புதன், 22 செப்டம்பர், 2010

பிச்சையெடுக்கும் பாவப்பட்ட நிலை

டுபாயில் அண்மையில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட ஆசியநாட்டுப் பிச்சைக்காரர் ஒருவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வசிப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த டுபாய் பொலிஸார் அங்கு பிச்சையெடுப்பது அதிகளவு வருமானத்தை தரும் தொழிலாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆசிய நாட்டைச் சேர்ந்த குறித்த நபர் பிச்சையெடுப்பதன் மூலம் அளவுக்கதிகமான வருமானத்தை ஈட்டி சுகபோக வாழ்வு நடத்தி வந்துள்ளதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இதனிடையே டுபாய்க்கு சுற்றுலா விசாவில் வரும் அதிகளவு ஆசிய நாட்டவர்கள் அங்கு பிச்சையெடுப்பதை ஒரு தொழிலாக கொள்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டுபாய் நிலைமை இவ்வாறிருக்க கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் உட்பட நாட்டிலிருந்து பிச்சைக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படையினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை கோட்டைப் புகையிரத நிலையத்தில் உள்ள பிச்சைக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கை ஓர் ஆரம்ப கட்ட செயற்பாடு எனவும் இத்தகைய நடவடிக்கைகள் இதர புகையிரத நிலையங்களிலும் தொடரும் எனவும் ரயில்வே திணைக்களப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

பயணிகளின் அசௌகரியங்களை கருத்தில் கொண்டே பிச்சைக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பஸ் வண்டிகளில் பிச்சையெடுப்போரை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதேபோன்று நாட்டின் அவ்வப்போது நிகழும் சர்வதேச நிகழ்வுகளின் போதும் கொழும்பிலுள்ள பிச்சைக்காரர்களைப் பிடித்து பஸ் வண்டிகளில் ஏற்றி அனுப்பும் நடவடிக்கைகள் அவ்வப்போது இடம் பெற்று வருவது நாம் அறிந்த விடயமாகும்.

உண்மையில் பிச்சைக்காக கையேந்தும் அனைவரும் பிச்சைக்காரர்களா என்ற கேள் வியும் எழவே செய்கின்றது. பலர் சோம்பேறிகளாகவும், பிச்சையெடுப்பவர்கள் போல பாசாங்கு செய்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருந்து வரும் அதேவேளை மேலும் பலர் பிச்சையெடுப்பதையே ஒரு தொழிலாகக் கொண்டு செயற் படுகின்றனர். இதனால் பஸ் வண்டிகளிலோ, ரயில் வண்டிகளிலோ பயணம் செய்யும் பயணிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவதையும் தவிர்க்க முடியாது உள்ளது.

அது மாத்திரமன்றி ஒரு சில பிச்சைக்காரர்கள் பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் அடித்து வரம் வாங்குவதைப் போன்றும் நடந்து கொள்வதுடன் பயணிகள் தமக்கு சாதகமாக நடந்து கொள்ளாதவிடத்து அவர்களை பகிரங்கமாக தூற்றிவிட்டு செல்வதை யும் சர்வசாதாரணமாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் பிச்சையெடுப்போர்களின் தொல்லையிலிருந்தும் நீங்கும் முகமாக அவர்களை பஸ்வண்டிகள், ரயில் நிலையங்களிலிருந்தும் அப்புறப்படுத்துவது அவசியமானது என்று கருதப்படும் அதேவேளை, உண்மையில் இவர்கள் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும்.

எத்தனையோ சாதாரண, நடுத்தரக் குடும்பங்கள் பிச்சைப்பாத்திரம் ஏந்தி நடுவீதிக்கு இறங்கவில்லையே தவிர அவர்களின் நிலைமையும் பிச்சையெடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை சற்று நிதானமாக சிந்தித்துப்பார்க்க வேண்டும். இன் றைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தொடர்ச்சியான விலையேற்றங்கள் என்பன மக்களை இந்த நிலைக்கு மாற்றியுள்ளன. இதுவரை காலமும் ஏதேனும் ஒரு பொருளை கொள்வனவு செய்யும் பொருட்டு ஒன்றை தியாகம் செய்து பிறிதொன்றை அடைய வேண்டிய பொருளாதார ரீதியான கஷ்டங்களுக்கு ஆளாகியிருந்த மக்கள் இன்று பிள்ளைகளுக்காக தாய்மாரும், தாய்மாருக்காக பிள்ளைகளும் உணவைத் தியாகம் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் செல்வந்தர்கள், செல்வந்தர்களாகவே வாழவும், ஏழைகள் பரம ஏழைகளாகவே மாறவும் கூடிய சூழலே உருவாகி வருவதாகவே நிலைமைகள் அமைந்துள்ளன. பொருட்களின் விலைகளில் ஏற்படும் அதிகரிப்பு செல்வந்தர்களைப் பொறுத்தமட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாத போதிலும், வறிய மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக அண்மைக்காலங்களிலும், கோதுமை மாவினதும், பாணினதும் விலைகள் பன்மடங்கு அதிகரித்துச் சென்றுள்ளன. இதனால் பெரும்பாலான மக்கள் காலை ஆகாரத்தைத் தவிர்த்து இரு வேளை ஆகாரத்துடன் மாத்திரம் வாழ்க்கையை நகர்த்திச் செல்வதையும் நன்கு காணமுடிகின்றது.

இந்நிலையில் உழைப்போ அன்றேல் வருமானமோ இல்லாதவர்கள் கையேந்தி வாழ்வதைத் தவிர வேறு மார்க்கமற்றவர்களாக காணப்படுகின்றனர். நாட்டின் அபிவிருத்தி குறித்து வாயாரப் பேசப்பட்டு வருகின்ற போதிலும் புதிய தொழில் முயற்சிகளையோ வேலை வாய்ப்புகளையோ காணமுடியாதிருப்பது மிகவும் வேத னைக்குரியதாக உள்ளது.

அதேவேளை அரச நிறுவனங்களாக இருப்பினும் சரி தனியார் துறை நிறுவனங்களாக இருப்பினும் சரி இன்று வழங்கும் வேதனங்கள் அவர்களின் அன்றாட உணவுத் தேவைக்கும்இதர தேவைகளுக்கும் போதுமானதாக இல்லை. இந்நிலையில் நேரடியாக இல்லாதபோதிலும், மறைமுகமாக பலர் கடன் பெற்றும், இருக்கும் பொருட்களை விற்பனை செய்தும் பிச்சைக்கார வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். பலரது நிலைமை ““வெளுத்த சட்டை வெறும் பொக்கெட்'' என்ற நிலை யிலேயே இருந்து வருகின்றது. எனவே தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போல நடவடிக்கைகளை தொடர்வதற்கு அப்பால் எதற்காக இவர்கள் பிச்சையெடுக்கும் பாவப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை அறிந்து அதற்கு பரிகாரம் காண முன்வருவதே சமயோசிதமாக அமையும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல