அவுஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சுவிற்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களினால் சிக்கலை எதிர்கொள்கின்றன. அந்நாடுகளின் குடிவரவுச் சட்டத்துக்கு எதிரான இச்செயலி னால் அந்நாட்டு அரசாங்கங்கள் அரசியல் ரீதியிலும் வீணான சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
ஆசிய நாடுகளில் இருந்தே கூடுதலான சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் வாய்ப்பான நாடுகளை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இவ்வாறு இடம்பெயருகின்ற குடியேற்றக்காரர்களில் இலங்கையர்களும் கணிசமான தொகையினராக உள்ளனர். சட்டவிரோத குடியேற்ற வாசிகளென்ற விவகாரத்தில் இலங்கையர்களே குறிப்பிடும் படியாக உள்ளனர்.
இவர்களில் ஆப்கானிஸ்தான், இந்தியா, நேபாளம், மாலைதீவு போன்ற நாடுகளைச் சேர்ந்தோரும் அடங்குகின்றனர். சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வோரில் இலங்கையர்களும் பெருமளவில் அடங்குவதால் இவ் விடயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இலங்கையில் யுத்தம் தொடங்கிய காலப் பகுதியில் புலம்பெயர்தலும் ஆரம்பமானது. வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலிருந்து தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் ஆரம்ப காலத்தில் சட்டரீதியாகவே புலம்பெயர்ந் தனர். சட்டரீதியான குடியேற்றம் தீவிரமடைந்ததை யடுத்து அந்நாடுகள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கின.
இதன் பின்னரே சட்டவிரோத புலம்பெயர்வு தலைதூக்கியது. கடவுச் சீட்டில் ஆள்மாறாட்டம், மோசடிகளைக் கையாண்டு ஏராளமான விமான நிலையங்களைக் கடந்து பல்லாயிரம் பேர் எங்கெல்லாமோ உள்ள நாடுகளைச் சென்றடைந்தனர்.
சட்டவிரோத புலம்பெயர்வில் இலங்கையர்கள் மட்டுமன்றி ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தோரும் ஆர்வம் காட்டினர். யுத்தத்தைக் காரணமாகக் கொண்டு இடம்பெற்று வந்த குடிபெயர்வானது காலப் போக்கில் திசைமாறத் தொடங்கியது. சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் இறுதியில் முற்றுமுழுதாக பொருளாதார அகதிகளாகப் போனார்கள்.
நீண்ட காலம் தொடர்ந்த யுத்தம் காரணமாக படிப்படியாக ஏற்பட்ட நிலைமை இதுவாகும். இலங்கையில் யுத்தம் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும் முடிவின்றித் தொடரும் புலம்பெயர்வின் அடிப்படை நோக்கம் பொருளாதாரத் தேடல்தான் என்பது வெளிப்படை யாகவே தெரிகிறது.
இலங்கையிலிருந்து படகுகள் மூலம் ஏராளமானோர் இவ்விதம் சட்டவிரோதமாகப் பயணத்தைத் தொடங்குகின்றனர். இவர்களில் எல்லோருமே தாங்கள் எதிர்பார்க்கும் நாட்டைச் சென்றடைவதில்லையென்பதுதான் பரிதாபமான விஷயம். பெருந்தொகையானோர் இன்று வரை நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படகு நடுக்கடலில் கவிழ்ந்ததனால் ஆழ்கடலுக்குப் பலியாகிப் போனோரும் ஏராளம்... குழந்தைகள் கூட இத்தகைய பரிதாப நிலைமைக்கு உள்ளாகின்றார்கள்.
சட்டவிரோத புலம்பெயர்வு இரு நாடுகளுக்குமே சிக்கலைத் தோற்றுவிக்கிறது. சட்டவிரோத குடியேற்றவாசிகளில் பலர் தாங்கள் புகலிடம் கோரும் நாடுகளில் வீணான வன்முறைகளுக்குக் காரணமாகின்றனர். அந்நாடுகளின் சட்டதிட்டங்களை மீறுகின்றனர். குடிவரவுச் சட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்த முடியாமல் அந்நாடுகள் திண்டாடுகின்றன.
அதேசமயம் இலங்கையானது தனது நாட்டுப் பிரஜைகளினால் மற்றொரு நாட்டுக்கு தொடர்ச்சியாக சிக்கல் ஏற்படுவதை அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது. சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் அந்நாடுகளின் குடிவரவுச் சட்டத்தை மட்டுமன்றி தங்களது நாட்டின் குடியகல்வுச் சட்டத்தையும் மீறுகின்றனரென்பதே உண்மை. நீண்ட காலம் தொடருகின்ற சட்டவிரோத செயல் தடுத்து நிறுத்தப்படுவதே பொருத்தமான நடவடிக்கையாகும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக