புதன், 19 டிசம்பர், 2012

இலங்கையில் தொடர்கின்றது இயற்கை அனர்த்தம்! 17 பேர் பலி; ஒரு லட்சம் பேர் நிர்க்கதி

இலங்கையின் பல பாகங்களிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சம் பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.

அடை மழை, வெள்ளம், மண்சரிவு, மரம்முறிவு போன்ற இடர்களால் நேற்று மாலை வரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

22 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சீரற்ற காலநிலை சுழல் காற்று காரணமாக 92 வீடுகள் முற்றாகவும், 499 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

இடம்பெயர்ந்த ஆயிரத்து 791 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 312 பேர் 29 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கில்

வடக்கு, கிழக்கிலும் காலநிலை சீரற்றுக் காணப்படுகின்றது. இதனால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேய்ச்சலுக்காக சென்ற மாடுகளை தேடிச்சென்ற குடும்பஸ்தர் இருவர் வெள்ளத்தில் சிக்குண்டு பலியாகியுள்ள சம்பவம் ஒன்று மாவடியோடையில் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை மாவட்டம்

சீரற்ற காலநிலையால் மாத்தளை மாவட்டத்தில் 363 குடும்பங்களைச் சேர்ந்த 1487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளையில் அதிகூடிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இங்கு 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 38 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 161 குடும்பங்களைச் சேர்ந்த 742 பேர் 8 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டம்

சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் இதுவரை 66 குடும்பங்களைச் சேர்ந்த 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பதுளை மாவட்டம்

இங்கு 113 குடும்பங்களைச் சேர்ந்த 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட 78 குடும்பங்களைச் சேர்ந்த 330 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பசறை, கோணக்கல எனுமிடத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

குருநாகல் மாவட்டம்

குருநாகல் மாவட்டத்தில் ஆயிரத்து 395 குடும்பங்களைச் சேர்ந்த 5ஆயிரத்து 229பேர் பாதிக்கப்பட்டுள்ளளர்.

காலி மாவட்டம்

இங்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டம்

இங்கு ஆயிரத்து 514 குடுடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 933பேர் பாதிப்படைந்துள்ளனர்.

மொனராகலை மாவட்டம்

இங்கு 47 குடும்பங்களைச் சேர்ந்த 156பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 37 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மண்சரிவால் போக்குவரத்து முடக்கம்

கொழும்பு பதுளை பிரதான வீதி, பெரகல, ஹப்புத்தளையில் நேற்று முற்பகல் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவ்வீதியினூடாகப் பயணத்தை மேற்கொள்ள உள்ளவர்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, மரம் முறிவு போன்ற இடர்களால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

கொழும்பு பதுளை ரயில் சேவைகள் நானு ஓயாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் இடிந்து வீழ்ந்திருந்த மண்மேட்டுக்குள் ரயில் இயந்திரம் சிக்கியதால் அந்த ரயில் தடம் புரண்டுள்ளது.

இதனால் கொழும்பு மற்றும் கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் ரயில சேவைகள் நானுஓயா ரயில் நிலையத்திற்கும். பதுளையிலிருந்து கொழும்பை நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகள் அப்புத்தளை ரயில் நிலையத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளம் அள்ளிச்சென்ற பாலம்

இதேவேளை, வெள்ளத்தினால் இரும்பு பாலம் ஒன்றும் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. மஹியங்கனையில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மஹியங்கனைதெய்யத்தகண்டி பிரதான வீதியில் உல்ஹிட்டி எனும் இடத்திலுள்ள பாலமே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது என கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், வெள்ளப்பெருக்கினால் 150 குடும்பங்கள் அந்தப் பிரதேசத்தில் நிர்க்கதியாகியுள்ளன என மஹியங்கனை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இரவு தபால் ரயில் சேவைகள் ரத்து

இது இவ்வாறிருக்க, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சேவையில் ஈடுபடவிருந்த சகல இரவு தபால் சேவை ரயில்களும் இரத்துச்செய்யப்பட்டன என்று ரயில்வே கட்டுப்பாட்டுச்சபை அறிவித்துள்ளது.

மலையகம் மற்றும் வடக்கு ரயில் தண்டவாளங்கள் மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதால் நேற்றிரவு சேவையில் ஈடுபடுத்தப்படவிருந்த சகல இரவு தபால் சேவைகளும் இரத்து செய்யப்பட்டன என்று ரயில்வே கட்டுப்பாட்டுச்சபை மேலும் தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு

நாட்டின் பல பாகங்களிலும் பெய்துவரும் அடை மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் அவசரமாக திறக்கப்பட்டுள்ளன. கலாஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என புத்தளம் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கலாஓயாவை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மீஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதால், இங்கினியாகல நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், உடவலவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில நாள்களுக்கு தொடரும் என்பதால் மக்களை அவதானத்துடன் இருக்ககுமாறு கேட்கப்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல