சனி, 18 மார்ச், 2017

இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்து உள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.



இந்த சர்ச்சைக் குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அமெரிக்காவிலிருந்து அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். வார இறுதிநாளில் சியாட்டெல், லாஸ் ஏஞ்சலஸ் மாகாணங்களில் மிக சிறப்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். தாங்கள் காட்டிய அன்புக்கு நன்றி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் நன்றி. இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையராஜாவின் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சட்ட நோட்டீஸ்களை அனுப்பியிருந்தார்.

என்னுடன் பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தன. அதில், இளையராஜாவிடம் முன்னனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தால், மேடைகளில் பாடினால் அது காப்புரிமை மீறலாகும். அவ்வாறான உரிமை மீறலுக்கு பெருந்தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன், எனக்கு சட்ட விதிமுறைகள் குறித்து தெரியாது. எஸ்பிபி 50 என்ற இந்த நிகழ்ச்சி எனது மகனால் தயாரிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் டொரண்டோவில் இந்நிகழ்ச்சியை தொடங்கினோம். பின்னர் ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போதெல்லாம் இளையராஜா அலுவலகத்திடம் இருந்து இதுபோன்ற எந்தஒரு எதிர்ப்பும் வரவில்லை. ஆனால், இப்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பது எனக்குப் புரியவில்லை. ஏற்கெனவெ கூறியதுபோல், எனக்கு இச்சட்டம் குறித்து தெரியாது.

இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை. அதே வேளையில், ஏற்கெனவே ஒப்புக் கொண்டதுபோல் நிகழ்ச்சியையும் நடத்தியாக வேண்டும். இறைவன் அருளால் மற்ற சையமைப்பாளர்களின் பாடல்களையும் நான் அதிகளவில் பாடியிருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனது நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் பேரன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித கடுமையான வாதங்களையும் கருத்துகளையும் முன்வைக்க வேண்டாம் என்பது என்னுடைய கோரிக்கையாகும். இது கடவுளின் கட்டளை என்றால், அதனை பணிவுடன் கடைபிடிப்பேன்,” என்று தெரிவித்து உள்ளார். இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையிலான இப்பிரிவு இசை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல