வியாழன், 25 நவம்பர், 2010

மழையை வைத்து சம்பாதித்த மகத்தானவர்கள்

வவுனியா செட்டிகுளத்திலிருந்து பூவரசங்குளம் ஊடாக வவுனியா செல்லும் பிரதான பாதையூடான போக்குவரத்து இன்று மதியம் வரை பாதிக்கப்பட்டிருந்தது. நேற்று பெய்த கடும் மழை காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்தசாமிநகர் பகுதியில், வீதியின் குறுக்காக மழை நீர் 5 அடிக்கும் மேலாக பாய்ந்ததனால் இப்பாதையூடான போக்குவரத்துகள் யாவும் ஸ்தம்பிதமடைந்தன.

இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அப்பகுதி இளைஞர்கள் வருமானம் ஈட்டும் செயல்களில் ஈடுபட்டனர். 25 அடி நீளமான வீதியின் பகுதியை வீதியூடாக பயணித்த அலுவலர்கள் மற்றும் பயணிகள் தாண்டிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

காலை 6 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளை மறுபக்கம் தூக்கிக்கொண்டு செல்வதற்கான கூலியாக 500 ரூபா வரை பெறப்பட்டுள்ளது. எனினும் இளைஞர்கள் அதிகமாகியதால் இத்தொகை ஒரு மோட்டார் சைக்கிளை மறுபக்கம் கொண்டு செல்வதற்கான கூலியாக 200 ரூபாவும், ஒரு முச்சக்கர வண்டியை கொண்டு செல்வதற்காக 400 ரூபாவும் அறவிடப்பட்டது.

அதேவேளை ஒரு நபரை தூக்கிக்கொண்டுபோய் அடுத்த பக்கம் விடுவதற்காக 100 ரூபாவும் அறவிடப்பட்டன. இந்நிகழ்வை படமெடுக்கச் சென்ற ஊடகவியலாளரிடமிருந்தும் ஒரு பக்கதிலிருந்து மறு பக்கம் தூக்கிக்கொண்டு சென்று வந்ததற்காக 200 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

காலை 6 மணி தொடக்கம் மதியம் 11:30 மணிவரை இரு அணியினராக செயற்பட்டவர்களில் வீதியின் செட்டிகுளம் பக்கமாக நின்ற அணியினர் 27 மோட்டார் சைக்கிள்களையும், வவுனியா பக்கம் நின்ற அணியினர் 24 மோட்டார் சைக்கிள்களையும் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு தூக்கிச் செல்லும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இரு முச்சக்கர வண்டிகளையும் இப்பாதையூடாக தூக்கிக் கரை சேர்த்துள்ளனர். இப்பாதையைக் கடப்பதற்காக பணம் கொடுத்தவர்கள் பணம் கொடுத்ததைப் பற்றி கவலைப்படவில்லையென்றனர்.

5 கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டிய நிலையில் அதற்கு மாற்றமாக திரும்பிச் சென்று மாற்று வழியால் தமது பயணத்தைத் தொடர்வதென்றால் 35 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்யவேண்டியேற்படுவதுடன் நேரத்தை வீணடிக்க வேண்டிய நிலையும் ஏற்படும் என்றனர். இப்பாதையூடாக தூக்கிச் செல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் உத்தியோகத்தர்களும், வியாபாரிகளுமாவார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல