திங்கள், 24 செப்டம்பர், 2012

உலக முஸ்லிம்களை உசுப்பிவிட்டுள்ள ஒரு திரைப்படம் அமெரிக்காவிற்கு எதிராக அணிதிரளும் முஸ்லிம்கள்

படம்: இணையத்திலிருந்து பெறப்பட்டது
 
நபிகள் நாயகத்தை அவதூறுபடுத்தும் டென்மார்க் கேலிச் சித்திரம் (காட்டூன்) ஒன்றுக்காக 2008ம் ஆண்டு நடுப்பகுதியில் கொதித்துக் கொந்தளித்து பேரெழுச்சிகொண்ட முஸ்லிம் உலகம், மீண்டும் ஒரு தடவை கோபத்துடன் எழுச்சி கொண்டுள்ளது. இந்தக் கொந்தளிப்பில் லிபியாவில் அமெரிக்கத் தூதர் ஒருவர் பலியானதுதான் அமெரிக்காவையும் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டுசென்றுள்ளது. எகிப்தில் தொடங்கிய அமெரிக்க எதிர்ப்புப் போராட்டம் லிபியா, யேமன், சூடான், துனிசியா, கட்டார், வங்கதேசம், ஈரான், இந்தோனேசியா போன்ற முஸ்லிம், அரபு நாடுகள் தொடக்கம் இலங்கை, இந்தியா போன்ற முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகள் வரைக்கும் பரவியுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான இந்த வன்முறை தற்போது மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் விரிவடையத் தொடங்கியுள்ளமைதான் மேற்குலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது. முஸ்லீம்களின் இந்தக் கோபக் கொந்தளிப்பிற்கு காரணம் என்ன? அமெரிக்கா நியூயோர்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் 11வது ஆண்டு நினைவு கடந்த 11ம் திகதி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் வசிக்கும் எகிப்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான நகவ்லா பாசிலி என்பவர், இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) குறித்த ‘innocence of muslims’ என்ற திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டார்.

இத்திரைப்படத்தின் காட்சிகள் சில இணையத் தளங்களில் வெளியானதால் முஸ்லிம் உலகம் கொதித்து எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தப் படத்தை தடைசெய்ய வலியுறுத்தியும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர். இரண்டு நாட்கள் நீடித்த முற்றுகைப் போராட்டம் கலவராமாக மாற்றமடைந்தது. மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் காவல்துறையினரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால், தூதரகத்தினுள் அத்துமீறி நுழைந்து அதனைச் நாசாமாக்கினார்கள். இதேவேளை, லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பும் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அங்கு பறந்த அமெரிக்க கொடியை எடுத்து விட்டு இஸ்லாமிய கொடியை பறக்கவிட்டனர். தூதரகத்துக்கு தீ வைத்தனர். இந்தக் கலவரத்திற்கு மத்தியில் திடீரென தூதரகத்தை நோக்கி எறிகணைகளும், கைக்குண்டுகளும் வந்து விழத்தொடங்கின.

இந்தத் தாக்குதலின் போது தூதரகத்தில் இருந்த லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன் மற்றும் மூன்று பணியாளர்கள் மூவர் பலியானார்கள். பலியானவர்களில் இருவர் அமெரிக்க கடற்படையின் சிறப்பு அதிரடிப்படையில் முன்பு பணியாற்றியவர்கள். மற்றொருவர் தூதரகத்தின் தகவல் நிர்வாக மேலாளராகப் பணியாற்றியவர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்தார். லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கொல்லப்பட்டது குறித்துப் பேசிய அதிபர் ஒபாமா, ‘லிபியாவில் திட்டமிட்டு அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நமது சகோதரர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்குக் காரணமான அனைவரும் நீதிக்கு முன்பு நிறுத்தப்படுவார்கள். பயங்கரவாதம் எந்த வகையில் தலையெடுத்தாலும் அதை அழிப்போம். எங்கள் நாட்டு மக்களை தாக்கியவர்கள் நீதியின் பிடியில் இருந்து தப்ப முடியாது. அமெரிக்காவை அசைக்க நினைக்கும் எவரையும் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்க மக்களை யாரும் தாக்குவதை ஒருபோதும் பொறுத்து கொள்ளவே மாட்டோம். எங்கள் தூதரகங்களை தாக்கியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. அனைத்து மதங்களையும் மதித்து வந்துள்ளதே அமெரிக்காவின் வரலாறு. இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் உள்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் நமது நாட்டில் உள்ளனர். நாம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் எதிர்ப்பாளர்கள் என்ற சாயத்தைப் பூச நினைக்கிறார்கள்.

அது எப்போதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஒரு திரைப்படத்தை மையமாக வைத்து வன்முறையில் இறங்குவதை நியாயப்படுத்த முடியாது என்றார். ஆனால், ஒரு மதத்துக்கு எதிராக வெறுக்கத் தக்க
வைகையில் திரைப்படம் எடுப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இதுபோன்ற சம்பவங்கள் அமைதியை விரும்புவோருக்கு பெரும் வேதனையை அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், முஸ்லிம் நாடுகளில் மேற்கத்திய நாடுகளின் தூதரங்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு திரைப்படத்துக்கு எதிராக இதுபோன்ற வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம், அவர்களே அந்த திரைப்படத்துக்கு தேவையற்ற விளம்பரத்தைத் தேடித்தருகிறார்கள். தூதரகம் என்பது அந்த நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றுபவர்களை தாக்குவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பும் தூதரகங்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, முஸ்லிம், அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமைதி காக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியமும் கோரிக்கை விடுத்துள்ளது. தங்கள் நாடுகளில் உள்ள தூதரங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டுமென அந்நாடுகளின் தலைவர்களை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. முஸ்லிம் நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிரான வன்முறை, மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் விரிவடைந்துள்ளது. சூடான தலைநகர் காட்டூமில் பிரித்தானியா, ஜேர்மனியில் உள்ள தூதரகங்கள் மீது தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், ‘நாகரீக சமுதாயத்தில் இது போன்ற வன்முறைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இது நாட்டு மக்களிடையே தேவையற்ற கசப்புணர்வை ஏற்படுத்தும். மதத்தை மையமாக வைத்து பயங்கரவாதத்தை வளர்ப்பதையும், மனித உயிர்களைப் பறிப்பதையும் எந்த மதமுமே போதிக்கவில்லை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

தங்களது நாட்டிற்கு எதிராகப் போராட்டம் நடக்கும் நாடுகளுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, அங்குள்ள தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும்படி அந்நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, லிபியாவில் தமது தூரகத்தின் மீதான தாக்குதலையும் தூதர் பலியான சம்பவத்தையும் அடுத்து கொமாண்டோ படையணிகளுடன் கூடிய இரண்டு அமெரிக்க போர்க் கப்பல்கள் லிபியா கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. தாக்குதலுக்காகவே இப்போர்க் கப்பல்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக வெளியான செய்திகளையடுத்து அமெரிக்காவிற்கு எதிரான முஸ்லீம்களின் போராட்டம் இன்னும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

ஆனால், லிபியாவைத் தாக்கும் நோக்கத்துடன் மத்திய தரைக்கடல் பகுதிக்கு போர்க்கப்பல்களை அனுப்பவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் விளக்கமளிக்கும் நிலை ஏற்பட்டது. வாஷிங்டனில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோர்க் லிட்டில், ‘மத்திய தரைக்கடல் பகுதிக்கு அமெரிக்க கப்பல்களை அனுப்புவது வழக்கமான ஒன்றுதான். லிபியாவைத் தாக்க வேண்டும் என்பதற்காக போர்க்கப்பல்களை அனுப்பவில்லை. அப்பகுதியில் எந்த நாட்டின் மீதும் இந்த போர்க்கப்பல்கள் தாக்குதலில் ஈடுபடாது` என்றார்.

ஆனால், லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னணியில் அல்-ஹைடாவே களமிறங்கியிருந்ததாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனாலேயே லிபியாவை நோக்கி அமெரிக்கா போர்க் கப்பலை அனுப்பி வைத்துள்ளதாக கருதப்படுகின்றது. இதேவேளை, லிபியத் தூதரகம் மீதான தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த அமெரிக்க புலனாய்வுத்துறைகளுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் கூறுகையில், ‘உலகின் எந்த இடத்தில் அமெரிக்கர்கள், அமெரிக்க அதிகாரிகள் பலியானாலும் அமெரிக்கா விசாரணை நடத்துவது வழக்கம்.

லிபியாவில் தூதரகத்தை குறிவைத்து அல்-ஹைடா அல்லது அல்-ஹைடா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினார்களா என்று யூகத்தின் அடிப்படையில் இப்போது கூறுவது சரியல்ல. தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையை எப்.பி.ஐ. தொடங்கியுள்ளது. விசாரணையில் உண்மை தெரியவரும்’ என்றார். தாக்குதல் தொடர்பாக லிபிய அரசும் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இதேவேளை, இப்படத்தின் காட்சிகளை இணையத் தளத்தில் இருந்து நீக்குமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை கூகுள் நிறுவனம் நிராகரித்துவிட்டது. எகிப்து மற்றும் லிபியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அந்நாடுகளில் யூ டியூப் காட்சிகள் தடை செய்யப்பட்டன. பின்னர் அந்த காட்சிகளை இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலும் தடை செய்திருக்கிறோம். தற்போது பதிவேற்றப்பட்டிருக்கும் காட்சிகள் எமது நிறுவன நிபந்தனைகளுக்குட்பட்டது. எனவே அவற்றை நீக்கமுடியாது என்று கூறியுள்ளது. எது எப்படியோ, அமெரிக்காவிற்கு எதிராக வன்முறைத் தாக்குதலை மேற்கொள்ள சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்த சக்திகளுக்கு இதுவொரு நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இந்தக் கோபத் தீயை அணையாது பாதுகாக்க உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் உசுப்பேற்றப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது. அமெரிக்காவிற்கு எதிராக வெறும் வாய் கிடைத்தாலே மெல்லுவார்கள். இப்போது அவலே கிடைத்துவிட்டது, கடித்துத் துப்பாது விட்டுவிடுவார்களா என்ன?

விவேகன் : ஈழமுரசு
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல