புதன், 19 டிசம்பர், 2012

இறந்தவர்கள் இன்னமும் எண்ணப்படுகிறார்கள்

20 வருடங்களுக்கு மேலாக நீங்கள் ஊடகவியலாளராக இருந்திருக்கிறீர்கள். ஈரான், பாகிஸ்தான் உட்பட்ட பல சர்ச்சைகள் மிகுந்த நாடுகளிலே கடமையாற்றியிருக்கிறீர்கள். இருந்தும் உங்கள் முதலாவது நூலை இலங்கைபற்றி எழுத காரணம் என்ன?

பிரித்தானியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரான ஃபிரான்ஸிஸ் ஹரிஸன் (Frances Harrison) 1993 முதல் 2008 வரை பி.பி.ஸியின் வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றியவர். இவர் "இறந்தவர்கள் இன்னமும் எண்ணப்படுகிறார்கள்" (Still Counting the Dead) என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

நான் இலங்கையிலே 4 ஆண்டுகள் இருந்தேன். அதுதான் நான் ஒரு நாட்டில் இருந்தஆகக்கூடிய காலம். அதுவொரு காரணமென நினைக்கிறேன். மேலும், இலங்கை பற்றி ஒருநூல் எழுத வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் ஆரம்பிக்கவில்லை. உண்மையில் நான் ஈரான் பற்றி எழுதத்தான் விரும்பினேன். அங்கு நான் 3 ஆண்டுகள் கடமையாற்றியிருக்கிறேன். அதுதான் நான் கடைசியாக கடமையாற்றிய நாடு. ஆனால், நான் இலங்கையை, அங்கு நடைபெற்ற போரை, கவனித்து வந்திருக்கிறேன். போர்க்காலம் முழுமையாகவும் நான் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த புலித்தேவனுடன் தொடர்பில் இருந்தேன். போரின்பின், இலங்கையைப் பற்றி கவனிக்கவேண்டியது மற்றவர்களின் பொறுப்பு என்றே எண்ணினேன்.

சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் குழுவும் ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என எண்ணினேன். போர் முடிந்து ஓராண்டு கடந்த நிலையில், இலங்கையில் எனக்கு அறிமுகமாயிருந்த பல ஊடகவியலாளர்கள் இலண்டனுக்கு வந்து தஞ்சம் கோர ஆரம்பித்திருந்தார்கள். அவர்களிடம் இருந்து, இலங்கையில் என்ன நடந்தது என மென்மேலும் அறிந்து கொண்டேன். அந்த வேளையில், பங்களாதேச யுத்தம் பற்றி எழுதிய ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அப்போதுதான் எந்த பக்கச்சார்பும் அற்ற ஒரு தனிநபர் என்ற முறையிலே, நான் செய்யக்கூடிய மிகக்குறைந்த பங்களிப்பு இலங்கையில் என்ன நடந்தது என எழுதுவதுதான் என தீர்மானித்தேன்.

அந்தப் போர் பற்றி பெரும்பாலும் யாரும் அறிந்திருக்கவில்லை என உணர்ந்தேன். வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஊடகவியலாளர்கள் ஊடாக, போரில் சிக்கித் தப்பித்த சிலர் வெளிநாடுகளுக்கு பாதுகாப்பாக வந்தடைந்துள்ளார்கள் என அறிந்தேன். அந்த வேளையில், வன்னியுடன் எந்தத் தொடர்புமே இருக்கவில்லை. மேலும், வன்னியில் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிப்பது மிகவும் கடினமானதும், அபாயகரமானதும் கூட. ஆனால், போதுமான நேரடிசாட்சிகள் வெளிநாடுகளில் இருந்தார்கள்.

வன்னியில் இருந்து முதலில் வெளியேறியவர்கள் சமாதான காலத்தில் அங்கு சென்றிருந்த வெளிநாட்டவர்கள்தான். அவர்கள் மூலம் ஒவ்வொருவராக எனக்கு பல நேரடிசாட்சிகள் அறிமுகமானார்கள். அவர்களைப் பல நாடுகளுக்கும் சென்று சந்தித்தேன். அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாங்களுக்குச் சென்றேன். ‘2009ல் முள்ளிவாய்க்காலில் இருந்தவர்கள் யாராவது இருந்தால் உங்களுடன் நான் பேச விரும்புகிறேன்’ எனக் கூறினேன். என்னுடன் பேசியவர்கள் அனைவரின் கதைகளுமே அதிர்ச்சியூட்டுபவையாக இருந்தன.

உங்கள் நூலின் துணைத்தலைப்பு ‘இலங்கையின் மறைக்கப்பட்ட போரில் தப்பித்தவர்கள்’ (Survivors of Sri Lanka’s Hidden War) என்று இருக்கிறது. ‘மறைக்கப்பட்ட’ என்ற சொல்லை நீங்கள் தெரிவு செய்தது ஏன்?

ஏனெனில், யாருமே அந்தப்போரை சரியாகப் பார்க்கவில்லை. அது மறைக்கப்பட்டது.உதவிப்பணியாளர்கள் ஊடகவியலாளர்கள் போன்ற பக்கச்சார்பற்றசாட்சிகள் யாரும் அந்தப்போரைப் பார்க்க இலங்கை அரசு மேண்டுமென்றே அனுமதிக்கவில்லை. செய்மதித் தொலைபேசிகளும், சமூக ஊடகங்களும் நிறைந்துள்ள இந்த யுகத்திலே இந்தநிலை காண்பதற்கரியது. ஈரான் போன்ற தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்துகூட, பாரிய போராட்டங்கள் நடைபெறும்போது செய்திகள் வெளிப்படுகின்றன. மக்கள் ஏதாவது வழியாக செய்தியை வெளியிடுகிறார்கள். அது தாக்கத்தை உண்டுபண்ணுகிறது. ஆனால் இலங்கையில் அப்படி நடக்கவில்லை. தமிழ் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிடத்தான் செய்தார்கள். இருந்தும், அவை பெரும்பாலும் யாரையும் சென்றடையவில்லை. நூலிலே, போரில் தப்பித்தவர்கள் பலரின் தனிப்பட்ட அனுபவங்களைவிபரிக்கிறீர்கள். அத்தோடு இணைப்பாக, பல்வேறு மனித உரிமை மீறல்கள், நிகழ்வுகள் தொடர்பானபுள்ளிவிபரங்களையும் தருகிறீர்கள்.

இலங்கையில் நடந்ததுபோன்ற ஒரு கோர நிகழ்வை விபரிப்பதற்கு மிக உகந்த வழி புள்ளிவிபரங்களா? தனிநபர்களின் நேரடி சாட்சியங்களா? தனிநபர் சாட்சியங்கள்தான். நிச்சயமாக தனிநபர் சாட்சியங்கள்தான். புள்ளிவிபரங்களுக்கு மனித முகம் கொடுக்கப்பட வேண்டும். புள்ளி விபரத்தில் இருப்பவர்கள் உன்னையும் என்னையும் போன்றவர்கள் - தங்கள் பிள்ளைகளைப்பற்றிக் கவலைப் படுகிறார்கள், தங்கள் துணைவரை நேசிக்கிறார்கள், இந்த மோசமான நிகழ்வு அவர்களுக்கு நடக்கமுன் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் - என காட்டவேண்டும். அதீத நெஞ்சுரத்தைக் கூறும் பலகதைகளும் உள்ளன. முன்னறியாதவர்களின் கருணையைக் கூறும் கதைகளும் உள்ளன.

சில நல்ல சிங்களவர்கள் இறுதியிலே சில தமிழர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.அப்படிப் பலர் இருக்கவில்லை. இருந்தாலும் சிலர் இருந்திருக்கிறார்கள். எனவே இந்தக் கதைகள் எல்லோரையும் போன்ற சாதாரணமான மக்களின் கதைகள் என பார்க்கப்பட வேண்டும். அதனால்தான் அவர்களின் கதைகளை கேட்டு எழுதினேன். பின்னர் புள்ளி விபரங்களை இணைத்தது, கதைகளிலே கூறப்பட்ட நிகழ்வுகள ஆயிரக் கணக்கானவர்களுக்கு மீண்டும் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது என உணர்த்தவே. காணாமல் போனவர்கள் பற்றி பேசும்போது, ஒரு பெண்ணின் கணவர் காணாமல் போனதை பார்க்கிறோம். அது எந்த அளவுக்கு அந்தப் பெண்ணை வருத்திக் கொடுமைப்படுத்துகிறது என பார்க்கிறோம். பின்னர், இலங்கையிலே காணாமல் போதல் என்பது எத்தனையெத்தனையோ முறை நிகழ்ந்திருக்கிறது என பார்க்கிறோம். அந்த பெண்ணின் கதை ஒரு உதாரணம் மட்டுமே.

பலரின் நேரடி சாட்சியங்களை நூலிலே பதிவு செய்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் நேரடி அனுபவங்கள் பற்றிய பதிவு எதையும் இணைக்கவில்லை. இலங்கையிலே 2000 முதல் 2004 வரை நான்கு ஆண்டுகள் வசித்திருக்கிறீர்கள். ஒரு ஊடகவியலாளராக நீங்கள் எதிர்நோக்கிய கட்டுப்பாடுகளை, சவால்களை நூலிலே இணைக்காதது ஏன்?

அது என்னுடைய பி.பி.சி பயிற்சி (சிரிக்கிறார்). என்னை கதையில் இணைத்துக்கொள்ளாது, வெளியில் இருந்து பார்க்கவேண்டும் என்பதுதான் எனக்கு வழங்கப்பட்ட பயிற்சி. (மீண்டும்சிரிக்கிறார்). உண்மையிலேயே, ஊடகவியலாளர் என்ற முறையிலே, என்னையும் கதையின் ஒரு அங்கமாக இணைப்பது சற்றுச் சங்கடமானதுதான். மேலும், நான் 2004 -2005இல் இலங்கையிலே இருந்து வெளியேறி விட்டேன். நூலிலே உள்ள காலம் 2008 முதல் 2009 வரையான காலம். அத்தோடு, இலண்டனிலே தஞ்சம் கோரியிருந்த இலங்கை ஊடகவியலாளர்கள் பலர் என்னிடம் “ஃபிரான்சிஸ், நீ வாழ்ந்த இலங்கையும் இப்போதுள்ள இலங்கையும் ஒரே நாடு அல்ல”என கூறினார்கள். அதை நான் கருத்திலெடுத்ததும் காரணம்.

இலங்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை விவரிக்கையில், மனித
உரிமை ஆர்வலர்கள், அனைத்துலக சட்ட வல்லுனர்கள் என பல தரப்பினருமே, வெவ்வேறு சொற்பதங்களின் வரைவிலக்கணம் பற்றிய தர்க்கங்களில் பெரிதும் கவனம் செலுத்துகிறார்கள். இனஅழிப்பு, மனிதப்படுகொலை, போர்க்குற்றம் போன்ற பல்வேறு பதங்களும் கையாளப்படுகின்றன. நீங்கள் அதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

நான் ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கை பயன்படுத்திய போர்க்குற்றம், மாநிடத்திற்கு எதிரான குற்றம் போன்ற சொற்பதங்களையே பயன்படுத்தினேன். இது இனப்படுகொலை என்ற வாதமும் எனக்கு புரிகிறது. அது நடைபெற்ற வேளையிலே, இனப்படுகொலையை தடுக்க வேண்டிய கடமை அனைத்துலக சமூகத்திற்கு உண்டு என்ற நிலையை அந்த சொற்பதத்தின் பயன்பாடு ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், இப்பொழுது காலம் கடந்துவிட்டது. இனப்படுகொலை என்ற விடயம்,

கல்விமான்களாலும் அறிஞர்களாலும் ஆராயப்படவேண்டும் என்பதே எனது எண்ணம்.
இனப்படுகொலை என்ற பதம் எந்த சந்தர்ப்பத்திலே பயன்படுத்தப்படலாம் என்ற முடிவு அனைத்துலக சட்டம் அறிந்த வல்லுனர்களால் மேற்கொள்ளப்பட்டாலே, அந்த பதத்திற்கு கனதி இருக்கும், அந்த முடிவு அரசியலாக்கப்படாது என நினைக்கிறேன். இனஅழிப்பு பற்றிய அனைத்துலக நியமத்தை நான் படித்திருக்கிறேன். அது பரந்துபட்ட விடயங்களை இன அழிப்புக்குள் உள்ளடக்குகிறது. இருந்தாலும், அதை எப்படி, எந்தச்
சந்தர்ப்பத்திலே பயன்படுத்தலாம் என்ற தெளிவு எனக்கு இல்லை. இலங்கை அரசின் நோக்கம் இன அழிப்பே என பலர் வாதிட கேட்டிருக்கிறேன். அதுவே அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையும் உருவாகலாம். அது இன்னும் ஆராயப்படவேண்டும் என்றே நினைக்கிறேன். எனது நூலைப் படித்த பலரும், இதை இன அழிப்பு என்று அழைப்பதே பொருத்தமானது என கூறுகிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.

அண்மையில் வெளியான ஐக்கியநாடுகளின் அகநிலை அறிக்கை
பற்றிய உங்கள் எதிர்வினை என்ன?

எனது முதல் உணர்வு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்ததாயிருந்தது. அது ஒரு நல்ல அறிக்கை. வெறும் கண்துடைப்பாக இருக்கும் என நான் அஞ்சியிருந்தேன். எனது நூலை எழுதும்போது அந்த அறிக்கை இருக்கவில்லை என்று சற்றுக் கோபமாகவும் இருந்தது (சிரிக்கிறார்). ஐக்கிய நாடுகள் பற்றிய அத்தியாயத்திலே நான் எழுதிய எல்லா விடயங்களும் உண்மையென இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. நான் அதை எழுதியபோது சற்று அச்சமாக உணர்ந்தேன். ஏனெனில் வேறு
யாரும் அந்த விடயங்கள் பற்றி அதுவரை எழுதியிருக்கவில்லை. பின்னோக்கிப் பார்க்கையில், ஐக்கிய நாடுகளை நான் இன்னும் கடுமைமாக விமர்சித்திருக்கவேண்டும் என தோன்றுகிறது. பின்னர், அந்த அறிக்கையை இரண்டாம் முறை படித்தபோது, கோபந்தான் மேலிட்டது. போரில் தப்பிப்பிழைத்தவர்களை சந்தித்து, அவர்கள் அனுபவித்த கொடுமைகளை அறிந்திருக்கும் எனக்கு, அவர்களுக்கு உதவியிருக்கக் கூடிய பல தகவல்களை இவர்கள் (ஐ.நா.) ஒளித்திருக்கிறார்கள் என எண்ணும்போது ஆத்திரம் வருகிறது. இந்த தகவல்கள் பொதுமக்கள் கருத்துநிலையிலாவது மாற்றத்தை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உதவியிருக்கலாம்.

அப்படி உதவாமல் போயிருந்தாலும், இவர்கள் ஒளித்தது தவறு. ஒரு ஊடகவியலாளர் என்ற முறையிலே உண்மைகளை வெளியிடாது ஒளிப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மக்களுக்கு உண்மைச்செய்திகள் தெரியப்படுத்தப் படவேண்டும். அதைவைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களின் பிரச்சினை. எனவே ஐக்கியநாடுகளின் இந்த நடவடிக்கை எனக்கு மிகுந்த ஆத்திரத்தையே ஏற்படுத்துகிறது. மக்கள் பட்ட கொடுமைகளை நான் அறிந்துள்ளதால் இந்த ஆத்திரம் மிகுதியாகிறது. நான் ஒரு தமிழராக இருந்து, போரிலே ஒரு அன்புக்குரியவரை இழந்திருத்தால், இதைவிட ஆத்திரமடைவேன்.

அழிவுக்குள்ளாகும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடைமையிலே
ஐக்கிய நாடுகள் தவறியிருப்பது இது முதல் முறையல்ல. இதுவே கடைசி முறையாக இருக்கும் என நினைக்கிறீர்களா?

எனக்கு உண்மையிலேயே தெரியாது. அப்படி இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். சிரியாவில் இதே தவறை ஐக்கிய நாடுகள்
இழைக்காதிருக்க இலங்கையிலே கற்றுக்கொண்ட பாடங்கள் உதவும் என கூறுகிறார்கள். அது நல்லதுதான். ஆனால் நான் கேட்கிறேன், இலங்கையர்களுக்கு உங்கள் பதில்என்ன? அந்த மக்களுக்கு இன்னமும் நீதிவழங்கப்படவில்லையே? அவர்களை எப்படிகைவிட முடியும்? ஐக்கிய நாடுகள் கற்றுக்கொண்ட இந்த பாடங்கள் சிரியாவில் நிலமையைக் கையாள மட்டும் பயன்படுத்தப்படாது, இலங்கையில் இழைத்த தவறை நிவர்த்தி செய்யவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே என் அவா. இலங்கையர்கள் என்ற முறையிலே நீங்கள் அவர்களை அழுத்தவேண்டும்.

அனைத்துலக அரங்கிலே, இலங்கை விடயம் அவ்வப்போது கவனத்திற்கு
வருகிறது. பின்னர் காணாமல்போய் விடுகிறது. இந்த விடயத்தை தொடர்ந்தும் அனைத்துலகின் கவனத்திலிருத்த என்ன செய்ய வேண்டும்?

செய்திகள், நூல்கள், செயற்திட்டங்கள் ஊடாக உண்மையில் என்ன நடந்தது என மக்களுக்கு சொல்லவேண்டும். மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பாரிய தேவை இன்னமும் உள்ளது. பல மேற்குலக இராஜதந்திரிகளுடன் நான் இலங்கை பற்றிப் பேசும்போது, அவர்கள் என்னிடம் “2009ல் என்ன நடந்தது என எனக்குத் தெரியும்” என கூறுவார்கள். நான் அவர்களிடம் “இல்லை. உங்களுக்கு தெரியாது. தெரிந்தால் இப்படிப் பேசமாட்டீர்கள்” என்று கூறுவேன். மேற்குலகில் மட்டுமல்ல, ஆசியாவிலும் குறிப்பாக இந்தியாவிலும் சொல்லப்படவேண்டும். இந்தியத் தமிழர்களுக்குக்கூட 2009இல் என்ன நடந்தது என முழுமையாக தெரியாது என நினைக்கிறேன். ஏனெனில் நடந்த விடயங்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குக் கோரமானவை. தப்பித்தவர்கள் தங்கள் கதைகளைக் கூற முன்வர
வேண்டும்.

அது அவர்களுக்கு மிகவும் கடினமானது. பாரிய மனவேதனையையும், பயத்
தையும் தரக்கூடியது. இருந்தாலும், எவ்வளவு கொடூரமான நிகழ்வுகள் நடைபெற்றன என மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.
நான் எனது பங்குக்கு ஒரு நூலை எழுதியுள்ளேன். இலண்டனிலே எனது நூலை ஒருநாடகமாக்கும் முயற்சியிலே சிலர் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் மனித உரிமைகள் பற்றிய கதைகளை நாடகமாகப் போடும் அனுபவமிக்க குழுவினர். அதுவும் முக்கியமானது.ஏனெனில், மனித உரிமைகள் பற்றிய நூல்களை படிக்க விரும்பாத பலர் நாடக விரும்பிகளாக இருப்பார்கள். பெஞ்சமின் டிக்ஸ்என்ற ஐக்கிய நாடுகள் பணியாளர் இறுதிப்போர் பற்றிய ஒரு சித்திர நாவலை உருவாக்கி வருகிறார். அவர் கிளிநொச்சியிலே நான்கு ஆண்டுகள் வாழ்ந்தவர். அங்கிருந்து வெளியேறியது தொடர்பாக மிகுந்த மன உளைச்சலடைந்தவர். அவரது சித்திரநாவல் முயற்சி ஒரு புதிய சாராருக்கு, இளவயதினருக்கு, இந்தக் கதைகளை எடுத்துச் செல்லும்.கலம் மக்றே இன்னொரு சனல்-4 விவரணப்படத்தை எடுத்து வருகிறார். இவையெல்லாமே முக்கியமான முயற்சிகள். எனது கருத்தில்,தப்பித்தவர்கள் தங்கள் சாட்சியங்களை பகிர முன்வருவது மிக முக்கியமானது. யாரும்கேட்டு எழுதியதை படிப்பதைவிட, அவர்களிடமே இருந்து நேரடியாக கேட்பது மிகுந்ததாக்கத்தை உண்டுபண்ணும்.

நீங்களே முதலில் குறிப்பிட்டீர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் செய்தி
களை வெளிப்படுத்தியபோதும் அவை பெரிதும் யாரையும் சென்றடைய
வில்லை என்று. ஆனால், ஒரு வெளிநாட்டு ஊடகவியலாளர் அதே
செய்திகளை வெளியிடும்போது அது நம்பகத்தன்மை மிக்கதாக நோக்கப்படுகிற நிலை இருக்கிறதே?

அந்த நிலை இருக்கிறது என்ற உங்கள் கணிப்புடன் உடன்படுகிறேன். ஆனால், அந்தநிலையுடன் முரண்படுகிறேன். எல்லாத் தமிழர்களின் சாட்சியங்களும் நம்பகத்தன்மையற்றவை என்ற கணிப்பு மிக மோசமானது. உண்மையிலேயே அது இனக் காழ்ப்பின் ஒரு வடிவம். முள்ளிவாய்க்கலில் இருந்து வெளியே
வந்த சாட்சிகளை நான் நோக்கும்போது,அவர்கள் தமிழர்களென்பதால் நம்பகத்தன்மைகுறைந்தவர்கள் எனக்கூறுவது எந்த வகையிலே என எனக்கு புரியவில்லை. அவர்களுடன் உட்கார்ந்து பேசும்போது அவர்கள் நம்பகத்தன்மை மிகுந்தவர்கள் என தெளிவாக தெரியும். தங்கள் கதைகளைக் கூறுகையில் அவர்கள் படும் துன்பமும் உளைச்சலும் அதற்குச் சான்று. அந்தக் கதைகளை மீண்டும் மீண்டும் கூற அவர்களுக்கு விருப்பமில்லை. இருந்தாலும், முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பாதவர்களுக்காக - தங்கள் கதைகளைத் தாங்கள் கூறவேண்டியது தமது கடமை என நினைக்கிறார்கள். அவர்களின் கதைகளை பிரச்சாரம் எனக்கூறுவது கீழ்த்தரமானது. சரி அப்படித்தான் கூறப்போகிறீர்கள் என்றால், ஐக்கிய நாடுகள் போன்ற நிறுவனங்களுக்கு பணியாற்றிய வெளிநாட்டவர்கள் ஜனவரி மாதத்திலேயே பல போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதை கண்டிருக்கிறார்கள். வைத்திய சாலைகள் தாக்குதலுக்குள்ளானதை, எங்கும் இறந்த உடல்கள் சிதைந்து கிடந்ததை கண்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள். எனது நூலிலே இடம்பெற்றிருப்பவர்கள் ஒரு வகையிலே அதிர்ஷ்டசாலிகள். அவர்கள்
தற்பொழுது பாதுகாப்பாக வெளிநாடுகளிலே இருக்கிறார்கள். ஆனால், இதே கோர நிகழ்வுகளை அனுபவித்த பலர் இப்பொழுதும் இலங்கையிலே அச்சத்துடனும், பாதுகாப்பின் மையுடனும் வாழ்கிறார்கள். அவர்களின் கதைகளும் என்றோ ஒருநாள் வெளிவர வேண்டும்.

நேர் காணல். துஷி ஞானப்பிரகாசம்





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல