வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

‘புலிகள் இயக்கம்: ஒரு சுயவிமர்சனம்’ :அறிக்கை -பகுதி 1

ஜனவரி 14 தைப்பொங்கல் தினத்தன்று லண்டனில் வெளியான ‘புலிகள் இயக்கம்: ஒரு சுயவிமர்சனம்’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கை இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 16 பக்கங்களுடன் சிறு கைநூலாக இப்பிரசுரம் வெளிவந்துள்ளது.

புலிகள் இயக்கத்தின் தைப்பொங்கல் செய்தி

என் இனிய தமிழ் மக்களே, எங்கள் வாழ்வே போராட்டமாகி முப்பது வருடங்கள் உருண்டோடி விட்டது. இருந்தும் எங்கள் வானில் தோன்றிய எமது விடிவெள்ளியான எங்கள் தலைவரும் இப்போது எங்களோடு இல்லை. இப்போது எங்கள் வாழ்வே இருள் சூழ்ந்து உள்ளது போல் உள்ளது. அதற்குக் காரணம் எதிரியான இலங்கை அரசு மட்டுமல்ல. எம்மத்தியில் உள்ளவர்களும் தான். ஏதிரியை இனம் காண்பது ஒன்றும் கடினமானதல்ல. ஆனால் எம்மத்தியில் இருந்து எமது மக்களுக்கு துரோகம் இழைப்பவர்களை அடையாளம் காண்பதுவே மிகவும் கஸ்டமானது. அதுவே என்னை இந்தப் பிரசுரத்தை எழுதத் தூண்டியது.

நான் மிகவும் சாதாரணமானவன். எனக்கு அரசியலின் ஆழ, அகலங்கள் – ஏற்ற, இறக்கங்கள் தெரியாது. ஆனால் நல்லது எது, கெட்டது எது என்று அறிகின்ற அடிப்படை உணர்வுகள் என்னிடம் உண்டு. நான் தலைவரை – அண்ணையை மிகவும் நேசிப்பவன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் நான் அவரோடு நின்று படம் எடுத்து பொக்கற்றினுள் வைத்துக் காட்டிப் பெருமைப்பட ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் அந்தத் தலைவனின் தலைமைப் பண்புகளை நான் மதிக்கின்றேன்.

எந்தவொரு செயலையும் செய்யும் போது தான் அதனில் சரி, பிழை காணலாம். எதுவுமே செய்யாதிருக்கும் போது சரி, பிழைக்கு இடமில்லை. தலைவரைப் பொறுத்தவரை அவர் பலதைச் செய்திருக்கிறார். அதனால் பல சரிகளும், பல பிழைகளும் ஏற்பட்டு இருக்கின்றது. அதனால் பல வாழ்த்துக்களும் கடுமையான பல விமர்சனங்களும் உள்ளது. அது இயல்பானதே. ஆதலினால் வாழ்த்துபவர்கள் அனைவரும் சரியானவர்கள் என்ற முடிவுக்கோ அல்லது கடுமையாக விமர்சிப்பவர்கள் பிழையானவர்கள், துரோகிகள் என்ற முடிவுக்கோ நாம் வந்துவிடக் கூடாது.
இவ்வாறு ஒற்றைப் பரிமாணத்தில், மிக எளிமைப்படுத்தி நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இதுகாலவரை நாங்கள் இவ்வாறு செய்ததன் பலாபலன்களையே நாங்கள் இன்று அனுபவிக்கின்றோம். சிறுவர்களாக இருக்கும் போது நாங்கள் கள்ளன் – பொலிஸ் விளையாடி இருக்கிறோம். அதற்காக இப்பவும் நாங்கள் சமூகத்தை கள்ளன் – பொலிஸாக பிரித்துப் பார்க்க முடியாது. ஏன் களவு நடைபெறுகின்றது, கள்ளன் எப்படி உருவாகிறான், எப்படி உருவாக்கப்படுகிறான், பொலிஸ் சமூகத்தில் யாருக்காக வேலை செய்கிறது, களவு என்பதனை எப்படித் தீர்மானிப்பது என்று பல பரிமாணங்களில் பார்க்க வேண்டி உள்ளது. சிறு பிராயத்தில் கூறுவது போல்; அவன் கள்ளன், இவன் நல்லவன் என்று ஒற்றைப் பரிமாணத்தில் எளிமையாகச் சொல்லிவிட முடியாது.

தலைவரையும் – அண்ணையையும் அவ்வாறான பன்முகப் பரிமாணத்திலேயே நான் பார்க்கிறேன். அப்படித்தான் பார்க்கப்பட வேண்டும். நான் அண்ணைக்கு மிக உண்மையுள்ள தம்பி. அண்ணைக்கும் எனக்கும் உள்ள உறவு நட்பும் மதிப்பும் கலந்தது. அதனால் எமக்கிடையே ஆத்மார்த்தமான ஒரு உரையாடல் வெளி இருந்தது. அண்ணை பாதி, தம்பி பாதி இரண்டும் சேர்ந்த கலவையே இந்தப் பிரசுரம். அதனால் எனதும் அண்ணையினதும் இந்தப் பார்வை எங்களது இயக்கம் பற்றிய சுயவிமர்சனமாக அமைகிறது. இதனை நீங்கள் ஆரோக்கியமாகப் பார்க்க வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் பெரியவர்கள். தமிழர்களுக்கும் வழி நிச்சயம் பிறக்கும். தமிழ் திருநாளான தைப்பொங்கல் நாளில் நாங்கள் உங்களுடன் உரையாடக் கிடைத்தது எனக்கும் அண்ணைக்கும் மிகப்பெரும் சந்தோசத்தைத் தருகிறது. இச்சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் எமது தைப்பொங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் மீது நட்பும் மதிப்பும் கொண்ட
அண்ணையின் உடன் பிறவாத் தம்பி!
தை 14, 2012

புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு …..
இந்தப் பிரசுரத்தை வெளியிடுவதே உங்களுக்காகத் தான். தாயகத்தில் இடம்பெற்ற யுத்தத்தினால் நீங்கள் பெரிதும் பாதிக்கப்படாது போனாலும் அங்கு உங்களுக்கு என்றொரு முக்கிய பாத்திரம் இருந்தது. போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இந்தியா போராட்டத்தின் பின் தளமாக இருந்தது. அதுவே போராட்டம் அதன் ஆரம்பத்திலேயே தடம்புரளக் காரணமாக இருந்தது.

போராட்டத்தின் பின்னைய காலகட்டங்களில் மேற்கு நாடுகள் போராட்டத்தின் பின்தளமாக மாறின. மேற்கு நாடுகளில் வாழ்ந்த மக்கள் போராட்டத்திற்கு கணிசமான பங்களிப்பை பல்வேறு வழிகளிலும் மேற்கொண்டனர். மேற்கு நாடுகளில் இருந்து வழங்கப்பட்ட பொருளாதாரப் பங்களிப்பு அளப்பெரியது. இந்தப் பொறுளாதாரப் பங்களிப்பு போராட்டத்திற்கு உதவியது போல எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தயது.

பொருளாதாரப் பங்களிப்பைப் பெறுவதற்காக எமது இயக்கம் பல சமயங்களில் புலம்பெயர்ந்த பொருள்தருவோருக்கு ஏற்ப தாளம்போட வேண்டியும் இருந்தது. அதேசமயம் புலம்பெயர்ந்த படித்தவர்கள், ஆய்வாளர்கள், நிபுணர்கள் போன்றவர்களை நம்பியும் செயற்பட வேண்டி இருந்தது. புலம்பெயர்ந்து வாழும் ஊடகங்கள் எமது இயக்கத்தைப் பற்றிக் கட்டி எழுப்பிய விம்பங்களைக் கட்டிக்காக்க வேண்டியும் இருந்தது. இவ்வாறான பல விடயங்கள் இன்றைய நிலைக்கு வித்திட்டன.

அதனால் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நீங்கள் கடந்த காலம் பற்றிய ஒரு சுய விசாரணையை உங்களுக்குள் ஆரம்பிக்க வேண்டும் என்பது அண்ணையின் விருப்பம். அண்ணை இங்கு பல விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி என்னைக் கேட்டு இருந்தார். அதனாலேயே நான் அண்ணையின் ஆசீர்வாதத்துடன் உங்களிடம் வந்துள்ளேன்.

அண்ணை உங்களுக்குச் சொன்னதெல்லாம் இதுவரை தான் செய்ய அனுமதிக்காததை, நீங்கள் செய்யாததை, இனிச் செய்ய மறக்க வேண்டாம் என்பதே. “சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! சிந்தியுங்கள்!!!”

தமிழர் விடுதலைக் கூட்டணி …..
நம் மக்கள் என்றோ நிரந்தர சமாதானத்துடன் பொருளாதார வளர்சியுடன், கல்வி மேம்பாட்டுடன் திகழ்ந்திருப்பார்கள். ஆனால் இந்தச் செல்வா, அவர் தான் தந்தை செல்வநாயகம். அவரும் தமிழரசுக்கட்சியும் பிறகு அமிர்தலிங்கமும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இல்லாவிட்டால் எங்கள் மக்கள் எவ்வளவோ நிம்மதியாக இருந்திருப்பார்கள்.
இவர்கள் அன்றைய சிங்கள அரசியல் வாதிகளுடன் ஒரு கோப்பைக்குள் சாப்பிட்டனர். ஆனால் கைகழுவி வெளியில் வந்து சிங்களவனின் முதுகுத் தோலை உரித்து செருப்புத் தைத்துப் போடப் போவதாக சூழுரைத்தனர். இவர்களது உணர்ச்சிப் பேச்சில் கொதித்து எழுந்து தான் அண்ணையும் இயக்கத்தைத் துவங்கினார். இந்தக் கூட்டத்தில் ஆனந்தசங்கரி ஐயாவும் சம்பந்தன் ஐயாவும் சேனாதி ஐயாவும் தான் இன்றைக்கு மிஞ்சி போயிருக்கிறார்கள்.

அண்ணை என்னிடம் சொன்னார்; ‘இப்ப நான் கனபேரை போட்டது பிழையென்று வருந்துகிறேன்’ என்று. ‘ஆனால் பழைய கூட்டணி காறரைப் போட்டது சரி’ என்று தான் அண்ணை சொல்கிறார். ‘இன்றைய எமது சீரழிவுக்கு அமிர்தலிங்கமும் அவரது கட்சியாக்களுமே பொறுப்பேற்க வேண்டும்’ என்று அண்ணை எனக்குச் சொன்னார். ‘ஒன்றுமே தெரியாத தனக்கு துரையப்பாவை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லிச் சொல்லி கொல்ல வைத்ததும் பின் எங்களுக்கு தனித் தமிழ்நாடு வேண்டுமேன்று உசுப்பேத்தி, சிங்களவருக்கு மேலே பகை வெறியை ஊட்டியதும் இவையள் தான்’ என்றும் அண்ணை அடிக்கடி சொல்வார்.

நடந்து முடிந்த யுத்தத்தில் 40,000 உயிர்கள் இழக்கப்பட்டு விதைவைகளாக, ஊனமுற்றவர்களாக வாழ வழியில்லாமல் ஆமியின் கெடுபிடிகளுக்கு இடையில் சிக்குண்டு தவிப்பதற்கு முழுமுதல் காரணம் இந்தக் கூட்டணி அரசியல்வாதிகள் தான்.

அவர்கள் போதாது என்று இப்ப காசி ஆனந்தன் திரும்பிக் கிளம்பி இருக்கிறார். காசி ஆனந்தனை இனி உந்த சொத்திக் கதைகளைக் கதைக்க வேண்டாமென்று சொல்லுங்கோ. அவருக்கு இன்னமும் கூட்டணி காலத்தில் வாழ்வதாக நினைப்பு. இவர்கள் இப்படி கதைக்கக் கதைக்க விடுபட்ட புலிகள் மீண்டும் கைது பண்ணப்படுவார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு …..
தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்பது என்னவென்றால் வாக்குப் போட்ட அந்த மக்களுக்கு கொஞ்சமாவது உண்மையாக இருங்கள். எப்போதும் உங்களை நம்பி வாக்கு போட்ட தமிழினத்தின் சீரழிவை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன அரசாங்கத்துடன் கதைத்தீர்கள், என்ன கதைக்கப் போகிறீர்கள் என்பவற்றை உங்களின் எல்லா அங்கத்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களிடமும் ஆலோசனைகளை கேளுங்கள்.

தொடர்ந்து பேசுங்கள். உங்கள் பேச்சுவார்தை முறிந்தால் உங்கள் கோரிக்கைகளை வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருங்கள். எங்களுக்கு ஆதரவான சிங்கள மக்கள் மத்தியில் சென்று உண்ணாவிரதம் இருங்கள். அந்த மக்களை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக வென்றெடுங்கள்.

தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தது போன்ற தியாகத்தை உங்களில் ஒருவர் செய்ய வேண்டும். தியாகி திலீபனைத் தொடர்ந்து இன்னுமொருவரை உண்ணாவிரதம் இருத்தி இருந்தால் அன்று நிலைமைகள் சிலவேளை மாறி இருக்குமோ என்றும் அண்ணை பின்னாட்களில் யோசித்து இருந்தார்.

சம்பந்தன் ஐயாவும் அவர் வளைத்துப் போட்ட காணிகளும் …..
இப்பவும் சம்பந்தர் ஐயா இதைத்தான் செய்கிறார். திருகோணமலையில் உள்ள காணிகளை வளைத்துப் போட்டார். இப்ப அவருக்கு குடும்பத்தில் யாரும் திருகோணமலையில் இல்லை. இலங்கையிலும் இல்லை. ஆனால் வளைத்துப் போட்ட காணிகளில் இருக்கும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கிறார். அந்த நேரம் அண்ணை எங்கட தமிழ் நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களில் பறிபோகக் கூடாது என்று தமிழ் மக்களுக்கு அந்த நிலங்களை வழங்கி இருந்தார். அப்ப எதுவும் செய்ய முடியாது இருந்த சம்பந்தன் ஐயா, இப்ப எழும்பி நின்று ஆடுகிறார். இப்ப அந்தச் சனங்களை இலங்கையின் சட்டத்தை வைத்து மிரட்டுகிறார்.

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா? …..
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்கின்ற மாகாணசபை காணி, பொலீஸ் அதிகாரம் நியாயமானது. ஆனால் ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்க வேண்டும் என்று நினைக்கிறது. யாழ் எம் பி க்கள் தவறணை வைக்கவும், அதிகாரம் செய்யவுமா? பிரேமச்சந்திரன் மட்டக்களப்பில் தவறனை நடத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே பேச்சு அடிபடுகின்றதே.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி என இரு தமிழ்பேசும் மாநிலங்கள் இரு சகோதரிகளாக திகழ்கின்றதே. அதேபோல் வடக்கும், கிழக்கும் திகழ்வதில் என்ன பிழை? இரு மாநிலங்கள் இரு தமிழ் முதலமைச்சர்கள் நல்லது தானே.
கிழக்கு மக்களை அந்த மக்களே ஆளட்டுமே. மட்டக்களப்பையோ வன்னியையோ பூர்வீகமாகக் கொண்ட ஒரு தமிழன் வடமாகாணத்து முதலமைச்சராக வரும் அளவுக்கு அரசியல் சிந்தனை மாறும் போது வடக்கையும் கிழக்கையும் இணைக்கலாம்.

முஸ்லீம்கள், மலையகத்தவர்கள் …..
இலங்கையில் சிங்கள, தமிழ் இனத்தவரின் கலாச்சாரம் அவர்களின் இனத்துக்கும் சமயத்துக்கும் இடைப்பட்டவை. ஆனால் முஸ்லீம் இனத்தவரின் கலாச்சாரம் அவர்களின் மதத்தை மாத்திரமே சார்ந்ததாகும். முஸ்லீம் நாடுகளில், கடுமையான மதரீதியான கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் காணப்படுகின்றது.

இலங்கை முஸ்லீம்களை எடுத்தால் அவர்களின் மதக்கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதில் தடையில்லை ஆதலால் முஸ்லீம் கட்சிகள் பெரும்பாலும் சலுகைகளை மாத்திரமே அரசிடம் எதிர்பார்க்கின்றனர். எந்தக் கட்சி ஆட்சி செய்கிறதோ அதுதான் அவர்களின் கட்சி. முஸ்லீம் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்களது அகராதியில் கொள்கை என்ற சொல்லு இருப்பதே அவர்களுக்குத் தெரியாது. இவர்கள் அண்ணையின் கீழ் தமிழர்கள், மகிந்தவின் கீழ் சிங்களவர்கள்.

இதே நிலைதான் மலையக அரசியல் கட்சிகளினதும் நிலை. ஆறுமுகம் தொண்டைமான் கூறியது போல, ‘நாங்கள் எப்பவும் அரசாங்கத்தில் தான் இருக்கிறோம். ஆனால் அரசாங்கம் தான் மாறிக்கொண்டிருக்கிறது’’ என்று. முஸ்லிம் தலைவர்கள் தங்கள் இனத்தவர்களுக்கு சில சலுகைகளையாவது பெற்றுக்கொடுக்கிறார்கள். ஆறுமுகம் தொண்டைமான் ஒரு கருங்காலி. தன்னுடைய மக்களுக்கு எதுவுமே செய்வதில்லை.

இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர் என்பதால் முஸ்லீம்களின் தாய்மொழி தமிழாக இருந்த போதும், அவர்கள் சிங்களத்தையும் கற்றுள்ளனர். முஸ்லீம், மலையகக் கட்சிகள் மேற்கொள்கின்ற அரசியல் தேர்ந்த அரசியல் இல்லாவிட்டாலும் அவர்கள் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அழிவைச் சந்திப்பதில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொண்ட தொண்டைமான் தமிழீழப் பிரகடனம் செய்ய முற்பட்ட போது கூட்டணியில் இருந்து வெபளியேறினார். அன்று தொண்டைமான் கூட்டணியுடன் நின்று இருந்தால் மலையகத் தமிழர்களும் அழிவுக்கு உள்ளாகி இருக்கலாம்.

அரசாங்கம்….
இலங்கை அரசாங்கம் தற்போது தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி ஒரு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தாவிட்டால், அது அரசாங்கம் இழைக்கும் மிகப்பெரிய தவறாகும். சர்வதேச நாடுகளுக்கே பணியாத இலங்கை அரசாங்கத்திற்கு தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ருவதில் எந்தவித நிர்பந்தமும் இல்லை.

மாறாக அரசாங்கம்ஆமியின் கெடுபிடியை அதிகரித்தும், கூட்டுக் குழுக்களின் (ஈபிடிபி) கடத்தல்களையும் கொலைகளையும் ஆதரித்தும் மக்களின் மனதில் வெறுப்புணர்சிகளை ஏற்படுத்துகிறது. உதாரணமாக மாவீரர் தினத்துக்குத் தடை, அத்துமீறிய குடியேற்றம், குடியேறிய தமிழர்களை அகற்றுதல் போன்ற செயல்களால் தமிழர்களிடம் கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தி அவர்களிடையே மீண்டும் எழுச்சியை இந்த அரசாங்கமே உருவாக்குகிறது.

இயக்க உறுப்பினர்களை புனர்வாழ்வு கொடுத்து விடுகிறார்கள். பிறகு அவர்களை கைது செய்கிறார்கள். இது என்ன கண்ணாமூச்சி விளையாட்டா? திட்டமிட்டு ஆமியின் நடமாட்டத்தை எல்லா நகரங்களிலும் மிகைப்படுத்தி என்றுமே இல்லாத வகையில் எமது கலாசாரத்தை சிதறடிக்கிறார்கள்.

போரினால் வென்றதால் அட்டகாசம் புரியாமல், ஒரு நிரந்தரத் தீர்வை தமிழ் மக்களுக்கு அளிப்பதால், இலங்கையின் சுபீட்சத்துக்கும், இலங்கை மக்களின் சிறந்த எதிர்கால வாழ்வுக்கும் வழிவகுத்த பெருமை அரசாங்கத்தைச் சாரும். அதனை செய்வதில் இந்த அரசாங்கத்துக்கு என்ன தயக்கம்?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் …..
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்று உருத்திரகுமாரன் தலைமையில கொஞ்சப்பேர் கும்மாளம் அடிக்கினம். இது 23ம் புலிகேசியின்ர அரசாங்கம் போலத்தான், காமடி செய்யும் கூட்டம். ஆனால் கதையளப்புக்கு குறைவில்லை. மனைவிமாரும், தாய்மாரும் தங்கள் தாலிகளைக் கழற்றி இவையிட்ட கொடுக்கினமாம். கிட்டத்தில வடிவேலுவின்ர படம் ஒன்று பார்த்தன், அதில வடிவேலு கடவுளைக் காட்டுவதாக சனத்திடம் பணம் வசூல் பண்ணி மலையடிவாரத்துக்கு சில பேரைக் கொண்டு போகிறார். மலையடிவாரத்தில் வடிவேலுவும் அவரின் கூட்டமும் தாங்கள் கடவுளைக் கண்டதாக கூறினார்கள். பணம் கொடுத்தவர்கள் எங்கே என்று கேட்க “எவன்ர மனைவி சுத்தமாக இருக்கிறாளோ அவருக்குத்தான் கடவுள் தெரியும்“ என்பார் வடிவேலு. அப்போது எல்லோரும் தாங்கள் கடவுளைக் கண்டதாக கூறினார்கள்.

எங்கடை உருத்திரகுமாரனதும் அவரின் கோமாளி எம்பி க்களின் கதையும் அப்படித்தான். இந்தக் கதையை அதாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கதையை எழுதி இயக்கியவரும் ஒரு கவிஞ்ஞராம். இவர் சொத்திக் கவிஞரல்ல கன்னிராசிக் கவிஞ்ஞராம். அவரும் சுனாமி அடித்ததில் பல்டி அடித்து எங்கட இயக்கத்தில் சேர்ந்தவர். கே பி யை மலேசியா போய்ச் சந்தித்து, நாடு கடந்த அரசாங்கத்தை கே பி க்கு திட்டம் போட்ட கொடுததவர். அண்ணைக்கு பாலா அண்ணை இருந்தது போல இவர் கே பி க்கும் உருத்திர குமாரனுக்கும் மதியுரைஞர். பாலா அண்ணைக்குப் பிறகு இவர் அண்ணைக்கு மதியுரைஞராக வரக் கனவுகாண்பதாக நான் கேள்விப்பட்டனான். என்ரை மாவீரர் தின உரையை தமிழில் மொழிபெயர்த்தவர்களில் இந்தக் கவிஞரும் ஒருவர்.

இந்த நாடுகடந்த தமிழீழ கோஸ்டி ராமேஸ்வரம் கூட்டிக்கொண்டு போய் உங்களுக்கு கச்சதீவைக் காட்டித் தமிழீழம் என்று சொல்வார்கள். அங்கிருந்து கே பி கை காட்டுவார். நீங்களும் இலங்கையை விட்டு வந்து பல வருசமாய் போட்டுது, அதால அதையே தமிழீழம், தமிழ்தாய் என்று நம்பிவிடாதீர்கள். கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏரோப்பிளேன் ஒட்டும் என்று சொல்ல இந்த நாடு கடந்த தமிழீழக் கோஸ்டி தயங்காது. அதிலை இருப்பவையள் கஞ்சாக்காறர்கள், மொள்ளமாரிகள், முடிச்சவிக்கிகள் என்றதை மறந்திட வேண்டாம்.

ஜி ரிவி …..
மாவீரர் தினத்தன்று ஜி ரிவி ஜெகன், தினேஸ் போன்றவர்கள் ஊடக தர்மத்தைப் புறக்கணித்து தாங்கள் நாடுகடந்த அரசைப் பூரணமாக ஆதரிப்பதாக அறிவித்தார்கள். இவர்களின் மற்றைய பாதிமுகம் எப்போது உடைபடுகிறதோ அன்று கபட நாடகம் ஆடும் ஜி ரிவி இன் சரித்திரம் முடியும். “ஜி ரிவி கே பி இன் ரிவி என்றா சொல்ல வருகிறீர்கள்” என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. பதில், “ஆம்! ஆம்!! ஆம்!!!”

நீங்கள் நினைக்கலாம் கேபி இலங்கையில் இருந்து கொண்டு இதல்லாம் செய்யலாமா என்று. செய்யலாம். உதாரணமாக ஐஎல்சி ரேடியோ பணக் கஸ்டத்தினால் திணறிக் கொண்டு இருக்கிறது. இதனை அறிந்து கேபி இந்த றேடியோவை வாங்க முன் வந்திருக்கிறார்.

ஜி ரிவி யும் தலைமைச் செயலகமும் …..
யார் இந்தத் தலைமைச் செயலகம் தெரியுமா? ஸ்கந்தா, சுகந்தகுமார், புவி, விமல், பத்தர் இனியும் வரும்.
ஜி ரிவி இன் மாவீரர்தின விளம்பரங்களை ஊன்றிக் கவனித்தால். தொடக்கத்தில் ஒரு மாவீரர் தினம், ஒரேயொரு இடத்தில் தான் நடைபெறும் என்றார்கள். பின் ஒரு பாக்கில் எல்லோரும் ஓன்று கூடி நடத்துகிறோம் என்றார்கள். ஆனால் நடத்துவது தலைமைச்செயலகம் என்று அத்தனை தமிழர்களுக்கும் வெட்டவெளிச்சமாக தெரியும். வேறு ஆறு இடங்களில் அனைத்துலக செயலகம் நடத்தியதும் ஜி ரிவி க்குத் தெரியும். அனைத்துலக செயலகத்தின் மாவீரர் நிகழ்வுகள் ஆறு இடங்களில் நடக்குது என்றும் அவர்களுக்குத் தெரியும். மாவீரர் தினம் முடிந்த இரவில் ஜி ரிவி இல் தோண்றிய தினேஸ், ஜெகன் என்ன கூறினார்கள் என்பதைப் பார்ப்போம்.

ஜெகன் இப்படிச் சொல்கிறார், “அனைத்துலகச் செயலகம் இந்த முறை 6 இடங்களில் வைத்தார்கள். அடுத்த முறை 10 இடங்களில் வைப்பார்கள். இதையெல்லாம் நாங்கள் சொல்ல முடியுமா?”. இது ஒரு ஊடகவியாளரின் பதிலா?
தினேஸ் ஒரு படி மேலே சென்று ஒரு உண்மையை ஏற்றுக்கொண்டார். அதாவது “ஜி ரிவி முழுமையாக நாடு கடந்த அரசாங்கத்தை ஆதரிக்கிறது” எனக்கூறினார். ஜி ரிவி முழுமையாக கேபி யின் ரிவி என ஒப்புக்கொண்டார்.
இதன் பின்னனி என்னவென்றால் ஜி ரிவி உரிமையாளர் செல்வி அண்ணா கே பி யின் நெருங்கிய நண்பர். அவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம்பி. அவுஸ்ரேலியாவில் வாழ்கிறார். இனி ஜி ரிவி யை நாங்கள் கே ரிவி அல்லது கேபி ரிவி என்று அழைப்பதே பொருத்தம்.

தலைமைச் செயலகம் …..
கேபி யின் கீழ் றெஜி என்று அறியப்பட்ட பிறேம்றெஜி, விநாயகம், பாண்டியன் ஆகியோரின் கூட்டாக தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டது. இவர்களினால் முன்னணியில் விடப்பட்டவர் தான் சங்கீதன் எனும் தயாபரன்.
இதில் விநாயகம் பொட்டம்மானின் பிஏ ஆக இருந்தவர். இவர் போர்க் காலங்களில் மட்டக்களப்பில் இருந்து மலேசியாவிற்கு சென்று பின் பிரான்ஸ் ஐ வந்தடைந்தார். விநாயகத்தின் மனைவி, பிள்ளைகள் கொழும்பில் இராணுவத்தின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். விநாயகத்திற்கு அரசாங்கம் அவரின் குடும்பத்துடன் ஒவ்வொரு நாளும் தொடர்புகொள்ள வசதிசெய்து கொடுத்திருக்கின்றது.

விநாயகம் மலேசியாவில் இருந்த சமயம் ஒரு காலை இழந்த பாண்டியனும் மலேசியாவில் இருந்தார். இவர் இயக்கத்திற்கு பொறுப்பாக இருந்தவர். பாண்டியன் மலேசியாச் சொத்துக்களுடன், கடைசிக் காலங்களில் கிளிநொச்சி ஆதரவாளர்களின் பெருமளவு பணத்துடன், இப்போது நியுசிலான்தில் வசிக்கிறார்.

பாண்டியன் மலேசியாவில் இருக்கும் போது பசிலுடன் தொடர்பு கொண்டு கேபி யுடன் சேர்ந்து புலிகளின் கப்பல்களைக் காட்டிக்கொடுத்தவர். தலைவரால் அழைக்கப்பட்டு தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பிறேம்றெஜி இன் அண்ணா அரி தலைவரின் மெய்க்காப்பாளராக இருந்து வீரமரணமடைந்தவர்.
வழக்கம்போல அப்போதைய ரிஆர்ஓ தலைவர் ரவி அண்ணையுடன் தமிழ்செல்வனுக்கு முறுகல் ஏற்பட
பிறேம்றெஜியை தமிழ்செல்வன் ரிஆர்ஓ தலைவர் ஆக்கினார்.

வணங்காமண் கப்பல் …..
வணங்காமண் கப்பலில் பிறேம்றெஜி சாமான்களை கொண்டு வருமாறு பணிக்கப்பட்டார். இதனால் வணங்கா மண்ணின் எல்லா பொறுப்பையும் பின்னால் இருந்து றெஜி தான் செய்தார். எதிர்வீரசிங்கம் என்ற இளைஞர் பெயருக்கு முன்நிறுத்தப்பட்டார். பிறேம்றெஜியின் திறமையினால் தான் வணங்காமண் க்கு எக்கச்சக்கமான செலவுகள் வந்தது. கடைசியில் பெருமளவு சாமான்கள் பழுதான நிலையிலேயே போய்ச் சேர்ந்தன.
இவர் இப்போது பினாமி வீட்டில் வசிக்கிறார். இவருக்கு ரிஆர்ஓ மலேசியாவில் இருந்து பணம் வருகின்றது. இவர் சமீபத்தில் தனது 11 சகோதரர்களை இலங்கையில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் பிரான்ஸ்சிற்கு அழைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல கனடாவிற்கு அகதியாகப் போகும் ஒவ்வொருவரும் இவருக்கு 5000 பவுண் கப்பமாக கொடுக்க வேண்டும். இல்லையேனில் அவர்களின் உறவினர்கள் அச்சமுறுத்தப்படுவார்கள்.

கே பி …..
காலம்காலமாக தலைவரையும் பொட்டுஅம்மானையும் ஏமாத்தி இருக்கிறார். இவரின் சுயரூபம் தெரியாமல் தலைவர் இவரை மீண்டும் சர்வதேச பொறுப்பாளராக நியமித்தது மூலம் வெளிநாட்டுப் புலி இயக்கத்திற்குள் பெரும்பிளவு ஏற்பட்டது. போருக்கு முன் ஆயுதக் கொள்வனவு செய்வதாகப் பெருமளவு பணத்தைப் பெற்று, வெறும் கப்பல்களை அனுப்பி சிறிலங்கா இராணுவத்தின் உதவியால் அவற்றை நடுக்கடலில் மூழ்கடித்தார். புலிகளின் ஆயுதப் பலத்தை முற்றாக உடைத்தார்.

போருக்குப் பின் தனது புதிய பதவியை வைத்து வெளிநாட்டு புலித் தலைவர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பார்த்தார். இவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட அனைததுலகச் செயலகமும், நெடியவன் குழுவினரும் கே பி உடன் கைகோர்க்க மறுத்தனர். கடைசியாக கடத்தல் என்றும் கபட நாடகமாடி, உலகத்தில் உள்ள அத்தனை தமிழ் மக்களையும் ஏமாத்திய பெருமை கே பி யையேசாரும்.

கே பி யினால் தொடங்கப்பட்ட நாடு கடந்த அரசாங்கத்தை ஆரம்பித்ததும் இப்போது அதனை நடத்துவதும் கேபி தான். உருத்திரகுமாரன், சர்வே, சேகர், பிறேம்றெஜி ஆகியோர் இவருடன் நெருங்கிய தொடர்புடன் இருக்கிறார்கள்.
நாடு கடந்த அரசாங்கத்தின் நோக்கம் பிரிஎப், ஜிரிஎப் இன் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதே.

அனைத்து உலகச் செயலகத்தினருக்கு …..
நான் உங்களுக்குக் கூறுவது என்னவேன்றால், கடந்த 30 வருட போராட்டத்தை நீங்கள் மிக ஆழமாக மதிப்பீடு செய்யுங்கள். உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள், வெறுப்புகள், தனிமனித கோபதாபங்களை ஒருபுறம் தள்ளிவிட்டு உங்கள் மதிப்பீட்டைச் செய்யுங்கள். வெறும் வெற்றுக் கோசங்கள், வரட்டுத் தனமான கோரிக்கைகளை விட்டுவிட்டு யதார்த்தமாகச் சிந்தியுங்கள்.

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தாயகத்தில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்படவில்லை. பலஸ்தீனம் போன்ற கோரமான யுத்தம் நடக்கின்ற நாடுகளில் நீங்களோ, உங்கள் பிள்ளைகளோ பயிற்சிக்குப் போய் உங்கள் போராட்டத்தை அனுராதபுரியில் நடத்துங்கள். எங்களிடம் கொடுக்க ஒன்றும் இல்லை எங்களைச் சும்மா இருக்கவிடுங்கள்.

தனிநாடு பிடிப்போம், தமிழீழம் அமைப்போம் என்று லண்டனிலும் ரொறன்ரோவிலும் இருந்து கொண்டு பொங்கியெல்லாம் எழ வேண்டாம். இன்றைய யதார்த்தம் தனிநாடு என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதே. இனியும் எம் மக்கள் ஏமாறத் தாயாரில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மாவீரர் குடும்பங்களுக்கு உதவுங்கள் …..
தாயக மக்கள்தங்கள் உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து நிற்கிறார்கள். ஆனால் வெளிநாட்டு இயக்கத் தலைமைகளான நீங்கள் புலம்பெயர்நாடுகளில் நம்பிக்கையையும் நேர்மையையும் இழந்து நிற்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதை திரும்பப் பெறவேன்டுமானால் புலிகள் இயக்கத்தின் அனைத்து சொத்துக்களையும் நிதியையும் உங்கள் உறுப்பினர்களிடம், ஆதரவாளர்களிடம் இருந்த மீளப்பெற்று அவற்றில் இருந்து வரும் நிதியை தாயகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாவீரர் குடும்பத்திற்கு சாத்தியமான வழிகளில் அனுப்பி வையுங்கள்.

கல்வியும் பொருளாதார வளர்ச்சியும் …..
இப்போது எமக்கு என்ன வேண்டும் எனறால், நம் மக்கள் தாயகத்தில் கல்வியிலும். பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள். இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நெருக்கடிகளைக் கொடுத்து பிரிஎப் ஊடாக எமக்கு நிரந்தரத் தீர்வையும், நிரந்தர சமாதானத்தையும் பெற்றுத் தாருங்கள். அவையளும் தங்களிடம் இருக்கின்ற இயக்கத்தின் சொத்துக்களை தாயகத்தில் பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கி முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும்.

http://thesamnet.co.uk/?p=32824

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல