வியாழன், 28 பிப்ரவரி, 2013

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 02!

தந்தையின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

மூத்த ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன்

“ மஹிந்த உட்பட சகல மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மஹிந்தவின் தந்தையைப் பற்றி பொறுப்பதிகாரிக்கு தெரிவித்திருக்கிறார். அதனால் எல்லா மாணவர்களையும் பொறுப்பதிகாரி எச்சரித்த பின்னர் விடுவித்திருக்கிறார்.

மஹிந்த, தனது தந்தை ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர் என்ற உண்மையை வெளியிட்டு, தப்பித்துக் கொள்ள விரும்பாமல், கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ளக் கூடிய தைரியம் படைத்த ஒரு மாணவனாக அன்று விளங்கினார்.

தேர்ஸ்டன் கல்லூரியின் மாணவனாக இருந்தபோது, அவர் சவால்களுக்கு முகம்கொடுக்கும் அஞ்சா நெஞ்சனாக பிற்காலத்தில் மாறுவதற்கு, அவருக்கு அங்கு, சிறந்த அனுபவமும், அடித்தளமும் அமைந்தது.

மாணவனாக இருந்தபோது, தேர்ஸ்டன் கல்லூரியின் தேசிய மாணவர் பேரவையின் கிளையில் அங்கத்தவராக மஹிந்த சேர்ந்து கொண்டார். அப்போது இந்த மாணவர் பேரவையின் தாய்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவர், பல்கலைக்கழக பட்டதாரி மாணவரான திரு. தர்மசிறி சேனாநாயக்க ஆவார். இவர், பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராகவும், பலம் மிக்க அமைச்சராகவும் இருந்து, நோய்வாய்ப்பட்டு நடுத்தர வயதிலேயே மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவர் பேரவையின் மூலம் மஹிந்தவுக்கு உலக அரசியலில் இருந்துவந்த அனுபவ அறிவு பெருகியது. 1960ஆம் ஆண்டு ஜூலை தேர்தலில், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமமந்திரியானபோது, மஹிந்தவின் தந்தை டி. ஏ. ராஜபக்ஷ பாராளுமன்றத்தின் உப சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்.

அன்றைய காலகட்டத்தில், கொங்கோவின் தேசியவாதத் தலைவரான பெற்றிஸ் லுமும்பா, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. இதனால், உலக நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

பாடசாலை மாணவனான மஹிந்தவும், தேசிய மாணவர் பேரவையின் அங்கத்தவர் என்ற முறையில், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக பற்றிஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும், கொழும்பில் நடைபெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பிலுள்ள பெல்ஜியம் தூதரகம் வரை சென்று எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். இதுபற்றிய செய்திகளை மறுதினம் இலங்கையின் பிரதான பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டன. பற்றிஸ் லுமும்பா என்ற கொங்கோ தேசத்தின் தேசியவாதியை கெளரவிக்கும் முகமாக, ரஷ்யா தனது நாட்டில் பற்றிஸ் லுமும்பா சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றையும் ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பல்லாயிரக்கணக்கான இலங்கையர் பட்டம் பெற்று, இன்று எங்கள் நாட்டில் உயர்பதவிகளை வகித்து வருகின்றார்கள்.

தென்னிலங்கையின் தன்னிகரற்ற தலைவர் டி. ஏ. ராஜபக்ஷ

1956ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் அமுலாக்கப்பட்டபோது, அரசாங்கத்தின் பணிகளில் ஆங்கில மொழிக்கு இருந்த முக்கியத்துவம் படிப்படியாக குறைய ஆரம்பித்து, சிங்கள மொழிக்கு கூடுதலான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கல்வியைப் போதிப்பதற்கான பிரிவெனாக்களாக இருந்த வித்தியோதய, வித்தியாலங்கார பிரிவெனாக்கள் பல்கலைக்கழக அந்தஸ்த்திற்கு உயர்த்தப்பட்டன. வித்யோதய பிரிவெனா ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகமாகவும் வித்தியாலங்கார பிரிவெனா களனி பல்கலைக்கழகமாகவும் பெயர் மாற்றப்பட்டு, பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டன.

அநுர பண்டாரநாயக்கவுடன் ஜனாதிபதி

மஹிந்த 1959ல் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு எடுத்த முயற்சியின்போது அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான சங். பாலன்னருவ விமலதர்ம தேரருடன் ஏற்பட்ட சிறு கருத்து முரண்பாட்டை, தந்தை டீ. ஏ. ராஜபக்ஷ தலையிட்டு, மஹிந்தவை அந்த தேரரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார். இந்த சம்பவத்தை அடுத்து, மஹிந்த மீது உபவேந்தர் கருணைகாட்டி, அவரை பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை எழுதி சித்தியடைவதற்கு உதவக்கூடிய வகையில் மஹிந்தவை அப்பல்கலைக்கழகத்தின் நூலக உதவியாளராக நியமித்தார். இதுவே மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட முதலாவது தொழில் வாய்ப்பாகும்.

1960ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தந்தை டீ. ஏ. ராஜபக்ஷ தென்மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பலம்வாய்ந்த வேட்பாளரான அத்தபத்து அவர்களின் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தந்தையின் தேர்தல் பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய மஹிந்த, அந்தத் தொகுதியின் 70 சதவீதமான வீடுகளுக்கு நேரில் சென்று வாக்கு வேட்டையில் இறங்கினார்.

1965ம் ஆண்டுத் தேர்தலில் டீ.ஏ. ராஜபக்ஷ தோல்வியடைந்தார். தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் டீ.ஏ. ராஜபக்ஷ தமது மெதமுனை கிராமத்து மக்களுக்கு மேற்கொண்டு வந்த சேவையை தொடர்ந்தும் செய்து வந்தார். தேர்தலுக்கு ஏற்பட்ட செலவுகள் கைக்கடங்காமல் போன காரணத்தினால் அவர் தன்னுடைய தனிப்பட்ட மோட்டார் வாகனத்தையும் விற்று கொழும்புக்கு பஸ் மூலம் வருமளவிற்கு பொருளாதார பிரச்சினைகளை எதிர் நோக்கியிருந்தார்.

இதனையடுத்து ராஜபக்ஷ குடும்பத்தினர் நுகேகொடை பகுதியில் ஒரு வாடகை வீட்டை எடுத்து, அங்கு தங்கியிருந்தார்கள். தாயார் மெதமுனைக்கு சென்று அங்குள்ள வீட்டுப் பணிகளை அடிக்கடி கவனிக்கும்போது, அக்கா ஜெயந்தி, தாயாரின் நிலையில் இருந்து தம்பி, தங்கையரை நுகேகொடை வீட்டில் பராமரித்து வந்தார். மஹிந்தவிற்கு அப்போது 200 ரூபா சம்பளமாக பல்கலைக்கழகம் வழங்கியது.

1966ம் ஆண்டளவில் மூத்த சகோதரர் சமல், பொலிஸ் சேவையில் சேர்ந்து மொனராகலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இக்காலகட்டத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ நோய்வாய்ப்பட்டிருந்தபோது, டீ.எம். ராஜபக்ஷவின் இரண்டு மகன்மாரான லக்ஸ்மன் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் சிறிய தந்தையின் வைத்திய வசதிகளை கவனித்து, தங்கள் வாகனங்களில் அவரை வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்று, அடிக்கடி சிகிச்சை வசதிகளை கவனித்துக் கொண்டார்கள். ஒருநாள் இரவு மாத்தறை ஆஸ்பத்திரியில் டீ. ஏ. ராஜபக்ஷ தனது மனைவி, மக்கள் முன்னிலையில் இறுதி மூச்சை விட்டார்.

மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ பெற்றோருடன்

தந்தையின் மரணத்திற்கு பின்னர் மூன்று மாத தானம் முடிவடைந்தவுடன், ஒரு நாள் மெதமுனை இல்லத்திற்கு ஒரு முக்கியஸ்தர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய தலைவர்களுடன் வந்திருந்தார். அவர் வேறு யாருமல்ல, திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கதான். தனது கணவரின் மறைவிற்கு பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட திருமதி பண்டாரநாயக்க, இப்பிரதேச மக்களை உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்ற தமது விருப்பத்தை திருமதி டீ.ஏ. ராஜபக்ஷவுக்கு அறிவித்தார்.

அப்போது இளைஞர் மஹிந்தவை பார்த்து, அவரது தாயார், தனது தந்தையின் இடத்தை பூர்த்தி செய்து, பாராளுமன்றத்திற்கு போட்டியிடக்கூடிய நிலையில் இரண்டாவது மகன் மஹிந்த பொருத்தமானவர் என்று திருமதி பண்டாரநாயக்கவிடம் கூறினார். மூத்தமகன் சமல் பொலிஸில் இன்ஸ்பெக்டர் பதவியில் இருப்பதனால், இளைய மகன் மஹிந்தவை அரசியலில் ஈடுபடுத்த அவரது தாயார் விரும்பினார்.

எனது மூத்த மகன் சமல் பொலிஸில் பொறுப்பான பதவி வைப்பதனால், இளைய மகன் மஹிந்த அரசியலில் ஈடுபடுவது பொருத்தமானதாக இருக்கும் என தாயார் தெரிவித்த யோசனையை ஏற்றுக்கொண்ட திருமதி பண்டாரநாயக்க, மஹிந்தவை தமது கட்சியின் வேட்பாளராக சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்தார்.

இதையடுத்தே மஹிந்தவிற்கும், அனுரபண்டாரநாயக்கவுக்குமிடையில் நட்பு பாலம் கட்டியெழும்பியது. பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மஹிந்தவிற்கு இன்னுமொரு மஹிந்தவின் நட்பு கிடைத்தது. அவர் தான், முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜயசேகர, எல். ரி. ரி. ஈ. தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலில் படுகாயமடைந்த மஹிந்த விஜயசேகர தற்போது சற்றுத் தேறி வருவது குறிப்பிடத்தக்கது.

அப்போது மஹிந்தவின் பெரியப்பாவின் புதல்வர்களான ஜோர்ஜ் மற்றும் லக்ஸ்மன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்த காலகட்டத்தில் மஹிந்த மாணவர் சங்கத்தில் சேர்ந்து கொண்டு, அரசியலிலும் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட எத்தனையோ முரண்பாடுகளையும் மோதல்களையும் மஹிந்த தலையிட்டு தன்னுடைய மதிநுட்பத்தினாலும், சமயோசிதமான விட்டுக் கொடுக்கும் செயற்பாடுகளினாலும் வெற்றிகரமாக தீர்த்து வைத்தார்.

இவ்விதம் அரசியலில் ஈடுபட்டு வந்த மஹிந்த 1970ம் ஆண்டில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவித்தல் வெளிவந்தவுடன், தந்தை டீ. ஏ ராஜபக்ஷ அங்கத்தவராக இருந்த பெலியத்த தொகுதியில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முன்வந்தார். மஹிந்த இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு அன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய அரசியல்வாதியாக இருந்த டெனிசன் எதிரிசூரிய பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து, அந்தத் தொகுதியில் தான் போட்டியிட வேண்டுமென்று அறிவித்தார்.

இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக திருமதி பண்டாரநாயக்க கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான டி.பி.இலங்கரட்னவை பெலியத்தை தொகுதிக்கு சென்று விசாரணை செய்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் இந்த முயற்சிக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவும் கிடைத்தது. அவர்கள் கொழும்பு ரொஸ்மிட் பிளேஸில் உள்ள திருமதி பண்டாரநாயக்கவின் இல்லத்திற்கு சென்று, பண்டாரநாயக்க அம்மையாரை சந்தித்து, தங்கள் வேண்டுகோளை முன்வைத்தனர்.

அப்போது மஹிந்த ராஜபக்ஷ, திருமதி பண்டாரநாயக்கவுக்கு தனக்கு பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் முழுமையான ஆதரவை அளிக்குமென்று உறுதியளித்தார். இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட திருமதி பண்டாரநாயக்க, மஹிந்தவிற்கு பெலியத்தை தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து, டெனிசன் எதிரிசூரியவிற்கு தென்மாகாணத்தின் திஸ்ஸமாஹாராம தொகுதியை ஒதுக்கிக் கொடுத்தார்.

அதையடுத்து, “பெலியத்தையின் இளம் மைந்தனுக்கு வாக்களித்து அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்போம்” என்ற பிரச்சாரம் பெலியத்தை தொகுதியில் சூடுகட்ட ஆரம்பித்தது. இளம் வேட்பாளர் மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வீடு வீடாக சென்று வாக்கு வேட்டை செய்யும் பணியில் அவரது இளைய சகோதரர்கள் தீவிரமாக ஈடுபட்டார்கள்.

இந்தத் தடவையே மஹிந்தவின் தம்பிமார், முதல் தடவையாக அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தனர். மஹிந்தவின் தந்தையாரின் ஆதரவாளர்களும், விசுவாசிகளும், அப்பிரதேசத்தின் மகாசங்கத்தினரும், வர்த்தக பிரமுகர்களும் மஹிந்தவிற்கு பகிங்கரமாக ஆதரவை நல்கினார்கள்.

இந்த தேர்தலுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அரசியல் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றும் அனுபவம் சிறிதளவேனும் இருக்கவில்லை. மஹிந்த விஜயசேகர, மேல்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான ரெஜினோல்ட் குரே, அவரது சகோதரரான விலீ கமகே ஆகியோர் மஹிந்தவின் சார்பில் சுமார் 300 கூட்டங்களை வெற்றிகரமாக ஒழுங்கு செய்தனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ஹக்மனை தொகுதியில் (ஹக்மன பெலியத்தையை அடுத்துள்ள இன்னுமொரு தொகுதியாகும்) பொதுச்சந்தைக்கு அருகில் உரை நிகழ்த்துவதற்கு தமக்கு அனுமதி அளிக்காமை குறித்து கோபத்துடன் மஹிந்த கண்டனம் தெரிவித்தார். அப்போது அப்பிரதேசத்தின் உதவி அரசாங்க அதிபராக இருந்த லலித் வீரதுங்க அவ்விடத்தில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி அளிக்க மறுத்திருந்தார். (இவர் இப்போது ஜனாதிபதி அவர்களின் செயலாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்) நாங்கள் தேர்தலில் வெற்றியடைந்த பின்னர் நிலைமை எவ்விதம் மாறும் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிaர்கள் என்று, அன்று மஹிந்த பகிரங்க எச்சரிக்கை ஒன்றையும் செய்திருந்தார்.

தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் தாயார், ஞாபகப்படுத்திய காரணத்தினால், மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவாளர்களுடன் கதிர்காம திருத்தலத்திற்கு சென்று வழிபட்டார். அன்று பெலியத்த தொகுதியில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டவர் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் டாக்டர் ரஞ்சித் அத்தபத்து ஆவார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் வெற்றி பெற்றால் பாடசாலைகளுக்கு வசதியான கட்டிடங்களை நிர்மாணித்து கொடுப்பேன், வீதிகளை திருத்தியமைப்பேன் என்று மஹிந்த வாக்குறுதி அளித்தார்.

அதற்கு அரசியல் பாணியில் பதிலளித்த ரஞ்சித் அத்தபத்து, மஹிந்த ராஜபக்ஷ அழகான பெண்களை தேடிக்கொண்டிருக்கிறார். அவர்களின் வீடுகளுக்கு வசதியாக செல்வதற்காகவே வீதிகளை அமைக்கப்போகிறார் என்று கிண்டல் செய்தார். உங்களைப் போன்ற எல்லோரும் அழகிய பெண் பிள்ளைகளை தேடிச் செல்வதற்கு உதவுவதற்காகவே வீதிகளை அமைக்கப்போகிறேன் என்று பதிலுக்கு மஹிந்தவும் நையாண்டி செய்தார்.

தேர்தல் நடந்து முடிந்த அன்றைய இரவு வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் அரசாங்க அதிபர், மஹிந்த ராஜபக்ஷ பெலியத்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ஒரு கண்ணியமான கனவான் என்பதை தனது பண்பான நடத்தையின் மூலம் எடுத்துக்காட்டினார். 24 வயதான மஹிந்த தன்னைவிட வயதில் மூத்தவரான ரஞ்சித் அத்தபத்து போட்டியில் தோல்வியடைந்திருத்த போதிலும், அவருக்கு உரிய கெளரவத்தை அளிக்குமுகமாக, தனக்கு முதலில் அங்கு கூடியிருந்தவர்களுக்கு உரையாற்றுவதற்கு அளித்த சந்தர்ப்பத்தை தன்னிடம் தோல்வியடைந்த ரஞ்சித் அத்தபத்துவிற்கு முதலில் வழங்குமுகமாக, ஒலிவாங்கியை ரஞ்சித் அத்தபத்துவின் கையில் கொடுத்து, நீங்கள் உரையாற்றுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்விதமே மஹிந்த ஆரம்பம் முதல் கண்ணியமாக தன்னை அரசியலில் எதிர்ப்பவர்களையும் மதித்து நடத்தும் ஒரு நற்பண்பாளராக விளங்கினார்.

மஹிந்த சிறுவனாக இருந்தபோது, அண்ணா, அக்கா, தம்பிமார், தங்கையர்களுடன் ஆத்திரத்தில் அடித்தும் நுள்ளியும் சண்டையிட்டாலும் அவர்கள் அனைவரும் மிக ஒற்றுமையான சகோதர, சகோதரிகளாக விளங்கினார்கள்.

அரைமணித்தியாலயத்திற்கு முன்னர் இந்த வீடே ஒரு யுத்தகளமாக இருந்தது. இப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து எவ்வளவு ஒற்றுமையாக விளையாடுகிறார்கள் என்று எத்தனையோ சந்தர்ப்பங்களில் மஹிந்தவின் தாயார் பிள்ளைகள் அனைவரையும் பார்த்து, பெருமிதத்துடன் மகிழ்ச்சியடையும் எத்தனையோ சந்தர்ப்பங்களும் ஏற்பட்டிருந்தன.

விடலைப்பருவத்தில் மஹிந்த ஒரு அழகான ஆண்மகனாக இருந்ததனால், அவர் பல்வேறு இளம் பெண்களின் கடைக்கண் பார்வைக்கு இலக்காகி இருந்தார். என்றாலும், அவருக்கு பின்னால் எப்போதும் அவதானமாக இருக்கும் அக்கா ஜெயந்தி, தம்பி தவறான பாதையில் செல்வதை தடுக்கும் ஒரு தடைக்கல்லாக இருந்து வந்தார். ஜெயந்தி மஹிந்தவை விட பல வருடங்கள் வயது கூடியவர்.

மஹிந்த 70 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்ட பின்னர், அன்றைய பிரதம மந்திரி திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, தனது மகன் அனுராவின் வயதைக் கொண்ட இளைஞர் மஹிந்தவையும், தனது மகனைப் போன்று அன்பாக பராமரித்தார்.

இதனால் பல நாட்கள் மஹிந்த, அலரிமாளிகையிலுள்ள அனுரபண்டாரநாயக்கவின் அறையிலேயே தங்கிவிடுவதும் உண்டு. ஆயினும், 1971ஆம் ஆண்டில் ரோஹண விஜேவீர தலைமையிலான சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் மஹிந்தவுக்கு மனவேதனை அளித்தது. மஹிந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், இவ்விதம் தவறிழைத்து, ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்களை மன்னித்து, அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்ற கருத்தை பல தடவைகள் வலியுறுத்தி வந்திருக்கிறார்.

(1974 இல் யாழ்ப்பாணபல்கலைக்கழக திறப்புவிழாவில் அல்பிரட் துரையப்பாவும் ஸ்ரீறிமாவோபண்டாரநாயக்காவும்)

இதன் காரணமாகவே, காலப்போக்கில் பிரதம மந்திரி திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும், அன்று பலம்வாய்ந்த அமைச்சராக இருந்த திரு.பீலீக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவும் குற்றவியல் நீதிவிசாரணை ஆணைக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்த ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து, அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கிய போதிலும், காலப்போக்கில் அந்த தண்டனைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் திட்டங்களாக அவற்றை மாற்றுவதற்கும், மஹிந்த ராஜபக்ஷ போன்ற இளம் அரசியல்வாதிகள் பின்னணியிலிருந்து செயல்பட்டது பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும்.

1987, 88, 89ஆம் ஆண்டுகளில் சிங்கள இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சியின்போது, அதில் சம்பந்தப்பட்ட விடலைப்பருவத்தைச் சேர்ந்த ஜே.வி.பியின் தவறான வழிநடத்தலினால் ஆயுதம் தாங்கிய ஆண், பெண் போராளிகளுக்கு மஹிந்த இரகசியமாக அடைக்கலம் அளித்து, அவர்களை பொலிஸாரினதும், ஆயுதப்படையினரதும் குண்டுகளுக்கு இரையாகி மரணமடையாமல் காப்பாற்றி இருக்கிறார்.

மஹிந்த தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஹக்கம் உவைஸ் அவர்களின் பேருவளை இல்லத்திற்கு, இந்த சிங்கள இளைஞர்களை இரகசியமாக தனது வாகனத்தில் அழைத்து சென்று, அங்கு அவர்களுக்கு வயிறாற சாப்பாடு கொடுத்து மகிழ்வார்.

இனிமேல் உங்களுக்கு உயிராபத்து இல்லை. நீங்கள் வெளியில் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டால், நிச்சயம் மரணத்திலிருந்து உங்களை எவருமே காப்பாற்ற முடியாது. ஆகவே, நன்றாக சாப்பிடுங்கள். நான், உங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துக்கொண்டுபோய், உங்களை அங்கு சரணடைய வைக்கிறேன். அதற்கு பின்னர், அங்கு உங்களுக்கு பூரண பாதுகப்பு கிடைக்கும்......”

மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 01
மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 03
மஹிந்தரின் அரசியல் வாழ்க்கை வரலாறு - பாகம் 04

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல