ஞாயிறு, 16 ஜூன், 2013

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 35

பொட்டு அம்மானால் ஒரு ‘காரியமாக’ சென்னைக்கு அனுப்பப்பட்ட சுதந்திர ராஜா (சாந்தன்)

அத்தியாயம் 35

ராஜிவ் கொலை தொடர்பாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு இரு வாரங்கள் ஆகியும், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் சிறிதுகூட முன்னேற்றம் இருக்கவில்லை. காரணம், ஜெயக்குமாரிடம் இருந்து கிடைத்த தகவல்கள் எவையும், உபயோகமானவையாக இருக்கவில்லை.

இதில், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவின் தவறு என்னவென்றால், ஜெயக்குமாரை பிடித்துச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தார்களே தவிர, அவர் வாடகைக்கு இருந்த வீட்டை சோதனையிடவில்லை.

ஜெயக்குமாரும், சிவராசனுக்குச் சொந்தமான ஏராளமான பொருள்கள் அவரது வீட்டு சமையல் அறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கவில்லை.

கடந்த சில தினங்களாக நாம் வெளியிட்ட இப்படியான கட்டுரைகளுக்கு பல வாசகர்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆதரவு கொடுத்த வாசகர்களுக்கு நன்றி.

ராணுவ கட்டுரைகளுக்கு வாசகர்களின் ஆதரவு அதிகம் உள்ளது. அப்படியிருந்தும் ஒரு மாறுதலுக்காக இந்தக் கட்டுரை, அரசியல் கொலை புலனாய்வு ரகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது நாம் வெளியிட்டுவந்த தொடர். நேரமின்மை காரணமாக இடைவெளி விழுந்திருந்தது. வாசகர்களின் ஆதரவு இருந்தால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியிடலாம்.

வாசகர்களின் ஆதரவு எப்படி உள்ளது பார்க்கலாம். கட்டுரையின் கீழ் வழமைபோல, மற்றொரு கட்டுரைக்கு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜயன் வீட்டில் உள்ள பொருட்களைக் கைப்பற்றிய பிறகு, அவற்றை வைத்து கேள்விகள் கேட்டபோதுதான், ஜெயக்குமாரும் தனது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பற்றி தற்செயலாக கூறினார்.

இதையடுத்து, யாருமில்லாமல் பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை சோதனையிட்டது சி.பி.ஐ. புலனாய்வுப் படை.

வீட்டு சமையல் அறையில், சிவராசனின் டைரிகள், ‘செயற்கை கண்’, அதற்கான தைலம், 9 எம்.எம். பிஸ்டலுக்கான 49 தோட்டாக்கள், கனமான அகராதி (டிக்ஸ்னரி) ஆகியவை கிடைத்தன. அந்த அகராதியின் உள்ளே பிஸ்டலை மறைத்து வைக்கும் வகையில் வெட்டப்பட்டிருந்தது.

அதாவது, பிஸ்டலை உள்ளே வைத்து, அகராதி போல எடுத்துச் செல்ல முடியும்!

அதனுடன் கிடைத்த மற்றொரு பொருள்தான், விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியது – அது ஒரு இலங்கை பாஸ்போர்ட்.

சுதந்திர ராஜாவின் நிஜப் பெயருடன் கூடிய பாஸ்போர்ட் அது! (விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவருக்கு பெயர் சாந்தன். இந்த தொடரில் வரும் முக்கிய பாத்திரமான திருச்சி சாந்தனின் பெயருடன் கிளாஷ் பண்ணும் என்பதால், நாம் சுதந்திர ராஜா என்றே குறிப்பிடலாம்)

பாஸ்போர்ட்டில் இருந்த அவரது முழுப் பெயர் தில்லையம்பலம் சுதந்திர ராஜா.

இந்தப் பெயரை, இந்தக் கட்டத்தில்தான் தெரிந்துகொண்டது, சிறப்பு புலனாய்வுக் குழு.

அந்த பாஸ்போர்ட் மட்டும் அங்கே கிடைத்திரா விட்டால், ராஜிவ் காந்தி கொலையின் பிரதான திட்டமிடலாளர் என சி.பி.ஐ. தேடிக்கொண்டிருந்த சிவராசன் பற்றி, பல விபரங்கள் புலனாய்வில் தெரியவராது போயிருக்கலாம்.

அத்துடன், சுதந்திர ராஜா என்ற பெயரை தெரிந்து கொண்டதால், இவர்கள் யாரும் எதிர்பாராத (ராஜிவ் கொலையுடன் தொடர்பில்லாத, ஆனால் அதுவரை மர்மமாக இருந்துவந்த) மற்றொரு தகவலும் கிடைத்தது.

அது என்ன தெரியுமா?

சென்னையில், மற்றொரு ஈழ விடுதலை இயக்கமான ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களை – பத்மநாபா உட்பட – சுட்டுக் கொன்றது யார் என்று அதுவரை மர்மமாக இருந்த விஷயம், சி.பி.ஐ.க்கு தெரிய வந்தது.

காரணம், விடுதலைப்புலிகள் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மானால், சென்னை ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்கள் ஊடுருவ அனுப்பி வைக்கப்பட்ட உளவாளி, இந்த சுதந்திர ராஜாதான்!

விடுதலைப் புலிகளின் உளவாளியாக சென்னை வந்த சுதந்திர ராஜா, கோடம்பாக்கத்தில் உள்ள சென்னை பொறியியல் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்.ஐ.இ.டி.) அட்மிஷன் எடுத்து, அப்படியே அருகிலுள்ள ஜகாரியா காலனியில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்களுடன் நட்பாகி, அவர்களுக்குள் ஊடுருவி… விடுதலைப்புலிகள் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானுக்கு தகவல் கொடுத்துக் கொண்டிருந்தவர்.

குறிப்பிட்ட தினத்தில், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டில், பத்மநாபாவும் மற்றைய தலைவர்களும் வந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற தகவல் சுதந்திர ராஜாவால்தான், விடுதலைப் புலிகளின் பெட்டு அம்மான் பிரிவுக்கு கொடுக்கப்பட்டது.

அதையடுத்து, விடுதலைப் புலிகளின் தாக்குதல் குழு, சூளைமேடு நோக்கி புறப்பட்டது.

டேவிட், சிவராசன் தலைமையில் ஏ.கே. 47 ரைஃபிள்கள் மற்றும் கையெறிகுண்டுகளுடன் மின்னல் வேகத்தில் தாக்குதல் நடத்தினர். அந்த அதிரடித் தாக்குதலில் பத்மநாபாவும் 13 போராளிகளும் கொல்லப்பட்டனர்.

இந்த விபரங்கள், சுதந்திர ராஜாவை கைது செய்த பின்னர் தெரிய வந்தது. சரி. நாமும் பின்னர் அதை விரிவாக பார்க்கலாம்.

அதற்குமுன், ஜெயக்குமார் வீட்டில் கிடைத்த இலங்கை பாஸ்போர்ட்டை வைத்து சுதந்திர ராஜாவை எப்படி கைது செய்தார்கள்? அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

படித்தது பிடித்திருந்ததா? இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இதற்கு வாசகர்களின் ஆதரவு எப்படி உள்ளது பார்க்கலாம். நாம் முன்பே குறிப்பிட்டபடி, இதே கட்டுரையை ஆங்கிலத்திலும் வெளியிடவில்லை. ஆனால், இதே ரகத்திலான மற்றொரு கட்டுரையின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. …(தொடரும்)

விறுவிறுப்பு.காம் 
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல