ஞாயிறு, 21 மார்ச், 2010

களுதாவளையில் தோன்றிய குள்ளர்கள்

சுமார் ஒரு முழமே உயரள்ள சித்திரக்குள்ளர்கள் பற்றியும், அவர்கள் செய்யும் மந்திரமாயாஜால வீர சாகசங்கள் பற்றியும் அந்தக்கால அம்புலிமாமா கதைகளில் படித்து வியந்திருப்பீர்கள்.

அச்சித்திரக்குள்ளர்கள் இக்காலகட்டத்தில் சற்றும் எதிர்பாராமல் உங்கள் கண்ணெதிரே தோன்றினால் உங்களுக்கு எப்படியிருக்கும்?
உண்மையிலேயே திடுக்கிட்டுப் பயந்து வெலவெலத்துப்போவீர்கள்தானே?
இவ்விதமான, அந்தக்காலத்துக் கற்பனையை நிஜமாக்கும் அதிசயமொன்று இந்தக்காலத்தில் நடந்துதான் இருக்கிறது. அதுவும் மட்டு.மாவட்டத்திலுள்ள களுதாவளை கிராமத்தில் ! இச்சம்பவத்தினால் அக்கிராமம் ழுவதுமே பீதியில் உறைந்து போயுள்ளது.
இராப்பட்டால் கிராமத்தவர்கள் கதவுகளை இறுக டிக்கொண்டு வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்க வைத்துள்ளது.

பார்க்குமிடமெல்லாம் மரக்கறித்தோட்டங்களும் வெற்றிலைக் கொடிக்கால்களும் நிறைந்த களுதாவளையில் சின்னத்தம்பி அமரசிங்கம் என்பவர் (56 வயது) ஒரு தோட்டச் செய்கையாளர். அங்குள்ள கடற்கரை வீதியில் இவரது தோட்டம் அமைந்துள்ளது. பகலில் தோட்டத்தை பராமரிப்பதும், இரவானால் கால் நடைகளிலிருந்தும் கள்ளர்களிடமிருந்தும் பயிர் பச்சைகளை பாதுகாக்க தோட்டத்திற்குக் காவலிருப்பதும் இவரது வேலை. சுமார் ஒரு மாதகாலத்திற்கு முன்பும் அப்படித்தான்.
பின்னிலவு காலமான ஒரு தினமிரவு முன்னிருட்டு வேளையில் ஊர் காலடங்கிய சுமார் 9.30 மணியளவில் தமது தோட்டத்திற்கு பக்கத்திலுள்ள நாகதம்பிரான் கோயில் கிணற்றுக்கு குடிநீர் எடுத்து வரச் சென்றிருக்கிறார். கோயிலுக்கு முன்னால் அழுது வடியும் மங்கலான ஒரு வீதிவிளக்கு இவர் கிணற்றில் நீர்மொண்டுபோத்தலில் நிரப்பிக்கொண்டு திரும்புகையில் கோயிலின் முன்பக்க மண்டபத்து மணல் தரையில் நாய்கள் பல கூடி ஒன்றின் மேலொன்று தாவி விளையாடுவது போன்று ஒரு காட்சியை வீதிவிளக்கொளியில் தற்செயலாக கண்டிருக்கிறார்.

நாய்கள் ஆக்ரோஷமாய்க் குரைத்து ஒன்றோடொன்று கட்டிப் புரண்டு கடித்து சண்டையிடுவது வேறு விஷயம். ஆனால் சினேக பாவத்துடன் ஒன்றிலொன்று தாவி கட்டிப்புரண்டு விளையாடுவதானால் கூட உறுமல், முனகல், செல்லக்குரைப்பு இப்படி ஏதாவது இருக்கும். ஆனால் இப்போது எந்தவித ஓசையுமில்லை. அசுப்புக்காட்டாமல் அவை கூடிக்கும்மாளம் போடுவது விசித்திரமாய் தோன்றவே,அமரசிங்கம் கையிலிருந்த டோர்ச்சை அவைகள் மீது அடித்துப்பார்த்திருக்கிறார்.

அவ்வளவு தான் ! கூடி கும்மாளமிட்டு கைகளை அசைத்து சைகைகளால் பேசிக்கொண்டிருந்த அந்த ஜீவராசிகள் அத்தனையும் ஒன்றின் முதுகை ஒன்று கைகளால் கோத்தவாறே உடலை வளைத்து தலையைக் கவிழப்போட்டு வட்டமாகக் குழுமிவிட்டதாம். இது எப்படியிருந்ததென்றால் தொலைக்காட்சியில் தான் பார்க்கும் கிரிக்கெட்போட்டிகளின் ஆரம்பத்தின்போது ஆடவிருக்கும் அணியினர் அனைவரும் ஒருவர் முதுகை ஒருவர் தழுவியவாறே வட்டமாய்க் கூடிநின்று ஒரு சிர வணக்கம் செய்வார்களே! அப்படியொரு காட்சியை அது நினைவுப்படுத்தியதாக அமரசிங்கம் கூறுகிறார். இதனால் திடுக்கிட்டுப்போன அவர் திடீரென்று அவைகளை நெருங்கி மிக அண்மையில் அவர்கள் மீது விளக்கொளியைப் பாய்ச்சியிருக்கிறார். பார்த்தமாத்திரத்தில் அதிர்ந்தும் போயிருக்கிறார்.

அவைகள் அனைத்தும் குட்டிக் குட்டி மனித ரூபத்தில் இருந்தனவாம். அவைகளின் தொகை 10 அல்லது 12 க்குள் இருக்குமாம்.
குரங்கானால் வாலிருக்கும். நிமிர்ந்து நிற்காமல் நிலத்தில் குந்தியிருக்கும்.
நாயானால் நாலு காலிருக்கும் வாலிருக்கும் ஆனால் இவைகளிடம் அந்த அடையாளங்கள் எதுவுமே இருக்கவில்லை.

அவர் திக்பிரமையடைந்துபோய் டோர்ச்சை அடித்துப் பிடித்தவாறே தம்மையறியாமலேயே அவைகளை நெருங்கியிருக்கிறார். இவர் தன் பாட்டில் தங்களைக் கடந்து போய்விட வேண்டுமென்ற பாவனையில் தலையைக் கவிழப்போட்டு குவிந்து நின்ற அவைகள், இவர் துணிந்து அருகில் நெருங்கியதும் சட்டென்று நிமிர்ந்து ஒன்றையொன்று இறுகப்பற்றியவாறே விரிந்து நீளப்பாட்டில் நின்று இவரை ஏறெடுத்து ஒரு பார்வை பார்த்தனவாம்.

அதாவது இவர் மீது பாய்ந்து கீறிக்கிழிக்கத்தயாரான கொடூரப்பார்வை.
டோச் வெளிச்சத்தில் அவைகளின் சின்னஞ் சிறு கண்களில் மின்னிய கோபத்தையும் இரத்தச் சிவப்பையும் கண்ட அவர் திகிலடைந்து அலறிக்கொண்டே தன் வாடியை நோக்கி ஓடியிருக்கிறார். வாடியில் காவலுக்கிருந்த அவரது மைத்துனர். அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்து வாடிக்கா ரர்கள் எல்லோரும் இவர் சொன்ன கதையைக்கேட்டு பரிகசித்திருக்கிறார்கள். இவர் ஏதோ காற்றுக்கறுப்புப்பட்டு பயந்துவிட்ட தாகவும் தேற்றியிருக்கிறார்கள். இவர் சாமி சத்தியம் என்றதும் நாகதம்பிரான் கோயில் பக்கம் போய்ப்பார்க்கப் பயந்து உடனடியாக பக்கத்திலிருந்த பொலிஸ் காவலரணில் சென்று சொல்லியிருக்கிறார்கள். பொலிஸாரும் இதனை முதலில் நம்பவில்லையாம்.

இவரதும், அச்சுற்றுவட்ட தோட்டக்காரர்களினதும் வற்புறுத்தலுக்காகவே ஜீப்பில் நாகதம்பிரான் கோயிலடிக்கு வந்து பார்த்திருக்கிறார்கள்.
பெரிய தேடுதல் விளக்குகளின் உதவியுடன் கோயிலடியையும் அதன் சுற்றுப்புறங் களையும் உன்னிப்பாக அவதானிக்கையில் ஒரு விசித்திரமான பாதச்சுவடுகள் தரையில் பதிந்திருப்பதைக் கண்டிருக்கிறார்கள்.
கூர்முனை கொண்ட மேசன் கரண்டிபோன்ற முக்கோன வடிவிலான சின்னஞ்சிறு பாதங்கள் பாத நுனியிலுள்ள நக அடையாளங்களும் மண்ணில் பதிந்திருந்தன. அக்குள்ளர்கள் துள்ளித் துள்ளியோ தத்தித்தத்தியோ சென்ற பாவனையில் அச்சுவடுகள் ஒன்றுக்கொன்று சற்று இடைவெளிவிட்டுத் தெரிந்தன. அச்சுவட்டு அடையாளங்களை பொலிஸார் படம் பிடித்துள்ளனர்.
அச்சுவடுகள் ஆளரவமற்ற கடற்கரைக் காட்டுப்பக்கம் போகாமல் ஊர் மனைகளுக்குள் போயிருப்பதை அவதானித்த பொலிஸார் அப்பகுதிவாசிகளை அவரவர் வீடுகளுக்குள் கதவை தாளிட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்துவிட்டு அப்பிரதேசம் முழுவதும் பெரிய பெரிய தேடுதல் விளக்குகளின் உதவியுடன் சல்லடைபோட்டுத் தேடியிருக்கிறார்கள். என்ன தேடியும் அக்குள்ளர்கள் அகப்படவேயில்லை. அவர்கள் போன இடம் தெரியவில்லை.

அமரசிங்கம் அன்றிரவே பயத்தில் காய்ச்சலில் படுக்கையில் வீழ்ந்தவர்தான்.
கிராமத்தவர்களுக்கேயுய எத்தனையோ மந்திரிப்புகள், கழிப்புகள், மருத்துவ சிகிச்சைகளுக்குள்ளாக்கப்பட்டு சுமார் பத்து நாட்களின் பின்பு இப்போதுதான் உடல்தேறி நடமாடுகிறார். வார வெளியீட்டுக்காக வன்னியார் வீதியிலுள்ள அவரது வீட்டில் நாம் அவரைச் சந்தித்தபோது அவர் மிகுந்த ஆர்வத்துடன் தனக்கு நேர்ந்த அபூர்வ அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

தாம் சந்தித்த அந்த ஜீவராசிகள் மிருகமோ, ஜந்துவோ அல்ல என்பதை உறுதியாகக் கூறுகிறார். அவர்களும் எம்மைப்போன்று மனித இனந்தான். ஆனால் மிகவும் குள்ளர்கள்., காட்டுமிராண்டிகளின் தோற்றத்தில் நிர்வாணமாக இருந்தார்கள்.

இவர்களது தலைடி மிகவும் அடர்த்தியாக முதுகுவரை படர்ந்து காணப்பட்டது.
அப்போது தான் பிறந்த ஒரு குழந்தையின் மிகவும் சிறிதான தோற்றம் அவர்களிட மிருந்தது. உடம்பெங்கும் சிக்காராய் ரோமம் அடர்ந்து காணப்பட்டது மனிதன் போலவே முகம் மின்னும் கண்கள் கைகால்கள், விரல்களைவிட நீளமான கூரிய நகங்கள் பத்தோ பன்னிரண்டோ பேர் இருந்த அந்தக் கூட்டத் தினிடையே பெண்மையின் அங்க அடையாளங்களுடன் ஒரு பெண்ணையும் தாம் கண்டதாக கூறுமவர் இவர்களிடமிருந்து எந்தவித கீச்சொலியோ, கீழ்க்கையொழியோ வரவில்லையென்றும் அனைவரும் கைகளை அசைத்தோ, கைகளைக்கோத்தோ சமிக்ஞைகளால் பேசிக் கொண்டதாகவும் கூறுகிறார்.

இது ஒரு புறமிருக்க இச்சம்பவம் நடந்து அதனை ஒரு வழியாக களுதாவளை கிராமவாசிகள் மறந்து போயிருந்த ஒருமாத கால இடைவெளியில் கடந்த பெப்ரவ 9 ஆம் திகதி அங்குள்ள இராமக்கிருஷ்ண வித்தியாலயத்தில் மறுபடியும் இச்சித்திரக்குள்ளர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்ற செய்தி அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இவர்களை நேரில் கண்டவர்கள் அவ்வித்தியாலயத்தில் 5 ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகளான ருத்ரா, யதுர்ஷனா, லதுர்சிக்கா, சங்கவி ஆகியோர் அனைவருமே 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் வித்தியாலய அதிபர் திரு.தமன் பிள்ளை அருள் மாணிக்கத்தின் அனுமதியுடன் அம்மாணவிகளை அணுகினோம்.

குள்ளர்களை முதன் முதலில் கண்டதோடு அவர்களிடமிருந்து அடி வாங்கிக் காயம் பட்டிருந்த அமிர்தரத்தினம் ருத்ரா என்ற சிறுமி தன்னெதிரே நாலைந்து பேராக நின்றிருந்த அவர்களைக் கண்டதும் ஆரம்பத்தில் தனக்குத் திகைப்பாக இருந்தாலும், புதிய வித்தியாசமானதும் விசித்திரமானதுமான பொம்மைகளைப் பார்ப்பது போன்றதொரு புதுமையான உணர்வு தோன்றியதாகச் சொல்கிறார். 5 ஆம் ஆண்டு யவில்லை. புலமைப்பட்சைக்கான ஆயத்த வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தப் பின்னேரப் பொழுதில்(சுமார் 3 மணி) தான் கழிப்பறைக்குச் செல்வதற்காக வகுப்பு நடை பெற்றுக்கொண்டிருந்த 5 ஆவது மாடியிலிருந்து கீழிறங்கி வந்ததாகவும் பாடசாலைக் கட்டிடத்தை விட்டுசற்றுத் தொலைவிலிருந்த கழிப்பறைக்குப்போய் விட்டு திரும்பவும் மாடிக்குப்போக படியேற வருகையில், முதலாவது மாடிப்படியருகே தரையில் அவைகள் நின்று கொண்டிருந்ததை தான் காண நேர்ந்ததாகவும் கூறினார். அந்த நாலைந்து பேரும் இவரைப் பார்த்துக் கொண்டே நின்றார்களாம். இதற்கு முன்னால் அமரசிங்கம் கூறிய அவர்கள் உருவம் பற்றிய அதே வர்ணனையை ருத்ராவும் கூறுகிறார் நமக்கெல்லாம் நிழல் கருப்பாக இருக்கும்.

ஆனால் அந்நேரச்சாய்பொழுது வெயிலில் தெரிந்த இவர்களது நிழல் வெள்ளையாக இருந்தது. ஒன்று அல்லது ஒன்றரை அடி தான் உயரமிருந்தனர். நீளமான தலைடியும் தாடியும் கொண்டிருந்தனர். பற்கள் நீளமாகவும் கூர்மையாகவும் இருந்ததோடு வாய்க்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கவும் காணப் பட்டன.

விரல் நகங்களும் அவ்வாறே. நமக்கெல்லாமுள்ள காற்பெருவிரலானது அவர்களுக்கு காலின் நடுப்பகுதியில் நீளமாய் அமைந்திருக்கக் காணப்பட்டது. மின்மினிபூச்சிப்போல கண்கள் மின்னின. அவர்கள் என்னிடம் எதையோ கூற முற்படுவது போன்ற பாவனை இருந்தது. இவர்கள் பற்றி உடனடியாக எனது வகுப்பாசிரியையிடம் கூறி அழைத்து வருவதற்கு நான் மாடிப்படியேறி ஓடினேன். நான் வகுப்பறையினுள் பிரவேசிப்பதற்கு முன்பாக பளீரென்று ஓர் அடி என் காதில் விழுந்தது.

எனக்கேற்பட்டிருந்த ஆர்வத்திலும் பதற்றத்திலும் முதலில் நான் அதைக் கவனிக்கவில்லை பின்னர் டீச்சரைக் கூட்டிக்கொண்டு கீழே இறங்கி வருகையில் தான் பார்த்தேன் காலில் எதுவோ பிறாண்டி சதையைக் கிள்ளியெடுத்த மாதியான ஓர் இரத்தக்காயமிருந்தது. அதிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

அதைப்பார்க்க எனக்குப் பயமாக இருந்தது.
உடல் நடுங்கிக் காய்ச்சலும் வந்தது. ஆஸ்பத்திரியில்ல் எனது காயத்தைப் பசோதித்த டாக்டர் நான் சொன்ன கதைகளை நம்பாமல் நாயோ பூனையோ பிறாண்டியிருப்பதாக கூறி மருந்து கட்டினார். காயம் இப்போது ஆறிவிட்டது என ருத்ரா மாடிப்படியருகே குள்ளர்களைச் சந்தித்த அதே வேளையில் டியூசனுக்காக பாடசாலை நோக்கி வந்து கொண்டிருந்த ருத்ராவின் வகுப்பு மாணவிகளான யதுர்ஷனா, லதுர் சிக்கா, சங்கவி ஆகியோரும் இக்குள்ளர்களைக் கண்டிருக்கிறார்கள். மாடிப்படியருகேயிருந்து காற்றில் பறப்பதுபோன்று தவளைப்பாய்ச்சலில் பாடசாலைக்கு முன்னேயிருந்த அம்மன் கோயிலை நோக்கி குள்ளர்கள் தத்தித்தத்திச் சென்றதைக்கண்டதும் அவர்கள் கதிகலங்கிப் போய் பேய் பேய் என்று அலறியிருக்கிறார்கள். அவர்களது கூக்குரலைக் கேட்டு பள்ளிப் பிள்ளைகள், ஆசிரியைகள், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லோரும் பதறியடித்துக்கொண்டு வந்து குழும, ஒரே களேபரமாகி விட்டது. சிறுமிகளும் யாரைக் காட்டிக்கத்தினார்களோ, அந்தக் குள்ளவர்களும் மாயமாகி விட்டிருந்தனர். பார்த்த சிறுமிகள் அனைவருக்கும் உடனேயே மயக்கம் காய்ச்சலும் வந்துவிட்டதாம். அந்நேரம் வீட்டிலிருந்த அதிபருக்கு இந்தச் சம்பவத்தை வகுப்புகள் நடத்திய ஆசிரியைகள் உடனே போன் பண்ணிச் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டால் ஊர் மக்கள் பின்நேர வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்பமாட் டார்களென்ற பயத்தில் அதிபரும் அச்சம்பவத்தை ஏதோ அவர்களது பிரமையென்று கூறிச் சமாளித்து சகஜ நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். களுதாவளையில் நடந்த மேற்படி இரு சம்பவங்களையும் பற்றி அவ்வூரில் கதைகள் இரண்டு விதமாய் உலவுகின்றன. குள்ளர்கள் இரு இடங்களிலும் ஆலய முன்றலில் தோன்றியிருப்பதால் இது எதுவோ ஒரு தெய்வத்தின் வெளிப்பாடென் றும், வந்தவர்கள் தேவகணங்களென்றும் ஒரு சாராரும்,பறக்கும் தட்டில் வந்து இங்கு இறங்கிக்கொண்ட வேற்றுக்கிரகவாசிகள், மீண்டும் பறக்கும் தட்டுவந்து தங்களை ஏற்றிச் செல்லும் வரை இவ்விதம் ஊருக்குள் சுற்றுவதாக புத்திஜீவிகளான இன்னொரு சாராரும்.

அபிப்பிராயப்படுகின்றனர். இவர்களது கூற்றுக்களுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய அந்த விசித்திரக்குள்ளர்கள் எங்கு ஓடி மறைந்தனரோ தெரியவில்லை. அவர்கள் மீண்டும் தோன்றுவர் என்ற எதிர்பார்ப்பே ஊரில் அதிகமாக உள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல