ஞாயிறு, 7 நவம்பர், 2010

'பாகிஸ்தானின் வளர்ச்சி நன்மையே'

மாணவர்கள் மத்தியில் ஒபாமா
பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால், அதனால் அதிக பலனடையப் போவது இந்தியாதான் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை நன்பகல் மும்பை வந்தடைந்த அவர், ஞாயிற்றுக்கிழமை காலை மும்பை சென்ட் சேவியர் கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, மாணவ, மாணவியர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

பாகிஸ்தானை ஏன் இன்னும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அறிவி்க்கவில்லை என்றும், அந்த நாட்டை ஏன் முக்கியக் கூட்டாளியாக அமெரிக்கா கருதுகிறது என்றும் ஒரு மாணவி கேள்வி எழுப்பியபோது, நான் சொல்லப் போகும் பதில் பலருக்கு ஆச்சரியமளிக்கலாம் என்று கூறினார் ஒபாமா.

''என்னைப் பொருத்தவரை, ஸ்திரமான, வளமான பாகிஸ்தான் ஏற்பட்டால் அதனால் அதிக பலனடையப் போவது இந்தியாதான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். பாகிஸ்தான் ஸ்திரமாக இருந்தால் இந்தியாவுக்கு நல்லது. ஸ்திரமற்றதாக இருந்தால் இந்தியாவுக்கு பாதகம்தான். காரணம், இந்தியா பொருளாதார ரீதியாக உலக அரங்கில் வேகமாக முன்னேறி வருகிறது. அந்த நேரத்தில் இப்படிப்பட்ட கவனச்சிதறல்கள் இல்லாமல், இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் இருக்க வேண்டும்’’ என்றார் ஒபாமா.

பாகிஸ்தான், அமெரிக்காவுக்கு மட்டுமன்றி, உலக நாடுகளுக்கே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்று கூறிய ஒபாமா, தற்போது பாகிஸ்தானுக்குள் சில தீவிரவாத சக்திகள் இருப்பதாகவும், அதை ஒடுக்க நாங்களும் உதவுகிறோம் என்று பாகிஸ்தானிடம் கூறியிருக்கிறோம் என்றார். ஆனால், நாம் எதிர்பார்த்த வேகத்தில் பாகிஸ்தான் செயல்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில், இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கிடையே உள்ள சிறிய பிரச்சினைகளை முதலில் பேச ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் கருத்துத் தெரிவி்ததார்.

``இரு நாடுகளுக்கும் இடையே மெல்ல மெல்ல நம்பிக்கை ஏற்படும் என்று நம்புகிறேன். முதலில், சிறிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பற்றி இரு நாடுகளும் பேசலாம். பிறகு, பெரிய பிரச்சினைகளைப் பற்றிப் பேசலாம். இரு நாடுகளும் அமைதியாக வாழ முடியும். இது நாளைக்கே நடக்காது. ஆனால், அதுதான் இலக்காக இருக்க வேண்டும்’’ என்றார் பராக் ஒபாமா.

ஆனால், காஷ்மீர் பிரச்சினையைப் பற்றி அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. அமெரிக்கா அந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட விரும்பவில்லை என்பதை ஒபாமா கோடிட்டுக் காட்டியிருப்பதாக இங்குள்ள நோக்கர்கள் கூறுகிறார்கள். ஆனால், அமெரிக்கா நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.

இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தி என்று கூறப்படுவதை ஏற்க மறுப்பதாகக் கூறிய ஒபாமா, இ்நதியா ஏற்கெனவே வளர்ந்துவிட்ட சக்தியாக மாறியிருக்கிறது என்றும், இ்ந்தியாவின் வளர்ச்சி, அமெரிக்காவுக்கும் உலகுக்கும் நன்மையைத் தரும் என்றும் தெரிவித்தார்.

இந்தியா- அமெரிக்க உறவுகள், 21-ம் நூற்றாண்டை எந்தத் திசையில் கொண்டு செல்வது என்று முடிவெடுக்கும் ஈடு இணையற்ற உறவு என்று தெரிவித்தார் ஒபாமா

அதே நேரத்தில், இரு நாட்டு உறவின் பலன் ஒரு வழிப்பாதை என்ற அமெரிக்க மக்களின் அச்சத்தை நீக்கும் வகையில், இந்தியச் சந்தையை அமெரிக்காவுக்கு முழு அளவில் திறந்துவிட வேண்டும் என்று ஒபாமா வலியுறுத்தினார்.

BBC Tamil
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல