வியாழன், 28 பிப்ரவரி, 2013

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 01!

 
 
மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன்
 
“ இலங்கை அரசியலில் வரலாற்று நாயகனாகத் திகழ்ந்துவரும் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறு வெற்றி தோல்வி, மேடு பள்ளங்களைக் கொண்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ ஒரு கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல. அவரது பெற்றோர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெட்டிய பகுதியில் ஒரு கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை டீ.ஏ.ராஜபக்ஷ, பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து, நேர்மையான அரசியலை நடத்துவதற்காக தனது குடும்ப சொத்துக்களை விற்று செலவிட்ட ஒரு அரசியல் தியாகியாக விளங்கினார்.

மஹிந்த ராஜபக்ஷ 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதியன்று மாத்தறை நகரத்தில் பிறந்தார். அன்றைய தினம் தென்னிலங்கை மட்டுமல்ல, இந்நாட்டுக்கும் ஒரு இரட்சகர் பிறந்தார் என்று கூறுவது பொருத்தமானதாக இருக்கும். சிங்கள, பெளத்த குடும்பத்தில் பிறந்த மஹிந்த, சிறுபிள்ளையாக இருந்த போது, தமது வீரகெட்டிய நகரத்தில் மற்ற பிள்ளைகளைப் போன்று ஒரு விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தார்.

கண்டிப்பான பெற்றோரின் கண்காணிப்பில் மஹிந்தவும், அவரது சகோதர, சகோதரிகளும் வளர்க்கப்பட்டார்கள். அப்படியிருந்தும் மஹிந்த தனது சிறுபராய நண்பர்களுடன் எத்தனையோ சேஷ்டைகளை புரிந்து அப்பாவின் கோபத்திற்கு இலக்காகியும் இருக்கிறார். இவரது ஆரம்பக் கல்வி, காலி றிட்ச்மன் கல்லூரியில் ஆரம்பமாகியது. பின்னர், கொழும்பு நாலந்தா கல்லூரியிலும், தேர்ஸ்டன் கல்லூரியிலும் சாதாரண, உயர்தர பரீட்சைகள் சித்தியடையும் வரையில் கல்வி பயின்றார்.

இவருக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டதாரியாவதற்கான தகுதியும், திறமையும் இருந்தது. ஆனால், மஹிந்த பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியானால் பின்தங்கிய பிரதேசமான தனது அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு உருப்படியாக எதனையும் செய்ய முடியாது என்று சிந்தித்தார். அதனால், கொழும்பு சட்டக்கல்லூரிக்கு சென்று சட்டத்தரணியாக வெளியேறினால், தென்மாகாணத்திலுள்ள ஏழை, அப்பாவி மக்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்கு, சட்டக் கல்வி தனக்கு உதவும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

கறுப்புக் கோட் அணிந்து நீதிமன்றங்களில் தனது மக்களுக்காக நீதி கோரி வாதாடிய சட்டத்தரணியான இளைஞர் மஹிந்த ராஜபக்ஷ, அந்த மக்களிடமிருந்து ஒரு சதத்தைக்கூட கட்டணமாக அறவிடவில்லை என்று அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுவார்கள்.

அவ்விதம், சட்டத்தரணி தொழிலில் பணம் சம்பாதித்திருந்தால், அவர் அன்று சொகுசான வாகனம் ஒன்றை வாங்கி இருக்கலாம். ஆனால், அவர் அவ்விதம் செய்யாமல், ஒரு பழைய வாகனத்தையே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்திலும் பயன்படுத்தியது இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

வீரகெட்டியவிலிருந்து சற்று அப்பால் இருக்கும் பலட்டுவ கிராமத்தில் இவரது பெரிய தந்தை டொன் மத்தியூ ராஜபக்ஷ பிறந்து வாழ்ந்து வந்தார். டி.எம்.ராஜபக்ஷ உயர்கல்வி கற்று அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கீழ் மற்றைய படித்த இளைஞர்களைப் போன்று மேற்கத்திய மோகத்தில் உடை அணிந்து வந்தார். ஆயினும், காலப்போக்கில் அவர் இலங்கையின் தேசிய பாரம்பரியங்களை மதிக்கக்கூடிய வகையில் தேசிய உடையை அணிய ஆரம்பித்தார்.

இவரது இளைய சகோதரர் டொன் அல்வின் ராஜபக்ஷ, அண்ணாவுக்கு அரசியலில் முழுநேரமாக சேவை செய்வதற்கு வாய்ப்பளித்து, தான் அரசியலில் முழுநேரமாக சேவை செய்வதற்கு வாய்ப்பளித்து, தான் விவசாயத்தை வாழ்வாதாரமாக வைத்து, குடும்பக் காணிகளை பராமரிக்கும் பணியை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். அண்ணா டி.எம்.ராஜபக்ஷ, அரசியலில் அடித்தளத்தை அமைத்துக்கொண்டு, இலங்கையின் சட்ட சபைக்கு அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அவர், பின்னர் தமது பிறப்பிடமான தென்னிலங்கையில் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கு, குறிப்பாக கிராமப்புறங்களின் பொருளாதாரத்தைச் சீர்திருத்துவதற்கான நல்ல பல திட்டங்களை எடுத்துவந்தபோது, அவருக்கு தம்பி டி.ஏ.ராஜபக்ஷ சகல துறைகளிலும் உறுதுணை புரிந்து வந்தார்.

துரதிஷ்டவசமாக திடீரென நோய் வாய்ப்பட்ட மூத்த சகோதரர் டி.எம்.ராஜபக்ஷ மரணமடைந்த வேளையில், ராஜபக்ஷ குடும்பத்தினர் பெரும் பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்நோக்கியிருந்தனர். குடும்பத்தின் பொருளாதாரத்தை மீண்டும் சீர்திருத்தும் பொறுப்பினை மஹிந்தவின் தந்தையான டி.ஏ.ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டார்.

அவர் தங்கள் பூர்வீகக் குடும்ப இல்லம் அமைந்திருந்த மெதமுலன கிராமத்தில் வசித்து, குடும்பப் பொறுப்பையும் அண்ணனின் மரணத்தினால் அரசியலில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தையும் நிரப்பினார். அன்று டி.எம்.ராஜபக்ஷ அவர்களின் கோண்டாகலவில் இருந்த இல்லமும் ஈட்டில் இருந்தது.

இவ்விதம் குடும்பத்தின் கடன்பளு அனைத்தையும் தீர்த்து வைக்கும் பணியையும் டி.ஏ.ராஜபக்ஷ நல்ல முறையில் நிறைவேற்ற ஆரம்பித்தார். தமது கிராமத்து மக்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட டி.ஏ.ராஜபக்ஷ அரசியலில் பிரவேசித்தார். இதனால், விவசாயத்திலும், வயல் வேலைகளிலும் தீவிர கவனம் செலுத்திவந்த டி.ஏ.ராஜபக்ஷ அரசியல்வாதியானார்.

கணவர் அரசியலில் முழுமையாக ஈடுபட்டதனால், திருமதி டி.ஏ.ராஜபக்ஷ விவசாயத்தையும், குடும்பப் பொறுப்புக்களையும் பிள்ளைகளின் பராமரிப்பையும் முழுமையாகக் கவனிக்க ஆரம்பித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ பிறந்த பின்னர் அவருக்கு எத்தகைய பொருத்தமான பெயரை வைக்கலாம் என்று அவரது பெற்றோர் சிந்தித்துக் கொண்டிருந்த போது, அவரது தந்தை பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகமாக இருந்த

சாம் விஜேசிங்கவை தற்செயலாக சந்தித்தார். திரு.விஜேசிங்க அப்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

தனக்கு இரண்டாவது மகன் பிறந்து விட்டான். அவனுக்கு என்ன பெயரை வைக்கலாம் என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று, டி.ஏ.ராஜபக்ஷ, சாம் விஜேசிங்கவிடம் கேட்டிருக்கிறார். அப்போது, சாம் விஜேசிங்கவுக்கு தான் அன்று வாசித்த இந்தியாவின் அசோக சக்கரவர்த்தியின் வரலாறு ஞாபகத்திற்கு வந்திருக்கிறது. அன்று அசோக சக்கரவர்த்தி, துறவறம் பூண்ட தனது புதல்வன் மஹேந்திராவை இலங்கைக்கு பெளத்த தர்மத்தை அறிமுகம் செய்து வைப்பதற்காக அனுப்பிய நிகழ்வு ஞாபகத்திற்கு வந்திருக்கிறது.



சங்கைக்குரிய மஹிந்த தேரர் மிஹிந்தலை மலையில் வேட்டைக்கு சென்று கொண்டிருந்த, தேவநம்பியதிஸ்ஸ மன்னனைச் சந்தித்த பெளத்த மதத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வும், இலங்கையை பெளத்த தர்மம் நிலைத்திருக்கும் ஒரு நாடாக மாற்றுவதற்கும், அடித்தளமாக அமைந்த அந்த சம்பவமும் சாம் விஜேசிங்கவுக்கு ஞாபகத்திற்கு வந்திருக்கிறது.

உங்கள் மகனுக்கு நீங்கள் மஹேந்திர என்று பெயர் வையுங்கள் (மஹிந்த ராஜபக்ஷவின் உண்மையான முதல் பெயர் மஹேந்திர என்பது குறிப்பிடத்தக்கது) என்று கூறியிருக்கிறார். மஹேந்திர என்ற பெயரை வைத்தால் அவர் பிற்காலத்தில் இந்த நாட்டில் ஒரு பெருந்தலைவராகி, மக்களை அடிமைப்பிடியில் இருந்து விடுவித்து சுதந்திரப் பிரஜைகளாக மகிழ்ச்சியோடு என்றென்றும் வாழவைப்பார் என்று, சாம் விஜேசிங்க அன்று ஒரு தீர்க்கதரிசியைப் போன்று கூறியது, இன்று உண்மையிலேயே நனவாகியிருக்கிறது.

1950ஆம் ஆண்டில் அரசியலில் தந்தை டி.ஏ. ராஜபக்ஷ கொடிகட்டிப் பறந்து. பாராளுமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்றத்தின் குழுக்களின் உபதலைவராகவும் உயர்பதவிகளை வகித்து, நாட்டிற்குச் சேவை செய்தார். டி. ஏ. ராஜபக்ஷ ஒரு நல்ல கிரிக்கட் வீரர். அவர் காலியிலுள்ள மிகப்பழைமை வாய்ந்த றிட்ச்மன் கல்லூரியின் கிரிக்கட் அணியில் விளையாடியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தை டி.ஏ. ராஜபக்ஷவை பார்ப்பதற்கு பொது மக்கள் சாதாரணமாக மெதமுலன இல்லத்தை முற்றுகையிடுவதுண்டு.

அப்போது வீட்டு முற்றத்தில் மஹிந்த தனது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷவுடனும், தம்பிமார்களுடனும், அக்கா, ஜயந்தியுடனும் மற்றும் அயல்வீட்டு நண்பர்களுடனும் கிரிக்கட் விளையாடி கூப்பாடு போடவும் தவறுவதில்லை.

எப்போதும் எனக்குத்தான், துடுப்பாடுவதற்கு முதல் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்றும் அடம்பிடித்து, அவ்விதம் மற்றவர்கள் அதற்கு இடம்கொடுக்காவிட்டால், அழுதுகொண்டே அம்மாவின் சேலை முந்தானையைப் பிடித்துக்கொண்டு, தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதுமுண்டு. என்ன செய்வது, தம்பிக்கு முதலில் துடுப்பாட இடமளிக்காவிட்டால் எங்களுக்கு இன்று கிரிக்கட் விளையாட முடியாது என்று அண்ணனும் ஏனையோரும் அலுத்தக்கொண்டே அவரது இணக்கத்திற்கு உடன்பட்ட பல சம்பவங்களும் சிறிய பராயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.

சிறிய பராயத்தில் மஹிந்த எதற்கும் அஞ்சாத நெஞ்சோடு, தான் நினைத்ததை சாதித்து முடிக்கும் பிடிவாத குணமுடைய சிறுவனாக இருந்தார். மஹிந்த ஏதாவது குழப்பம் செய்து விட்டால் அம்மா பிரம்போடு அவரை விரட்டி வரும் போது, அம்மாவின் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு முந்திரிகை மரத்தில் ஏறி அமர்ந்து, அம்மாவின் கோபம் தணியும் வரை இறங்கவே மாட்டாராம்.

இவ்விதம் ஒரு நாள் மஹிந்த மர முந்திரிகை மரத்தில் ஏறி முந்திரிகைப் பழத்தை பிடுங்கி சாப்பிட எத்தனித்த போது, அதில் இருந்த எறும்புகள் அவர் உடல் எங்கும் பரவி கடித்துவிட்டன.

அதனால் வேதனை தாங்க முடியாமல் மரத்தில் இருந்து இறங்கி, மஹிந்த அழ ஆரம்பித்தாராம்.

அப்போது, ஆத்திரத்துடன் பிரம்போடு வந்த தாயார் மகனின் வேதனையைப் பார்த்து பதறிப்போய், வீட்டில் பணிபுரிய வந்த ஒருவரின் உதவியுடன், மஹிந்தவின் உடம்பு முழுவதிலும் தேங்காய் எண்ணெய்யை பூசிய பின்னர், ஒரு கத்தியின் மொட்டைப் பக்கத்தினால் உடல் முழுவதையும் தேய்க்கச் செய்தார். இப்படிச் செய்தால் எறும்புக்கடியின் வேதனை நீங்கிவிடும் என்ற கிராமத்து மக்களின் விசுவாசத்திற்கு அமையவே இந்த சிகிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது.



1951 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதம மந்திரி S.W.R.D. பண்டாரநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய போது, டி.ஏ.ராஷபக்ஷ அவர்கள் பண்டாரநாயக்கவுக்கு தென்னிலங்கையில் ஒரு சேனாதிபதியைப் போன்று வலது கரமாக விளங்கி, முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

அதனால், 1956 இல் பலம்வாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்து. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையில் இலங்கையின் தேசிய உணர்வை மறுமலர்ச்சி செய்யும் கொள்கையுடன், ஒரு பலம்வாய்ந்த அரசாங்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

1951ஆம் ஆண்டில் சிறுவன் மஹிந்தவை, தாய் தந்தையின் அரவணைப்பில் இருந்து பிரித்து, கல்வியைத் தொடர்வதற்காக தாயின் நெருங்கிய உறவினர் ஒருவரின் இல்லத்தில் தங்க வைத்து, காலி றிட்ச்மன் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அண்ணன் சமலும் அதே கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அழுதுகொண்டே பெற்றோரை விட்டுப் பிரிந்த மஹிந்த, அங்கும் தனது முன்கோபத்தாலும், பிடிவாத குணத்தினாலும் பல்வேறு குழப்படிகளைச் செய்து தண்டனையும் பெற்றிருக்கிறார்.

ஒரு தடவை அம்மாவிடம் கோபித்துக்கொண்டு எனக்கு கிரிக்கட் விளையாட அனுமதிக்காவிட்டால், கிணற்றில் பாய்ந்துவிடுவேன் என்றுகூட பயமுறுத்தி இருக்கிறார். அப்போது, தாயார் மறுபக்கம் திரும்பியிருந்தபோது, கிணற்றுக்குள் ஒரு பெரிய கல்லைப் போட்டு, அதனால் ஏற்பட்ட சத்தத்தினால் அம்மாவை பதறடிக்கவும் செய்து, பின்னர் ஒரு மூலையில் இருந்து சிரிக்கும் ஒரு குறும்புக்கார சிறுவனாகவும் மஹிந்த இருந்தார்.

1953ஆம் ஆண்டில் தந்தையின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, அவர் கொழும்பில் அதிக நாட்கள் இருக்க வேண்டியிருந்ததனால், மஹிந்த 1953ஆம் ஆண்டில் கொழும்பு நாலந்தா கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

சிறுவனாக இருந்தபோது, பாடசாலை விடுமுறை காலத்தில் பிறப்பிடமான வீரகெட்டியவின் மெதமுலன இல்லத்திற்கு திரும்பும் மஹிந்தவும், சமலும் தங்கள் நண்பர்களுடன் அரசியல், விளையாட்டு, தேர்தல்கள் போன்ற விளையாட்டுக்களிலும் ஈடுபடுவார்களாம். மஹிந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தையும், அண்ணா சமல், ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தையும் வைத்துக்கொண்டு, அங்கிருந்த மண் மேட்டில் ஏறி, அரசியல்வாதிகளைப் போன்று, உரைகளையும் நிகழ்த்துவார்களாம்.

இவற்றையெல்லாம் பார்க்கும் அக்கா ஜயந்தி, இவர்களுக்கு வேறு வேலையே இல்லை என்று சிரித்துக்கொண்டே தன்னுடைய சிநேகிதிகளுடன் தங்கள் வயலின் நடுவிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுவிடுவார்.

ஒரு தடவை சிங்கள, தமிழ் புதுவருடத்திற்காக அம்மா அண்ணாவுக்கு வாங்கிக்கொடுத்த புத்தம் புதிய சேட்டில், மஹிந்த தற்செயலாக மையைக் கொட்டி, அண்ணாவிடம் நன்றாக வாங்கிக்கட்டினார். பின்னர், தாயாரின் தலையீட்டின் மூலம் தம்பி தவறுதலாகத்தான் செய்துவிட்டான், அவனை மன்னித்துவிடு என்று அண்ணாவை சமாதானப்படுத்திய போது, தான் செய்த குற்றத்தை உணர்ந்து மஹிந்த, அண்ணாவிடம் என்னை மன்னித்துவிடு என்று வேதனையுடன் கூறிய சம்பவமும் இடம்பெற்றிருக்கிறது.

1960 ஆம் ஆண்டளவில் விடுமுறை காலத்திற்கு ஊருக்கு போகும் மஹிந்த, நண்பர்களுடன் சைக்கிள் ஓடி விபத்துக்குள்ளாகி தன்னுடைய கால் எலும்பை முறித்துக்கொண்டும் இருக்கிறார்.



S.W.R.D. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், இரத்நாயக்க என்ற ஒரு பாடசாலை ஆசிரியர் தந்தையைச் சந்திப்பதற்காக வீட்டுக்கு அவரது பழைய காரில் வருவாராம். தந்தையாருக்கும் பாடசாலை ஆசிரியருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக, தனது நண்பர் ஒருவருடன் காரை ஓட்டிச்சென்று, ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு,மீண்டும் அதனை அதே இடத்தில் நிறுத்திவிட்டு மஹிந்த சென்றுவிடுவாராம். ஒருதடவை இவ்விதம் குறும்பு செய்தபோது, கையும் மெய்யுமாக பிடிபட்டு ஆசிரியரிடமும், தந்தையிடமும் நன்றாக வாங்கிக்கட்டியுமிருக்கிறார்.

நாலந்தா கல்லூரியில் இருந்து விலகிய மஹிந்த, 1961ஆம் ஆண்டில் தேர்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தபோது, அவருடைய எதிர்கால அரசியலுக்கு அங்கு வலுவான அடித்தளம் அமைந்தது. சிறந்த பேச்சாளரான மஹிந்த ராஜபக்ஷ, தேர்ஸ்டன் கல்லூரியில் சகல விளையாட்டுக்களிலும் தன்னிகரற்றவராக திகழ்ந்தார். அவர், சகல பாடசாலைகளுக்கு மிடையிலான மெய்வல்லுநர் போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

தேர்ஸ்ட்ன் கல்லூரியின் விவாதக் குழுவின் தலைவராக மஹிந்த இருந்தபோது, விசாக்கா மகளிர் வித்தியாலயத்தின் விவாதக்குழுவுடன் “சீதனம் தேவை தானா” என்ற தொனிப்பொருளில் ஒரு விவாதம் நடைபெற்றது.

இதில் சிறப்பாக விவாதித்த விசாக்கா கல்லூரி மாணவிகள் ஆண் வர்க்கத்தின் கொடுமை, சீதனம் வாங்குவதன் மூலம் பிரதிபலிக்கிறது. கையாலாகாத ஆண்கள் தங்கள் மனைவிமாரிடம் இருந்து பெறும் சீதனப் பணத்தை வைத்தே வாழ விரும்புகிறார்கள். ஆண்களின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால், சீதனம் கொடுப்பதை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று இந்த மாணவிகள் வாதிட்ட போது, பாடசாலை மண்டபத்தில் குழுமியிருந்த மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் கரகோசம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

கல்லூரி விவாதக் குழுவின் தலைவரான மஹிந்த தமது அணி தோல்வியடைந்துவிடும் என்ற அச்சத்துடன், தமது உரையை ஆரம்பித்து, எப்படியாவது நாம் இதில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சீதனம் வாங்கக்கூடாது என்ற எதிர்க்கட்சி அணியினரின் வாதத்தை நான் ஏகமனதாக ஏற்றுக்கொள்கிறேன் என்ற பீடிகையுடன் தனது வாதத்தை ஆரம்பித்தார்.

அப்போது, அவருக்கு மாணவ, மாணவிகளின் கரகோசம் முன்பிருந்ததைவிட அதிகமாக கிடைத்தது. இங்கு அமர்ந்திருக்கும் என்னுடைய சக மாணவ மாணவிகளே, ஆசிரியப் பெருமக்களே, தயவுசெய்து ஒரு விஷயத்தை நீங்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குப் பின்னர் சீதனம் அவசியம் தானா அல்லது சீதனத்தை ஒழித்துக்கட்ட வேண்டுமா? என்று முடிவெடுங்கள் என்று பேச ஆரம்பித்து, மறுகணம் தனது எதிர்பாரா அதிரடி தாக்குதலை ஆரம்பித்தார்.

“நீங்கள் அனைவரும் எனது எதிர்க்கட்சி தரப்பில் அமர்ந்திருக்கும் மாணவிகளை நன்றாக உற்றுப் பாருங்கள். இவர்களின் அழகுக்கு எந்த ஆண்மகள் சீதனம் வாங்காமல் இவர்களை மணம் முடிப்பான் என்று சிந்தித்து முடிவு எடுங்கள்” என்று மஹிந்த வாதிட்டார்.

அப்போது, அங்கு அமர்ந்திருந்த மாணவர்கள் அனைவரும் கரகோசம் செய்தனர். மாணவிகள் தரப்பில் நிசப்தம் நிலவியது. ஆசிரியர்களும் சற்று அதிருப்தியடைந்த நிலையில் இருந்தார்கள். அவர்களின் முகத்தில் ஈயாடவில்லை. அடுத்தகணம் எதிர்த்தரப்பு அணியின் மாணவிகள் விசும்பி கண்ணீர் விட்டனர். அத்துடன், இந்த விவாதம் இடைநடுவில் முடிவுற்றது.

மறுதினம் பாடசாலை அதிபர் மஹிந்தவை அழைத்து, அவரை கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறார். இதுவும் மஹிந்தவின் எதிர்கால அரசியல் வாழ்க்கையின் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது. இவ்விதம் மஹிந்த தேர்ஸ்டன் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது, அவரது அக்கா ஜயந்தி கொழும்பு பெளத்த மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். அக்காவும் மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்துகொள்வார்.

ஒரு தடவை அனைத்துப் பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொள்ள வந்த அக்கா ஜயந்தியை கிண்டல் செய்த ஒரு மாணவனை, ஒரு பக்கத்திற்கு அழைத்து, மஹிந்த கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இந்த வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பில் மாறி, இரு பாடசாலை மாணவர்களிடையே ஒரு கோஷ்டி மோதலாகவும், பயங்கரமாக உருவெடுத்தபோது, தலையிட்ட பொலிஸார், மோதலை இடைநிறுத்திவிட்டனர். பின்னர்….,”


மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 02
மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 03
மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 04
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல