புதன், 21 நவம்பர், 2012

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-7

விடுதலைப்புலிகள் இயக்கம் ஊடகத்துறையில் பலமுடன் இருந்துவந்ததை எவருமே மறுக்கமுடியாது. நெருக்கடியான காலகட்டங்களிலும், விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவு சுறுசுறுப்பாகவே செயற்பட்டு வந்தது. விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டில் பல ஊடகங்களை நேரடியாக நெறிப்படுத்தி வந்தபோதிலும் பிற தனியார் ஊடகங்களையும் தமது கொள்கைக்கேற்ற விதத்தில் வளைத்து வைத்திருந்தனர். இவ்வாறு தமது கொள்கைகளுக்கு இயைபாக செயற்பட்டுவந்த ஊடகங்களிற்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வந்தனர்.

விடுதலைப்புலிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்காக பணத்தினை வாரிவாரி இறைத்து வந்தனர். இதற்குரிய நிதி வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலும், உள் ஊரில் வரி அறவீடுகளின் மூலமும் அவர்களால் பெறமுடிந்தது. இந்த பிரச்சார ஊடக யுத்தத்தில் விடுதலைப்புலிகள் பெரியளவில் சாதித்தபோதிலும் சில ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்குடன் துரோகத் தனத்துடன் செயற்பட்டு வந்ததை விடுதலைப்புலிகள் அறியாமல் இருந்ததுதான் அவர்களின் அழிவிற்கும் ஒருவிதத்தில் வழிகோலியது.விடுதலைப்புலிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளிற்காக பணத்தினைத் தண்ணீர்போல் செலவிட்டதை சிறிய ஒரு உதாரணத்தின் மூலம் நாங்கள் விளங்கிக்கொள்ள முடியும். அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முதன்முதலாக தோற்றுவிக்கப்பட்டு அதில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை விடுதலைப்புலிகள் வன்னிப் பகுதியில் சந்திப்பதற்கான ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த தமிழ்ச்செல்வன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம் உங்களது பிரச்சார நடவடிக்கைகளிற்காகவும் பிற தேவைகளிற்காகவும் நாங்கள் குறிப்பாக தலைவர் ஒரு சிறிய உதவியை செய்ய என்னிடம் பணித்துள்ளார்.

அதாவது உங்கள் ஒவ்வொருவரிற்கும் பதினைந்து இலட்சம் ரூபா வீதம் தலைவர் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இதில் ஐந்து இலட்சம் ரூபா உங்களது 6மாத ஊடகப் பரப்புரைக்காக தலைவர் ஒதுக்கியிருக்கிறார் எனக்கூறி இந்த நிதியை வழங்கிய பொழுது கூட்டமைப்பிலிருந்த அனைவரும் முண்டியடித்துக்கொண்டு இந்த நிதியைப் பெற்றது அனைத்து ஊடகவியலாளர்களும் அறிந்த ஒரு விடயமாகும்.

ஆனால் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜி சிவனேசன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியை புலிகளிடமிருந்து பெற மறுத்ததுடன் இந்த நிதியை நீங்கள் வறிய குடும்பங்களிற்கு கொடுத்து உதவுங்கள் எனக் கூறிவிட்டு வந்துவிட்டனர். ஆனால் இவர்களது முன்மாதிரியான நடவடிக்கையை நேரடியாக கண்டிருந்த மாவை சேனாதிராஜா, பத்மினி சிதம்பரநாதன், ஈழவேந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிறிய சலனமுமின்றி இந்த நிதியை வாங்கியதுடன் மட்டும் நிற்காமல் பின்னர் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைவிட்டு சென்றதன் பின்னர் தனது வாகனத்திற்கு பெற்றோல் அடித்துவிடுங்கள் என ஈழவேந்தன் என்ற பாராளுமன்ற உறுப்பினர் அசடுவழிய நின்றபோது புலிகள் புன்முறுவலுடன் அவருக்கு டீசலும் அடித்துவிட்டு மேலதிகமாக 10ஆயிரம் ரூபாவையும் பெற்றோல் அடியுங்கள் என கொடுத்தமையானது அந்த நாட்களில் வன்னிப் பகுதியில் சுவாரசியமாகப் பேசப்பட்ட செய்திகளில் ஒன்று.

ஈழவேந்தனை கண்டவுடன் புலிகள் பெற்றோல் மாமா வருகிறார் என கிண்டலடிப்பதும் வழக்கமாக இருந்தது.
உண்மையில் மக்கள் சேவைக்கெனப் புறப்பட்ட இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் புலிகளிடம் பணம் பெற்ற விடயத்தை எந்தவொரு ஊடகமும் அன்றைய நாட்களில் வெளிச்சத்திற்கு கொண்டு வரவில்லை. எத்தனையோ குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உறவுகளை வன்னியிலே தொலைத்துவிட்டு வறுமையில் வாடியபொழுது உல்லாசமாக குளிரூட்டப்பட்ட வாகனத்தில் சுற்றுலா சென்றவாறு புலிகளிடமும் கூட்டமைப்பினர் பணம் கறப்பதில் குறியாகவே இருந்து செயற்பட்டனர்.

இந்த விடயத்தை தமிழ் ஊடகங்கள் முழுமையாக மூடிமறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டமையானது தமிழ்மக்களிற்கு தமிழ் ஊடகங்கள் இழைத்த அநீதிகளுள் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியது. ஏனெனில் மக்களிடம் சேகரித்த நிதியை வைத்தே புலிகள் இவர்களுக்கு பணம் கொடுத்தனர். இந்தப் பணத்தை ஒன்றில் புலிகள் தமது படையியல் தேவைகளிற்கு பயன்படுத்தியிருந்தால் ஒரு போராட்ட இயக்கம் மக்களிடம் நிதிசேகரித்து போராடுகிறது என ஓரளவிற்கு நியாயப்படுத்தியிருக்க முடியும். அல்லது அந்த நிதியை தமது அமைப்பிலிருந்து அல்லது யுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு பகிர்ந்தளித்திருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும்.

ஆனால் உருப்படியான எதையுமே செய்யாமல் தமது பிள்ளைகளை இந்தியாவிலும் ஏனைய பிறநாடுகளிலும் கல்விகற்க அனுப்பிவிட்டு இங்கு வீர வசனங்களை பேசியவாறு மக்களை மட்டுமல்லாது புலிகளையும் ஏமாற்றியவாறு அரசியல் செய்தவர்களிற்கு வழங்கிய நிதியானது உண்மையில் ஒரு மக்கள்விரோத நடவடிக்கையாகவே பார;க்கப்பட வேண்டியது. இதை தமிழ் ஊடகங்கள் மூடிமறைத்தமையானது மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு விடயமாகும்.

தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் அவர்கள் குறிப்பாக ஒரு நிலையான கொள்கையை வகுத்து செயற்படுவதை தவிர்த்தே வந்தனர். குறிப்பாக பக்கம் சாரும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். விடுதலைப்புலிகளை அழிப்பதில் ஏதோ ஒரு வகையில் பங்காற்றிய தமிழ் ஊடகங்கள் தொடர்பில் புலிகள் இறுதிக்கட்டத்தில் அதிருப்தியடைந்தே காணப்பட்டனர். வன்னியில் விடுதலைப்புலிகளால் நடத்தப்படுகின்ற ஒவ்வொரு வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்புக்கள் மற்றும் பிற முக்கிய சந்திப்புகள் என்பனவற்றில் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்கின்ற சந்தர்ப்பங்களில் இவர்களுக்கு புலிகள் பல்வேறு சலுகைகளை வழங்குவதுடன் இவர்களை தமது கண்காணிப்பிலும் வைத்திருக்கத் தவறுவதில்லை.

குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, கொழும்பு போன்ற பகுதிகளிலிருந்து வரும் ஊடகவியலாளர்களை மேலோட்டமாக பொட்டம்மானின் ஆட்கள் அவதானித்தவாறே இருந்துகொள்வர். இதைவிட ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வருகின்ற ஊடகவியலாளர்களில் பொட்டம்மானின் நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளர்களும் ஏனைய ஊடகவியலாளர்களுடன் இரண்டறக்கலந்து சந்திப்புக்களில் கலந்து கொள்வர். சந்திப்புக்கள் முடிந்தபின்னர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவில் ஊடகங்களை கையாளுகின்ற பிரதீப் மாஸ்ரர் என்பவரை இவர்கள் சந்திக்கத் தவறுவதில்லை. இவ்வாறு சந்திக்கின்ற பொழுது ஏனைய ஊடகவியலாளர்களின் மனநிலை அவர்களுடைய போக்குகள் என்பன தொடர்பில் இவர்கள் புலிகளிற்கு தகவல்களை வழங்கத் தவறுவதில்லை.

குறிப்பாக வவுனியாவிலிருந்து செயற்பட்டு வந்த மாணிக்கவாசகம் என்ற ஊடகவியலாளர் தொடர்பில் புலிகளிற்கு அடிக்கடி சந்தேகங்கள் எழுவதுண்டு. இவர் தொடர்பில் புலிகளிற்கு மறைந்த நிமல்ராஜனும், வித்தியாதரனும் அடிக்கடி கோள் சொல்லிவந்தனர். நிமலராஜன் மறைந்ததன் பின்னர் வித்தியாதரன் தொடர்ச்சியாக போட்டுக்கொடுத்து வந்தார். இருந்த போதிலும் மாணிக்கவாசகம் வெட்டி ஓட கற்றுக்கொண்டதால் புலிகளையே வெட்டி ஓடியதுடன் புலிகளின் அரசியல் துறையை தனது கைக்குள் போட்டுக்கொண்டு காரியத்தை சாதித்து வந்தார். குறிப்பாக வன்னிப்பகுதிக்குதான் வர முடியாத சூழ்நிலைகளில் அரசியல் துறை ஊடாகத் தகவல்களை உடனுக்குடன் பெற்றுவந்தார். சில நேரங்களில் இவர் வன்னிக்கு வந்தாலும் விடுதலைப்புலிகளின் விருந்துபசாரங்களில் இவர் கலந்து கொள்வதற்கு அழைக்கப்படுவதில்லை.

விடுதலைப்புலிகளின் விருந்துபசாரங்கள் என்பது சாதாரணமானதல்ல அதாவது விசேட விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்ற பொழுது வான்கோழி முக்கிய உணவாக இருக்கும். இந்த வான்கோழியின் அதிசயங்கள், இவற்றை உண்ட ஊடகவியலாளர்கள் புலிகளை எவ்வாறு உண்ட வீட்டுக்கு இரண்டகமாக அழித்து முடித்தார்கள் என்பது தொடர்பில் தொடர்ந்து பார்ப்போம்.

வே.அர்ச்சுணன்

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல