வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

‘புலிகள் இயக்கம்: ஒரு சுயவிமர்சனம்’ :அறிக்கை -பகுதி 2

புலம்பெயர்ந்த தமிழ் மக்களே!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அண்ணையின் அனுமதியுடன், அவரின் கருத்துக்களை உங்கள் முன் எடுத்து வருகிறேன். நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல அண்ணையை நான் பன்முகப் பரிமாணத்திலேயே பார்க்கிறேன்.

அண்ணை தற்போது மனம் உடைந்து, செய்வது அறியாது, மிகவும் குழம்பிய நிலையில் இருக்கிறார். என்றாலும் மிகச் சிரமத்திற்கு பின் முதல்தரமாக அண்ணை மனம் திறந்து கோபத்துடனும் வேதனையுடனும் பல விடயங்களையும் கதைத்தார். அதில் அண்ணை தான் பல பிழைகளை விட்டுவிட்டதாகச் சொன்னார். அவற்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
எனக்கு தமிழீழம் காண வேண்டும் என்ற வெறி இருந்தது உங்களுக்குத் தெரியும். அதனால் நான் பல நல்லது கெட்டதுகளைச் செய்திருக்கிறேன் என்பதை இப்போது உணர்கிறேன். ஆனால் இந்தக் கேடுகெட்ட தமிழ்ச் சனத்தை நம்பியா போராட்டம் தொடங்கினன் என்றும் சிலசமயம் மன வருத்தப்பட்டும் இருக்கிறன்.

கே பி என்ற பச்சைத் துரோகியின் கபட நாடகத்தை, இரட்டை வேடத்தை அறியாமல் இயக்கத்தின் அழிவுக்கு வழிவகுத்து விட்டேன். இதைவிட மாபெரும் பிழை இந்த எட்டப்பனை மீண்டும் சர்வதேச பொறுப்பாளராக நியமித்ததன் மூலம் வெளிநாட்டு இயக்கவலையும் கூறு கூறாக பிரிந்து போகக் காரணமாகி விட்டேன். ஆனால் இதில் ஒரு நன்மையும் இருக்கு. ஆரோ ஸ்கந்தாவாம், சுகந்தனாம், புவியாம், பத்தராம் இவர்களின் இரட்டை வேடம் கலைந்து முகத்திரை கலைக்கப்பட்டதை தம்பி முன்னமே சொல்லி இருக்கிறான்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
துஸ்டரைக் கண்டால் தூர விலகு என்று சொல்வார்கள். அப்படி இவர்களைக் கண்டால் மற்றப் பக்கம் திரும்பிச் செல்லுங்கள். வியப்பு என்னவென்றால் இவர்கள் எல்லாம் என்னை வந்து சந்தித்தவர்களாம் எனக்கு ஞாபகமில்லை.
ஆனால் ஆணிவேர் படம் பார்த்து இருப்பியல். அதுக்கு காசு போட்ட ஒருத்தரும் என்னை வந்து பார்த்து என்னோட நின்று படமும் எடுத்தவர். அந்தப் படத்தை லண்டனில உங்களுக்குக் காட்டிக்கொண்டும் திரிந்தவராம் என்று தம்பி தகவல் அனுப்பி இருந்தவன். அவர் ஒரு மன்மதக் குஞ்சு என்று இப்ப கேள்விப்படுகிறன். இப்ப யாழில் ஹொட்டல் கட்டி அங்கேயே தங்கிவிட்டாராம். கருணா, ஆமித் தளபதிகள் தானாம் அவற்றை நட்பு. யாரோடையும் நட்பாய் இருக்கலாம். என்னத்துக்கு அந்த நட்பு என்றது தான் முக்கியம். இந்த வியாபாரியள் இப்ப ஹொட்டலில என்ன வியாபாரம் செய்வினம் என்று நாங்கள் விலாவாரியாகச் சொல்ல வேணுமோ?

என்னோட எடுத்த அந்தப் படத்தை அந்தாள் இப்ப என்ன செய்துதோ தெரியவில்லை. இவையளை நம்பி நான் போராடிய போராட்டம் வென்றிருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். விதி யாரைவிட்டுது என்னையும் விடவில்லை. ஹொட்டல் காரரின் சொந்தத் தம்பியும் எங்கட இயக்கத்துக்கு ஆதரவானவர் என்று சொல்லக் கேள்வி. ஆன அவர் இப்ப எந்தப் பக்கம் என்றதிலை அவருக்கே குழப்பமாம். எனக்கு இருக்கிற குழப்பத்துக்குள்ள இது வேறை. அந்த ஆராய்ச்சி இப்ப வேண்டாமே.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
நான் ஒரு கட்டத்துக்குப் பிறகு இயக்க வேலையளை எனக்கு நம்பிக்கையான ஆக்களிட்ட பிரிச்சுக் குடுத்திட்டன். பொட்டர், கஸ்ரோ, தமிழ்செல்வன், கிட்டு ஆகியோரை தன்னிச்சையாகச் செயல்படவிட்டது பிழையாப் போச்சு. பொட்டரிட்டை ஒரு மாற்றுத் திட்டமே இல்லை என்று எனக்கு மே 17 2009 அன்று தான் தெரிந்தது. 2006 – 2007ல் எம்மிடம் ஆயுதப்பலமே இல்லையென்று பொட்டர், கஸ்ரோ, தமிழ்செல்வன் ஆக்களுக்கு நன்றாகத் தெரியும். அதை எனக்கு வடிவாக எடுத்துச்சொல்லி சமாதானம் தான் ஒரே வழி என்றால் நானும் பேசாமல் சமாதானத்தை எடுத்திருப்பேன்.

இவர்களுக்கு மட்டுமல்ல சம்பந்தன் ஐயா கோஸ்டிக்கும் இந்தியாக்காரன்கள் எங்களைத் துலைக்கப் போறான்கள் என்ற விசயம் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டு இருக்குது. என்ன இருந்தாலும் சிவாஜிலிங்கம் என்ர ஊர்க்காரன் சொந்தக்காரன் என்றதால அவனுக்கு சதையாடிச்சு. உவர் சம்பந்தன் ஐயா வந்து எனக்கு என்ன நடக்கப் போகிறது என்றதை எடுத்துச் சொல்லி இருக்கலாம் தானே. தம்பி எப்ப துலைவான் திண்ணை எப்ப காலியாகும் என்று இருந்திருக்கிறார். நாங்களும் அவைக்கு நிறையப் பிழையளைச் செய்துதான் இருக்கிறம். அதுக்காக இப்படிச் அப்பாவிச் சனங்களையும் எங்களோடு சேர்த்து பழிவாங்கி இருக்கக் கூடாது.

நாங்கள் மிகப்பலமாக இருக்கையில் எத்தனை சந்தர்ப்பங்களை நழுவவிட்டு விட்டோம். அதனை நினைத்து இரவு பகலாகப் பொங்கி வெடிகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்ப நாங்கள் வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறேன். பழம் நழுவிப் பாலில் விழும் நிலையில் இருந்ததை கெடுத்துவிட்டு நிற்கிறோம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
பொட்டன், ராஜீவ்காந்தியை கொல்ல திட்டம்போட்டு அனுமதி கேட்டான். நானும் என்னை சிறைபிடித்தவன் என்ற ஆத்திரத்தில் இவன் ரஜீவனுக்குச் செய்யிறன் வேலைபார், என்று யோசிக்காமல் ஓம் என்று சொல்லிவிட்டேன். இதனால் எமது இயக்கமே இந்தியாவால் அழிக்கப்படும் ஆபத்தை என்னுடன் திட்டம் போட்டவர்கள் யாரும் சொல்லவில்லை. உங்களுக்கு இரண்டு உண்மைகளை இங்கு சொல்ல விரும்புகிறேன். ராஜீவ் காந்தியை யாருக்கோ ஆகவும் காசுக்காகவும் தான் போட்டோம். அதேபோல கதிர்காமரையும் எங்கள் அமைப்பை உலக நாடுகளில் தடைசெய்ய நடவடிக்கை எடுத்ததற்காகவும் காசுக்காகவும் தான் போட்டோம். இதற்கு பின்னால் யார் இருந்தது என்று இப்ப கூறமுடியாது.

என்னைப் பொறுத்தவரை ராஜீவ் கொல்லப்பட வேண்டியவர் தான். ஆனால் இப்படி எல்லாம் பிற்காலத்தில் நடக்கும் என்று தெரிந்திருந்தால் உந்த வேலைக்கு போயிருக்க மாட்டேன். இந்தப் பொட்டர் கெட்டிக் காரணாக இருந்து இருந்தால் ஒரு சீக்கியனைக்கொண்டு ரஜீவின் கதையை முடிதிருக்கலாம் தானே? இந்தக் கெட்டித்தனத்தால் தான் பொட்டரை புளொட்காரர் கோழிக்குஞ்சை பிடிக்கிற மாதிரி தமிழ்நாட்டில் வைத்து அப்பினவங்கள். ஏதோ என்ர கெட்டகாலம் கஸ்ரப்பட்டு மீட்டாச்சுது. கருணாவுக்கு பிரியும் எண்ணம் இருந்ததை கருணா இயக்கத்தில் இருந்த பொழுதே அரசாங்க மந்திரிகளுடன் தொடர்பு வைத்ததைக்கூட பொட்டரால் அறிய முடியாமல் போட்டுது.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
கேட்பார் சொல்கேட்கும் கஸ்ரோவின் நடவடிக்கைகளால் தான் துரோகக் கும்பல்களினால் எமது இயக்க வலையை சுலபமாக பிரிக்க முடிந்தது. கஸ்ரோ காசு, காசு என்று வாங்கினான். நகை, நகையாக வாங்கிக் குவித்தான். கடைசியாக உணவின்றி உடுப்பின்றி தவித்த மக்களுக்கு பிரித்துக் கொடுக்காமல் காசை எரித்தானாம். எனக்கு உண்மையில் உது தெரியாது. நான் விடிந்தால் பொழுதுபட்டால் பங்கருக்குள்ள தான் சீவியம். வெளியில் இருந்து யாரும் உள்ளுக்கு வரமுடியாது. உள்ளுக்கு இருந்து யாரும் வெளியையும் போக முடியாது. பொட்டர், கஸ்ரோ, தமிழ்செல்வன் என்று யாராவது வந்து சொன்னால் தான் எனக்கு வெளிச்சம்.

உலகத்தில் எந்த நாட்டில், எந்தச் சந்தர்ப்பத்திலாவது கொன்ரெயினர் கொன்ரெயினராக காசு எரித்த கதையைக் கேள்விப்பட்டீர்களா. எமது மக்கள் எவ்வளவோ கஸ்ரப்பட்டு சிறுகச் சிறுக சேமித்த எவ்வளவு நகைகளை அரசாங்கத்திடம் கொள்ளி கொடுத்தோம்.

கஸ்ரோ அவரின் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் சரியான கணக்குகளை கேட்காமல் அவர்களின் பண ஊழல் நடவடிக்கைகளுக்கு வழி வகுத்தார். இதனால் எமது இயக்கத்தின் நாணயம், நேர்மை காற்றில் பறக்குது. இது மாத்திரமல்ல புலம்பெயர்ந்த நாடுகளில் புலிவேசம் போட்ட சில கோமாளிகள் சீவரத்தினமாம், நவநாயகமாம், முருகானந்தனாம் எனக்கு இப்ப பெயரெல்லாம் மறந்து விட்டது. இவர்களின் பேச்சைக்கேட்டு உண்மையான இயக்க ஆதரவாளர்கள் ஜெயதேவன் போன்றவர்கள் ஓரம்கட்டப்பட்டனர். ஜெயதேவனை ஊருக்குக் கூப்பிட்டு கொடுமைப்படுத்தினாங்கள். அந்த விசயமும் எனக்கு சொல்லப்படவில்லை. அதில கஸ்ரோவின்ர காதல் விவகாரம் இருப்பதாக பிறகுதான் கேள்விப்பட்டனான்.

அந்தக் கோயில் எம்முடைய காசுத் தேவைக்கும் தானே துறக்கப்பட்டது. நாம் எப்போதும் காசு சேக்கிற வைக்கு கொமிசன் கொடுக்கிறது வழமைதானே. அப்படி கோயில் காசில கொமிசன் எடுக்கிறது ஒரு பெரிய தவறா? தூக்கிப் பிடிக்கிறதுக்கு. கோவில் என்றால் என்ன? எங்கட கிழக்கு தளபதி ரமணன் (வீரமரணம்) பழுகாமத்தில் 14 கோவில்களை இடித்து சந்தையாக்கவில்லையா. அது புலம்பெயர் நாடுகளில் தான் கோயிலில் வருமானம் நிறைய வரும். ஆனால் ஊரில் அப்படி இல்லைத் தானே. கோயிலைக் காட்டிலும் சந்தையால் கூட வருமானம் தானே. அதனால் ரமணன் கோயில்களை இடித்து சந்தையைக் கட்டினான். மொத்தமாக கஸ்ரோவின் நிர்வாக சீர்கேடு இயக்கத்தின் பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணம்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
தமிழ்செல்வனை நியமித்தால் எவ்வளவு சீர்கேடு என்பது இப்போதுதான் விளங்குகிறது. அவர் எத்தனை பேருக்கு தகடு கொடுத்தது இப்பதான் விளங்குகிறது. கருணா பிரிந்த சமயம் கிழக்கு மாகாணத்தில் உள்ள படிப்பாளிகள், வர்த்தகர்கள் இவரைச் சந்தித்து கருணாவை மீண்டும் சேருங்கள், அதற்கான முயற்சிகளை தாங்கள் எடுக்கத் தயார் என்று இரங்கியும், அவர்களை நாங்கள் எல்லாம் பார்த்துக் கொள்ளுவோம் என்று அனுப்பிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த என்னை, கருணாவையும் அவர் சகாக்களையும் போடச் சொன்னது இந்த தமிழ்செல்வன் தான். வெருகலில் சரணடைந்த எங்கள் போராளிகளையே நாங்கள் ஈவிரக்கம் இல்லாமல் படுகொலை செய்தோம். இப்ப நினைக்கும் போது குலை நடுங்குகிறது. இது எமது இயக்கத்துக்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பைத் தந்தது.

இப்படிக் கதை சொல்லித்தானே மாத்தையாவையும் அவனோடு இருந்த நூற்றுக்கணக்காணவர்களையும் போட்டுத் தள்ளினம். ஆமிக்காரன் போட்டுத் தள்ளிய எங்கள் போராளிகளைவிட நாங்கள் போட்டுத் தள்ளிய போராளிகள் அதிகம் போல. இதெல்லாம் நான் உமாமகேஸ்வரனிட்ட கற்றதோ அல்லது உமா என்னட்டை கற்றதோ தெரியேல்லை. இயக்கம் நடத்தின நாங்கள் எல்லாம் படுமோசமான பிழையழை விட்டுட்டம். நாங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ரவி (வீரமரணம்) உடன் முரண்பட்டு பிறேம்றெஜியை ரிஆர்ஓ தலைவனாக்கியதும் சு பா தான்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
எம்முடன் இருந்தவர்கள் பல பேர் (துரோகிகளல்ல) உங்கு இருக்கிறார்கள். எனக்கு தெரியும் உங்களால் வீரவசனம் மட்டும்தான் பேச முடியுமென்று. நீங்கள் இன்னமும் போராட்டத்திற்கும் உயர் தியாகத்திற்கும் ஈழத்தில் நொந்து நொடிந்தவர்களைத்தான் எதிர்பார்க்கிறீர்கள் என்று. கிட்டு எனக்கு இப்பதான் புரியுது புலம்பெயர்ந்த நாடுகளில் நாய், புனையின் உயிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதை பாலசிங்கம் அண்ணை அல்லது எத்தனையோ புலம்பெயர்நாட்டு பிரமுகர்கள் என்னை வந்து சந்தித்தவர்கள், எனக்கு புரியவைக்கவில்லை என்று கோபமாகவும் மனவருத்தமாகவும் இருக்கிறது.

நீங்கள் இப்ப உந்த இன்ரநெற்றை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளும் பல தடைவ பார்த்து, ஒரு தமிழ் பையனை ஆமி கடத்தி கொண்டுவிட்டது என்றால் பதறியடிக்கிறீர்கள். ஆனால் நாங்கள் எத்தனையோ சகோதர படுகொலைகளைச் செய்து, எத்தனையோ தமிழ் உயிர்களை எடுக்கும் போது ஏன் மௌனமாக இருதந்தீர்கள். இதை இப்போது நினைத்தால் எனக்கு கண்களில் இரத்தம் வருகிறது.

நீங்கள் என்னை சூரியன், சந்திரன் என்று கூறி எவ்வளவு படுபாதகன் ஆக்கிவிட்டு இருக்கிறீர்கள். கிட்டன் காதுக்கை மரக்கட்டையை வைத்து எத்தனை அப்பாவித் தமிழரை கொன்றான். எத்தனை பேரை வீதியிலும் வீட்டிலும் சுட்டான். ரெலோ இயக்கப் பெடியளை உயிருடன் ரயர் போட்டு எரித்தான். அப்போது ஏன் எம் தமிழ் இனத்தின் ரத்தம் ரத்தமாக தெரியவில்லை. ஆனால் வடிக்கை என்னவென்றால் எங்களுக்கு சமமாக இல்லாவிட்டாலும் சகோதர படுகொலைகளை மாத்திரமல்ல கடத்தல்கள், கொள்ளைகள் செய்த தேவானந்த மந்திரியாய் யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக உலாவுவது தான் எனக்கு கடவுளிடம் சரியான கோபம். ஏனெனில் தேவானந்தாவை 14 முறை போட எத்தனித்தும் இந்த அறுந்த கடவுள் காப்பாற்றி இருக்கிறார்.

எனக்கு மற்றவர்களின் கபடத்தை அறியும் ஒரு சக்தியை கொடுக்காத கடவுள் ஒரு பாவி. ஏனெனில் கே பி, கருணா, பாப்பா, தயா மாஸ்ரர், இளம்பருதி ஆகியோரை எப்பவோ போட்டிருப்பன். மகிந்தவின் உள்நோக்கம் தெரிந்திருந்தால் உந்த கையாலகாத ரணிலைப் பிரசிடன்ற் ஆக்கியிருப்பேன். இந்தக் கடவுள் உண்மையானவராக இருந்தால் ராஜீவ் காந்தியை சிங்கள சிப்பாய் துவக்கால் அடிக்கும் போது சாக வைத்திருக்க வேண்டும். அல்லது பாலராஜ்யை காப்பாற்றி இருக்கலாம். இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்களில் இந்த அறுந்த கடவுள் என்னைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அந்தக் கடவுள் என் காலைவாரிவிட்டார்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
நீங்கள் எல்லாம் பழைய அரசர்களின் சரித்திரம் படித்திருப்பீர்கள். ஆயுதபலம் உள்ள அரசர்கள் கர்வமில்லாது சமாதானத்தைத் தான் கடைப்பிடித்தார்கள். மூர்க்கத்தனமான அரசர்கள்தான் மற்றைய சாம்ராஜ்யங்களை கைப்பற்றி கடைசியில் தங்கள் சாம்ராயத்தையும் இழப்பார்கள்.

ஆனால் நானும் எனது இயக்கமும் ஆயுதபலம் இருந்த போதும் சரி ஆயதபலமே துப்பரவாக இல்லாத போதும் சரி மூர்க்கத்தனமாக சண்டையைத் தான் விரும்பினம். எனக்கிருந்த யுத்த வெறியில், அறியாமையில் எனது வீரர்களின் உயிரையோ அல்லது அவர்களின் பெற்றேர்கள், மனைவிமார், பிள்ளைகள், மற்றும் உறவுகளின் மாபெரும் இழப்பை நினைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் யார் தெரியுமா? நீங்கள் தான் புலம்பெயர்ந்த மக்களே. நாங்கள் மாவிலாறு அணையை மூடி பில்ட் அப் கொடுத்தம். ஆனால் நீங்களோ பொங்குதமிழ் வைத்து எரிகிற நெருப்புக்கு எண்ணை ஊற்றி விட்டீர்கள். எனக்கு தண்ணியிலை கண்டம் என்று எந்தச் சாத்திரியும் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் உந்த விளையாட்டுக்கு உங்களை நம்பி இறங்கி இருக்க மாட்டன்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
உங்களில் எத்தனையோ படித்தவர்கள், நிபுணர்கள், துரநோக்கு உள்ளவர்கள் இருந்தும் என்னை சூரியன். சந்திரன் என்று உசுப்பேத்தினது மாத்திரமல்லாது ஒன்றுமே இல்லாத எனது மாவீரர் நாள் உரையை ஏதோ கடவுள் வந்து கதைக்கிற மாதிரி பில்ட் அப் கொடுத்து, மணல் வீடு கட்டினீர்கள்.

இலங்கை வந்து என்னைச் சந்திக்கத்தான் பயம் என்றால் அறிவாளிகள், ஆய்வாளர்கள், நிபுணர்கள் எல்லாம் சேர்த்து, எத்தனையோ நழுவவிட்ட சந்தர்ப்பத்தில், சமாதானத்தை எடுங்கள் என்று ஒரு மகஜராவது அனுப்பி இருக்கலாமே. மாறாக இது பிழை என்று துணிந்து சொன்னவர்களையே துரோகி என்று பட்டம்சூட்டினீர்கள். துணிந்து எங்களின் கொள்கைகளை எதிர்த்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் இப்போது என்ன செய்ய வேன்டும் என்றால் கண்டவர்களுடனும் கூட்டுச் சேர்ந்துவிட வேண்டாம். அரசாங்கத்துடன் ஒத்துச் செயற்படும் இந்த தேவானந்தாவுடனும் கூட்டுச் சேர்ந்திட வேண்டாம். உங்களை உண்மையானவர்கள் நிரந்தர சமானத்தையும் தமிழரின் சுபீட்சத்தையும் விரும்புவர்கள் தேடி வருவார்கள் காத்திருங்கள்.

இப்பதான் விளங்குகிறது என்னை சந்தித்து உசுப்பேத்தியவர்கள் இப்போது தங்களது முகத்தை காட்டிய அரச ஒற்றர்கள் என்று. கேபி தலைமையில் ஸ்கந்தா, இவர்களுடன் றெஜி, பாண்டியன் என உங்கள் முகத்திற்கு நேரே சொல்கிறேன், நீங்கள் தான் எம் தமிழ் இனத்தின் அழிவுக்கு முக்கிய காரணம்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
துரோகிகள் மாத்திரமில்லை பேருக்கும், புகழுக்கும், நடிக்கும் போலியான ஆட்களும் உங்கை இருக்கினமென்டு எனக்கு உண்மையான தம்பியைப் போன்றவர்கள் சொன்னார்கள். அவராரோ வீடு வாடைக்கு விடுகிற ஏஜென்டும் இயக்கமாம். பிறகு ரிஆர்ஓ ஆனார். உங்க உள்ள எல்லா வகை அமைப்புக்களிலும் தலைமை வேணுமென்று திரிந்தாராம். இப்ப ரிஎன்ஏ இல் சேர்ந்திருக்கிறாராம்.

இன்னொருத்தி இவ இயக்கத்தை வைத்து உழைப்புக்கு வழிதேடுகிறாவாம். ‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ என்பார்கள். இவவும் அந்த ரகம்தானாம். பெயர் மட்டும் என்னவொ வள்ளுவரின் மனைவியின் பெயர். மகிந்த லண்டன் வந்து நான்கைந்து நாள் தங்கினது தெரியும் தானே. புலம்பெயர்ந்த நீங்கள் எல்லாம் ஏயர்ப்போட்டுக்கும் ஹொட்டலுக்கும் ஓடித்திரிந்தீர்கள். ஆனால் அம்மையார் மகிந்தவுக்கு வழக்குப் போட்ட நேரம் மகிந்த இலங்கைக்கே திரும்பி குளித்து முழுகி ஓய்வெடுக்கப் போய்விட்டாராம். விழுந்தும் மண் ஒட்டவில்லை என்பது போல சனல் 4 செய்தி நிகழ்ச்சிக்கு தான் தான் ஆதாரங்களை கொடுத்ததாக கூறுகிறார் அந்த அம்மையார். தனக்கு ஊடகங்கள் தந்த பிரபல்யத்தால் வரும் அரசியல் தஞ்சம் கோருவோரிடம் வழக்குக்கு பெரும்
தொகையையும் கேட்கின்றாராம். இதையும் விட்டிடுவம்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
எமது ஆயுத பலவீனத்தை நன்கு அறிந்து நோர்வேயின் கடைசி சமாதான ஒப்பந்தத்தை ஏற்காதது நாங்கள் விட்ட மிகமிகப் பெரிய தவறு என்பதை நான் இப்போது நன்கு உணர்கிறேன். பாலா அண்ணைக்கு நன்றாக விளங்கி இருந்தது, இந்த ஒப்பந்தத்தை ஏற்காவிட்டல் எமது இயக்கமும் எம் இனமும் முற்றாக அழிக்கப்படும் என்று. ஆனால் உங்க இருந்து கொண்டு அறிக்கைவிட்டால் அவரை போட்டிடுவான் என்று பொட்டன் ஒற்றைக்காலில் நின்றான். அப்படிப் போட்டிருந்தால் நீங்களும் அவரை துரோகி என்றும் றோவிற்கு வேலை செய்கிறவன் என்றும் பழிபோட்டு இருப்பியல்.

பாலா அண்ணை தன் நியாயங்களை, ஆதாரங்களை கருணா. தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் சொல்லி எனக்கும் அனுப்பி வைத்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்துடன் பொட்டரும், தமிழ்ச்செல்வனும் என்னிடம் வந்து, ‘அதை ஏன் நாம் ஏற்க வேண்டும் என்று சொல்லாமல்’, “இத்தனை வருட போராட்டத்திற்குப் பின் இதை ஏற்றால் நாங்கள் மடையர்கள் ஒற்றர்கள்” என்று கூறினர். நானும் மிக கோபத்தில் பாலசிங்கம் அண்ணையை பேசியபடி அதனைக் கிழித்தெறிந்தேன். அப்போது கருணாவும் நின்டவன். எனக்கு இப்பவும் ஞாபகம், அவன் ஒரு வார்த்தையும் பேசாமல் முறைத்த வண்ணம் நின்றான்.

எம்மக்களை அச்சுறுத்தி முள்ளிவாய்க்காலுக்கு கூட்டிக்கொண்டு போய் பலி கொடுத்தது மற்றுமொரு பெரும் தவறு. ஆனால் உண்மையைச் சொன்னால் 602 மாணவர்கள் எமது இயக்க உறுப்பினரின் நெருங்கிய உறவினர்கள். அவர்கள் சொந்த விருப்பத்தோடு எம்மிடம் வந்தனர். அரசாங்கப் படையினால் நாலா பக்கமும் சூழப்பட்டு ஒவ்வொரு பிரதேசத்திலிருந்து வெளியேறி என்ன செய்வது என்ற மன உழைச்சலில் இருந்து எமக்கு புலம்பெயர்ந்த அரசியல் மேதைகள் அவர்கள் மேதைகள் அல்ல கொடும்பாவிகள், நாசமாய் போனவர்கள் தமிழீழம் எடுப்பதற்கு ஒரே ஒரு வழிஎன்று பின்வருவனவற்றை எமக்கு ஆலோசனையாகக் கூறினர்.

1) எமது இனத்தின் உயிர்களை கணிசமான அளவு பலி கொடுங்கள்!
2) ஆமியினால் கணிசமான அளவு மக்களை சித்திரவதைக்கு உட்படுத்துங்கள்!
3) ஆமியினால் எமது பெண்களை கற்பழிக்க வையுங்கள்!
இப்படி எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாக உயிர்கள் இழக்கப்படுகிறதோ, எவ்வளவு கூடுதலாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ, எவ்வளவுக்கு அதிகமாக எமது பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்களோ அவ்வளவு கெதியாக எமக்கு தமிழீழம் கிடைக்குமென புலம்பெயர் தேசதில் இருந்து ஆலோசணை வந்தது. தமிழீழத்திற்காக 30 வருடமாக போராடி களைத்துப்போன நான் தமிழீழத்திற்காக எதையுமே செய்வன் என்று உங்களுக்கே தெரியும்தானே.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
எனக்கு உங்கு வந்து ஆரையும் போடனுமென்டால் தீபம், ஜிரிவி, ஐபிசி, ஒருபேப்பர், ஈழமுரசு, பரபரப்பு என்று வந்து அரசியல் ஆய்வு, யுத்த ஆய்வு என்று பிலாவிட்டு கதையளந்த அரைவேக்காடுகளைத் தான் போட வேணும். ஏனென்றால் நாங்கள் எங்கே ஓடுவது, எங்கே ஒழிப்பது என்று இரவு பகலாகத் தூக்கமின்றி இருக்கையில், நான் அந்த மூலையால வந்து அடிப்பேன், உள்ளுக்கு விட்டு அடிப்பேன் என்று உந்த அரைவேக்காடுகள் சரமாரியாக கதையளந்து அழிவிலையும் உந்தச் சனங்களை ஏமாற்றி காசு சேர்க்க உதவி இருக்கிறார்கள்.

நாங்கள் இங்க எங்களது குடோன்களில் இருந்த சாப்பாட்டுச் சாமான்களையே சனத்துக்கு கொடுக்கவில்லை. சனத்தை எவ்வளவுக்கு எவ்வளவு கஸ்டப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கஸ்டப்படுத்தச் சொல்லி புலத்தில் உள்ள படித்தவர்கள், ஆய்வாளர்கள், நிபுணர்கள் சொன்னார்கள். அதனால் தான் நாங்கள் அப்படி நடந்தம். இப்படிச் செய்து தானாமே கொசோவோ என்று இடத்தில தனிநாடு உருவானது என்றும் சொன்னார்கள். அதுக்குப் பிறகு எப்படி அவை சொன்னதைக் கேட்காம இருக்க முடியும்.

ஆனா இந்தப் பிழைகளை நினைத்து நான் ரத்தக் கண்ணீர் வடிப்பது உங்களுக்கு தெரியுமா. அமெரிக்காவில இருக்கிற ஒரு கோஸ்டி பேர்ள் என்று தங்கள் அமைப்புக்கு பெயர் வைத்திருக்கிற இந்தப் பேமானிகள், வன்னிக்குள் இருக்கிற சனங்கள் அங்க இருந்து வெளியேறக் கூடாது என்று நோட்டீஸ் விட்டார்கள். அமெரிக்க, இந்திய ஆமிக்காறர் வன்னிக்குள்ள நுழைந்து வன்னி மக்களை விடுவிக்க முயன்றால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று அந்த நோட்டீஸில சொல்லி இருக்கினமாம். என்ர நிலைமையை தமிழ் படங்களில வாற வடிவேலுவின்ர கதையைப் போல ஆக்கிப் போட்டனுகள் இந்த அமெரிக்க பேமானிகள்.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
உங்களுக்குத் தெரியுமா கருணா என்ரை இயக்கத்தில் நம்பர் 2 ஆக இருந்தது. ஆனால் பொட்டர், தமிழ்செல்வன், கஸ்ரோ போல ஒரு பொறுப்போ, அதிகாரமோ கொடுக்கப்படவில்லை. கிழக்கில இருந்து வாறவைக்கு நாங்கள் முக்கிய பொறுப்புகள் கொடுக்கிறது இல்லை. ஆனால் பாலராஜ் எப்படி போர் திட்டங்களில் நிபுணரோ அப்படி, போர் முனையில் திறமை படைத்தவன் கருணா. ஆனால் கருணா இயக்கத்தின் அடிப்படை விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை. கருணாவைப் பற்றி கம்சன் தயாநிதி எவ்வளவு புகார் செய்தும் நான் அதை கணக்கெடுக்கவில்லை. மாறாக இவர்களை கருணா போட்டும் அதையும் நான் கண்டுகொள்ளவில்லை. முக்கிய காரணம் கிழக்கு மாகாணத்தை புறக்கணித்தேன் என்று அவதூறு வரக்கூடாது.

மற்றைய காரணங்கள் கருணா கிழக்கில் இருந்து வருகின்ற எங்களின் வருமானத்தில் கை வைத்ததும் தெரியும். ஆனால் வரும் வருமானங்களில் வடக்கு அபிவிருத்திக்கும் வழங்கப்பட்டது. ஆனால் கிழக்கிற்கு ஒன்றையும் வழங்கவில்லை. மேலும் எத்தனையோ போரில், குறிப்பாக ஆனையிறவில் வெற்றி. சிறுவர்களை கிழக்கில் பலவந்தமாக பிடித்து, தமிழ்செல்வனுக்கும் அந்த உத்தியை கற்றுக்கொடுத்தமை. இந்தக் காரணங்களால் நான் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
எனது தலைவர்களில் முஸ்லீம்களை வெறுத்ததில் முதலாவதாக திகழ்ந்ததும் கருணா தான். கருணாவின் சொல்லைக் கேட்டிருந்தால் இப்ப கிழக்கில் காகம் கலைப்பதற்கே ஒரு முஸ்லீம் இருக்கமாட்டார்கள். முஸ்லீம்களை வடக்கில் இருந்து கலைத்ததும் வடக்கு கிழக்கில் முஸ்லீம்களை கண்மூடித்தனமாகப் போட்டுத் தள்ளியதும் பெரிய பிழைதான். ஆனால் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு எங்கள் கிழக்கு மாகாணப் போராளிகள் மத்தியில் மிகவும் ஊறிவிட்டது. அங்கு இடம்பெற்ற தமிழ் – முஸ்லீம் சண்டைகளால் இந்த வெறுப்பு நீறுபூத்த நெருப்பாக உள்ளது. முஸ்லீம்களை அடித்துக் கொல்லாமல் அவர்களை சிங்களப் பகுதிகளுக்கு சிறிது, சிறிதாக அனுப்பி இருக்கலாம். இதுவொரு மகாதவறு. அறிவு இந்த விசயங்களைப் பிழையென்று சொன்னாலும் உணர்வுகள் அதுக்கு கட்டுப்படவில்லை. இந்தப் பிழைகளை நாங்கள் ஒருபோதும் விடக் கூடாது.

சிங்கள மக்கள் மீதான எங்கள் தாக்குதல்களும் மோசமானது. அனுராதபுரப் படுகொலையில் அரம்பித்து தெற்கில் பஸ்ஸில் பள்ளி சென்ற பிள்ளைகளை இறங்கி ஓடச் செய்து சுட்டுக் கொன்றோம். என்ன கொடுமை. இதனை வன்னிக் காட்டிலும் பங்கரிலும் ஆயுதத்துடன் தூங்கி எழும் நாங்கள் நியாயப்படுத்தலாம் ஆனால் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நீங்கள் எப்படியெல்லாம் நியாயப்படுத்தினீர்கள். எங்கள் இயக்கத்தை கொலை வெறியர்கள் ஆக்கியதில் உங்களுக்கும் பொறுப்பு உண்டு.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் நாங்கள் எங்கள் மக்களுக்கு எதிராகவே துப்பாக்கியைத் திருப்பினோம். அதுவும் உங்களுடைய சிலரின் ஆலோசணையின்படி தான். இதையெல்லாம் தடுத்து இருக்கலாம், ஒருவேளை நான் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு இருந்தால். கருணா நோர்வேயில் இருந்த சமயம் முஸ்லீம்களுக்கூடாக யூஎன்பி குள்ள நரிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. இயக்கத்தில் இருந்து பிரியத் தீர்மானித்து பிரிந்தான். ஒருவேளை நான் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு இருந்தால் தொடர்ந்தும் கருணா என்னுடன் இருந்திருக்கலாம். சொல்லத் தெரியாது.

என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
உங்களுக்கு இரண்டு விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன். கருணா பிரிந்ததும், கருணாவைப் போட எவ்வளவோ முயற்ச்சி எடுத்தன். கருணாவின் வலது கையையும் மெய்க்காப்பாளர்களையும் போட்டன். ஆனால் கருணாவைப் போட எம்மால் முடியவில்லை. இங்கிலாந்தில் இருந்து வந்து கருணா, பகிரங்கமாக எனக்கு எதிராக வேலை செய்ததில் நான் ஒரு பிழையும் சொல்லவில்லை. ஏனென்றால் நானோ, பொட்டரோ கூட கருணாவின் இடத்தில் இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பம். கருணாவினால் தான் நாங்கள் அழிந்தம் என்று நீங்கள் நினைப்பதில் அவ்வளவு உண்மையில்லை. எமக்கு நிறைய அவகாசம் இருந்தது. நாங்கள் எங்கள் போர்த் திட்டங்களையும், தளங்களையும் மாற்றினோம்.

ஆனால் சமாதான காலத்தில் தான் நாங்கள் எங்கள் ஆயுத பலத்தினை இழந்தோம். போராளிகள் இயக்கத்தை விட்டுவிட்டுப் போனார்கள். தமிழ்செல்வனின் அஜாக்கிரதையால் ஒற்றர் கூட்டம் உள்நுழைந்து விட்டது. ஆனால் எமது போராளிகளை, எமக்கு எதிராக ஒற்றர் கூட்டமாக்கியது கருணா தான். இந்தச் சதியிலும் இப்போது தனது ஊசலாடும் பதவியை காப்பாற்ற எமது இனத்துக்கு எதிராக விடும் சில கோமாளித்தனமான அறிக்கைகளாலும் முக்கியமாக இனியபாரதியின் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்களாலும் கருணாவும் இனியபாரதியும் போடப்பட வேண்டியவர்களே.

பிள்ளையான் ஒரு நாளும் என்னைக் குறை சொல்லவில்லை. இப்பவும் என்னைத் தலைவர் என்று தான் கதைப்பான். ஆனால் பிள்ளையானுக்கே தெரியாது தான் என்ன செய்கிறன், என்ன கதைக்கிறன் என்று.
தழிழரசுக்கட்சி, கூட்டணி கிழக்கை அடக்கி ஆண்டது உண்மைதான். ஆனால் ஒரு தூரநோக்கு இல்லாமல் தமிழரிடம் ஒரு பிரிவினைவாதத்தை தூண்டுவது பிள்ளையானின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. பிள்ளையானின் நோக்கம் என்னவோ, ஆனால் வடக்கு – கிழக்கு பிரிவினையை வளர்க்கக் கூடாது. பிள்ளையான் சொல்வது போல் கூட்டமைப்பு தமிழினத்தை உசுப்பேத்துகிறது தான். ஆனால் தான் கிழக்குத் தமிழர்களை வடக்கு தமிழர்களுக்கு எதிராக உசுப்பேத்துகிறது பிள்ளையானுக்கு விளங்கவில்லை. இது என்றும் என்னால் மன்னிக்க முடியாத விசயம். அதுசரி பதவிக்கு வந்தவுடன் கிழக்கு மாகாணத்துக்கு காணி, பொலீஸ் அதிகாரம் வேண்டுமென்று கேட்ட பிள்ளையான் இப்ப என்னவாம் சொல்கிறார்.

நீங்கள் நினைப்பியல் ஏன் நான் உந்த ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் பற்றி பேசவில்லையென்று. ஏனென்றால் அவர்கள் காத்துப்போன பலூன்கள். அத்தோடை செத்த பாம்பை போடுறதும் எனக்குப் பிடிக்காது.

முடிவாக என் அன்பார்ந்த புலம்பெயர் மக்களே!
இப்போது நீங்கள் எல்லோரும் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளை நம்பி இருக்கிறீர்கள். நான் அவர்களிடம் சொன்னது என்னவென்றால், எமது குறைந்தபட்சக் கோரிக்கை, வடக்கு கிழக்கு இணைந்தோ பிரிந்தோ ஆனால் பொலீஸ், காணி அதிகாரத்துடன் மாகாணசபை ஆட்சி அதிகாரம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால் சாத்வீகப் போராட்டத்தில் இறங்க வேண்டும். சாத்வீகப் போராட்டத்தினால் உயிரை இழக்கவும் தலைவர்கள் ஒரு நாளும் தயங்கக் கூடாது. அந்தப் போராட்டத்தில் சம்பந்தன் ஐயாவோ சங்கரி ஐயாவோ சேனாதி ஐயாவோ உயிரிழந்தால் நான் அவர்களைப் போடாமல் விட்டதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

அத்துடன் உந்த சோனியா காந்தியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு இருப்பவர்கள் அதைவிட்டுவிட்டு வரவேண்டும். சோனியாவின் முந்தானையை பரந்தன் ராஜனும் ஈஎன்டிஎல்எப் உம் மொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்கினம். அவர்கள் தங்கள் கனவுலகில் சோனியாவுடன் டூயட்டும் பாடட்டும். ஆனால் இந்தியா தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரப்போவதில்லை. சாட்சிக்காரனான இந்தியாவை நம்புவதிலும் பார்க்க சண்டைக்காரனான இலங்கை அரசுடன் பேசியோ சாத்வீக முறையில் சண்டை பிடித்தோ எங்கள் பிரச்சினையைத் தீர்ப்பதே ஒரேவழி.

நான் சாத்வீகப் போராட்டம் என்று சொன்னதில் வியப்படையாதீர்கள். ஒரு காலத்தில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழரசுக் கட்சியினருக்கு நாங்கள் சிக்கின் பிரியாணி தீத்தின நாங்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் அன்றைக்கு இருந்த அரசியல் சூழல், என்னுடைய அனுபவக் குறைவு என்னை அப்படிச் செய்ய வைத்தது.
இன்றைக்கு தங்களைப் புத்திஜீவிகள் படித்தவர்கள் என்று அறிக்கை விடுபவர்கள் கூட அன்றைக்கு என்னோடுதானே இருந்தனர். இப்பதானே நீங்கள் என்னை அண்ணை, தலைவர் என்று சொல்கிறீர்கள். அந்த நாட்களில் என்னை எல்லோரும் தம்பி என்று தானே சொல்வார்கள். அப்பவும் இடதுசாரிகள் கொம்யுனிசம் பேசியவர்கள் எல்லோரும் இருந்தனர். போராடினர். ஆனால் இன்றைக்கு அறிக்கை விடுகின்ற புத்திஜீவிகள் இந்தத் தம்பியின் நடவடிக்கைகளை விரும்பினர். இயக்கத்தில் சேர்ந்தனர். பிறகு சொந்தப் பிரச்சினையில் வெளியேறி விட்டு, இப்ப ஜனநாயகம் அது இது என்று ஏதேதோ எல்லாம் கதைக்கினம். நான் மட்டுமில்ல அவையும் பிறப்பாலையே புலிகள் என்பது எனக்கும் அவைக்கும் வடிவாய்த் தெரியும்.

நான் ஏன் இப்ப சாத்வீகப் போராட்டமே ஒரே வழி என்று சொல்கிறேன் என்றால் அது எனக்கு ஏற்பட்ட அறிவு. எட்டாம் வகுப்பு படித்த நான் இயக்கம் நடத்த முடியும் என்றால் அதற்கு மேல் எவ்வளவோ படித்த தான் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்பி யாக இருப்பதில் என்ன பிழையென்று செல்வி அண்ணா குமுறியதாக நான் கேள்விப்பட்டேன். எவர் எம்பி யாக இருக்கிறதில தப்பில்லை. ஆனால் எந்த நோக்கத்தோடு இருக்கிறார் என்பது தான் முக்கியம். என்னுடைய அனுபவம் என்பது ஒரு பல்கலைக்கழகத்துக்குச் சமன் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

என் அன்பார்ந்த வெளிநாட்டு தலைமைகளே!
உங்களுக்கு எம்மினத்தில் உண்மையான அன்பு இருந்தால் எமது சனத்தின் கல்வியையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்க உதவிகளைச் செய்யுங்கள். இவ்வளவு காலமும் இயக்கப் பணத்தில் வாழ்ந்தவர்களே, தயவு செய்து உங்களுக்கு என்று ஒரு வேலையைத் தேடி உழைக்க முயற்சி செய்யுங்கள். வேலை கிடைக்காவிட்டால் புலம்பெயர்ந்த நாடுகளில் அரசாங்கம் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு எல்லாம் காசு தருமாமே. பிறகேன் மற்றவர்களின் அடிவயிற்றில் அடிப்பான்.

எமது இயக்க சொத்துக்கள் யார் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் இருந்து அவற்றைச் சேகரியுங்கள். இயக்க சொத்துக்களை மீள ஒப்படைக்காவிட்டால் அவர்களது பெயர் விபரங்களை மக்கள் முன் கொண்டு வாருங்கள். எமது இயக்கச் சொத்துக்கள் அனைத்தையும் ஈழத்தில் எமது இனத்தை கட்டி எழுப்பப் பயன்படுத்துங்கள்.

என் அன்பார்ந்த கூட்டமைப்பு உறுப்பினர்களே!
எமது மக்களின் துயரங்களை அறியுங்கள். உங்கள் உங்கள் தொகுதிக்குச் சென்று அந்த மக்களுடன் வாழுங்கள். அதனால் அரசாங்கத்திடம் இருந்தோ, என்ஜிஓ க்களிடம் இருந்தோ அல்லது புலம்பெயர் மக்களுடன் தொடர்பு கொண்டோ எவ்வகையான உதவிகளையாவது பெற்று அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து அல்லல்படும் எமது மக்களின் வாழ்கையை வழம்படுத்துங்கள். நீங்கள் அரசாங்கத்தின் சம்பளத்தில் தானே வாழ்கிறீர்கள். அதனால் அரசாங்கத்தின் உதவிகளை, அபிவிருத்தித் திட்டங்களை பெற்று எம்மக்களை வளம்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை.

என் அன்பார்ந்த எதிரிகளே!
நீங்கள் பலர் என்னைப் பற்றி இலலாததும் பொல்லாததும் எழுதுகிறீர்கள். நான் காட்டிலும் இல்லை, நாட்டிலும் இல்லை, வெளிநாட்டிலும் இல்லை. நான் பூமியிலேயே இல்லை. ஆனாலும் கரும்புலிகளை வழிஅனுப்பிய என்னை சரணடைந்ததாக தேசம் என்று வேசம் போடும் சில இணையங்கள், (லண்டன்) உதயன், லண்டன் குரல் போன்ற பத்தரிகைகள், புலி எதிர்ப்பு ஊடகங்கள் எழுதுகின்றன. அப்படி நடந்திருக்கலாம் என்று எழுதுவதில் அவர்கள் சிற்றின்பம் காண்கின்றனர். நன்றாகக் காணட்டும். ஆனால் என்னை கரிச்சுக் கொட்டி உங்களை நீங்களே நாசம் செய்து விடாதீர்கள். எங்கள் மக்களுக்கு நீங்கள் உருப்படியாக ஏதும் செய்ய முயற்சி செய்யுங்கள்.

என் அன்பார்ந்த புலம்பெயர்ந்த மக்களே! எனது தலைமைகளே!!
நீங்கள் கடந்த மூன்று வருடங்களாக எனக்கு தீபம் ஏத்தவில்லை என்று எனக்கு ஒருகுறையுமில்லை. ஏனெனில் அன்று என்னைத் திட்டித் தீர்த்தவர்கள் எல்லாம் இப்போது எனக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கறார்கள். அதுவே எனக்கு ஆயிரம் தீபங்கள் ஏற்றியதற்குச் சமன். எனது அன்புத் தம்பி எனக்குத் தினமும் தீபம் ஏற்றுகிறான். அது போதும் எனக்கு. ஆனால் என் ஆத்மாவை கொச்சப்படுத்தாதீர்கள். இவ்வளவு மன வருத்தங்களையும் தாங்கி அமைதி தேடுகிறேன். என் உண்மைக்காக, என் அர்ப்பணிப்புக்காக, என் மனைவி பிள்ளைகளின் அர்ப்பணிப்புக்காக நான் இங்கு சாய்பாபாவை விடவும், மிகவும் உயர்ந்த இடததில் இருக்கிறேன். ஏனென்றால் நான் உண்மையாக எனது இனத்தின் விடிவுக்காகப் போராடி உள்ளேன். பாபா போடர் லைனில் தான் இருப்பதாகச் சொன்னார். அவர் செய்த தொண்டுகள் தானாம் அவரைக் காப்பாற்றியது.

நான் சில பல பிழையளை விட்டனான் என்றது உண்மைதான். புத்திஜீவிகளை, அரசியல்வாதிகளை, மாற்று இயக்கப் போராளிகளை படுகொலை செய்தது மகாபிழை. அதற்காக நான் சொல்லொனா துயரம் அடைகின்றேன். இப்பிழைகளை நான் உணர்றன். ஆனால் நான் அதை பிழை என்று தெரிஞ்சுகொண்டு செய்யவில்லை. நான் செய்யிறது சரி அதுதான் தமிழீழம் அடைய ஒரே வழி என்று அப்போது பட்டுது. அதைத்தான் செய்தன். நீங்கள் யாராவது என்னால் பாதிக்கப்பட்டு இருந்தால், உங்கள் உறவுகள் யாராவது என்னாலோ எனது இயக்கத்தாலோ கொல்லப்பட்டு இருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும்.

பழசுகளை மன்னித்து மறந்து தொடர்ந்தும் எமது மக்களுக்காக உழைப்போம் என்று இந்தத் தைப்பொங்கல் திருநாளில் உறுதியெடுப்போம். அனைவருக்கும் எனது தைப்பொங்கள் வாழ்த்துக்கள்.

என்றும் உங்கள் அண்ணை – தலைவர்
தை 14, 2012.
தமிழரின் தாகம் சமாதான சகவாழ்வு!

http://thesamnet.co.uk/?p=32825
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல