வேறு விதத்தில் கூறுவதானால் மனித நேயத்திற்கு மாற்றமாக சிறுவர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகள் அனைத்தும் துஷ்பிரயோகங்களே.
குறிப்பாக மனித வாழ்க்கை வட்டத்தில், வளர்ச்சி, முதிர்ச்சி ஆகிய முக்கிய உடல்- உள செயற்பாடுகளுக்கு உட்படும் சிறுவர்கள், துஷ்பிரயோகங்களுக்கு முகங்கொடுத்தல் வேதனையானது.
அதிலும் பாலியல் துஷ்பிரயோகம் மிகவும் கொடுமையானது!
துஷ்பிரயோகங்கள் சூழல் சார்ந்தவை. அதனாலேயே சிறுவர் எதிர்கொள்ளும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு சமூக சூழலே காரணம் என்பது புலனாகிறது.
இதில் கசப்பான உண்மை என்னவென்றால், சிறுவர்களின் நெருங்கிய உறவினர்களே அவர்களை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்துகின்றமையாகும்.
உடல்- உளத் தேவைகள் நிறைவேற்றப்படாத வேளைகளில் ஏற்படும் ‘மனநெருக்கடி’யை(stress)நேரான முறைகளில் எதிர்கொள்ள முடியாதவனே போதைக்கு அடிமையாகின்றான். இந்த தர்மசங்கடம் மனைவியைப் பிரிந்த அல்லது இழந்த ஆண்களுக்கே அதிகம். எல்லை மீறும் போது எந்த வயதினரும் குறிப்பாக ஆண்கள் பாலியல் முரண்பாடுகளை வெளிப்படுத்த முனைகின்றனர்.
பெற்றவர்கள் சிலரே தங்கள் பிள்ளைகள் மீதும், ஆசிரியர்கள் தமது மாணவர்கள் மீதும் மற்றும் சமூகத்திலுள்ள ஏனைய பங்காளிகள் சூழலிலுள்ள சிறுவர்கள் மீதும் இம் மாபெரிய குற்றத்தைப் புரிவதையிட்டு, சகலரும் கவனம் செலுத்த வேண்டும்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை போன்ற பல அரச அமைப்புக்களும், கூடுதலான சட்டங்களும் அமுலில் இருந்த போதிலும், இந்தக் கொடிய குற்றம் குறையவில்லை என்பது வியப்பூட்டுகின்றது. சமூகத்தின் நேரடி மறைமுக ஒத்துழைப்பு இந்த விடயத்தில் இன்னும் சரியாகக் கிடைக்கவில்லை என்பதையே இது எடுத்தியம்புகின்றது.
அதாவது சிறுவர்களும் சமூகத்தின் ஒரு முக்கிய பங்காளிகள் என்பதும் அவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மூடிமறைக்கப்படக் கூடாதென்பதும் சமூகங்களால் பெரும்பாலும் இன்னும் உணரப்படவில்லை என்ற கசப்பான உண்மை இதனால் புலனாகின்றது.
எனவே மக்கள் முதலில் இது தொடர்பாக விழிப்புணர்வூட்டப்படல் அவசியம். இந்த விழிப்புணர்வு கிராங்களின் மூலை, முடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும். அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். அப்போதுதான் பூரணபலனை எதிர்பார்க்க முடியும்.
பிரபல உளவியலாளர் Sigmand Fraud வெளியிட்ட உளப்பகுப்பாய்வு கோட்பாட்டின் Psycho Analysis Theory அடிப்படையில் பிற்காலத்தில் அவர்கள் பாலியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அதனாலேயே பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உடனடியாக உளச் சிகிச்சைக்கு Psycho Theropy உட்படல் வேண்டும். அதாவது அவர்கள் அனுபவித்த துன்பங்களின் படிமங்கள் ஆழ்மனத்திலிருந்து நீக்கப்படல் வேண்டும் என்கிறார்.
பாலியல் கல்வி Sexual Education பாடசாலைகளில் ஊட்டப்படுவதை சில சமூகங்கள் எதிர்க்கின்றன. இதனால் சிறுவர்கள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களைத் தவிர்த்துக் கொள்ளும் பொறிமுறைகளை Prevention Mechanism அறிய முடியாதுள்ளனர். இந்த பொறிமுறைகளை சிறுவர்கள் அறிந்திருப்பது அவசியமாகும். இதன் மூலம் அவர்கள் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள சந்தர்ப்பம் கிட்டும்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்வதற்கு பாதுகாப்பு பொறிமுறைகளை அவர்கள் அறியாமையும் முக்கிய காரணமாகும். கெட்ட நோக்கத்தோடு தாங்கள் அணுகப்படுவதை புரிந்துகொள்ளலும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளை அவர்கள் அறிந்திருப்பதும் எத்தனை அவசியம் என்பது சமூகங்களினால் உணரப்படாமலிருப்பது மிகப் பெரிய கொடுமையாகும்.
பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களில், திருமணம் புரிந்த ஆசிரியர்கள் மட்டுமல்ல. வயதான அதிபர்களும் ஈடுபட்டதாக வருகின்ற செய்திகள்தான் கொடுமையிலும் கொடுமையானது.
அண்மைக் காலத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான செய்திகள் நாட்டிலுள்ள எல்லாத் தரப்பினரையும் அதிர்ச்சியூட்டுகின்றன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஏற்பாடு செய்துள்ள விசேட தொலைபேசி சேவை (1929) யினூடாக ஜுலை மாதம் 22ம் திகதி தொடக்கம் 28ம்திகதி வரையில் சுமார் 1750 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக அதன் பணிப்பாளர் அனோமா திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். இதில் அனேகமானவை அரச பாடசாலைகள் மற்றும் தனியார் கல்விக் கூடங்கள் தொடர்பானவையாம்.
இருபத்துநான்கு மணி நேரமும் இயங்கும் இந்த தொலைபேசி சேவையினூடாக உளவளத்துணை சேவையும் (Counselling) இடம்பெறுவதாகவும், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் விசாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை சற்று ஆறுதலான விடயமாகும். ஆயிரத்திற்கு மேற்பட்ட விடயங்கள் அம்பலமாகும் என்று நம்பலாம்.
மருதமுனை
ஏ. ஆர். அப்துல் ஹமீட்
உளவளத்துணையாளர்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக