் அதன் பின்னரான தன்னுடைய சிறைக்காலம், விடுதலையாகிப் பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கியது வரையான இந்தக் காலப்பகுதியின் நிகழ்ச்சிகள் நிரம்பிய வரலாற்றை மையப்படுத்தித் தன்னுடைய சரிதையை எழுதியிருக்கிறார் தமிழினி. தன்னுடைய சாட்சியம் தமிழர்களுடைய எதிர்காலப்போராட்டத்துக்கும் அரசியல் எதிர்காலத்துக்கும் தேவை என்பதை உணர்ந்ததால்தான் அவர் இதை எழுதியிருக்கிறார். இதை அவரே இந்தச் சுயசரிதைக்கான முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். முக்கியமாக மிகப் பலம் வாய்ந்த ஒரு இயக்கத்தின் வீழ்ச்சி எப்படி நிகழ்ந்தது? பலரையும் வியப்புக்குள்ளாகிய ஒரு தலைமை எப்படி மிகச் சாதாரணமாகத் தோல்வியைத் தழுவி கடுமையான விமர்சனத்துக்குள்ளாக வேண்டியிருந்தது? போன்ற காரணங்களை தன்னுடைய சுயசரிதையில் தமிழினி சொல்கிறார்.

இதனால் தமிழினியின் இந்தப் புத்தகம் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. புலிகளை விமர்சிக்கிறது, குறிப்பாகப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானையும் கடுமையாகக் குற்றம்சாட்டுகிறது என்ற தகவல்களைப் புத்தகங்களைப் படித்தவர்கள் தங்களுடைய அபிப்பிராயங்களைப் பகிரத் தொடங்கவே இந்த எதிர்ப்புக் காய்ச்சலும் சர்ச்சைகளும் ஆரம்பித்தன. இப்பொழுது தமிழ்ப்பொதுவெளியில் தமிழினி பேசும் பொருளாகி விட்டார். இங்கே நாம் சில விடயங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழினியைப் பற்றி ஏராளம் கதைகள் உலாவத்தொடங்கியிருந்தன. இறுதிப்போரின் பிறகு பல்லாயிரக்கணக்கான மக்களோடு இணைந்து புலிகளும் படையினரிடம் சரணடைந்திருந்திருந்தனர். அப்படியே தமிழினியும் சரணடைந்திருந்தார். ஆனால், கதை வேறுவிதமாகவே இருந்தது.

“தமிழினி சரணடையவில்லை. அவர் செட்டிகுளத்தில் அமைந்திருந்த முகாமில் வைத்து மக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டுப் படையினரால் கைது செய்யப்பட்டார். போரின்போது, அரசியல்துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த காலத்தில் அவர் கட்டாய ஆட்சேர்ப்புக்குப் பொறுப்பாக இருந்த காரணத்தினால் பலருக்குத் தமிழினியின் மீது கோபமாக இருந்தது. இதனால் அவர்கள் தமிழினியைப் படையினரிடம் பிடித்துக் கொடுத்தார்கள்“ என்ற கதை உலாவியது.

பின்னர் அவர் சிறையிலிருந்த போதும் பல விதமாக ஊடகங்கள் முதல் தமிழ் அரசியல்வாதிகள் வரையில் தமிழினியைப் பற்றி ஏராளமான கதைகளை உலாவ விட்டதுண்டு. சிறையிலிருந்த போதும் அவருடைய வழக்கு நடந்தபோதும் தமிழினிக்கு உதவ முன்வந்தவர்களை விட அவரைப்பற்றிய விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தவர்களே அதிகம். ஏறக்குறைய ஆதரவற்ற ஒரு நிலையில் சிங்களச் சட்டத்தரணியான மஞ்சுள பத்திராஜா என்பவரே தமிழினியின் வழக்கைப் பேசி அவருக்குப் புனர்வாழ்வு பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

புனர்வாழ்வை முடித்துக் கொண்டு விடுதலையாகும் நிலை வந்தபோதும் ஊடகங்களும் தமிழ்ப்பொது வெளியும் தமிழினியை விட்டு விடவில்லை. தமிழினி அரசியலுக்கு வரப்போகிறார். அரசாங்கத்தின் சார்பில் தேர்தலில் களமிறங்கப்போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டன. ஆனால், தமிழினி இவற்றுக்கெல்லாம் அப்பால் தன்னுடைய வாழ்க்கைத் தேர்வை அமைத்தார். அவர் அரசியற் செயற்பாடுகளை மீள்பார்வைக்குட்படுத்திக் கொண்டு தன்னுடைய தனிப்பட்ட வாழ்வை நோக்கி நகரத் தொடங்கினார். அவர் லண்டனில் இருந்த மகாதேவா ஜெயக்குமாரன் என்பவரை மணம் முடித்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊரான கிளிநொச்சி –பரந்தனுக்குச் சென்றார். ஆனால், அவர் அங்கே தொடர்ந்திருக்க விரும்பவில்லை. அதற்குரிய சாத்தியங்களும் அவருக்குக் கிட்டவில்லை. அவர் அங்கே இருப்பதற்கான வீட்டு வசதி, தொழில் போன்ற காரணங்கள் சாத்தியமில்லாதிருந்திருக்கலாம். தவிர, கணவர் மீண்டும் லண்டன் செல்லவிருந்தது இன்னொரு காரணம். இப்படியிருந்த தமிழினியின் வாழ்க்கையில் விதி வேறு விதமாக விளையாடியது. அவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக அவர் தொடர்ந்தும் கொழும்பின் புறநகர்ப்பகுதியிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. ஆனால், இதையெல்லாம் கணக்கிலும் கவனத்திலும் எடுக்காமல் அவரவர் தங்கள் பாட்டில் அளந்து கொட்டிக்கொண்டிருந்தார்கள்.

ஏறக்குறைய இப்பொழுதும் அதுதான் நடக்கிறது. தமினியின் புத்தகத்தைப் படிக்காமலே “புத்தகம் பொய்யானது, இடைச்செருகல்கள் நிறைந்தது“ என்று சொல்கிறார்கள் பலர். தமிழ் முகப்புத்தகத்தில் நடக்கும் விவாதங்களில் அநேகமானவை இப்படியானவையே. இதற்குப்பிரதானமான காரணம், எழுத்தாளர் சயந்தன் சொல்வதைப்போல “தங்களுடைய அரசியல் பாதிக்கப்பட்டு விடும் என்ற பதற்றந்தான்“. இன்னும் புலிகள் பற்றிய கற்பிதங்களில் தொங்கிக் கொண்டிருப்போருக்கு புலிகளின் கடந்த காலக் கீர்த்தி மட்டும் போதும். அதை அவர்கள் மம்மியாக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தங்களுக்கு இதமான கற்பனையில் திளைத்தலே போதுமானது. ஆக்கபுர்வமான செயற்பாடுகளைப் பற்றியோ நல் விளைவுகளைப் பற்றியோ இவர்கள் அக்கறைப்படுவதில்லை. சனங்களின் தீராத் துயரத்தைப் பற்றியோ, மாறாத தோல்விகளைப்பற்றியோ இவர்களுக்கு அக்கறை கிடையாது. அது அவர்களுக்குத் தேவையுமில்லை.

ஏனென்றால் அவர்கள் வாழ்கின்ற வாழ்க்கையும் சூழலும் அப்படியானது. பெரும்பாலும் புலம்பெயர் நாடுகளில் வசதியான – பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு புலிகளைப் பற்றிய பெருமிதங்களில் திளைத்துக் கொண்டு தாயகம் என்றும் விடுதலை எனவும் அரசியல் நடத்தித் தங்களை நிறுவுவதே இவர்களின் வேலை. குறிப்பாகத் தமிழ்த்தேசியப் பற்றாளர்களாகவும் தமிழீழ வேட்கையாளர்களாகவும் தம்மை நிறுவுவது. ஆகவே தமது கற்பனையில் சேதாரங்கள் நேருவதற்கு இவர்கள் விரும்புவதில்லை. இதனால்தான் இந்த மாதிரி உண்மைகளும் மாற்றுக் கருத்துகளும் வெளிவரும்போது அணியாகத் திரண்டு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். பதற்றமடைகிறார்கள்.

இதற்காக இவர்கள் எந்த அளவுக்கும் கீழ்த்தரமாக நடந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். எந்தத் தார்மீக அடிப்படைகளும் இல்லாமலே தமது வாதங்களை முன்வைக்க முற்படுகிறார்கள். ஒரு புத்தகத்தைப் படிக்காமல் அதைப்பற்றிப் பேசுவதும் விமர்சிப்பதும் எதிர்ப்பதும் நிராகரிக்க வேண்டும் என்று கோருவதும் தமிழ்ச்சூழலில் அன்றி வேறு எங்குதான் நடக்கும்? இத்தகைய நிராகரிப்பின் அடிப்படை அதிகாரமன்றி வேறென்ன? இது மூடத்தனமில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

இந்த மாதிரியான அதிகாரப் போக்கு, பிற்போக்குத்தனமும் வரலாற்றில் பல சமூகங்களிலும் இருந்திருக்கிறது. ஆனால், அவை தமது இத்தகைய தவறுகளைக் களைந்து விட்டன. அல்லது அவற்றிலிருந்து பாடங்களைப் படித்துக் கொண்டன. உண்மைகளுக்காக சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து, உயிரோடு எரியுட்டப்பட்ட புருனே, நஞ்சூட்டப்பட் சோக்கிரட்டீஸ் என்று வரலாறு உண்மையாளர்களை தண்டித்தே உள்ளது. உண்மைக்கு எதிரானவர்கள் உண்மையாளர்களைச் சிலுவையேற்றுவார்கள். அல்லது எரியுட்டுவார்கள். அல்லது நிராகரிக்க முற்படுவார்கள். அல்லது வசைப்பார்கள். ஆனால் இவையெல்லாம் இந்த ஜனநாயக யுகத்திலும் நடக்கின்றன என்பதுதான் வருத்தமளிக்கிறது. அதிலும் பெரும்பண்பாட்டுப் பொக்கிஷத்தைத் தங்கள் தலையிலும் தோழிலும் சுமந்து கொண்டிருக்கும் தமிழர்களிடத்தில் இப்படி ஒரு அலங்கோலம் உள்ளது எனும்போதுதான் துக்கமாக இருக்கிறது.

இந்தச் சீரழிந்த போக்கின் உச்சக்கட்டமாக, தமிழினி முன்வைக்கும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல், அகர முதல்வன் என்பவர் தமிழினியின் இயற்பெயரைப் பயன்படுத்தி “சாகாள்“ என்ற கதையை எழுதியிருக்கிறார். இந்தக் கதை நேரடியாகவே தமிழினியினுடைய சுயசரிதையை நிராகரிக்கும் நோக்கிலானது. அவரைக் கேவலப்படுத்துவதன் மூலமாக அவருடைய வரலாற்றின் மதிப்பைக் குறைத்து, அதை நிராகரிக்கு முற்படும் உள்நோக்கமுடையது. அதாவது தமிழினியை நிராகரிக்க முற்படுவது.

இந்தக் கதையைக் குறித்தும் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. அகரமுதல்வனையும் அவருடைய கதையையும் கொண்டாடுவோரும் உள்ளனர். கண்டிப்போரும் உள்ளனர். கொண்டாடுவோரைப் பொறுத்தவரை தமக்கு மூக்குச் சேதமானாலும் பரவாயில்லை. எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேணும். அவ்வளவுதான். தாம் வலியுறுத்துகின்ற தமிழ்த்தேசியம் என்பது எவ்வளவு ஜனநாயக மறுப்பாகவும் பிற்போக்கானதாகவும் தங்களால் வியாக்கியானம் செய்யப்படுகிறது என்பதையே இவர்கள் உணரவில்லை. பதிலாக தமது அரசியல் பாதிக்கப்படக் கூடாது என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். அதனால் அகரமுதல்வனுக்கு இவர்கள் கொம்பு சீவி விடுகிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் “தமிழினியின் புத்தகத்தில் இடைச்செருகல்கள் உள்ளன“ என்று சொல்வதன் மூலமாகவும் “தமிழினி அக்கா“ என்று இளைய தரப்பினர் செல்லமாக அழைத்து உரிமை கொண்டாட முற்படுவதன் மூலமாகவும் தமிழினியைப் புனிதப்படுத்தவும் அவரை உரிமை கொண்டாடவும் முற்படுகின்றனர் சிலர். இவர்கள் செய்யும் தந்திரம் “இந்தப் புத்தகத்தில் முன்வைக்கப்படும் புலிகள் மீதான விமர்சனம் வேறு யாரோவினால் செருகப்பட்டது. தமிழினியின் இறப்புக்குப் பின்னர் இப்படி ஒரு செயல் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டுள்ளது“ என்பதாகும்.

இப்படிக் குற்றச்சாட்டை வைக்கும்போது அல்லது தங்களுடைய நிராகரிப்புக்கான காரணத்தைச் சொல்லும்போது அதற்கான ஆதாரங்களையும் முன்வைக்க வேண்டும். ஆனால் யாரும் அதற்குத் தயாராக இல்லை. எந்த விடயங்கள் இடைச்செருகல்களாக உள்ளன? எவை பொய்யான தகவல்கள்? என எதையும் யாரும் இதுவரையில் சொல்லவில்லை. தவிர, இந்த நூல் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டபோது அதில் உரையாற்றிய நிலாந்தன் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். “தமிழினியின் நூலைத் தவறு என்பவர்கள், அதை மறுத்து எழுதலாம். தாங்கள் கருதும் உண்மைகளை எழுதலாம். தங்களுக்குத் தெரிந்த மெய் விவரங்களைச் சொல்லலாம். அப்படிச் சொல்லக்கூடிய, எழுதக்கூடியவர்கள், எழுத்தில் ஆளுமையானவர்கள் பலர் இருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தின் பல் வேறு பிரிவுகளில் இருந்தவர்களும் தமிழினியோடு கல்விப் பிரிவில் இருந்தவர்களும் உள்ளனர். அப்படி எழுதப்படுவதே சரியானது. அதை விடுத்து நிராகரிப்புச் செய்வது நல்லதல்ல“ என்று.

இதே நிகழ்வில் தலைமை தாங்கியிருந்த கவிஞர் பொன் காந்தன் குறிப்பிட்டிருந்ததும் முக்கியமானது. “தலைவரையும் (பிரபாகரனையும்) இயக்கத்தையும் (புலிகளையும்) நான் கேள்வி கேட்பேன். அதற்கான உரிமையும் தகுதியும் எனக்குண்டு. ஏனென்றால் நான் இயக்கத்தையும் தலைமையையும் ஏற்றுக்கொண்டவன். நேசித்தவன். ஆகவே நான் நேசித்த தலைவரை, நான் ஏற்றுக்கொண்ட தலைவரை நோக்கி நான் கை நீட்டிக் கேள்வி கேட்கும் உரிமையும் அதிகாரமும் எனக்குண்டு. இந்த உரிமை எனக்கில்லை. அவரை நோக்கி நான் எதையும் கேட்க முடியாது என்றால் அவர் தலைவராக இருக்க முடியாது. அவர் சர்வாதிகாரியாகவும் இயக்கம் சர்வாதிகார அமைப்பாகவும்தான் இருக்க முடியும். இயக்கத்தின் ஆதரவாளனாக இருந்த எனக்கே இப்படி உரிமை இருக்குமாக இருந்தால் இருபது ஆண்டுகளாக தன்னுடைய உடல் ஆவி பொருள் அத்தனையையும் அர்ப்பணித்திருந்த தமிழினிக்கு எவ்வளவு உரிமை இருக்க வேணும்? தமிழினியின் புத்தகத்தை வெளியிடுவதற்குத் தடுப்பவர்களும் வாசிப்பதற்கு மறுப்பவர்களும் ஜனநாயக விரோதிகளே. முதலில் புத்தகத்தை வாசியுங்கள். அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை அறியுங்கள். அதன் பிறகு அத தொடர்பாகப்பேசுங்கள். உங்களுடைய மறுப்புக்கான விளக்கங்களை முன்வையுங்கள். அதுதான் அறிவுசார்ந்த செயல்பாடாகும்“

ஆகவே இடைச்செருகல் என்ன பம்மாத்துக் கதையும் இந்தப் புத்தகத்தை நம்ப முடியாது என்று சொல்லும் புலுடாவையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தமிழினி இந்த நூலில் இந்திய இராணுத்தின் அத்துமீறல்களையும் அமைதிக்கு எதிரான நடவடிக்கைகளையும் சொல்கிறார். போரில் நடந்த அத்துமீறல்களில் இலங்கை அரசின் பங்கையும் குறிப்பிடுகிறார். சிறைச்சாலை எப்படியுள்ளது? எவ்வளவு மோசமான நிலையில் அது உள்ளது என்பதையும் எழுதுகிறார். ஆகவே எல்லாப் பக்கங்களிலும் கத்தி விழுகிறது. இதேவேளை இதில் ஒரு குறிப்பிட்ட விசயத்தில் மறுக்க வேண்டியதும் உண்டு. புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் தனக்கு பங்கில்லை என்றும் அதன்போது ஒருவரைக் கூடக் கட்டாயப்படுத்தித்தான் சேர்த்துக் கொண்டதில்லை என்றும் எழுதுகிறார். அவர் நேரடியாக எவரையும் ஆட்சேர்ப்புச் செய்யவில்லை என்றாலும் ஆட்சேர்ப்புச் செய்யும் துறைக்குப் பொறுப்பாக இருந்தவர். அந்தத் துறையில் அவரே ஆட்சேர்ப்புப்பற்றிய கட்டளைகளை இடும் நிலையில் இருந்தவர். ஆகவே அதற்கான பொறுப்பை அவர் ஏற்றிருக்க வேணும். அது ஒரு கூட்டுப்பொறுப்புத்தான். அதை தமிழினி ஏற்றிருத்தல் அவசியம்.

ஆகவே இந்த நூல் தன்னுடைய சுய விமர்சனத்தின் போது எதைச்சொல்கிறது எதை விடுகிறது என்று பார்த்திருக்க வேண்டுமே தவிர, இடைச்செருகலும் பொய்களும் நிரம்பியது என்று திசைதிருப்பப்படுவதற்குரியதல்ல.

புலிகளின் வீழ்ச்சியை அடுத்து தன்னையும் தன்னுடைய அமைப்பையும் தமிழினி உயிரோடு இருந்த போதே மீளாய்வுக்குட்படுத்தியிருக்கிறார். தமிழினி ஏற்கனவே வாசிப்பிலும் எழுத்திலும் சமூக ஊடாட்டங்களிலும் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தவர் என்பதால் அவரிடம் சுய சிந்தனையை விருத்தியாக்கும் இயல்பு இருந்தது. தவிர, அவர் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு குடும்பச் சூழலில் இருந்து வந்தவர். இறுதி நாட்கள் வரையில் அவருடைய குடும்பம் அப்படித்தான் இருந்தது. ஆகவே அவருடைய அனுபவங்களை அவர் எந்த இடையீடுமில்லாமல் செய்வதற்கு – யதார்த்தத்தை எளிதாக விளங்கிக் கொள்வதற்கு அதிக சாத்தியங்கள் இருந்தன. எனவேதான் தன்னைப்போன்றவர்கள், ஒரு வீழ்ச்சியில் எப்படியான யதார்த்த நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை அவரால் எளிதாக விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆகவே அவர் அதன்படி சிந்தித்தார். இயக்கத்தை விட்ட வெளியே வந்தாலும் சரி, இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் வெளியே நின்றாலும் சரி சிறகுகள் வெட்டப்பட்ட பறவையின் நிலையைத்தான் ஒவ்வொரு போராளியும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற யதார்த்தம் தமிழினிக்குக் கிட்டியது. இதை அவர் தன்னுடைய சிறை வாழ்வுக்குப்பின்னான காலத்தில் எழுதிய எழுத்துகளிலும் முகப்புத்தக உரையாடல்களிலும் நண்பர்களுடனான கருத்துப் பரிமாற்றங்களிலும் காணலாம்.

குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அ. ராமசாமி, எழுத்தாளர் சயந்தன், இதழாழர் எம். பௌசர், பிரேமா ரேவதி உள்ளிட்ட பலரோடு தமிழினி தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். அப்பொழுது அவருடைய மனநிலையிலும் கருத்து நிலையிலும் ஏற்பட்டிருந்த மாற்றங்களை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழினியின் மரணத்தை அடுத்து இவர்கள் எழுதிய குறிப்புகளிலும் பதிவுகளிலும் இதைப்பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்துடன் தமிழினி உயிரோடு இருந்த காலத்தில் அவர் எழுதிய கதைகளும் கவிதைகளும் கூட அவருடைய சுயசரிதையில் சுட்டப்பட்டிருக்கும் விசயங்களின் மனப்பதிவை அடிப்படையாகக் கொண்டவையே.

இதைத்தவிர, இந்தச் சுயசரிதையை அவர் தான் இருக்கும் காலத்திலேயே வெளியிட்டு விட வேண்டும் என்றும் முனைந்திருக்கிறார். இதற்காக அவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதி என்பவரைக் கொண்டு அட்டையை வரைந்திருக்கிறார். அந்தப் படத்தை அவர் தன்னுடைய முகப்புத்தகத்திலும் பகிர்ந்திருக்கிறார். புத்தகத்துக்கான முன்னுரை, மற்றும் சேர்க்கப்பட வேண்டிய குறிப்புகள் என்பவற்றையும் தேர்ந்து வைத்திருந்திருக்கிறார். ஆனால், அவர் எதிர்பார்த்ததை விட அவருடைய நோய் அவரைத் தோற்கடித்து விட்டது. அதனால் அவருடைய மரணத்துக்குப் பின்னரே அது புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதிலும் ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். தமிழினியின் மரணத்தின் போது ஊடகவியலாளர் சோமிதரன் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளப் பரந்தனுக்குச் சென்றபோது (மரணம் நிகழ்ந்த அன்று) அங்கே தமிழினியின் கணவர் ஜெயக்குமாரன் தமிழினியின் சுயசரிதையைப்பற்றிப் பேசியிருக்கிறார். இதைத் தன்னுடைய பதிவொன்றில் சோமிதரன் தெரியப்படுத்தியிருக்கிறார். ஆகவே இந்தச் சுயசரிதை ஏற்கனவே எழுதப்பட்டு நூலாக்கம் பெறுவதற்கான நிலையில் இருந்துள்ளது என்பதும் அது தமிழினியின் தெளிவான நிலைப்பாடு என்பதும் நிதர்சனமாகும்.

தமிழினியின் புத்தகம் உண்மைகளைப் பேச முற்படுகிறது. வரலாற்றுக்குச் சாட்சியாக இருக்க விரும்புகிறது என்பதன் அடிப்படை, தன்னுடைய அனுபவங்களின் வழியாக போராடிய மக்களுக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் உண்மையான சேதிகள் சொல்லப்பட வேண்டும் என்பதே. இத்தனை பெரிய போராட்டத்தை நடத்தியும் ஏன் அது தோல்வியில் முடிந்தது? இவ்வளவு இழப்புகளும் ஏன் மதிப்பற்றுப் போயின? போராட்டத்தில் என்ன நடந்தது? யார் இதற்கெல்லாம் பொறுப்பாளிகள்? மிகக் கடினமான ஒரு போராட்டத்துக்காக அதிகளவில் இழப்புகளைச் சந்தித்த மக்கள், ஏன் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் பதிலாக தோல்வியையும் துயரத்தையும் பெற்றார்கள்? உண்மையில் என்ன நடந்தது? என்ற விசயங்களைத் தன்னுடைய அறிதல்களின் வழியாகவும், தன்னுடைய அனுபவங்களின் துணைகொண்டும் விளக்க முற்படுகிறது.

அவரே சொல்வதைப்போல, “இது எமது போராட்டத்தின் முழுமையான வரலாறு அல்ல. .... நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் என் தொண்டைக்குள் அடைத்துக் கிடக்கும் உண்மைகளைச் சொல்லியாக வேண்டும். ஒரு இனத்தின் அரசியல் அபிலாஷைகளை மீட்டெடுப்பதற்காகக் கருக்கொண்ட எமது போராட்டமானது, இலட்சோபலட்சம் உயிர்களின் தியாகத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டது. இறுதியில் அதன் போக்கிடம் ஏனிப்படிப் புச்சியமானது? உலகமே அதிர்ந்து போய்க் கேட்டுக்கொண்ட கேள்வி இது“ என்பதற்கு தன்னளவில் விடைகாணுவதற்கும் அந்த விடையை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் தமிழினி முயன்றிருக்கிறார்.

இப்பொழுது உருவாகியிருக்கும் சர்ச்சை நாம் மேலே பார்த்தவாறு “இந்தப் புத்தகம் உண்மையில்லை“ எனவும் “இடைச்செருகல்கள் செய்யப்பட்டுள்ளன“ என்றும் “புலிகளின் மீது அபகீர்த்தியை உண்டாக்குவதற்காக தமிழினியின் பெயரில் இந்தப் புத்தகத்தில் சில விசயங்கள் வேண்டுமென்றே எழுதப்பட்டுள்ளன“ எனவும் சொல்லப்பட்டதிலிருந்தே உருவானது.

இதற்கெல்லாம் அவர்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஒரு சம்பவம் துரதிருஷ்டமாக அமைந்து விட்டது. இந்தப் புத்தகம் இலங்கையில் ஒரு பதிப்பாகவும் இந்தியாவில் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் இன்னொரு பதிப்பாகவும் சமகாலத்தில் வெளியானது. இரண்டு பதிப்பிலும் புத்தகத்தின் உள்ளடக்கம் ஒன்றாகவே உள்ளது. அட்டைப்படத்தில் மட்டும் சில மாற்றங்கள் உள்ளன. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்திலுள்ள அட்டைப்படத்தின் பின் பக்கமாக உள்ள குறிப்பை எழுதியவர் தமிழினி என உணரக்கூடியதாக அமைந்த குறிப்பானது பிரேமா ரேவதி என்பவரால் எழுதப்பட்டது. அதைத் தன்னுடைய புத்தகத்தில் பின்னட்டைக்குறிப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழினி தேர்வு செய்து வைத்திருந்திருக்கிறார். ஆனால் தமிழினி இறந்த பின்னர் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டதால் இதைப்பற்றிய சரியான விவரத்துடன் பதிப்புக்குக் கொடுக்க முடியவில்லை அவருடைய கணவரால். இதனால் அந்தக் குறிப்பு தமிழினியின் பெயரிலேயே அச்சாகி விட்டது. அந்தக் குறிப்புக்கும் புத்தகத்தின் உள்ளடக்கத்துக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. பதிலாக அந்தக் குறிப்பு பெண்போராளிப் புலிப்பெண்களைப்பற்றிய வரலாற்று நோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு விமர்சனத்தின் முக்கியமான பகுதி. அதைத் தன்னுடைய புத்தத்தின் – சிந்தனையின் பொருத்தம் கருதி தமிழினி தேர்வு செய்து வைத்திருந்திருக்கிறார். இதைப் பிரேமா ரேவதி சுட்டிக்காட்டியதை அடுத்து இதைப்பற்றிய விளக்கத்தை ஜெயக்குமாரனும் காலச்சுவடு பதிப்பகத்தின் இயக்குநர் கண்ணனும் அளித்திருக்கிறார்கள்.

இப்படி நேர்ந்த தவற்றினை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, புத்தகத்தையும் புத்தகத்தை வெளியிட்ட கணவரையும் பதிப்பாளரையும் பின்னி எடுக்க முற்படுகிறார்கள் சிலர். உண்மையில் என்ன நடந்தது என்ற விளக்கத்தை உரியவர்கள் பொதுவெளியில் அளித்த பின்னும் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது உண்மைகளை எதிர்கொள்ளத் திராணியற்ற நிலையிலிருந்தே ஏற்படுகிறது. தாங்கள் விரும்பும் ஒன்றை, அது பொய்யாக இருந்தாலும் அதை நிறுவி விடவே முயற்சிக்கின்றனர். இவர்கள் மலத்தை அமுது என்றெண்ணி அதையே உண்டு வாழ விரும்புகிறார்கள். விசத்தை அமுதமென்று ஏற்றுக்கொள்கிறார்கள். இது வரலாற்றுக்கும் வாழ்வுக்கும் நேரெதிரானதாகும்.

இது ஏன்? உண்மைகளைப் பேசுவது தமது அரசியல் இருப்புக்கு பாதகமானது என்று கருதுவதன் விளைவே இது.

நடந்தவைகளை எழுதுவதும், பேசுவதும் அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு இன்றியமையாத ஒன்று என்பது பற்றி இவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நடந்தவைகளைப் பற்றி எழுதுவதையும், பேசுவதையும் விவாதிப்பதையும் தடுப்பதன் மூலம் தாம் எதிர்காலத்தில் நடக்கவுள்ள போராட்டத்திற்கு துரோகம் செய்கின்றோம் என்பதைப் பற்றி இந்தத் தரப்பு கவலைப்படவில்லை.

பதிலாகத் தமது அரசியல் இருப்புப் பற்றி மட்டுமே அது கவலைப்படுகிறது. இதனால் உண்மைகளையும் படிப்பினைகளையும் எழுதுபவர்களை எந்த அளவிற்கும் கேவலப்படுத்துவதற்கு அது தயாராக இருக்கிறது. எழுதுபவர்களையும் உண்மைகளை உரைப்போரையும் அது துரோகி என்கின்றது. இன்னும் ஒரு படி மேலே போய், அவர்கள் அதை எழுதவே இல்லை என்றும் சொல்லி விடுகிறது.

ஆனால், முப்பது ஆண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டம் மிகப் பெரிய அழிவுகளை தந்து விட்டதன் பின்னர், நடந்த நிகழ்வுகள், சரி மற்றும் தவறுகள், அறம் சார்ந்தவை, சாரதவை பற்றிய ஆழமான கற்கைகளை மேற்கொள்ளாமல் தீவிரம் மிக்க போராட்டங்களில் தமிழ் மக்கள் இறங்கப் போவது இல்லை. போராட்டங்களைச் சரியாக நடத்தவும் முடியாது. படிப்பினைகளையும் உண்மைகளையும் திறந்த மனதுடன் வரவேற்கும்போதே வரலாறும் நிகழ்காலமும் செழுமை அடையும். அந்தச் செழுமையிலிருந்தே எதிர்காலத்தைப் பலமாக அமைக்க முடியும்.


முப்பது ஆண்டு காலப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள், நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என்று எல்லோரிடம் இருந்தும் தமிழ் மக்கள் பலவற்றை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் வெளிப்படையாக நடந்தவைகளை எழுத வேண்டும், பேச வேண்டும்.அதன் அடிப்படையில் நடந்தவைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளையும் விவாதங்களையும் நடத்தி, அதில் இருந்து பெறுகின்ற கற்கைகளின் அடிப்படையிலே தமது அடுத்தகட்டப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் தயாராவார்கள் என்பதுதான் அது. அதுதான் அவசியமானதும் கூட. இதற்கான அடிப்படையாகவே தன் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு போராட்டத்தை மறுபார்வை செய்யும் தமிழினியின் பங்களிப்பு முக்கியமாகிறது. தமிழினியைப் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமாக அமைய வேண்டும்.

தமிழினி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர். பரந்தன் இந்து ம.வியில் கல்வி கற்றவர். பாடசாலைக் காலத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். ஆரம்பத்தில் போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களையும் கொண்டவர். தமிழினியின் குடும்பம் மிக வறிய பொருளாதார நிலையைக் கொண்டது. அவருடைய இறுதி நிகழ்வுகளை நடத்தக் கூடிய வீட்டு வசதியைக்கூட கொண்டிருக்காத குடும்பம். இதேவேளை தமிழினியைப்போல அவருடைய இன்னொரு தங்கையும் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியாகப் போராளி போர்க்களத்தில் சாவினைத் தழுவிக் கொண்டவர்.

இப்படியான பங்களிப்பைக் கொண்ட தமிழினி தான் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலேயே இந்தப் புத்தத்தை எழுதித் தந்திருப்பது தமிழர்களுக்குக் கிடைத்த கொடையாகும். இந்தப் புத்தகம் தமிழ்ச்சூழலில் எதிர்மறையான அடையாளத்தையும் பிம்பத்தையும் தனக்குத் தரும் என்று அவர் தெரிந்தே வைத்திருந்தார். இதைப்பற்றிக் கூட அவர் தன்னுடன் உரையாடியவர்களுக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், போராளியாக இருந்தபோது அவர் எப்படி ஓர்மமாகவும் விடுதலையைப் பெற வேண்டும் என்பதில் விசுவாசமாகவும் இருந்தாரோ அதே அளவுக்கு, ஓர்மமாகவும் துணிச்சலாகவும் இருந்து கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இது அவரை எப்பொழுதும் ஒரு போராளியாகவே அடையாளம் காண வைக்கிறது.

இதனால் தமிழினியின் இந்த நூல் தமிழ் அரசியல் போராட்ட வரலாற்றுக்கும் தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்துக்கும் முக்கியமான ஒரு பங்களிப்பாகும். ஆனால் இதை உய்த்துணரக் கூடிய நிலையில் தமிழ் அறிவுச் சூழலும் இல்லை. தமிழ் அரசியற் சூழலும் இல்லை. ஒரு காலம் மகிமைக்குரிய போராளியாக கொண்டாடப்பட்ட தமிழினியையும் அவர் முன்னிறுத்தும் அரசியல் உண்மைகளையும் காண மறுக்கும் தமிழ் அரசியற் சூழலையும் தமிழ் அறிவுச் சூழலையும் என்னவென்று சொல்வது? தமிழ் அறிவியலும் அரசியலும் இன்னும் தடுமாற்றங்களிலும் பின்னோக்கிய திசையிலும் இருப்பதன் விளைவுகளே இதுவாகும்.

இந்த நூலைப்படிப்பதற்கு ஒவ்வொருவரும் பெரிய ஆர்வத்தோடிருக்கிறார்கள். பலரும் இந்தப் புத்தகத்தைத் தேடித்திரிகிறார்கள். ஆனால் இதை வெளிப்படையாகச் செய்யும் துணிச்சல் பலருக்கும் இல்லை. இவர்கள் கள்ளத்தனமாகவே படிக்கவும் அறியவும் விரும்புகிறார்கள். இன்பத்தை ருசிக்கவும் அனுபவிக்கவும் கள்ள உறவை வைத்துக் கொள்ளும் கூட்டம் அதைப் பகிரங்க வெளியில் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. அதன் தொடர்ச்சியே இது. இது எவ்வளவு கேவலமானது? உண்மையை எதிர்கொள்ளத் திராணியற்ற மனம் எப்படியெல்லாம் நாடமாடுகிறது என்று பார்த்தீர்களா?

ஒரு பக்கத்தில் தமிழினியின் புத்தகத்தைச் சந்தேகிக்கிறது. மறுபக்கத்தில் அதை அறிய விரும்புகிறது. இது தமிழினிக்கு மட்டும் நடந்து கொண்டிருக்கும் அநீதியல்ல. முன்னர் ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, அற்புதன், டி.பி.எஸ். ஜெயராஜ், தராகி, சி. புஸ்பராஜா, சுகன், கற்சுறா போன்றோருக்கும் பின்னர், சாத்திரி எழுதிய ஆயுத எழுத்துக்கும் நிலாந்தனின் எழுத்துகளுக்கும் கருணாகரனின் கவிதைகளுக்கும் யோ. கர்ணனின் கதைகளுக்கும் தமிழ்க்கவியின் ஊழிக்காலம் நாவலுக்கும் நடந்ததே. இப்பொழுது தமிழினிக்கு.

ஆனால், பகுதி பகுதியாகப் பல உண்மைகள் வெளியாகிக் கொண்டேயிருக்கும். இதை யாராலும் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது.

- கனக சுதர்சன்

தேனி இணையம்

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல