வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

கொலவெறி வெற்றியும், வெற்றி மீதான கொலவெறியும்

கடந்த வருட இறுதியில் வெளிவந்தது தனுஷ் எழுதி பாடிய கொலவெறி பாடல், வெளிவந்து மிகக் குறுகிய காலத்திலேயே யூடியூபில் முப்பது மில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டது. பின்னர் கடந்த வருடத்தின் மிகவும் பிரபலமான பாடலாக இப்பாடலை சீ.என்.என். தொலைக்காட்சி தெரிவித்தது.

இந்த நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனுஷை விருந்துக்கு அழைத்தார். இந்த பின்னணியில் கொலவெறி பாடல் யூடியூப் பிரபலம் மேலும் அதிகரித்தது மட்டு மல்லாமல் மற்றைய ஊடகங்களிலும் பிரபலமானது. இவ்வளவுதான் விடயம்.

விமர்சனம்
பாடல் வெளிவந்து, முப்பது மில்லியனுக்கு அதிகமானவர்களால் யூடியுப்இல் பார்க்கப்பட்டதாக பாராட்டப்பட்டு அதன் ஆர்ப்பாட்டம் ஓய்வடைந்திருந்தாலும், விமர்சனம் ஓய்ந்த பாடில்லை.

இலங்கையிலும் முக்கியமாக யாழ் மண்ணிலும், இந்தியா மற்றும் புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளிலும் உள்ள சில தமிழ் மொழி ஆர்வலர்கள், இந்தப்பாடல் தமிழை கொலை செய்வதாகவும் இதன் இசை தொடர்பாகவும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்த விமர்சனங்களுக்கு ஊடகங்களும் முக்கியமாக தமிழ் இணையத்தளங்கள் குறிப்பிடத்தக்க இடத்தை ஒதுக்குவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தவிரவும், வேறு எந்தப் பாடலுக்கும் இது வரை இல்லாத அளவு நகரில் பாடல் அல்லது ஒளி, ஒலி பெயர்ப்பு பாடல் தனுஷின் அசல் கொலவெறி பாடலுக்கு உருவானது. கிட்டத் தட்ட நூற்றுக்கு மேற்பட்ட நகரில் பாடல்கள் இதுவரையில் வெளியாகியுள்ளன. இத்தனை நகல் பாடல்கள் உருவாக காரணமான பெருமை அசல் பாடலுக்கு உரியது.

இந்த நகலில் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து ஸ்டாலின் பாடி வெளியானது. இது தமிழின் பெருமையை சொல்வதுடன் தமிழ்க் கொலையை சாடவும் செய்கிறது. இந்தப் பாடல் வெளிவந்த பின்னர், இது தமிழ் மொழி பெருமை கூறும் பாடலாகவும் அதே நேரம் தனுஷின் பாடலுக்கான விமர்சனப் பாடலாகவும் பார்க்கப்பட்டது. ஸ்டாலினின் கொலவெறி பாடலுக்கு ஏதுவான காரணி எதுவாக இருந்தாலும், அதனை தனுஷின் பாடலுக்கான விமர்சன பாடலாக பார்ப்பதை விடுத்து தமிழ்மொழி சார்பான பாடலாக மட்டும் பார்ப்பதே பொருத்தமானது.

இந்த நிலையில் கொலவெறி அசல் மற்றும் நகல் பாடல்களை நோக்கும் விதம் தொடர்பில் ஒரு ஆரோக்கியமான மாற்றுக் கருத்தை முன்வைக்கும் முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது.

தமிழ்க் கொலையா ஆங்கிலக் கொலையா..?

தனுஷின் பாடலில், உள்ள வார்த்தைகள் தமிழில் உச்சக்கப்பட்ட ஆங்கிலமாக அமைந்துள்ளன. தமிழ் வார்த்தைகள் கொலவெறி, கையில, எங்க, சரியா, வாசி போன்ற சில மட்டுமே. ஒப்பீட்டளவில் இதை தமிழ் பாடல் என்று கொள்ளவே முடியாது.
இன்னோரு வகையில் பார்த்தால் இதில் கொல்லப்பட்டுள்ளது ஆங்கிலமே. மொழி தொடர்பில் ஆத்திரப்படவோ, ஆதங்கப் படவோ வேண்டுமாயின் அதனை செய்ய வேண்டியது ஆங்கில மொழி ஆர்வலர்களே அன்றி தமிழ் மொழி ஆர்வலர்கள் அல்ல.

மேலும், இதுவரை வெளிவந்த பாடல்களில் ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்ட பாடல்கள் நிறையவே உள்ளன. ஏன், இசைஞானி இளையராஜாவின் திருவாசகத்தில் கூட இடையில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தவிரவும் இது சினிமாப் பாடல் அல்ல, மாணிக்கவாசகப் பெருமானார் அருளிய திருவாசகம். தமிழ் சார் படைப்புகளில் ஆங்கிலம் கலத்தல் தமிழுக்கு இழுக்கு என்று நோக்குபவர்கள், இசைஞானி இளையராஜாவின் திருவாசகத்திற்கு எதிர் வாசகத்தை முன்வைக்கவில்லையே? இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ஒஸ்கார் விருது பெற்றது தமிழ் படத்துக்கோ தமிழ் பாடலுக்கோ இசையமைத்து அல்ல. ஆனால், அதனை ஒரு தமிழன் பெருமையாக கொண்டாடினார்கள்.

தனுஷின் பாடல் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்டது. பார்த்த அத்தனை பேரும் தமிழர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நாடு, மொழி போன்ற எல்லா எல்லைகளை யும் கடந்தது தமிழ் சினிமா சார் படைப்புகள், முக்கியமாக பாடல்கள் இதுவரை காலம் அடையாத இடத்தை இப்பாடல் அடைந்தது.

பலமே பலயீனமாக

இந்தப் பாடல் பிரபலமடைய ஏதுவான காரணிகளில், கவிஞர் அல்லாத ஒருவரால் எழுதப்பட்டமை, பாடகர் அல்லாத ஒருவரால் பாடப்பட்டமை, வெளியிடப்பட்ட ஊடகம், மற்றும் அதன் எளிமை என்பன மிகவும் முக்கியமானவை. இவை இந்தப் பாடலின் பலம். இதுவே இந்தப் பாடலின் பலயீனம்.

ஒரு கஞ்சி அல்லது சாம்பார் பாட்டு (soup song) ஒரு தோல்விப் பாட்டு (flop song)
இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது பாராட்டுக்குறியது.

இதன் எளிமையினால் தனுஷ் பாடுவது, ஏதோ தங்களில் ஒருவர் பாடுவது போல, ஏன் தான் பாடுவது போல ரசிகர்களுக்கு இருந்திருக்கும். தாஜ்மஹாலை எல்லோரும் சென்று பார்த்து வரலாம், கட்ட முடியாது. ஆனால், கடற்கரை மணல் வீடு எல்லோரும் கட்டலாம்.

பிரபலம் தரமும்

ஒரு யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரபலம் அடையும் அனைத்தும் தரமானவையாக அமைவதில்லை. அதே போல் தரமானவை அனைத்தும் பிரபலம் அடைவதுமில்லை. பிரபலம் தரம் இணைவது அபூர்வமாகவே நிகழும். அதை விட முக்கியமான விடயம் ஒரு படைப்பு பிரபலம் அடைவது என்பது பெற்றுக்கொள்பவர் சார்ந்தது.

அதிலும் முக்கியமாக யூடியூபில் அதிகம் கேட்கப்பட்ட அல்லது பார்க்கப்பட்ட பாடல் என்கிற சட்டகத்தில் இருந்து பார்த்தல் அவசியம். ஒரு பாடலை பிரபலப்படுத்த யூடியுபை பாவிக்க முடியும் என்பதையும் யூடியூபின் ஊடாக பிரபலப்படுத்த வேண்டுமாயின் அதற்கு இருக்க வேண்டிய இயல்புகள் என்ன என்பதை கொலவெறி பாட்டில் இருந்து கற்றுக்கொள்ளலாம் இந்த பாட்டில் பொருள் எதுவும் இல்லை, தரமான இசை இல்லை என்பது விமர்சனம்.
மரபுக் கவிதை எனும் கட்டமைப்பை உடைத்துக்கொண்டு வந்த புதுக்கவிதை, பிரபலமடைந்து பல புதிய கவிஞர்களையும் கருத்துகளையும் வெளிக்கொண்டு வந்தது போல, இந்த கொலவெறிப் பாடல் பாணியில் நல்ல கருத்துள்ள விடயங்களை மக்களுக்கு கொடுக்கலாம்.

ஒவ்வொருவரும் இசையின் ஒவ்வொரு நிலையினை ரசிப்பர். ஒரு பள்ளியில் ஆரம்ப நிலையில் பயில ஆரம்பிக்கும் மாணவர்கள் அத்தனை பேரும் படித்து பண்டிதர்கள் ஆவதில்லை. கலையிலும் அப்படித்தான். கலை ரசனை கூட அது போலவே. கலையின் ஆரம்ப நிலையை ரசிப்பவர்களின் தொகையை விட உச்ச நிலையை ரசிப்பவர்களின் தொகை குறைவு. கலையின் ஆரம்ப நிலையை ரசிப்பவர்கள் நோக்கி படைப்பை ன்வைத்தால் அது அதிக தொகையினரை சென்றடைகிறது.

கேட்டல் மற்றும் ரசித்தல்

ஒரு பாடலைக் கேட்டல் என்பது வேறு ரசித்தல் என்பது வேறு. ரசனை என்பது சார்பானது. ஒருவருக்கு ஒருவர் வேறுபடுவது. ஒருவர் எதை ரசிக்க வேண்டும் என்பது அவன் சொந்தத் தெரிவு. ஒருவன் ரசனை என்பது அவர் சார்ந்த பல்வேறு அக புற அனுபவங்களின் செல்வாக்கில் தீர்மானிக்கப்படுவது. உணவின் தரம் வேறுபட்டாலும் பசியாறுதல் எனும் அனுபவம் பொதுவானது போல, ரசிக்கும் விடயத்தின் தரம் சார்பு தியில் வேறுபட்டாலும் ரசானுபவம் அனை வருக்கும் பொதுவானது. சங்கீதத்தில் பாண்டித்தியம் பெற்ற ஒருவர் ஒரு தரமான சங்கீ தத்தை கேட்டு ரசித்தலும், சங்கீத சங்கதிகள் எதுவும் தெயாத ஒரு பாமரர் ஒப்பீட்டளவில் தரமற்ற ஒரு இசையை ரசித்தலும் ஒன்றே.

இசை ஞானம்

கடவுளை அறிதலே ஞானம். இசையை அறிதல் இசை ஞானம். வேறு எந்த கலைக்கும் இல்லாத பண்பு இசைக்கு உண்டு. இசையானது இறை தன்மையானது. இறை பக்தியில், இறை வழிபாட்டில் பாமரரும் ஞானிகளும் வேறுபடுவது போல, இசை விடயத்திலும் வேறுபடுவது இயற்கை.

மாரிமுத்து கிருஷ்ணர்த்தி

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல