இதேவேளை, இவ்விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு, முன்னேற்ற நிலைமை குறித்து இலங்கையருக்கு அவ்வப்போது அறியத்தருமாறு சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு, ஆசிய மனித உரிமைகள் ஆணக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் பசில் பெர்ணான்டோ பகிரங்க கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கு ரியாத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இருந்தபோதும் பல் வேறு காரணங்களால் அவருக்கு மன்னிப்பளிக்குமாறு ஹொங்கொங்கை தளமாக கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன சவூதி மன்னருக்கும் அந்நாட்டின் உள்துறை அமைச்சருக்கும் உயிழந்த குழந்தையின் பெற்றோருக்கும் கடந்தவாரம் கடிதங்களை அனுப்பிவைத்தன.
அதேநேரம், சவூதி அரேபியாவின் ஓய்வு பெற்ற கடற்படை கொமொடோரான அப் துல் லதீரப் அல்ல்ஹிம், ரிஸானா என்ன தான் தவறிழைத்திருந்தாலும் அவருக்கு மன்னிப்பு வழங்குவதுடன் அவர் தமது நாட்டுக்கு திரும்பிச் சென்று குடும்பத்துடன் வாழ்வதற்கு சந்தர்ப்பமளிக்குமாறு கோரியுள்ளார்.
அத்துடன் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு பகுதிநேர வேலையல்ல; மாறாக அவர்கள் குழந்தைக்கு தேவைப்ப டும் எந்தநேரத்திலும் அருகில் இருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர மேலும் பல அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலரும் ரிஸானாவின் விடுதலைக்காக குரல்கொடுத்து வருகின்றன.
மீள்பசீலனை
இருந்தபோதும், சவூதி அரேபிய மன்னர் மாளிகையிடமிருந்து இக்கோரிக்கை தொடர்பான எந்தவொரு பதிலும் நேற்றுவரை வெளியாகியிருக்கவில்லை. சவூதி அரேபிய சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவன் தண்டனையை மீள் பரிசீலனை செய்வதாயின், குறிப்பிட்ட கருணை மனுவானது நீண்டதொரு செயற்பாட்டு முறைமைக்கு உட்படுத்தப்படுவது வழமை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இது குறித்து வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி கூறுகையில், சவூதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் மன்னருக்கு கையளிக்கப்பட்டமை உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.
அங்கிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அந்த கருணை மனுவை பரிசீலித்து வருவதாக இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எந் நேரத்திலும் சவூதியின் இறுதி முடிவு தொடர்பான தகவல் கிடைக்கலாம் என்றார்.
அதிருப்தி
இதேவேளை, உயிழந்த குழந்தையின் பெற்றோரை நேரடியாக சந்திப்பது சவூதி வழக்கப்படி அனுமதிக்கப்படாத விடயம் என சவூதியிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெவித்துள்ளமை தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் பசில் பெர்ணான்டோ அதிருப்தி தெரிவித் துள்ளார். இது தொடர்பாக சவூதியிலுள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஏ.ஜவாத்துக்கு பகிரங்க கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.
குழுந்தையின் பெற்றோரது மன்னிப்பை பெறுவதற்கு இலங்கை தூதரகத்துடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருதாக சவூதி அரேபிய சட்டத்தரணிகள் தெரிவித்திருந்த நிலையில், தூதரக அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது முரண்பட்ட நிலைப்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னிப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தூதரகத்தினால் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளிலேயே ரிஸானாவின் வாழ்க்கை தங்கியிருக்கின்றது.
அதேநேரம், இவ்விவகாரம் தொடர்பில் சவூதியில் ஏற்படும் முன்னேற்றங்கள் தொடர்பான உண்மை நிலையை அறிந்துகொள்ளும் உரிமை இலங்கை மக்களுக்கு உள்ளது என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, உணர்வுபூர்வமான இவ்விடயத்தில் ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் விரைந்து மேற்கொள்ளக்கூடிய மூன்று நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.
ஏ.எல்.நிப்றாஸ்
Virakesari


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக