சனி, 25 செப்டம்பர், 2010

சோதனைகளைச் சாதனைகளாக்கிய சமீதா சமன்மலி.....

ஆண்டவன் ஒரு வழியை மூடினால் இன்னொரு வழியை திறப்பான் என்பது வாழ்க்கையில் சோதனைகளைச் சந்திக்கும் போது நாம் எல்லோரும் முணுணுக்கும் வார்த்தை. இது இன்று சமீதா சமன்மலியின் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது.

வாழ்க்கை முழுவதும் எழுந்து நிற்க வாய்ப்பில்லை என்று கவலையுற்ற சமீதா சமன்மலி எழுந்து நிற்க உதவும் சக்கர நாற்காலியின் உதவியுடன் எழுந்து நிற்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்.சமீதா சமன்மலி, இப்பெயரை மறந்திருக்க வாய்ப்பில்லை. இரண்டரை வருடத்திற்கு முன்பு விதியின் விளையாட்டினால் விபத்தில் சிக்கி நெஞ்சுப் பகுதிக்கு கீழ் முற்றாக செயலிழந்து சக்கர நாற்காலியில் தான் எஞ்சிய வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட கொழும்பு மருத்துவ பீட மாணவிதான் சமீதா சமன்மலி.

எல்லா மருத்துவ மாணவர்களையும் போல தானும் சிறந்த மருத்துவராகி இந்நாட்டிற்கு சேவையாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் 2004 ஆம் ஆண்டு க.பொ.த(உத) பரீட்சையில் 3அ சித்தியுடன் கொழும்பு மாவட்டத்தில் 27 ஆம் இடத்தையும் நாடளாவிய ரீதியில் 52 ஆம் இடத்தையும் பெற்று கொழும்பு மருத்துவ பீடத்திற்கு தெரிவானார் சமீதா சமன்மலி.

தனது மருத்துவப் படிப்பினை தொடர்ந்து கொண்டிருக்கும் போது கொழும்பு மருத்துவ பீடத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மருத்துவ கண்காட்சி ஒழுங்குகளை மேற்கொள்ள பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டுமண்டபத்திற்கு சென்ற சமீதா சமன்மலியின் மீது பாரமான இரும்பு விட்டத்தினால் அமைக்கப்பட்டிருந்த கூரை விழுந்ததால் நெஞ்சுக்கு கீழான முண்ணாண் தொடர்பிழந்து நெஞ்சுக்கு கீழான பகுதிகள் உணர்விழந்து நடக்க முடியாத நிலையை அடைந்தார். இவரின் குடும்பமானது இப்பெரிய மருத்துவச் செலவினை தாங்கிக்கொள்ள முடியாது இருந்தபோது இவரின் மருத்துவச் செலவுக்காக கொழும்பு மருத்துவ பீட மாணவர்களினால் “ஹெல்ப் சமீதா' எனற ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு பத்திரிகைகள் வாயிலாக நாடளாவிய ரீதியில் பண உதவி கோரப்பட்டது. இதற்கு இன மத மொழி பேதம்இன்றி சகல தரப்பினரும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தனர். இது சம்பந்தமான கட்டுரையை வெளியிட்டு வீரகேசரி வாரஇதழும் பெரும் உதவி புரிந்தது.

பல புதிய சிகிச்சை முறைகளை கையாண்டும் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்காத நிலையில் இரண்டரை ஆண்டுகளாக சக்கர நாற்காலியிலிருந்து நோயாளர்களை பரிசோதிக்க முடியாத நிலையிலிருந்த சமீதாவுக்கு FIF நிறுவனமானது 3 மில்லியன் ரூபா பெறுமதியான எழுந்து நிற்க உதவி செய்யும் இலத்திரனியல் சக்கரநாற்காலியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதன் உதவியுடன் வேகமாக நடமாடவும் மற்றவர்களை போல் எழுந்து நின்று நோயாளிகளை பரிசோதனை செய்யவும் முடியும்.

கனவிழந்து மனம் வருந்தியிருந்த சமீதா சமன்மலி இந்த சந்தோசமான தருணத்தில் “விபத்தின் பின் எனக்கு இரண்டு முடிவுகள் தான் எடுக்கக்கூடியதாக இருந்தது. ஒன்று தற்கொலை செய்து என் வாழ்வை முடிப்பது மற்றயது சவால்களை எதிர்கொண்டு வாழ்வது. நான் இரண்டாவதை தேர்ந்தெடுந்தேன். இரண்டரை வருடமாக சொல்லமுடியாத பல வேதனைகளை அனுபவித்தேன். ஆனால் அதற்குய பலன் இன்று கிடைத்துள்ளது. இன்று என்னால் எல்லோரையும் போல் வேகமாக நடமாட முடிகிறது. எதுவித தடங்கலுமின்றி நோயாளிகளை பரிசோதிக்க முடிகிறது.

என்வாழ்வில் சோதனையான காலகட்டத்தில் சகல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இன மத மொழி பேதமின்றி நீங்கள் வழங்கிய நிதியுதவிகள் மற்றும் பிரார்த்தனைகள் தான் என்னை இன்று வாழ வைக்கின்றன. அதற்கு நான் என்ன செய்தாலும் இணையற்றது. இந்த வருட இறுதியில் இறுதி வருடப் பட்சைக்கு தோற்றவிருக்கும் நான் வைத்தியராகியபின் இலங்கையில் எந்த பகுதியிலும் சேவையாற்றத் தயாராக இருக்கிறேன்.'என்று தெவித்தார்.

வாழ்க்கையில் எந்த சோதனைகள் வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்பதற்கு சமீதா சமன்மலி ஓர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

எனவே எம் வாழ்க்கையில் சோதனைகளை எதிர்கொள்ளும் போது சமீதா சமன்மலியை மனதில் நிறுத்தி தற்கொலை முயற்சிகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல