திங்கள், 4 ஏப்ரல், 2016

கிரகோரியன் நாட்காட்டி; பின்னணி என்ன...?

ஓர் ஆண்டின் பெப்­ர­வரி மாதத்தில் 29 நாட்கள் வந்தால் அந்த ஆண்­டா­னது நெட்­டாண்டு (Leap Year) என அழைக்­கப்­ப­டு­கி­றது. நான்கால் மீதி­யின்றி வகு­படும் நாட்­களே லீப் வருடம் என நாம் அறிந்து வைத்­தி­ருக்­கிறோம். ஆனால், நான்கால் மீதி­யின்றி வகு­ப­டக்­கூ­டிய நூற்­றாண்­டு­க­ளான கடந்த 1700, 1800, 1900 ஆம் ஆண்­டுகள் லீப் வரு­டங்­க­ளாக உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அதா­வது பெப்­ர­வரி மாதத்தில் 28 நாட்­களே இருந்­தன. மேலும் எதிர்­வரும் நான்கால் மீதி­யின்றி வகு­ப­டக்­கூ­டிய நூற்­றாண்­டு­க­ளான 2100, 2200, 2300 ஆம் ஆண்­டு­களும் லீப் வரு­டங்­க­ளாக உள்­வாங்­கப்­ப­ட­மாட்­டாது. இது உங்­க­ளுக்கு தெரி­யுமா? ஆராய்வோம்.


உரோ­மர்கள் காலத்தில் ரொமுலஸ் எனும் மன்­ன­னுக்கு அன்­றாட நட­வ­டிக்­கை­களை திட்­ட­மி­டு­வ­தற்கு நாட்­காட்டி தேவைப்­பட்­டது. பௌர்­ணமி தினங்­களை கணக்கில் கொண்டே இந்த நாட்­காட்டி அமைக்­கப்­பட்­டது. ஆனால், எத்­தனை நாட்கள் என்­பது தெளி­வில்­லா­மலே இருந்­தது.

ரோமின் இரண்­டா­வது மன்­ன­னான நூமா பொம்­பிலஸ் வரு­டத்­திற்கு 354 நாட்கள் வரு­மாறு 12 மாதங்­களை உள்­ள­டக்கி நாட்­காட்­டியை திருத்தம் செய்தார். இந்த நாட்­காட்­டி­யா­னது ஆரம்ப காலத்து லூனார் நாட்­காட்டி விதிப்­படி அமைந்­ததால் தொடர்ந்தும் லூனார் நாட்­காட்டி என்றே அழைக்­கப்­பட்டு வந்­தது. லூனார் நாட்­காட்­டி­யில் ­பௌர்­ணமி தினங்­களை சரி­யாகக் காட்ட முடி­ய­வில்லை. எனவே, மன்னன் நூமா பொம்­பிலஸ் வரு­டத்தின் நாட்­களை ஒன்றால் கூட்டி 355 நாட்­க­ளாக நாட்­காட்­டியை திருத்தம் செய்தார். அப்­போதும் தொடர்ந்தும் நாட்­காட்டி பௌர்­ணமி தினங்­களை சரி­யாக காட்­ட­வில்லை.

அதா­வது, பூமி சூரி­யனைச் சுற்­றி­வரும் நாட்­க­ளுக்கும் லூனார் நாட்­காட்­டியின் நாட்­க­ளுக்கும் வித்­தி­யாசம் இருந்­ததே காரணம். பூமி சூரி­யனை ஒரு­முறை சுற்­றி­வர எடுக்கும் நாட்­க­ளை நுணுக்­க­மான முறையில் அறிந்து கொள்ள முடி­ய­வில்லை.

இந்த சந்­தர்ப்­பத்­தில்தான் எகிப்­தி­யர்கள் மிகவும் நுணுக்­க­மான முறையில் பூமி­யா­னது ஒரு­முறை சூரி­யனைச் சுற்­றி­வர 365 நாட்கள், 5 மணித்­தி­யா­லங்கள், 49 நிமி­டங்கள், 16 செக்­கன்கள் எடுக்­கி­றது என ஆய்­வின்­போது அறிந்து கொண்­டனர்.
கி.மு. 45 ஆம் ஆண்டு ரோமின் பேர­ரசர் ஜூலியஸ் ஸீஸர் லூனார் நாட்­காட்­டியை ஒதுக்கி வைத்­து­விட்டு, எகிப்­தியர் ஆய்­வின்­போது அறிந்­து­கொண்ட 365 நாட்­களைக் கொண்ட புதிய நாட்­காட்­டியை அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

ஜூலியஸ் ஸீஸர் வரு­டத்­திற்கு 365 நாட்கள் என்றும் நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை வருடம் 366 நாட்கள் எனவும் நாட்­காட்­டியை வடி­வ­மைத்தார். இந்த மேல­திக ஒரு நாளை எந்த மாதத்தில் கூட்­டு­வது என்று யோசித்தார். பெப்­ர­வரி என்றால் ரோமர்­களின் பழங்­கு­டி­யி­னரின் பாஷையில் சுத்­தப்­ப­டுத்­துதல் என்­ப­துதான் அர்த்தம். எனவே, பெப்­ர­வரி மாதத்தின் 28 உடன் சேர்க்­கப்­பட்­டது. இதுவே நெட்­டாண்டு என அழைக்­கப்­ப­டு­கி­றது. இக்­க­லண்­ட­ரா­னது ஜூலியன் கலண்டர் என அழைக்­கப்­பட்டு வந்­தது.

பெப்­ர­வரி 29 ஆனது நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை வரு­வதால் பெப்­ர­வரி 29 இல் பிறந்த குழந்­தை­யா­னது நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரு­மு­றையே பிறந்த நாள் கொண்­டாட முடியும். குழந்­தை­களின் பிறந்த நாள் எதிர்­பார்ப்பை கவ­னத்தில் எடுத்து அண்­மையில் மேற்­கத்­தேய பேரா­சி­ரியர் ஒருவர் பெப்­ர­வரி 29 அன்று பகல் 12 மணிக்கு முன்பு பிறந்தால் பெப்­ர­வரி 28 இலும் பெப்­ர­வரி 29 அன்று பகல் 12 மணிக்கு பின்பு பிறந்தால் மார்ச் 01 இலும் பிறந்த நாள் கொண்­டாட முடியும் என அறி­வித்­துள்ளார். மேலும் சரா­ச­ரி­யாக 1461 பேரில் ஒருவர் பெப்­ர­வரி 29இல் பிறக்­கிறார் என்றும் அறி­வித்­துள்ளார்.

பெப்­ர­வரி 29 இல் பிறந்­த­வர்கள் வித்­தி­யா­ச­மான செயற்­பா­டு­களை உடை­ய­வ­ராக காணப்­ப­டுவர் என ஆய்­வா­ளர்கள் கூறு­கி­றார்கள். உதா­ர­ண­மாக இந்­தி­யாவின் முன்னாள் பிர­தமர் மொரார்ஜி தேசாய் பெப்­ர­வரி 29 இல் பிறந்­தவர். அவர் தினந்­தோறும் காலையில் தனது சிறு­நீரை அருந்­து­வாராம். அவரே பேட்­டி­யொன்றின் போது இதனைக் கூறி­யுள்ளார். செய்­தி­யாளர் கேட்ட கேள்­விக்கு மொரார்ஜி தேசாய் தனது சிறு­நீரை அருந்­து­வதால் தனக்கு உற்­சாகம் பிறக்­கி­றது; நோயில்­லாமல் வாழ வழி செய்­கி­றது என கூறி­யுள்ளார்.

திருச்­ச­பைக்­காக உயிர்ப்பு பெரு­வி­ழாவைக் கணிப்­ப­தற்கு கி.பி. 325 ஆம் ஆண்டு வான­வியல் அறி­ஞர்கள் கூடி அக்­கா­லத்தில் பழக்­கத்தில் இருந்த ஜூலியன் கலண்­டரை பயன்­ப­டுத்­தினர். உயிர்ப்பு பெரு விழா என்­பது ஏசு­நாதர் சிலு­வையில் அறை­யப்­பட்டு, அடக்கம் செய்­யப்­பட்டு மூன்றாம் நாள் மர­ணத்­தி­லி­ருந்து உயிர்த்­ததைக் குறிப்­ப­தாகும். கிறிஸ்­தவ திரு­வ­ழி­பாட்டு கால அட்­ட­வ­ணையில் இது மிக முக்­கிய திரு­நா­ளாகும். பௌர்­ணமி தினத்தை தொடர்ந்து வரும் ஞாயிறு தினத்­தி­லேயே உயிர்ப்பு பெரு­விழா கொண்­டா­டப்­பட்­டு­வந்­தது.

கி.பி. 325 இல் கணிக்­கப்­பட்ட அந்த பட்­டி­யலில் ஆண்­டுகள் செல்லச் செல்ல பௌர்­ணமி தினத்­திற்கு அடுத்து வரும் ஞாயிறில் உயிர்ப்பு பெரு­விழா அமை­ய­வில்லை. உயிர்ப்பு பெரு­விழா நாள் கடந்து போய்க் கொண்­டி­ருந்­தது. இந்தக் கலண்­ட­ரின்­படி பௌர்­ணமி தினங்­களும் அன்­றைய நாளில் உண்­மை­யி­லேயே வந்த பௌர்­ணமி தினங்­களும் முழு­மை­யாக ஒத்­து­வ­ர­வில்லை. 10 நாட்கள் வரை வித்­தி­யாசம் காணப்­பட்­டது . எனவே, அந்த நேரத்தில் இருந்த பாப்­ப­ரசர் போப் 13 ஆவது கிர­கோரி வான­வியல் வல்­லு­நர்­க­ளான லிலியுஸ், கிலே­வியுஸ் ஆகி­யோரை வர­வ­ழைத்து ஆலோ­சனை கேட்டார். வான­வியல் வல்­லு­நர்கள் லிலியுஸ், கிலே­வியுஸ் ஆகியோர் இந்த அணு­கு­மு­றை­யா­னது ஜூலியன் கலண்டர் கணக்­கின்­படி வரு­டத்தில் சரி­யாக 365 ¼ நாட்கள் இருப்­ப­தாக கணக்­கி­டப்­பட்­ட­துதான் தவறு என்று குறிப்­பிட்­டார்கள். ஜூலியன் கலண்­டரில் ஒவ்­வொரு நான்கு ஆண்­டு­க­ளுக்கும் ஒரு­முறை ஒரு மேல­திக நாள் (லீப் வரு­டத்தில்) சேர்ப்­பதால் நாட்­காட்­டியில் 43 நிமி­டங்கள் 12 செக்­கன்கள் மேல­தி­க­மாக சேர்க்­கப்­ப­டு­கின்­றன. இதுதான் 400 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை மூன்று நாட்கள் அதி­க­ரிக்­கின்­றன.

இதன் கார­ண­மா­கத்தான் 10 நாட்கள் வித்­தி­யா­சப்­ப­டு­வது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. 13 ஆம் பாப்­ப­ரசர் கிர­கோரி ஓர் ஆண்டின் எண்ணை மீதி­யின்றி நான்கால் வகுக்க முடி­யு­மாயின் அது ஒரு லீப் வரு­ட­மாகும். ஆனால், 400 ஆல் மீதி­யின்றி வகுக்­கப்­பட முடி­யு­மான நூற்­றாண்­டுகள் மாத்­தி­ரமே லீப் வரு­டங்­க­ளாக கணிக்­கப்­படும் என அறி­வித்தார். அதன்­படி 1700, 1800, 1900 ஆகிய நூற்­றாண்­டுகள் லீப் வரு­டத்­திற்குள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. எதிர்­வரும் 2100, 2200, 2300 ஆகிய நூற்­றாண்­டு­களும் மேலும் 2500, 2600, 2700 ஆகிய நூற்­றாண்­டு­களும் லீப் வரு­டத்தில் உள்­வாங்­கப்­ப­ட­மாட்­டாது.

1572 முதல் 1585 வரை பாப்­ப­ர­ச­ராக இருந்த போப் 13 ஆம் கிர­கோரி அவர்கள்,, வான­வியல் வல்­லு­நர்கள் லிலியுஸ், கிலே­வியுஸ் ஆகியோர் சேர்ந்து புதிய கலண்டர் முறையை அறி­வித்­தனர். 1582 ஆம் வரு­டத்தின் ஒக்­டோபர் 5 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை அத­னது 10 நாட்கள் நீக்­கப்­பட்­டன.(05-.10-.1582 ஆனது 15-10-.15.82 ஆக மாற்றம் செய்­யப்­பட்­டது) இதன்­மூலம் பௌர்­ணமி தினம் 10 நாட்கள் பிந்தி வரு­வது சரி செய்­யப்­பட்­டது.

ஆரம்­பத்தில் லூனா கலண்டர், இடையில் ஜூலியன் கலண்டர், அதை தொடர்ந்து வந்த கிர­கோ­ரியன் கலண்டர் (Gregorian Calendar) முறைதான் உல­கெங்கும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

கிர­கோ­ரியன் கலண்­டரை உட­ன­டி­யாக பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற கத்­தோ­லிக்க நாடுகள் அமுல்­ப­டுத்­தின. புரட்­டஸ்­தாந்து கிறிஸ்­தவ நாடுகள் காலம் தாழ்த்­தியே அமுல்­ப­டுத்­தின. இங்­கி­லாந்து 1752 ஆம் ஆண்­டிலும் ரஷ்யா 1917 ஆம் ஆண்­டிலும் கிரேக்கம் 1923 ஆம் ஆண்டிலும் கிரகோரியன் கலண்டரை அமுல்படுத்தின.

இங்கிலாந்து நாடானது காலம் தாழ்த்தி கிரகோரியன் கலண்டரை அமுல்படுத்தியதால் 11 நாட்கள் முற்படுத்த வேண்டியேற்பட்டது. 1752 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி 14 ஆம் திகதியாக அமுல்படுத்தப்பட்டது.(03-.09-.1752 ஆனது 14-.09-.1752 ஆக மாற்றம் செய்யப்பட்டது)

பாப்பரசர் கிரகோரி உயிர்ப்புப் பெருவிழா சரியான குறித்த தினத்தில் கொண்டாட வேண்டும் என்று முயற்சி செய்ததனாலும் அதேநேரத்தில் பூமி ஒருமுறை சூரியனை சுற்றிவர எடுக்கும் நேரத்தை துல்லியமாக ஆய்வின்போது எகிப்தியர்கள் கண்டறிந்ததனாலும் தவறான நாட்காட்டியை சீர்திருத்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல